பிளவு படுகிறதா கிரிக்கெட் உலகம்


சிவராமகிருஷ்ணன் விவகாரத்தில், இந்தியாவுக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதனால், கிரிக்கெட் உலகில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வீரர்கள் பிரதிநிதி கமிட்டி உறுப்பினராக, முதலில் ஆஸ்திரேலியாவின் டிம் மே தேர்வானார். இதில் குழப்பம் நடந்ததாக கூறிய ஐ.சி.சி., முன்னாள் இந்திய வீரர் சிவராமகிருஷ்ணன், தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தது. 

இதில் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) பங்கு இருப்பதாக, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு (எப்.ஐ.சி.ஏ.,) போன்றவை எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், தேர்தல் நடந்த விதம் குறித்து நன்னடத்தை குழு அதிகாரியை வைத்து விசாரிக்க ஐ.சி.சி., முடிவு செய்தது. 

பி.சி.சி.ஐ., கோபம்: ஐ.சி.சி.,யின் இம்முடிவு பி.சி.சி.ஐ.,க்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், வரும் சாம்பியன்ஸ் டிராபி (ஜூன் 6-23) தொடரில் இருந்து, இந்திய அணி விலகப் போவதாக செய்திகள் வெளியாகின. 

இந்தியாவுக்கு ஆதரவு: தவிர, இவ்விஷயத்தில் இந்தியாவுக்கு ஆசிய நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுகள் ஆதரவு தெரிவித்தன. 

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் போர்டின் செயலர் நிஷாந்தா ரணதுங்கா கூறுகையில்,"" ஆசிய அல்லது இந்திய அளவில் வீரர் ஒருவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கிளம்பியது துரதிருஷ்டவசமானது. சிவராமகிருஷ்ணனுக்கு உள்ள கிரிக்கெட் திறமையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்,'' என்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் ஜக்கா அஷ்ரப் கூறுகையில்,"" இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் என, ஆசிய நாடுகள் ஒருமித்த கொள்கைகளை கொண்டவை. இதற்கு எதிராக ஏன் அவர்கள் உள்ளனர்,'' என்றார். 

பிளவுபடுகிறதா கிரிக்கெட்: இப்படி, ஆசிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாகவும், மேற்கு உலகின் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள், ஐ.சி.சி.,க்கு ஆதரவாகவும், கிளம்பியுள்ளன. இதனால், கிரிக்கெட் உலகம் பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment