கேப்டன் தோனி ஆதரவு தெரிவிக்க, "ரன் வள்ளல்' இஷாந்த் சர்மா மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். கடந்த போட்டியில் தோற்ற நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள போட்டிக்கான இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் உள்ளது.
மீதமுள்ள நான்கு போட்டிகளில்(அக்., 23, 26, 30, நவ., 2)பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் மொகாலியில் நடந்த மூன்றாவது போட்டியில், ஒரே ஓவரில் 30 ரன்களை வழங்கி, தோல்விக்கு வித்திட்ட வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு "கல்தா' கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இத்தொடரில் இவர் 3 போட்டிகளில் 2 விக்கெட் மட்டும் வீழ்த்தி 189 ரன்களை(சராசரி 7.87) வாரி வழங்கியுள்ளார். ஆனால், முதல் மூன்று போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட அதே வீரர்கள், மீதமுள்ள நான்கு போட்டியிலும் விளையாடுவார்கள் என, பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு அறிவித்தது. இதனையடுத்து இஷாந்த் சர்மா தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இதற்கு பின்னணியில் கேப்டன் தோனி இருந்துள்ளார். தனது சதத்தை வீணாக்கி, அதிர்ச்சி தோல்விக்கு வழிவகுத்த இஷாந்த் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தது வினோதமாக இருந்தது. இது குறித்து தோனி கூறியது:
ஒரு சில போட்டிகளில் தோல்வியடைந்தவுடன், விளையாடும் "லெவனில்' இடம் பெற்ற ஒரு பவுலரை அணியிலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்று சொல்வது சரியல்ல. மாறாக அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து, போதிய அனுபவம் பெறச் செய்ய வேண்டும்.
மொகாலி போட்டியில் வினய் குமார் எதிர்பார்த்ததைவிட அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். இதையடுத்து வேறு வழியில்லாததால் தான், 48வது ஓவரை வீச இஷாந்த் சர்மாவை அழைத்தேன்.
மோசமாக பந்துவீசிய இவரிடம் உடனடியாக எதுவும் பேச வேண்டியதில்லை. தனது செயல்பாடு குறித்து அவரே ஆய்வு செய்வது தான் நல்லது. ஒரு ஓவரில் தான் மோசமாக பந்துவீசினார்.
கடினமான காலக் கட்டத்தில் தான் ஒருவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நாட்டுக்காக விளையாடும் யாரும் சொதப்பலாக பந்துவீச விரும்பமாட்டார்கள்.
இவ்வாறு தோனி கூறினார்.
0 comments:
Post a Comment