கோஹ்லி கேப்டனாவதை தடுத்த சீனிவாசன்

சீனிவாசன் மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால் மூன்று ஆண்டுக்கு முன்பே கோஹ்லி இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகி இருப்பார்,’’ என, முன்னார் தேர்வாளர் ராஜா வெங்கட் தெரிவித்தார்.

கடந்த 2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்றது. இதன் பின் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் மோசமான தோல்விகளை பெற்றது. இதனால் இந்திய அணி கேப்டன் தோனியை மாற்ற பல்வேறு முயற்சிகள் நடந்ததாக செய்திகள் வெளியாகின.

இது உண்மை தான் என்கிறார் அப்போதைய தேர்வுக்குழு உறுப்பினர் ராஜா வெங்கட், 56. இதுகுறித்து கோல்கட்டா பத்திரிகையில் வெளியான செய்தி:

கடந்த 2011–12 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0–3 என, பின்தங்கி இருந்தது. நான்காவது டெஸ்ட் துவங்கும் முன், இதுகுறித்து அறிய மொகிந்தர் அமர்நாத், ஹிர்வானி அங்கு சென்று திரும்பினர்.

அப்போது,‘ பல்வேறு காரணங்களால் இந்திய அணி பிளவுபட்டுள்ளது. விளையாட்டு உணர்வுகளே இல்லாமல் வீரர்கள் உள்ளதாக,’ தெரிவித்தனர்.

இதனால் ‘ஒருநாள் தொடருக்கு முன் புதிய கேப்டனை நியமிக்க வேண்டும். மீண்டும் விளையாட்டு உணர்வை கொண்டு வர கோஹ்லி தான் சரியான நபர்,’ என முடிவு செய்தோம்.

இதையடுத்து 3 ஆண்டுக்கு முன்பே கோஹ்லியை கேப்டனாக்குவது குறித்து தேர்வாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

ஆனால் அன்னிய மண்ணில் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது கேப்டனை மாற்ற வேண்டும் எனில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது.

எங்களின் முடிவுக்கு அப்போதைய தலைவர் சீனிவாசன் சம்மதிக்கவில்லை. எங்கள் முயற்சியை தொடர்ந்த போதும், சீனிவாசன் கடைசி வரை பதில் தெரிவிக்கவில்லை. 

இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comments: