ஆறாவது இடத்தில் இந்தியா - டெஸ்ட் தரவரிசையில் பின்னடைவு

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி, 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பாகிஸ்தான் அணி 5வது இடத்துக்கு முன்னேறியது.      

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்காக தரவரிசைப் பட்டியல் (‘ரேங்க்’) வெளியிடப்பட்டது.             

இதில் இந்திய அணி 96 புள்ளியுடன் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த 2011ல் ‘நம்பர்–1’ இடத்தில் இருந்த இந்திய அணி, இதன் பின் தொடர்ச்சியாக 12 டெஸ்டில் தோற்க, தரவரிசையில் அடுத்தடுத்து சரிவைக் கண்டது. இதன் பின் தொடர்ந்து வீழ்ச்சி கண்ட இந்திய அணி, தற்போது மிக மோசமான இடத்தை அடைந்துள்ளது.          
   
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி (99 புள்ளி), 5வது இடத்துக்கு முன்னேறியது.     
        
பறிபோன வாய்ப்பு: முதல் டெஸ்ட் தோல்வியால், தற்போது இரண்டாவது இடத்திலுள்ள ஆஸ்திரேலிய (123) அணி, தென் ஆப்ரிக்காவை (124) பின்தள்ளி, ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறலாம் என்ற கனவு தகர்ந்தது.    
   
அடுத்து இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றாலும் (121), தோல்வியடைந்தாலும் (117) என, தற்போதுள்ள இரண்டாவது இடத்துக்கு பாதிப்பு இல்லை.       

பாக்., முன்னேற்றம்: அதேநேரம், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை 2–0 என, கைப்பற்றினால், 105 புள்ளிகளுடன், இங்கிலாந்து (104), இலங்கை (101) அணிகளை பின்தள்ளி மூன்றாவது இடத்தை பிடிக்கலாம்.      

ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான தொடரை (1–0) என, வென்றால், பாகிஸ்தான் அணி 103 புள்ளியுடன், 4வது இடம் பெறும்.

0 comments:

Post a Comment