சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரில், இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில், தோனியின் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற காத்திருக்கிறது.
உள்ளூர் ‘டுவென்டி–20’ தொடர்களில் சாதித்த அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா இணைந்து இத்தொடரை நடத்துகின்றன.
இந்தியாவில் இருந்து ஐ.பி.எல்., சாம்பியன் கோல்கட்டா, பஞ்சாப், சென்னை என, மூன்று அணிகள் பங்கேற்கின்றன.
ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் டால்பின்ஸ், கேப் கோப்ராஸ், வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் டிரிடென்ட்ஸ் என, மொத்தம் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள இரு அணிகள் தகுதிச் சுற்றில் அசத்தி முன்னேறின.
முதல் மோதல்:
இன்று நடக்கும் முதல் போட்டியில் கோல்கட்டா அணி, சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.
கடந்த 2010ல் கோப்பை வென்ற சென்னை அணி, 2011, 2012ல் முதல் சுற்றுடன் திரும்பியது. கடந்த முறை அரையிறுதிக்கு முன்னேறிய இந்த அணி, இந்த ஆண்டு சாதிக்கும் என்று தெரிகிறது.
சென்னை அணிக்கு கடந்த ஐ.பி.எல்., தொடரில் அசத்தல் துவக்கம் தந்த மெக்கலம், டுவைன் ஸ்மித் கூட்டணி மீண்டும் ஜொலிக்க முயற்சிக்கலாம். தவிர, கேப்டன் தோனி, ரெய்னாவுடன் அஷ்வின், ஜடேஜா சுழல் கூட்டணியும் உள்ளூரில் வெற்றிக்கு உதவும் என நம்பப்படுகிறது.
பிராவோ வருகை:
காயத்தில் இருந்து மீண்ட டுவைன் பிராவோ அணிக்கு திரும்பியுள்ளது சென்னைக்கு மிகப் பெரும் பலம். இதனால், டுபிளசி இடம் கேள்விக்குறி தான். வேகத்தில் மோகித் சர்மா, ஈஷ்வர் பாண்டே கைகொடுப்பார்களா என, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment