வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் சேவக், ஜாகிர் கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் உள்ளிட்ட , ‘சீனியர்களுக்கு’ வாய்ப்பு தரப்படும் எனத் தெரிகிறது.
எட்டாவது ஐ.பி.எல்., தொடர் முடிந்த பின், ஜூன் 7ல் இந்திய அணி வங்கதேசம் செல்கிறது. இங்கு ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதற்கான இந்திய அணி வரும் 20ம் தேதி தேர்வு செய்யப்படுகிறது. கோஹ்லி உள்ளிட்ட பல வீரர்கள், இத்தொடரில் இருந்து தங்களுக்கு ஓய்வு தர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தொடரில் சேவக், ஜாகிர் கான், யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் என, ‘சீனியர்’ வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படும் எனத் தெரிகிறது.
2011 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல உதவியாக இருந்தவர்கள் இவர்கள் தான். பின் மோசமான ‘பார்ம்’, போதிய உடற்தகுதியின்மை போன்ற காரணங்களால் அணியில் சேர்க்கப்படவில்லை.
இருப்பினும், ஐ.பி.எல்., தொடரில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்கு கவுரமான முறையில் விடைகொடுக்கும் பொருட்டு, வங்கதேச தொடருக்கான அணியில் சேர்க்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியது:
இந்திய அணி 2011ல் உலக கோப்பை வென்றதில் இந்த நான்கு வீரர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. இதனால், இவர்களுக்கு வங்கதேச தொடரில் வாய்ப்பு கொடுத்து, கவுரமான முறையில் விடை கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.
சிலர் இது உணர்ச்சி வசமான முடிவு என்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் ஏன் அப்படி செய்யக் கூடாது. இம்முடிவு தற்போது தேசிய தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவர்களது முடிவைப் பொறுத்து முழு தொடரிலும் விளையாடுவதா அல்லது ஒரு சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பதா என முடிவாகும். இருப்பினும், சிலர் டெஸ்ட் போட்டிக்கு மட்டும், வேறு சிலர் ஒருநாள் தொடருக்கும் தேர்வு செய்யப்படுவர்.
இது சரியா?
இந்த நான்கு வீரர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு தருவது சரியாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஏனெனில், இந்த ஐ.பி.எல்., தொடரில் யுவராஜ் சிங், 13 போட்டியில் 237 ரன்தான் எடுத்துள்ளார்.
8 போட்டியில் 99 ரன் மட்டும் எடுத்ததால், பஞ்சாப் அணியில் சேவக்கை சேர்க்க மறுக்கின்றனர். இருப்பினும், டெஸ்ட் அரங்கில் இரு முறை 300க்கும் மேல் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கலாம்.
ஜாகிர் கானை பொறுத்தவரையில் காயத்தில் இருந்து மீண்டு, ஐ.பி.எல்., தொடரில் (6 போட்டி, 7 விக்.,) நன்றாக செயல்படுகிறார். மும்பை அணியில் ஹர்பஜன் சிங்கும் (12ல் 13 விக்.,) பரவாயில்லை என்பதால், வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.
0 comments:
Post a Comment