ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னாள் கேப்டன் அனில் கும்ளேவுக்கு பின், 17 ஆண்டுகள் கழித்து, முதலிடம் பிடித்த இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.
பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, நான்கு இடங்கள் முன்னேறி, 733 புள்ளிகளுடன் முதன்முறையாக "நம்பர்-1' இடம் பிடித்தார்.
சமீபத்தில் முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஐந்து போட்டியில் ஐந்து விக்கெட் கைப்பற்றிய இவர், முதலிடத்தை வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைனுடன் (733 புள்ளி) பகிர்ந்து கொண்டார்.
இதன்மூலம் ஐ.சி.சி., ரேங்கிங்கில், "நம்பர்-1' இடம் பிடித்த நான்காவது இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக மணிந்தர் சிங் (டிச., 1987 - நவ., 1988), கபில் தேவ் (மார்ச் 1989), அனில் கும்ளே (நவ., - டிச., 1996) ஆகியோர் இந்த இலக்கை அடைந்தனர்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 18 விக்கெட் கைப்பற்றி, புதிய சாதனை படைத்த மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, 47 இடங்கள் முன்னேறி, 32வது இடம் பிடித்தார்.
தோனி பின்னடைவு:
பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய கேப்டன் தோனி (7வது இடம்), விராத் கோஹ்லி (4வது இடம்) ஆகியோர் தலா ஒரு இடம் பின்தங்கினர். ஒரு இடம் முன்னேறிய சுரேஷ் ரெய்னா 17வது இடத்திலும், 16 இடங்கள் முன்னேறிய ஷிகர் தவான் 23வது இடத்திலும் உள்ளனர். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா நீடிக்கிறார்.
இந்தியா முதலிடம்:
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, அணிகளுக்கு இடையிலான ரேங்கிங்கில், 123 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது.
அடுத்த இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (112) அணிகள் உள்ளன.
0 comments:
Post a Comment