தடையிலிருந்து தப்புவாரா தோனி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச வேண்டும். தவறினால், இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் நடக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய கேப்டன் தோனிக்கு தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பார்படாஸ் நகரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் "டிரா' ஆனது.


அபராதம்:

இப்போட்டியில் இந்திய பவுலர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறினர். மூன்று ஓவர்கள் வரை தாமதமாக பந்துவீசியதால், இந்திய அணியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் கேப்டன் தோனிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 60 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 30 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.'

ஏற்கனவே இந்த ஆண்டின் துவக்கத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்துவீசியதால், கேப்டன் தோனி உட்பட போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது வரும் 6ம் தேதி டொமினிகா நகரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது.

இப்போட்டியிலும் இந்திய பவுலர்கள் தாமதமாக பந்துவீசும் பட்சத்தில், கேப்டன் தோனிக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

ஐ.சி.சி., 2.5 விதிமுறையின் படி, 12 மாத காலத்துக்குள் மூன்று போட்டிகளில் தாமதமாக பந்துவீசும் அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடந்த ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்துவீசியதால், கேப்டன் தோனிக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இதனால் இவர், இத்தொடரில் கட்டாக், கோல்கட்டா மைதானங்களில் நடந்த போட்டிகளில் விளையாடவில்லை.


கவலைப்பட தேவையில்லை :தோனி

இரண்டாவது டெஸ்ட் குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில், ""இரண்டாவது டெஸ்ட் "டிரா' ஆனது குறித்து கவலைப்படத் தேவையில்லை. சில நேரங்களில் மழை, மோசமான வானிலை போன்ற காரணங்களால் போட்டி பாதிக்கப்படுவது இயற்கையான ஒன்று. இயற்கை நிகழ்வுகளை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

கூடுதலாக 12 முதல் 13 ஓவர்கள் வீசப்பட்டிருந்தால், சுலபமாக வெற்றி பெற்றிருக்கலாம். சமீபத்தில் நடந்த நான்காவது ஐ.பி.எல்., தொடரில் இருந்தே வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இவரது பந்துவீச்சில் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது. பேட்டிங்கில் லட்சுமண், டிராவிட், ரெய்னா உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடினர். இக்கட்டான நிலையில் இவர்களது செயல்பாடு இந்திய அணிக்கு கைகொடுத்தது,'' என்றார்.

1 comments: