தென் ஆப்ரிக்கா சாதனை வெற்றி - வெளியேறியது இலங்கை அணி

இலங்கைக்கு எதிரான உலக கோப்பை காலிறுதியில் தாகிர், டுமினி ‘சுழலில்’ மிரட்ட, தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. தவிர, உலக கோப்பை ‘நாக்–அவுட்’ சுற்றில் தென் ஆப்ரிக்க அணி முதல் வெற்றி பெற்று சாதித்தது. 

உலக கோப்பை தொடரின் காலிறுதி சுற்று இன்று துவங்கியது. சிட்னியில் நடந்த முதல் காலிறுதியில் இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 

தென் ஆப்ரிக்க அணியில் பெகர்டியனுக்குப்பதில் அபாட் இடம்பிடித்தார். இலங்கை அணியில் சுழல் வீரர் கவுசால் அறிமுக வாய்ப்பு பெற்றார். 


தாகிர் அசத்தல்:

இலங்கை அணிக்கு குசல் பெரேரா (3) ஏமாற்றினார். ஸ்டைன் ‘வேகத்தில்’ தில்ஷன் டக்–அவுட் ஆனார். இம்ரான் தாகிர் ‘சுழலில்’ திரிமான்னே (41), ஜெயவர்தனா (4) ஆட்டமிழந்தனர். மாத்யூஸ் (19), குலசேகரா (1), கவுசால் (0) ஆகியோரை அவுட்டாக்கிய டுமினி ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தினார். 

சங்ககரா 45 ரன்களில் அவுட்டானார். மலிங்காவும் 3 ரன்களில் திரும்ப, இலங்கை அணி 37.2 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக இம்ரான் தாகிர் 4, டுமினி 3 விக்கெட் வீழ்த்தினர். 


குயின்டன் அரை சதம்:

எளிய இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா 16 ரன்கள் எடுத்தார். சிறப்பாக செயல்பட்ட குயின்டன் அரை சதம் அடித்தார். தென் ஆப்ரிக்க அணி 18 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. குயின்டன் (78), டுபிளசி(21) அவுட்டாகாமல் இருந்தனர். 


சாதித்த தென் ஆப்ரிக்கா

கடந்த 1992 முதல் 2011 வரை நடந்த உலக கோப்பை தொடரின், ‘நாக்–அவுட்’ சுற்றில் ஒரு முறை கூட, தென் ஆப்ரிக்கா வென்றது கிடையாது. இந்த வெற்றியின் மூலம், தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக உலக கோப்பையின், ‘நாக்–அவுட்’ சுற்றில் வெற்றி பெற்று, சாதனை படைத்தது.


சங்ககரா 500

இன்றைய போட்டியில் 4 ரன்கள் எடுத்தபோது, இந்த உலக கோப்பை தொடரில் 500 ரன்கள் எட்டிய முதல் வீரரானார் சங்ககரா. ஒட்டுமொத்தமாக, 7 போட்டியில் விளையாடியுள்ள இவர் 541 ரன்கள் குவித்துள்ளார். 

* ஒரு  உலக கோப்பை தொடரில் 500 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 6வது இடத்தை சங்ககரா அடைந்தார். 

* ஒட்டுமொத்த உலக கோப்பை அரங்கில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தை (1532 ரன்கள்) சங்ககரா பிடித்தார். முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் சச்சின் (2278), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (1743) உள்ளனர். 

0 comments:

Post a Comment