பந்துக்கு பந்து பதட்டத்தை ஏற்படுத்திய உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்கா அணி சோகத்துடன் வெளியேறியது.
உலக கோப்பை தொடரில் இன்று நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் அபாட்டுக்குப்பதில் பிலாண்டர் வாய்ப்பு பெற்றார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கத்திலேயே பவுல்ட் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ ஆம்லா (10), குயின்டன் (14) அடுத்தடுத்து வெளியேறினர். ரூசோவ் 39 ரன்கள் எடுத்தார். சிறப்பாக செயல்பட்ட டுபிளசி அரை சதம் அடித்தார். தன் பங்கிற்கு கேப்டன் டிவிலியர்சும் அரை சதம் எட்டினார்.
மில்லர் அதிரடி:
தென் ஆப்ரிக்க அணி 38 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தபோது, மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. மழையால் ஆட்டம் சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டதால், போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டுபிளசி 82 ரன்கள் எடுத்தார்.
பின் களமிறங்கிய மில்லர் அதிரடியாக விளையாடினார். இவர் 18 பந்தில் 49 ரன்கள் விளாசினார். தென் ஆப்ரிக்க அணி 43 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்தது. டிவிலியர்ஸ் (65), டுமினி (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
மெக்கலம் அரை சதம்:
நியூசிலாந்து அணிக்கு ‘டக்–வொர்த் லீவிஸ்’ முறைப்படி 43 ஓவரில் 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், கப்டில் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது.
மார்னே மார்கல் பந்துவீச்சில் 3 பவுண்டரி விளாசிய மெக்கலம் அரை சதம் அடித்தார். இவர் 59 ரன்களில் அவுட்டானார்.
ஆண்டர்சன் அசத்தல்:
வில்லியம்சன் (6) நிலைக்கவில்லை. கப்டில் 34 ரன்கள் எடுத்தார். டுமினி பந்தில் ராஸ் டெய்லர் (30) ஆட்டமிழந்தார். இதன் பின் கைகோர்த்த கோரி ஆண்டர்சன், எலியாட் ஜோடி சிறப்பாக செயல்பட்டது.
இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த நேரத்தில், ஆண்டர்சன் 58 ரன்களில் அவுட்டாக, சற்று பதட்டம் ஏற்பட்டது. ரான்கியும் 8 ரன்களில் கிளம்ப, நெருக்கடி அதிகரித்தது.
இருப்பினும், எலியாட் போராடினார். கடைசி 2 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்டைன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய எலியாட் வெற்றியை உறுதி செய்தார்.
நியூசிலாந்து அணி 42.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்திருந்தது. எலியாட் (84), வெட்டோரி (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
முதல் முறை
உலக கோப்பை அரங்கில் நியூசிலாந்து அணி முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன், 6 முறை (1975, 79, 92, 99, 2007, 2011) அரையிறுதிக்குள் நுழைந்தபோதும், ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை.
தென் ஆப்ரிக்கா சோகம்
இதன் மூலம், தென் ஆப்ரிக்கா அணி உலக கோப்பை தொடரில் நான்காவது முறையாக அரையிறுதியில் தோல்வியடைந்தது. இதற்கு முன், 1992, 99, 2007ல் அரையிறுதியில் வீழ்ந்தது.
பவுல்ட் சாதனை
ஒரு உலக கோப்பை தொடரில் அதிக (21) விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து பவுலர் என்ற சாதனை படைத்தார் பவுல்ட். இதற்கு முன், கடந்த 1999 உலக கோப்பையில் ஜெப் அலாட் 20 விக்கெட் கைப்பற்றியதே அதிகமாக இருந்தது.
0 comments:
Post a Comment