இந்திய அணிக்கு சிக்கல் - ஐந்தாவது போட்டியும் ரத்து

கட்டாக்கில் தொடர்ந்து மழை பெய்வதால், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டியும் ரத்து செய்யப்பட்டது. 
இதனால் மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 1-2 என பின்தங்கியுள்ளது. 

இன்று ஐந்தாவது போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடக்க இருந்தது. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

இதனால், இன்று காலை 11 மணிக்கு மைதானத்தை அம்பயர்கள் நிகில், ரவி, சம்சுதின் பரிசோதித்தனர். இதில், ஈரம் அதிகமாக இருப்பதாக தெரிய வந்ததால், போட்டி ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து ஒடிசா கிரிக்கெட் சங்க செயலர் ஆசிர்பாத் பெஹரா கூறுகையில்,"" மைதானத்தை அம்பயர்கள் பரிசோதித்தனர். இதன்படி, மைதானம் விளையாடும் அளவுக்கு ஏற்ற வகையில் இல்லாததால், போட்டி ரத்து செய்யப்படுகிறது,'' என்றார். 


இந்தியாவுக்கு சிக்கல்

ராஞ்சியில் நடந்த நான்காவது போட்டியுடன் சேர்த்து, இரண்டு போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. 

ஏற்கனவே 1-2 என பின் தங்கியுள்ள இந்திய அணி, தொடரை வெல்ல வேண்டும் எனில் அடுத்து வரும் 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. 

இரு அணிகள் மோதும் ஆறாவது ஒருநாள் போட்டி, அக்., 30ல் நாக்பூரில் நடக்கவுள்ளது.

0 comments:

Post a Comment