கோஹ்லி அதிரடி சதம் - இந்திய அணி வெற்றி



ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கோஹ்லி அதிரடியாக சதம் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 1-2 என பின்தங்கியது. 

நான்காவது, ஐந்தாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட, சிக்கல் ஏற்பட்டது. ஆறாவது போட்டி இன்று நாக்பூரில் நடந்தது. இதில் "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி முதலில் "பீல்டிங்' தேர்வு செய்தார். 

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான வினய் குமார், உனத்கத் நீக்கப்பட்டு, அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் வாய்ப்பு பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


வாட்சன், பெய்லி அதிரடி: 

ஆஸ்திரேலியா அணிக்கு ஹியுஸ், பின்ச் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஷமி பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகள் விளாசிய ஹியுஸ் 13 ரன்களில் வெளியேறினார். அஷ்வின் சுழலில் பின்ச் (20) சிக்கினார். 

பின் இணைந்த வாட்சன், கேப்டன் பெய்லி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அஷ்வின் ஓவரில் பெய்லி ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். தன் பங்கிற்கு ஜடேஜா பந்துவீச்சில் வாட்சன் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். 

ஷமி ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த வாட்சன் ஒரு நாள் அரங்கில் 9வது சதத்தை பதிவு செய்தார். இவர் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். புவனேஷ்வர் பந்துவீச்சில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த பெய்லி ஒரு நாள் அரங்கில் தனது 2வது சதத்தை எட்டினார். 


ஜடேஜா அசத்தல்: 

இவருக்கு வோஜஸ் நல்ல ஒத்துழைப்பு தந்தார். ஷமி ஓவரில் பெய்லி ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பின் வந்த ஜடேஜா சுழல் ஜாலம் காட்டினார். இவரது வலையில் பெய்லி (156), மிட்சல் ஜான்சன் (0) சிக்கினர். ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்திருந்தது. வோஜஸ் (44), ஹாடின் (0) அவுட்டாகாமல் இருந்தனர். 


தவான் சதம்: 

இந்திய அணிக்கு தவான், ரோகித் ஜோடி துவக்கம் தந்தது. ஜான்சன் பந்தை ரோகித் பவுண்டரிக்கு விரட்டினார். தவான் ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்தார். மெக்கே ஓவரில் ரோகித் மூன்று பவுண்டரிகள் விளாசினார். மேக்ஸ்வெல், ஜான்சன் ஓவரில் தலா ஒரு பவுண்டரி அடித்த ரோகித் 19வது அரை சதத்தை பதிவு செய்தார். இவர் 79 ரன்களில் அவுட்டானார். 


கோஹ்லி அபாரம்: 

பின் வந்த கோஹ்லி அதிரடி காட்டினார். தோகர்டி ஓவரில் இவர் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். மறுபுறம், மெக்கே பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தவான், ஒரு நாள் அரங்கில் தனது 4வது சதத்தை எட்டினார். 

இவர் 100 ரன்களில் அவுட்டானார். பின் வந்த ரெய்னா (16), யுவராஜ் (0) ஜான்சன் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். பால்க்னர் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய கோஹ்லி ஒரு நாள் அரங்கில் 17வது சதம் அடித்தார். கடைசி ஓவரின் 3வது பந்தில் தோனி 2 ரன்கள் எடுக்க, வெற்றி எளிதானது. 

முடிவில், இந்திய அணி 49.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 351 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (115), தோனி (25) அவுட்டாகாமல் இருந்தனர். 

இந்திய அணியின் நம்பர்-1 இடத்துக்கு ஆபத்து வருமா?

கடந்த இரு போட்டிகள் மழையால் ரத்தானதால், இந்திய அணியின் "நம்பர்-1' இடத்துக்கு இருந்த ஆபத்து நீங்கியது.
சர்வதேச ஒருநாள் தரவரிசையில், கடந்த 2012, ஜூலை முதல் இந்திய அணி முதலிடத்தில் (122) உள்ளது. தற்போதைய ஆஸ்திரேலிய தொடரை, 1-6 என்ற கணக்கில் இழக்கும் பட்சத்தில் "நம்பர்-1' இடம் பறிபோகும் அபாயம் இருந்தது.

இதற்கேற்ப, முதல் 3 போட்டிகள் முடிவில், இந்திய அணி 1-2 என, பின் தங்கி இருந்தது. அடுத்த இரு போட்டிகள் மழையால் ரத்தானது. 

இதனால், மீதமுள்ள போட்டிகளில் தோற்று தொடரை 1-4 என, இழந்தாலும் இந்திய அணி 120 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கும். ஆஸ்திரேலியா 119 புள்ளி பெறும். 

ஒருவேளை இந்திய அணி அடுத்த இரு போட்டிகளில் வெல்லும் பட்சத்தில், 123 புள்ளி கிடைக்கும். 2வது இடத்தில் ஆஸ்திரேலியா (114) நீடிக்கும். அடுத்த இரு இடத்தில் 3 புள்ளிகள் குறைவாக (111) உள்ள இங்கிலாந்து, இலங்கை உள்ளன. 


பாக்., வாய்ப்பு: 

4, 5 வது இடத்தில் தென் ஆப்ரிக்கா (105), பாகிஸ்தான் (102) உள்ளன. நாளை துவங்கும் இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடரை, பாகிஸ்தான் 3-2 என வென்றால், 5வது இடத்துக்கு (103) முன்னேறும். தென் ஆப்ரிக்கா (102) ஆறாவது இடத்துக்கு தள்ளப்படும்.

மாறாக, தென் ஆப்ரிக்கா 4-1 என கைப்பற்றினால், 107 புள்ளி கிடைக்கும். 5-0 என்று வென்றாலும், ஐந்தாவது இடத்தில் (110) மாற்றம் இருக்காது.

வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் தொடர் - ஜாகீர்கான் இடம் பெறுவாரா?

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 
முதல் டெஸ்ட் நவம்பர் 6–ந்தேதி முதல் 10–ந்தேதி வரை கொல்கத்தாவிலும், 2–வது டெஸ்ட் 14–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை மும்பையிலும் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் நவம்பர் 21, 24, மற்றும் 27–ந்தேதிகளில் நடக்கிறது.

டெஸ்ட் தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி உத்தரபிரதேச அணியுடன் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் வருகிற 31–ந்தேதி தொடங்குகிறது.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி நாளை (29–ந்தேதி) அறிவிக்கப்படுகிறது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழு வீரர்களை தேர்வு செய்கிறது.

முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவரான ஜாகீர்கான் அணியில் மீண்டும் இடம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மோசமான பந்துவீச்சு மற்றும் உடல் தகுதியின்மை காரணமாக இங்கிலாந்து தொடரின்போது அவர் நீக்கப்பட்டார். அதன்பிறகு அவர் அணிக்கு தேர்வு பெற வில்லை.

ஜாகீர்கான் தனது பந்துவீச்சு மற்றும் உடல் தகுதியை மேம்படுத்த பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா சென்று வந்தார். இதன் பயணமாக வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். 

இதனால் ஜாகீர்கானுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பது பற்றி தேர்வுகுழு ஆலோசித்து வருகிறது. 

தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி போட்டியில் சிறப்பாக பந்து வீசினால் இடம் பெறுவார். இஷாந்த் சர்மாவுக்கு பதில் அவர் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் போட்டியில் மட்டுமின்றி டெஸ்டிலும் ஒரங்கட்டப்பட்டுள்ள ஷேவாக், காம்பீர் ஆகியோர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்து விடவேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர்.

ஷிகார் தவான், முரளி விஜய் தொடக்க வீரர்களாக டெஸ்ட் தொடரில் உள்ளனர். இதில் முரளிவிஜய் நீக்கப்பட்டால் ஒருவேளை ஷேவாக் அல்லது காம்பீருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் இந்த இருவரும் உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடவில்லை. இதனால் அணிக்கு மீண்டும் திரும்புவது கேள்விக்குறியானதே.

இதேபோல சுழற்பந்தில் அஸ்வினும், ஒஜாவும் உள்ளனர். ரஞ்சி டிராபியில் 6 விக்கெட் கைப்பற்றி உள்ள ஹர்பஜன்சிங் மீண்டும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

இந்த டெஸ்ட் தொடரோடு தெண்டுல்கர் ஓய்வு பெறுகிறார். கொல்கத்தா டெஸ்ட் அவருக்கு 199–வது போட்டியாகவும், மும்பை டெஸ்ட் 200–வது போட்டியாகவும் இருக்கும்.

20 ஓவர் உலகக்கோப்பை - முதல் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான்

20 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் வங்காளதேசத்தில் நடைபெறும் என ஏற்கனவே ஐ.சி.சி. அறிவித்தது. 
இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமான போட்டி அட்டவணையை அறிவித்துள்ளது. 

அதன்படி மார்ச் 16-ந்தேதி போட்டி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை நடக்கிறது. மார்ச் 16-ந்தேதி தகுதிச் சுற்று போட்டி நடக்கிறது. 

மார்ச் 21-ந்தேதி லீக் சுற்று ஆரம்பிக்கிறது. ஏப்ரல் 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி அரை இறுதிப்போட்டியும் , ஏப்.6-ந்தேதி இறுதிப்போட்டியும் நடக்கிறது.

போட்டியில் பங்குபெறும் அணிகள் குரூப்-1, குரூப்-2 என பிரிக்கப்படுகிறது. குரூப்-1ல் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதவேண்டும். 

புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதியில் குரூப்-1-ல் முதல் இடம் பெற்ற அணி, குரூப்-2ல் இரண்டாவது இடம் பெற்ற அணியுடனும், குரூப்-2-ல் இரண்டாம் இடம் பெற்ற அணி, குரூப்-2ல் முதல் இடம் பெற்ற அணியுடனும் மோதும். இதில் வெற்றி பெற்ற அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.

குரூப்-2ல் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. அதே பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் முதல் இடம் பெறும் அணியும் இடம்பெற்றுள்ளது.

மார்ச் 21-ந்தேதி இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. மார்ச் 23-ந்தேதி வெஸ்ட் இண்டீசுடனும், 28-ந்தேதி தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் முதல் இடம் பெறும் அணியுடனும், 30-ந்தேதி ஆஸ்திரேலியாவுடனும் மோதுகிறது.

இந்திய அணிக்கு சிக்கல் - ஐந்தாவது போட்டியும் ரத்து

கட்டாக்கில் தொடர்ந்து மழை பெய்வதால், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டியும் ரத்து செய்யப்பட்டது. 
இதனால் மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 1-2 என பின்தங்கியுள்ளது. 

இன்று ஐந்தாவது போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடக்க இருந்தது. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

இதனால், இன்று காலை 11 மணிக்கு மைதானத்தை அம்பயர்கள் நிகில், ரவி, சம்சுதின் பரிசோதித்தனர். இதில், ஈரம் அதிகமாக இருப்பதாக தெரிய வந்ததால், போட்டி ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து ஒடிசா கிரிக்கெட் சங்க செயலர் ஆசிர்பாத் பெஹரா கூறுகையில்,"" மைதானத்தை அம்பயர்கள் பரிசோதித்தனர். இதன்படி, மைதானம் விளையாடும் அளவுக்கு ஏற்ற வகையில் இல்லாததால், போட்டி ரத்து செய்யப்படுகிறது,'' என்றார். 


இந்தியாவுக்கு சிக்கல்

ராஞ்சியில் நடந்த நான்காவது போட்டியுடன் சேர்த்து, இரண்டு போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. 

ஏற்கனவே 1-2 என பின் தங்கியுள்ள இந்திய அணி, தொடரை வெல்ல வேண்டும் எனில் அடுத்து வரும் 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. 

இரு அணிகள் மோதும் ஆறாவது ஒருநாள் போட்டி, அக்., 30ல் நாக்பூரில் நடக்கவுள்ளது.

விஸ்டன் கனவு அணியில் சச்சின்

விஸ்டன் கனவு டெஸ்ட் அணியில் சச்சின் இடம் பெற்றார். கிரிக்கெட் உலகின் பைபிள் என போற்றப்படும் விஸ்டன் இதழின் 150வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கனவு உலக டெஸ்ட் லெவன் அணி வெளியிடப்பட்டது. 

இதில், இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக நான்கு பேர் இடம் பெற்றனர். கேப்டனாக மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா சார்பில் சச்சின் மட்டும் இடம் பிடித்தார். 

இவர் "பேட்டிங்' வரிசையில் 4வது வீரராக இடம் பெற்றார். கவாஸ்கர், கபில்தேவ், லாரா, காலிஸ், பாண்டிங் போன்றோர் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விஸ்டன் உலக டெஸ்ட் அணி: டான் பிராட்மேன்(ஆஸி.,கேப்டன்), கிரேஸ்(இங்கிலாந்து), ஜேக் ஹாப்ஸ்(இங்கிலாந்து), சச்சின்(இந்தியா), விவியன் ரிச்சர்ட்ஸ்(வெ.இண்டீஸ்), கேரி சோபர்ஸ்(வெ.இண்டீஸ்), ஆலன் நாட்(இங்கிலாந்து), வாசிம் அக்ரம்(பாக்.,), வார்ன்(ஆஸி.,), மால்கம் மார்ஷல்(வெ.இண்டீஸ்), சிட்னி பார்ன்ஸ்(இங்கிலாந்து). 

ஜாகிர் கானை தேர்வு செய்யலாமா?

இந்திய அணிக்கு மீண்டும் ஜாகிர் கானை தேர்வு செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், 35. கடந்த ஆண்டு கோல்கட்டாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பின் இந்திய அணியில் இருந்து போதிய உடற்தகுதி இல்லாதது, மோசமான "பார்ம்' காரணமாக நீக்கப்பட்டார். 

பிரான்ஸ் பயிற்சியாளர் டிம் எக்செட்டரிடம் சென்று, கடுமையான முயற்சிக்குப் பின், மீண்டு வந்தார். வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணிக்கு எதிரான மூன்றாவது நான்கு நாள் போட்டியில் சிறப்பான பவுலிங் காரணமாக, இந்திய "ஏ' அணிக்கு வெற்றி தேடித்தந்தார். 

மும்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர், வரும் 27-30ல் அரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் பங்கேற்கிறார். இதனிடையே, இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ள "சீனியர்' இஷாந்த் சர்மா, சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இவரை ஆஸ்திரேலிய தொடரில் மாற்றப் போவதில்லை எனத் தெரிகிறது. இருப்பினும், வரும் நவ., 2ல் துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில், அனுபவ ஜாகிர் கானை மீண்டும் தேர்வு செய்யும் திட்டம், இந்திய கிரிக்கெட் போர்டிடம் இருப்பதாக தெரிகிறது. 

இதற்கேற்ப, ஜாகிர் கான் விளையாடும் போட்டியை, நேரில் பார்க்க, பி.சி.சி.ஐ., தேர்வுக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" ஜாகிர் கான் திறமையில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. 

இவரது உடற்தகுதி எப்படி உள்ளது என்று தான் பார்க்க வேண்டும். இதற்காக, இந்திய அணி தேர்வுக்குழுவில் இருந்து ஒருவர், இவரது செயல்பாட்டினை நேரில் பார்க்கவுள்ளார். 

இப்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, நமது வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாட்டினை பார்க்கும் போது, ஜாகிர் கான் நன்றாக இருப்பார் எனத் தெரிகிறது,'' என்றார்.

இப்படி இருந்தால் எப்படி இஷாந்த்

பந்துவீச்சில் சொதப்பும் இஷாந்த் சர்மா, தனது பயிற்சியாளரை சந்தித்து ஆலோசனை கூட பெறுவதில்லையாம். இப்படி இருந்தால் தனது தவறுகளை எப்படி திருத்திக் கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 25. கடந்த 2007ல் தனது 19வயதில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் (மிர்புர்) அறிமுகம் ஆனார். 

துவக்கத்தில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், போகப் போக ஏமாற்றினார். இதன் உச்சக்கட்டமாக மொகாலி போட்டியில், ஒரு ஓவரில் 30 ரன்களை வாரி வழங்க, இந்திய அணி கடைசி நேரத்தில் வீழ்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டிக்கான அணியில் இவர் இடம் பெற்றதுதான் அதிசயம். 

இவரது பந்துவீச்சு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் கூறுகையில்,"" இஷாந்த் குறித்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 

இவரது பவுலிங்கில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. தனது தவறுகளை சரிசெய்ய, அவர் தனது சொந்த பயிற்சியாளர் ஷரவண் குமாரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது,'' என்றார்.

ஆனால், இஷாந்த் சர்மாவை பொறுத்தவரை டில்லியில் உள்ள தனது வீட்டுக்கு மிக அருகில் வசிக்கும் ஷரவண் குமாரை சந்திப்பதே கிடையாதாம். 

2007க்குப் பின், கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை கூட சந்தித்து ஆலோசனை பெறவில்லை. டில்லியில் சொந்தமாக கிரிக்கெட் அகாடமி வைத்துள்ள இஷாந்த், அங்கு வந்து பயிற்சி செய்து கொள்வாராம். 

இதுகுறித்து ஷரவண் குமாரிடம் கேட்ட போது, திருப்தியான பதில் தரவில்லை. அவர் கூறுகையில்,"" சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடத் துவங்கிய பின், அவர் இங்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன,'' என்றார். 

அடுத்து தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணியில் இஷாந்த் இடம் பெறுவது கடினம்தான். இந்நிலையில், இவருக்கு யார் உதவ முன் வருவர் என்றே தெரியவில்லை. இந்திய பவுலிங் பயிற்சியாளர் ஜோ டேவ்ஸ் என்ன செய்கிறார் என்று யாருக்கும் புரியவில்லை.

ஏன் இந்த பாணி... சொல்லுங்க தோனி

கேப்டன் தோனி ஆதரவு தெரிவிக்க, "ரன் வள்ளல்' இஷாந்த் சர்மா மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். கடந்த போட்டியில் தோற்ற நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள போட்டிக்கான இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் உள்ளது. 

மீதமுள்ள நான்கு போட்டிகளில்(அக்., 23, 26, 30, நவ., 2)பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் மொகாலியில் நடந்த மூன்றாவது போட்டியில், ஒரே ஓவரில் 30 ரன்களை வழங்கி, தோல்விக்கு வித்திட்ட வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு "கல்தா' கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இத்தொடரில் இவர் 3 போட்டிகளில் 2 விக்கெட் மட்டும் வீழ்த்தி 189 ரன்களை(சராசரி 7.87) வாரி வழங்கியுள்ளார். ஆனால், முதல் மூன்று போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட அதே வீரர்கள், மீதமுள்ள நான்கு போட்டியிலும் விளையாடுவார்கள் என, பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு அறிவித்தது. இதனையடுத்து இஷாந்த் சர்மா தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இதற்கு பின்னணியில் கேப்டன் தோனி இருந்துள்ளார். தனது சதத்தை வீணாக்கி, அதிர்ச்சி தோல்விக்கு வழிவகுத்த இஷாந்த் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தது வினோதமாக இருந்தது. இது குறித்து தோனி கூறியது:

ஒரு சில போட்டிகளில் தோல்வியடைந்தவுடன், விளையாடும் "லெவனில்' இடம் பெற்ற ஒரு பவுலரை அணியிலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்று சொல்வது சரியல்ல. மாறாக அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து, போதிய அனுபவம் பெறச் செய்ய வேண்டும். 

மொகாலி போட்டியில் வினய் குமார் எதிர்பார்த்ததைவிட அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். இதையடுத்து வேறு வழியில்லாததால் தான், 48வது ஓவரை வீச இஷாந்த் சர்மாவை அழைத்தேன். 

மோசமாக பந்துவீசிய இவரிடம் உடனடியாக எதுவும் பேச வேண்டியதில்லை. தனது செயல்பாடு குறித்து அவரே ஆய்வு செய்வது தான் நல்லது. ஒரு ஓவரில் தான் மோசமாக பந்துவீசினார். 

கடினமான காலக் கட்டத்தில் தான் ஒருவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நாட்டுக்காக விளையாடும் யாரும் சொதப்பலாக பந்துவீச விரும்பமாட்டார்கள்.

இவ்வாறு தோனி கூறினார்.

ஆஸி.,யை ஜெயிக்க வைத்த இஷாந்த்

மொகாலி ஒருநாள் போட்டியில் சொதப்பலாக பந்துவீசிய இஷாந்த் சர்மா ஒரே ஓவரில் 30 ரன்களை வாரி வழங்க, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் கேப்டன் தோனியின் சதம் வீணானது. 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நேற்று மூன்றாவது போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, இம்முறை "பீல்டிங்' தேர்வு செய்தார். 

"நடந்தார்' தவான்: இந்திய அணியின் துவக்கம் படுமோசமாக இருந்தது. மக்காய் பந்தில் அம்பயர் தீர்ப்புக்கு காத்திருக்காமல் மனச்சாட்சிப்படி தானாக நடையை கட்டினார் ஷிகர் தவான் (8). 

கடந்த போட்டியில் அசத்திய ரோகித் சர்மா இம்முறை 11 ரன்களுக்கு வெளியேறினார். ரெய்னா(17), வழக்கம் போல ஜான்சனின் "ஷார்ட் பிட்ச்' பந்தில் பெவிலியன் திரும்பினார். இவரது அடுத்த பந்தில் யுவராஜ் சிங், "டக்' அவுட்டாக, இந்திய அணி 76 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

பின் கோஹ்லி, கேப்டன் தோனி சேர்ந்து போராடினர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி, ஒருநாள் அரங்கில் தனது 26வது அரைசதத்தை எட்டினார். இவர், 68 ரன்கள் எடுத்த போது, மேக்ஸ்வெல் "சுழலில்' சிக்கினார்.

தோனி அதிரடி: ரவிந்திர ஜடேஜா (2) வந்த வேகத்தில் கிளம்பினார். பின் வந்த அஷ்வின், தோனிக்கு "கம்பெனி' கொடுக்க, இந்திய அணி 39.5 வது ஓவரில் 200 ரன்களை கடந்தது. மெல்ல மெல்ல அதிரடிக்கு திரும்பிய தோனி, தோகர்டி ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். 

மறுமுனையில் அஷ்வின் 28 ரன்னுக்கு அவுட்டான போதும், வாட்சன் ஓவரிலும் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார் தோனி. பின், பால்க்னர் பந்துகளில் பவுண்டரி விளாசிய இவர், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 9வது சதம் அடித்தார். புவனேஷ்வர் குமார் (10) ஓரளவு கைகொடுத்தார்.

தோனி 105 ரன்கள் எடுத்த போது கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை, பெய்லி கோட்டை விட்டார். இதனை பயன்படுத்திய இவர், இதே ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். பால்க்னரின் கடைசி ஓவரில் தோனி 2 பவுண்டரி, சிக்சர் அடித்து மிரட்ட, கடைசி 10 ஓவரில் இந்திய அணி 101 ரன்கள் குவித்தது. வினய் குமார் (0), ரன் அவுட்டானார். 

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது. தோனி 139 (121 பந்து) அவுட்டாகாமல் இருந்தார்.

வினய் திருப்பம்: கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், ஹியுஸ் ஜோடி மீண்டும் நல்ல துவக்கம் கொடுத்தது. வினய் "வேகத்தில்' ஹியுஸ் (22) அவுட்டானார். பின்ச் (38), இஷாந்த் சர்மாவிடம் சிக்கினார். வாட்சன் (11), பெய்லி (43) அதிக நேரம் நிலைக்கவில்லை. "அபாய' மேக்ஸ்வெல் (3), ஷிகர் தவானின் நேரடி "த்ரோவில்' ரன் அவுட்டானார். ஹாடின் (24) தாக்குப்பிடிக்கவில்லை. 

வோஜஸ் தனது 4வது அரைசதம் கடந்தார். இவர், பால்க்னருடன் இணைந்து கடைசி நேரத்தில் ரன்குவிப்பில் ஈடுபட்டார். இஷாந்த் வீசிய போட்டியின் 48வது ஓவர் திருப்புமுனை ஏற்படுத்தியது. இந்த ஓவரில் பால்க்னர் 4 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 30 ரன்கள் எடுக்க, இந்திய ரசிகர்களின் இதயம் நொறுங்கியது. 

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு, கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. வினய் குமார் வீசிய இந்த ஓவரின் முதல் 2 பந்தில் 3 ரன்கள் எடுக்கப்பட்டன. அடுத்த பந்தில் பால்க்னர் சிக்சர் அடிக்க, ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

29 பந்தில் 64 ரன்கள் எடுத்த பால்க்னர், வோஜஸ் (76) அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து, ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என, முன்னிலை பெற்றது. ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் பால்க்னர் வென்றார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி வரும் அக்., 23ம் தேதி ராஞ்சியில் நடக்கிறது.


"வில்லன்' 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டியில், 16 ஓவர்கள் பவுலிங் செய்து, 126 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார் இஷாந்த். இவரை மொகாலி போட்டியில் சேர்க்க, கடும் எதிர்ப்பு இருந்தது. இருப்பினும், நம்பிக்கை வைத்து களமிறக்கினார் தோனி. ஆனால், நேற்று 8 ஓவரில் 63 ரன்கள் கொடுத்து, இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தார். 

அகார்கர் ஓய்வுக்கு காரணம் என்ன?

இந்திய அணிக்காக விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என, தெரிந்ததால் தான் ஓய்வு பெற்றேன்,'' என, இந்திய வீரர் அகார்கர் தெரிவித்தார்.
இந்திய அணியின் "ஆல்-ரவுண்டர்' அகார்கர், கிரிக்கெட் அரங்கிலிருந்து நேற்று முன்தினம் விடை பெற்றார். கடைசியாக 2007ல் இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்றார். 

இதன் பின் இந்திய அணியில் இடம் கிடைக்காததால், ரஞ்சி தொடரில் மும்பை அணி கேப்டனாக விளையாடினார். ஓய்வு பெற்றது குறித்து அகார்கர் கூறியது: 

கடந்த 17 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விட்டேன். இந்நிலையில், என்றாவது ஒருநாள் ஓய்வு பெற்றுத்தான் ஆகவேண்டும். 

இந்திய அணிக்காக விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்திருந்தால், ஆட்டத்தை தொடர்ந்திருப்பேன். இது நடக்காது என தெரிந்தவுடன், ஓய்வை அறிவித்துவிட்டேன். 

இது என்ற முடிவு உடனடியாக எடுக்கப்பட்டது அல்ல. தவிர, இந்த ஆண்டு உடற்தகுதியிலும் சிறப்பாக இருக்க முடியவில்லை. 

வேகப்பந்துவீச்சிலும் திறமை வெளிப்படுத்த முடியவில்லை. இது தான், கிரிக்கெட் விளையாடியது போதும் என்ற மனநிலைக்கு வர காரணமாக அமைந்தது. 

இவ்வாறு அகார்கர் கூறினார்

அனைத்து வீரர்களுக்கும் தெண்டுல்கர் சிறந்த ரோல் மாடல்



கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் அடுத்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். சொந்த மைதானமான மும்பையில் விளையாடும் 200–வது டெஸ்டோடு அவரது சகாப்தம் முடிகிறது.

அனைத்து வீரர்களுக்கும் தெண்டுல்கர் சிறந்த முன்மாதிரி (ரோல்மாடல்) என்று இர்பான் பதான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

எனது கிரிக்கெட் ஆட்டத்தை தொடங்கியபோது தெண்டுல்கர் எனக்கு ஏராளமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். நான் பந்து வீசும்போது என் அருகில் வந்து நேர்த்தியுடன் ‘ரிவர்ஸ் சுவிங்’ வீசுமாறு கூறுவார்.

அவரிடம் இருந்து நான் ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன். பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிகமாக கற்றுக் கொண்டேன். வீரர்கள் தங்கி இருக்கும் அறையில் நான் அவருடன் 9 ஆண்டுகள் இருந்துள்ளேன். ஆடுகளத்தில் எப்படி ஒழுக்கமாக நடந்து கொள்வது என்பது பற்றி அவரை பார்த்துதான் தெரிந்தோம்.

அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் தெண்டுல்கர் சிறந்த முன்மாதிரி (ரோல் மாடல்) ஆவார். மிட்–ஆன் அல்லது மிட்ஆப் பகுதியில் இருந்து ஓடிவந்து அவர் வழங்கும் பயன் உள்ள ஆலோசனைகளை இனி இழந்து விடுவேன்.

தெண்டுல்கரின் ஓய்வு செய்தி அனைத்து ரசிகர்களுக்கும் கவலை அளிப்பதாகும். 200–வது டெஸ்டில் ரசிகர்கள் மைதானத்துக்கு திரண்டு வந்து அவருக்கு பிரியா விடை கொடுப்பார்கள். தெண்டுல்கர் ஓய்வு பெற்றாலும் எங்கள் இதயத்தை விட்டு செல்லமாட்டார்.

இவ்வாறு இர்பான் பதான் கூறியுள்ளார்.

சச்சினின் நம்பர்-10க்கு ஓய்வு

சச்சின் அணிந்து விளையாடும் "நம்பர்-10'க்கு ஓய்வு தர, மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உலகில் சிறப்பான விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும், 10ம் என்ற எண் கொண்ட ஜெர்சி அணிந்து தான் விளையாடுவர். 

கால்பந்து அரங்கில் அர்ஜென்டினாவின் மாரடோனா, இங்கிலாந்தின் வெய்ன் ரூனே உள்ளிட்டோரது ஜெர்சியில், இந்த எண் தான் இருக்கும். இதில் மாரடோனா ஓய்வுக்குப் பின், "நம்பர்-10', சக நாட்டு வீரர் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது.

 இந்திய கிரிக்கெட்டில், சச்சின் "10' ம் நம்பர் ஜெர்சிதான் அறிவிப்பார். உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக இதே எண் அணிந்து தான் விளையாடினார். 

இப்போது, இவர் ஓய்வு பெறவுள்ள நிலையில், "10' என்ற எண்ணுக்கு, மும்பை அணி ஓய்வு தரவுள்ளது.

இது குறித்து அணி உரிமையாளர் நீட்டா அம்பானி கூறுகையில்,"" எங்கள் அணி வீரர் சச்சின் ஓய்வு பெறுவது, மிகவும் உணர்ச்சிப் பூர்வமான தருணம். 

இதனால், "நம்பர்-10'க்கும் ஓய்வு தர முடிவெடுத்துள்ளோம். இது மாஸ்டர் பேட்ஸ்மேனுக்கு செலுத்தும் பெரிய காணிக்கையாக இருக்கும்,'' என்றார்.

பேட்டிங், பவுலிங் என, எதுவுமே சரியில்லை

இந்திய அணியின் தோல்விக்கு எந்த ஒரு வீரரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சுமத்த விரும்பவில்லை. பேட்டிங், பவுலிங் என எதுவுமே சரியில்லாமல் போனது தான் தோல்விக்கு காரணம்,'' என, கேப்டன் தோனி கூறினார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. புனேயில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விடைந்தது. 

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

புனே ஆடுகளம் 300 ரன்களுக்கும் மேல் எடுக்கும் அளவுக்கு இல்லை. நாங்கள் தான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அதிக ரன்கள் எடுக்க விட்டுவிட்டோம். இடையில், எங்களது சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக செயல்பட்டு மீண்டு வர முயற்சித்தனர். ஜடேஜா, யுவராஜ் சிங் நன்கு பவுலிங் செய்தனர். இருப்பினும், தொடர்ந்து அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. 


பொறுப்பற்ற பேட்டிங்:

பேட்டிங்கில் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி இணைந்து நல்ல "பார்ட்னர்ஷிப்' அமைத்தனர். ஆனால், "மிடில் ஆர்டரில்' வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றம் தந்தனர். 

மற்றபடி, தோல்விக்கு யாரையும் குறிப்பாக, குற்றம் சொல்ல விரும்பவில்லை. பவுலிங், பேட்டிங் என, எதுவுமே சரியாக அமையவில்லை. பேட்ஸ்மேன்கள் சரியான திட்டமிடல் இல்லாமல், பொறுப்பற்ற முறையில் அடித்து விளையாடினர். 


மீண்டும் வராது:

அதேநேரம், "ஷார்ட் பிட்ச்' பந்துகளில் பலவீனம் எல்லாம் கிடையாது. சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபி, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இவ்வகை பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டோம். அடுத்து வரும் போட்டிகளில் இதுபோன்ற தவறு நடக்காத வகையில் பார்த்துக் கொள்வோம்.


ரெய்னாவுக்கு பயிற்சி:

வழக்கமாக நான்காவது இடத்தில் யுவராஜ் சிங் தான் களமிறங்குவார். இந்த இடத்துக்கு இவரைத் தவிர பொருத்தமானவர் யாரும் கிடையாது. எதிர்வரும் உலக கோப்பை 2015 தொடரை முன்னிட்டு, ரெய்னாவுக்கு பயிற்சி தரும் வகையில் தான் இவரை முன்னதாக அனுப்பினோம். 

இவ்வாறு தோனி கூறினார்.

தெண்டுல்கருடன் யாரையும் ஒப்பிட இயலாது

தெண்டுல்கருடன் யாரையும் ஒப்பிட இயலாது என்று பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்ரிடி கூறியள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
தெண்டுல்கர் எப்போதுமே தனது விருப்பப்படியே விளையாடுவார். அவருடன் யாரையும் ஒப்பிட இயலாது. அவருடன் நான் அதிகமான போட்டியில் விளையாடி இருக்கிறேன். 

இந்த பூமியில் பிறந்த அற்புதமான வீரர். பழகுவதற்கு எளிமையானவர். உண்மையிலேயே தெண்டுல்கர் தான் தொழில் ரீதியான கிரிக்கெட் வீரர் ஆவார். 

ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்து இழுக்கக்கூடிய ஆற்றல் அவரிடம் இன்னும் இருக்கிறது. அவரது கிரிக்கெட் அர்ப்பணிப்பு பற்றி பல ஆண்டு காலம் பேசலாம். அவரது சாதனைகளை முறியடிக்க இயலாது. நீண்டகாலம் ஆகலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் முன்னாள் பயிற்சியாளர் மோசின்கான் ஆகியோரும் தெண்டுல்கரை வெகுவாக பாராட்டி உள்ளனர்.

சச்சின் ஆசை நிறைவேறுமா?



எதிர்பார்த்தது போலவே சச்சின் தனது 200வது டெஸ்ட் போட்டியை, சொந்த ஊரான மும்பையில் விளையாட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. இதுவரை 198 டெஸ்டில் விளையாடி உள்ள இவர், அடுத்து நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம், 200வது டெஸ்டில் விளையாட உள்ளார். 

இப்போட்டியுடன் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டியில் இருந்து ஒட்டுமொத்தமாக விடைபெற உள்ளார்.

இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவ., 6-10ம் தேதிகளிலும், இரண்டாவது டெஸ்ட் நவ., 14-18ம் தேதிகளிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் போட்டிகளை எங்கு நடத்துவது என இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில், வரும் அக்., 22ம் தேதி ராஜிவ் சுக்லா தலைமையிலான இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,), தொடர் மற்றும் அட்டவணை ஒருங்கிணைப்பு கமிட்டியின் கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில், போட்டிகளை எங்கு நடத்துவது என முடிவு செய்யப்படும்.

சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை, கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் அல்லது அவரது சொந்த ஊரான மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், மும்பையில் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.,) தலைவர் ரவி சாவந்த் கூறுகையில், ""கடைசி போட்டியை சொந்த ஊரான மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடத்த, பி.சி.சி.ஐ.,யிடம் சச்சின் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் மும்பையில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

சச்சின் இடத்தை நிரப்ப முடியாது

கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் 200–வது டெஸ்டுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 
1989–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அப்போது அவருக்கு 16 வயது. 1990–ம் ஆண்டு இங்கிலாந்து எதிரான போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

தனது அதிரடி ஆட்டம் மூலம் ரசிகர்கள் ஈர்த்த அவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக சதம், அதிக ரன், ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என எண்ணற்ற சாதனைகளை தனக்குள் வைத்துள்ளார் சச்சின்.

எதிரணி பந்து வீச்சாளர்களை தனது பேட் மூலம் மிரட்டினார். ஆனால் சமீப காலங்களாக அவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. கடைசியாக 2011–ம் ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்தார். கடந்த 2½ ஆண்டாக அவர் சதம் அடிக்கவில்லை.

198 டெஸ்டில் விளையாடி 51 சதம், 67 அரை சதத்துடன் 15,837 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 49 சதம், 96 அரை சதத்துடன் 18,426 ரன்னும் எடுத்து உள்ளார்.

24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் அசத்திய அவரது இடத்தை நிரப்புவது என்பது மிகவும் கடினம் என்பதில் சந்தேகமில்லை.

தெண்டுல்கர் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து வருமாறு:–

கவாஸ்கர்: தெண்டுல்கர் ஓய்வால் பெரிய வெற்றிடம் விழும். அந்த இடத்தை நிரப்புவது என்பது எளிதான விஷயம் அல்ல. டெஸ்ட் போட்டியில் சச்சின் இறங்கும் 4–வது வரிசை இடத்தை நிரப்புவது கடினமானது.

கங்குலி: சரியான நேரத்தில் சச்சின் ஓய்வு முடிவு எடுத்து இருக்கிறார். அவர் கடைசியாக விளையாடும் 2 டெஸ்ட்டை அதிக மக்கள் நேரில் காண வேண்டும்.

அசாருதீன்: அவரது இந்த முடிவுக்கு நாம் மதிப்பு அளிக்க வேண்டும். அவரது ஆட்டம் நமக்கு சந்தோஷத்தையும், பெருமையையும் அளித்துள்ளது. 

ஸ்ரீகாந்த்: சச்சின் தெண்டுல்கர் இடத்தை நிரப்புவது கடினம். ஒரு ஆட்டத்தில் சதம் அடிப்பது பெரிய விஷயம். ஆனால் அவர் சர்வதேச போட்டியில் 100 சதம் அடித்து உள்ளார். 

லட்சுமணன்: இது அவரது சொந்த முடிவு. அதற்கு மதிப்பு அளிக்க வேண்டும். இது ஓய்வுக்கு சரியான நேரம் என்று உணர்ந்திருக்கிறார். சச்சினுடன் ஒன்றாக விளையாடியது மகிழ்ச்சியான அனுபவம். 

ஓய்வு நாளை எதிர்நோக்கி சச்சின் ...

வெஸ்ட் இண்டீஸ்சுடன் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகஇருப்பதாகவும், இந்த நாளை எதிர் நோக்கி இருப்பதாகவும், இது வரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் பி,சி.சி.ஐ.,க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
1989 முதல் இந்தியாவிற்கென ஆடி வரும் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் இது வரை டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரத்து 837 ரன்கள் எடுத்துள்ளார். 51 சதம் 67 அரை சதங்களும் , எடுத்துள்ளார். 

ஏற்கனவே சச்சின் எப்போது ஓய்வு பெறுவார் என எதிர்பார்த்து பேசப்பட்டு வந்த நேரத்தில் இவர் இந்த கடிததத்தை அனுப்பியுள்ளார்.


11 வயது முதல் கிரிக்கெட் :

இந்த கடிதத்தில் சச்சின் கூறியிருப்பதாவது: ஓய்வு பெறுவதற்கான நேரம் என்பதை நான் இதயப்பூர்வமாக உணர்கிறேன் . இதனை அறிவிப்பதற்கு எனக்கு அனுமதி அளித்தமைக்கு நன்றி. 

இது வரை எனக்கு துணையாகவும், பலமாகவும் இருந்த பி.சி.சி.ஐ., மற்றும் ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் அளித்த ஆதரவே எனக்கு பலமாக இருந்து வந்தது. கடந்த காலத்தில் கனவுகளுடன் இந்திய அணிக்காக உழைத்தேன். 

24 ஆண்டுகள் ஆடியது எனக்கு கவுரவமாக கருதுகிறேன். 11 வயது முதல் கிரிக்கெட் ஆடி வந்துள்ளேன். கிரிக்கெட் இல்லாத வாழ்வை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. 

தற்போது, சொந்த மண்ணில் எனது 200வது டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளதை எதிர்பார்த்துள்ளேன். அன்று முதல் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறேன்,'' இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ்சுடன் மோதும் 2 வது டெஸ்ட் போட்டிகள் கோல்கட்டா (ஈடன் கார்டன்), மும்பையில் (வான்கடே) நடக்கவுள்ளன. இதில் எந்த இடத்தில் 200வது டெஸ்ட் என இன்னும் முடிவாகவில்லை. என்றாலும், அட்டவணைப்படி, 2 வது டெஸ்ட் போட்டி வரும் நவ., 14 முதல் 18 வரை நடக்கவுள்ளது. 

சிறப்பாக ஆடி விட்டுதான் தெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணையாளருமான கங்குலி கூறியதாவது:–

தெண்டுல்கரின் ஓய்வு பற்றிதான் அதிகமாக யூகிக்கப்படுகிறது. அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அவர் ஓய்வு பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்புகிறேன். 

ஆனால் அவர் நல்ல நிலையில் இருக்கும் போதுதான் ஓய்வு பெற வேண்டும். வெற்றி பெறக்கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகுதான் அவர் ஓய்வு பெற வேண்டும்.

இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

ராஜஸ்தான் அணியின் அடுத்த கேப்டன் யார்?

ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஷேன் வாட்சனை நியமிக்கலாம்,'' என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அப்டன் தெரிவித்துள்ளார். 
இந்தியாவில் நடந்த ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் பைனலில் மும்பை அணி, ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியுடன் மும்பை அணியின் சச்சின், ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் விடைபெற்றனர். 

இதையடுத்து ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய "ஆல்- ரவுண்டர்' ஷேன் வாட்சன் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்து பயிற்சியாளர் அப்டன் கூறியது: 

ராஜஸ்தான் அணியை டிராவிட் சிறப்பாக வழிநடத்தினார். மும்பைக்கு எதிரான பைனலில் "மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றியதால், தோல்வியடைய நேரிட்டது. 

டிராவிட் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டும். துவக்கம் முதல் அணியில் இருக்கும் வாட்சன் தான் முதன்மையான தேர்வாக இருப்பார் என நினைக்கிறேன். 

இவர், அணியின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வீரர். இளம் வீரர்களுடனும் சகஜமாக பழகுவார். 

இவ்வாறு அப்டன் கூறினார். 

விடைபெற்றனர் சச்சின், டிராவிட்

சாம்பியன்ஸ் லீக் கோப்பையை மும்பை அணி இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் ராஜஸ்தான் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. 
இப்போட்டியுடன் இந்திய கிரிக்கெட்டின் இரு "இமயங்களான' சச்சின், டிராவிட் "டுவென்டி-20' அரங்கில் இருந்து விடைபெற்றனர்.

இந்தியாவில் ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் தொடர் நடந்தது. நேற்று இரவு டில்லியில் நடந்த பைனலில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் டிராவிட் "பீல்டிங்' தேர்வு செய்தார். 


சச்சின் உணர்ச்சிவசம்:

மும்பை அணிக்கு டுவைன் ஸ்மித், சச்சின் சேர்ந்து நல்ல துவக்கம் தந்தனர். பால்க்னர் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்தார் ஸ்மித். மறுபக்கம் வாட்சன் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்த சச்சின், அடுத்த பந்தில் 15 ரன்களில் போல்டானார். தனது கடைசி "டுவென்டி-20 போட்டியில் விளையாடிய இவர், ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார். 


டாம்பே அசத்தல்:

தனது அதிரடியை தொடர்ந்த ஸ்மித், வாட்சன் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடிக்க, அரங்கம் அதிர்ந்தது. இதையடுத்து 42 வயதான "சுழல்' நாயகன் பிரவின் டாம்பேவை அழைத்தார் டிராவிட். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. டாம்பே வலையில் ஸ்மித் (44) சிக்கினார். 

அடுத்து வந்த ரோகித் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, ஸ்கோர் சீராக உயர்ந்தது. ராயுடு (29), டாம்பே பந்தில் அவுட்டானார். பால்க்னர் பந்தில் போலார்டு(15) போல்டானார். ரோகித் 33 ரன்களில் அவுட்டானார். 


மேக்ஸ்வெல் விளாசல்:

கடைசி கட்டத்தில் மேக்ஸ்வெல் கலக்கினார். ராஜஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த இவர், பால்க்னர் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். பின் வந்த சுக்லாவின் பந்துவீச்சில் சிக்சர், பவுண்டரி விளாசினார். 

பால்க்னர் வீசிய போட்டியின் 19வது ஓவரில் மேக்ஸ்வெல் இரண்டு பவுண்டரி, தினேஷ் கார்த்திக் ஒரு சிக்சர் அடித்து, துவம்சம் செய்தனர். மேக்ஸ்வெல்(37) ரன் அவுட்டானார். கடைசி 8 ஓவரில் மட்டும் 121 ரன்கள் எடுக்கப்பட்டன. மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. 

ராஜஸ்தான் சார்பில் டாம்பே அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார். 


சாம்சன் அதிரடி:

கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு குசால் பெரேரா(8) வீணாக ரன் அவுட்டாகி, ஏமாற்றினார். பின் ரகானே, இளம் சஞ்சு சாம்சன் சேர்ந்து அசத்தினர். மும்பை பந்துவீச்சை தவிடுபொடியாக்கிய இவர்கள், பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்தனர். 

ஹர்பஜன், தவான், கூல்டர் என யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கினர். இதனால் என்ன செய்வதென்று விழித்தார் மும்பை கேப்டன் ரோகித் சர்மா. இந்த நேரத்தில் அதிரடியாக அரைசதம் கடந்த சாம்சன்(60), ஓஜா பந்தில் அவுட்டாக சிக்கல் ஏற்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாட்சன்(8), ஹர்பஜனிடம் சரணடைந்தார். பொறுப்பாக ஆடிய ரகானே இன்னொரு முறை அரைசதம் கடந்தார்.


ஹர்பஜன் திருப்புமுனை:

போட்டியின் 17வது ஓவரை வீசிய ஹர்பஜன் 3 விக்கெட் வீழ்த்தி, திருப்புமுனை ஏற்படுத்தினார். முதல் பந்தில் "ஆபத்தான' ரகானேவை(65) அவுட்டாக்கினார். 4வது பந்தில் பின்னி(10) போல்டானார். 6வது பந்தில் கூப்பர்(4) வெளியேற, ஆட்டம் மும்பை வசம் வந்தது. 


டிராவிட் "குட்பை':

"பேட்டிங்' வரிசையில் பின்னதாக வந்த டிராவிட்(1), கூல்டர் பந்தில் போல்டானார். கடைசி போட்டியில் விளையாடிய இவரும் ரசிகர்களிடம் இருந்து பிரியாவிடைபெற்று, பெவிலியன் திரும்பினார். 

பின் போலார்டு ஓவரில் யாக்னிக்(6), சுக்லா(0), பால்க்னர்(2) உள்ளிட்ட "டெயிலெண்டர்கள்' வெளியேற, ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் இரண்டாம் இடம் பெற்று ஆறுதல் தேடியது. 

தெண்டுல்கரை போன்று 40 வயது வரை விளையாடுவேன் - கோலி

டெல்லியில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் 24 வயதான விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-
சச்சின் தெண்டுல்கரை போன்று நானும் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவேன் என்று நம்புகிறேன். அவரது வயதை எட்டும் போது (இப்போது சச்சினின் வயது 40) நானும் தொடர்ந்து உடல்தகுதியுடன் இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இத்தனை வயதிலும் அவர் உடல்தகுதியுடன் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. 

தெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போதுவரை செய்துள்ள சாதனைகளில் 60 முதல் 70 சதவீதம் வரை என்னால் செய்ய முடிந்தால், மிகவும் மகிழ்ச்சி அடைவேன். 

சாதனை படைப்பதற்கு குறிப்பிட்ட வயது என்று எதுவும் கிடையாது. சச்சின் தெண்டுல்கரை பாருங்கள். 16 வயதில் ஆரம்பித்து 40 வயதிலும் இன்னும் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் தான் எப்போதும் எனக்கு ரோல் மாடல். அவரது கடின உழைப்பு இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கக்கூடியதாகும். 

இந்தியா வென்ற இரண்டு உலக கோப்பை(2007-ம் ஆண்டு 20 ஓவர், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி) அணிகளில் இடம்பிடித்திருந்தது நான் செய்த அதிர்ஷ்டம். குறிப்பாக தெண்டுல்கர் பங்கேற்ற 6-வது உலக கோப்பையில் நானும் அங்கம் வகித்தது பெருமைக்குரிய விஷயமாகும்.

நான் இதுவரை எதிர்கொண்ட பவுலர்களில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டெயின், மோர்னே மோர்கல் ஆகியோர் மிகவும் அபாயகரமானவர்கள். இந்தியாவை தவிர்த்து எனக்கு பிடித்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல்(வெஸ்ட் இண்டீஸ்) தான். உண்மையிலேயே அதிரடி காட்டி, ரசிகர்களை குதூகலப்படுத்தக்கூடிய ஒரு வீரர் கெய்ல்.

அடுத்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் (வருகிற 10-ந்தேதி தொடக்கம்) கடினமானது என்பதில் சந்தேகமில்லை. காயம் காரணமாக அந்த அணியில் கேப்டன் மைக்கேல் கிளார்க் இல்லாவிட்டாலும் அவர்கள் பலம் வாய்ந்த அணி தான். 

களத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் வார்த்தைகளால் சீண்டினால் முதலில் பேட் மூலம் பதிலடி கொடுப்பேன். அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். ஆஸ்திரேலிய தொடரில் நிறைய ரன்கள் குவிப்பேன், அந்த தொடரையும் வெல்ல முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

சேவக், காம்பிர் ஏமாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்தியா "ஏ' அணியின் சீனியர் வீரர்களான சேவக், காம்பிர் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றினர்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணி, மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் (நான்கு நாள்) பங்கேற்கிறது. மைசூரில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் ஷிமோகா நகரில் நடக்கிறது.

முதல் நாள் ஆட்ட முடிவில், முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. 

முதல் இன்னிங்சை தொடர்ந்த லியோன் ஜான்சன் (91) நம்பிக்கை அளித்தார். வீராசாமி பெருமாள் (0), பிடல் எட்வர்ட்ஸ் (2), கம்மின்ஸ் (0) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய நிகிதா மில்லர் (64*) அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 406 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் பார்கவ் பட் 7, ஜாகிர் கான், முகமது ஷமி, பர்வேஸ் ரசூல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


சீனியர்கள் ஏமாற்றம்:

பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு காம்பிர் (11) ஏமாற்றினார். கேப்டன் புஜாரா (25) நிலைக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேவக் (7) சொற்ப ரன்னில் அவுட்டானார். பின் இணைந்த ஜெகதீஷ், அபிஷேக் நாயர் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. அபாரமாக ஆடிய இவர்கள் அரைசதம் அடித்தனர்.

இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. ஜெகதீஷ் (79), அபிஷேக் நாயர் (56) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வீராசாமி பெருமாள் 2, நிகிதா மில்லர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தோனியின் புது ஸ்டைல்

சென்னை அணி கேப்டன் தோனி இப்போது "லுங்கி' கட்ட துவங்கிவிட்டார் போலத் தெரிகிறது. மற்ற வீரர்களும் "பைஜாமாவில்' காணப்பட்டது வித்தியாசமாக இருந்தது.
இந்திய கிரிக்கெட்டில் மூன்று வித அணிக்கும் கேப்டன் தோனி. தனது தலைமுடியை பல்வேறு "ஸ்டைலில்' மாற்றிக் கொள்வார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் "மொஹாக்' முறையில் (கீரிப்புள்ள) களமிறங்கினார். 

இப்போது தமிழகத்தின் பிரபலமான "லுங்கி' கட்டத்துவங்கி விட்டார் போல. டில்லி செல்ல ராஞ்சி விமான நிலையம் வந்த போது, "லுங்கி'யுடன் "பெல்ட்' அணிந்து இருந்தார். காலில் "ஷூ' வேறு இருந்தது. 

இதேபோல, அணியின் மற்ற வீரர்களும் பெண்கள் அணிவது போல கலர் கலரான "பைஜாமாவில்', சென்னை அணியின் "டி-சர்ட்' அணிந்து இருந்தனர். 

இதுகுறித்து தோனியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,"" யார் வித்தியாசமான உடை அணிந்து வருவது என, சென்னை வீரர்களுக்கு இடையில் ஒரு போட்டி வைக்கப்பட்டது. 

இதனால் இப்படி வந்தனர்,'' என்றார்.
தோனியின் ஆசை: இதனிடையே, ராஞ்சியில் ராணுவத்தின் பாராசூட் படைப் பிரிவினருடன் ஒருநாள் செலவிட்ட தோனி கூறுகையில்,"" சிறுவயதில் இருந்தே எப்படியும் ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பினேன். 

ராணுவத்தினரை பார்க்கும் போதெல்லாம், நாமும் இதுபோல ஒருநாள் வருவோம் என்று நினைப்பேன்,'' என்றார். 

ஷேவாக், காம்பீர் எதிர்காலம் கேள்விகுறி

2011–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சீனியர் வீரர்கள் ஷேவாக், காம்பீர், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான் ஆகியோர் மோசமான ஆட்டம் மற்றும் உடல் தகுதி காரணமாக அணியில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டனர்.

இதில் யுவராஜ்சிங் மட்டும் தற்போது ஆஸ்திரேலியவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளார். மற்ற வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் கிடைக்கும் என்று ஷேவாக், காம்பீர் எதிர்பார்த்து இருந்தனர். இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சிறப்பாக ஆடி வருவதால் தேர்வு குழு தொடர்ந்து அவர்களை கண்டுகொள்ளவில்லை.

இதன் காரணமாக ஒருநாள் போட்டியில் ஷேவாக், காம்பீரின் எதிர்காலம் கேள்விகுறி நிலையில் உள்ளது. அவர்கள் மீண்டும் ஒருநாள் போட்டியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவாகவே இருக்கிறது.

ஷேவாக் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடினார். அதன்பிறகு நடந்த இங்கிலாந்து தொடர், சாம்பியன்ஸ் டிராபி, வெஸ்ட்இண்டீசில் நடந்த 3 நாடுகள் போட்டி, ஜிம்பாப்வே தொடர், தற்போது ஆஸ்திரேலியா தொடர் (முதல் 3 போட்டி) ஆகியவற்றில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட் டார்.

ஷேவாக் 251 ஒருநாள் போட்டியில் விளையாடி 8273 ரன் எடுத்துள்ளார். அதிகபட்ச ரன் 219 ஆகும். இதுதான் உலக சாதனையாக இருக்கிறது. 15 சதம், 38 அரை சதம் அடித்துள்ளார். 96 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

காம்பீர் இங்கிலாந்து தொடருக்கு நீக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் 147 ஒருநாள் போட்டியில் விளையாடி 5238 ரன் எடுத்துள்ளார். அதிகபட்ச ரன் 150 ஆகும். 11 சதமும், 34 அரைசதமும் எடுத்துள்ளார்.

ஜாகீர்கான், ஹர்பஜன் சிங்கும் இதே நிலையில்தான் உள்ளனர். ஜாகீர்கான் 282 விக்கெட்டும் (200 போட்டி), ஹர்பஜன்சிங் 259 விக்கெட்டும்(229 ஆட்டம்) கைப்பற்றி உள்ளனர். ஆனால் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை அவர்கள் மீண்டும் இடம் பெற முடியாது என்று கூறிவிட இயலாது

50000 ரன்களை எட்டுவாரா சச்சின்?

சாம்பியன்ஸ் லீக் தொடரில் மும்பை அணி, பெர்த் அணியை எதிர்கொள்கிறது. இதில் சச்சின், 26 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், சர்வதேச போட்டிகளில் 50,000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமை பெறலாம்.
ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. 10 அணிகள், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. "ஏ' பிரிவில் 12 புள்ளிகள் பெற்ற ராஜஸ்தான் அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. 

மும்பை அணியை பொறுத்தவரையில் முதல் போட்டியில் ராஜஸ்தானிடம் தோற்றது. அடுத்து ஒடாகோவுக்கு எதிரான போட்டி, மழையால் பாதிக்கப்பட்டது. பின் லயன்ஸ் அணியை வீழ்த்தியது. 

இதனிடையே, இப்பிரிவில் இன்று நடக்கும் கடைசி மோதலில் மும்பை அணி, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றிக்கு முயற்சிக்கும் எனத் தெரிகிறது.


சச்சின் நம்பிக்கை:

மும்பை அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், கடந்த 2 போட்டியில் 20 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்புகிறார். இன்று 26 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், சர்வதேச போட்டிகளில் 50,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை பெறலாம்.

மற்றபடி, துவக்க வீரர் ஸ்மித், கேப்டன் ரோகித் சர்மா, போலார்டு மட்டும் பேட்டிங்கில் ஆறுதல் தருகின்றனர். தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு ஏமாற்றம் தொடர்கிறது. 

பவுலிங்கில் "யார்க்கர்' மலிங்கா இல்லாதது பலவீனம் தான். வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்சல் ஜான்சன், கூல்டர் நைல் இதுவரை தலா ஒரு விக்கெட் தான் வீழ்த்தியுள்ளனர். "சீனியர்' ஹர்பஜனும் மோசம் தான். பிரக்யான் ஓஜா நம்பிக்கை தொடரும் என நம்பலாம்.


முதல் வெற்றி:

இத்தொடரில் பங்கேற்ற அணிகளில் பலவீனமாது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தான். பங்கேற்ற 3 போட்டிகளில் 2ல் தோற்றது. ஒரு போட்டி மழையால் ரத்தாக, அரையிறுதி வாய்ப்பு கலைந்தது. 

இதனால், இன்று இந்த அணி ஆறுதல் வெற்றிக்கு முயற்சிக்கலாம். இதற்கு கார்ட்ரைட், வோஜஸ் உதவலாம். கேப்டன் காடிச், இளம் வீரர் ஏகார் ஏமாற்றுகின்றனர். பவுலிங்கில் பாரிஸ், பெக்ரன்டர்ப் ஆறுதல் தருகின்றனர். 
இன்னும் 26 ரன்கள்

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், கிரிக்கெட் அரங்கில் 50 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்ட, இன்னும் 26 ரன்கள் தேவைப்படுகிறது. டில்லியில் இன்று இச்சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.