இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று டொமினிகாவில் துவங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி காத்திருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்தியஅணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், இன்று டொமினிகாவின் ரோசாவு நகரில் உள்ள விண்சர் பார்க் மைதானத்தில் துவங்குகிறது.
பார்படாஸ் ஆடுகளத்தை போல, இங்கும் பந்துகள் அதிக வேகத்துடன் பவுன்சர் ஆகும் என்று தெரிகிறது. இதற்கேற்ப இந்திய பேட்ஸ்மேன்கள் சுதாரித்துக் கொண்டால் நல்லது. கடந்த இரண்டு போட்டிகளில் 22 ரன்கள் மட்டும் எடுத்த முரளி விஜய், ராம்பால் பந்தில் அடிக்கடி அவுட்டாகிறார்.
இதேபோல, 46 ரன்கள் எடுத்த விராத் கோஹலி, எட்வர்ட்ஸ் பவுலிங் என்றால் பயப்படுகிறார். இவர்கள், இன்று வாய்ப்பை பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது. ஒருவேளை அணியில் மாற்றம் செய்ய கேப்டன் தோனி விரும்பும் பட்சத்தில் பார்த்திவ் படேல், பத்ரிநாத் களமிறங்கலாம்.
மற்றபடி துவக்க வீரர் அபினவ் முகுந்த், சீனியர் டிராவிட், லட்சுமண் அணிக்கு மீண்டும் கைகொடுக்கலாம். வழக்கம் போல ரெய்னா இம்முறையும் நல்ல "பார்ட்னர்ஷிப்' அமைப்பார் என நம்புவோம்.
முனாப் வாய்ப்பு:
பவுலிங்கை பொறுத்தவரையில் இஷாந்த் காயத்தால் அவதிப்பட்டாலும் இன்று களமிறங்குவார் என்று தெரிகிறது. இவருடன் பிரவீண் குமார் சாதிக்க முயற்சிக்கலாம். அபிமன்யு மிதுனுக்குப் பதிலாக, இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற முனாப் படேலை சோதித்து பார்த்தால் நல்லது.
சுழலில் வழக்கம் போல ஹர்பஜன் சிங் இறங்கலாம். இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் தேவை எனில், அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு செல்லும்.
சர்வான் இல்லை:
வெஸ்ட் இண்டீஸ் அணியில் சர்வான் நீக்கப்பட்டு, இளம் வீரர் பாவெல் சேர்க்கப்பட்டுள்ளது பலன் தருமா என இன்று தெரியும். துவக்க வீரர் சிம்மன்ஸ் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லையெனில் இளம் வீரர்கள் கிர்க் எட்வர்ட்சிற்கு வாய்ப்பு செல்லலாம்.
மற்றபடி, பரத், "மிடில் ஆர்டரில்' டேரன் பிராவோ, சீனியர்கள் சந்தர்பால், கேப்டன் சமி, கடந்த போட்டியில் அசத்திய சாமுவேல்ஸ், விக்கெட் கீப்பர் பாக் ஆகியோர் திறமை நிரூபித்து வெற்றிபெற்று, தொடரை சமன் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இவர்களுக்கு பவுலிங்கில் எட்வர்ட்ஸ், ராம்பால் கைகொடுக்க காத்திருக்கின்றனர். தவிர, கீமர் ரோச், சுழலில் தேவேந்திர பிஷூ இந்திய அணிக்கு தொல்லை தரலாம்.
இதுவரை எந்த டெஸ்ட் தொடரிலும் தோல்வியடையாத கேப்டன் என்ற பெருமையை இம்முறையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார் தோனி. இருப்பினும், இந்த போட்டியில் வென்று, வெற்றி கோப்பையுடன் திரும்புவார் என்று நம்பப்படுகிறது.
0 comments:
Post a Comment