கிரிக்கெட் சூதாட்ட விசாரணை தீவிரமடைகிறது. ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்ட வீரர்கள் மற்றும் "புக்கி'களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து கண்டறிய முக்கிய ஓட்டல்களின் "சிசிடிவி' கேமராவில் பதிவான படங்களை டில்லி போலீசார் சோதனை செய்ய உள்ளனர்.
தவிர, சூதாட்ட விவகாரம் தொடர்பாக நேற்று ஒரு கிரிக்கெட் வீரர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்ற ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரும் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்டு, டில்லி போலீசிடம் பிடிபட்டனர். கிரிக்கெட் வீரராக இருந்து புக்கியாக மாறிய அமித் சிங்கும் கைதானார். ஐந்து நாள் போலீஸ் காவலில் உள்ள இவர்களிடம், போலீசார் "கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் கொடுத்த தகவலின்படி, நேற்று அவுரங்காபாத்தில் வைத்து மனிஷ் குடேவர், 32 மற்றும் "புக்கி'களான சுனில் பாட்யா, 44, கிரண் டோல், 42, ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை "ஸ்பாட் பிக்சிங்' தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரான குடேவார், சண்டிலா வீட்டுக்கு அருகில் வசிப்பவர். இவர், 2003-05 வரை ரஞ்சி போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பாபுராவ் யாதவ் என்ற இன்னொரு கிரிக்கெட் வீரரை போலீசார் தேடி வருகின்றனர். இவர், ரயில்வே அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். இவர் மிக விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
மும்பையில் சோதனை:
இ-தற்-கிடையே மும்பையில் உள்ள இரண்டு ஐந்து நட்சத்திர ஓட்டலில் டில்லி சிறப்பு பிரிவு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்ட வீரர்கள் தொடர்பாக விசாரித்தனர். தவிர மும்பை, சண்டிகர், கோல்கட்டா, ஐதராபாத் ஆகிய இடங்களில் ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் தங்கிய ஓட்டலில் உள்ள "சிசிடிவி' ரகசிய கேமராவில் பதிவான படங்களை தருமாறு டில்லி போலீசார் கேட்டுள்ளனர்.
இதனை சோதனை செய்தால், "புக்கி'களுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஸ்ரீசாந்த், உள்ளிட்ட மூன்று பேரின் குரல் மாதிரியை பதிவு செய்ய கோர்ட்டில் அனுமதி கோர உள்ளனர்.
இந்த விசாரணையில், இன்ஸ்பெக்டர் பத்ரிஷ் தத் ஏற்கனவே ஒட்டு கேட்டு பதிவு செய்த வீரர்களின் உரையாடல் உதவலாம். மர்மமான முறையில் மரணம் அடைந்த இவர் சார்பில், கடந்த மே 9ம் தேதி பதிவு செய்த எப்.ஐ.ஆர்., ல் வீரர்கள் மற்றும் "புக்கி'களின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதில்,"கடந்த ஏப்ரல் மாத மூன்றாவது வாரத்தில், பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடப்பதாக சிறப்பு பிரிவுக்கு தகவல் வந்தது. இதில், "நிழல் உலக தாதா' மற்றும் வீரர்களுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. பெரும் தொகையை பெற்றுக் கொண்டு வீரர்கள் வேண்டுமென்றே மோசமாக செயல்படுகின்றனர். இது கிரிக்கெட்டை நேசிக்கும் அப்பாவி ரசிகர்களை ஏமாற்றும் செயல்,''என தெரிவிக்கப்பட்டது.
இதனை அடிப்படையாக கொண்டு, டில்லி சிறப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடர உள்ளனர்.
0 comments:
Post a Comment