உலக கோப்பை அரங்கில், சாதனை வீரராக ஜொலிக்கிறார் இந்தியாவின் சவுரவ் கங்குலி. "டுவென்டி-20' போட்டிகள் அறிமுகமாவதற்கு முன்பே இமாலய "சிக்சர்'கள் அடித்து, ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார். 2003ல் அணியை பைனலுக்கு அழைத்துச் சென்ற இவர், வெற்றி கேப்டனாக பிரகாசித்தார்.
கோல்கட்டா "தாதா' என்று செல்லமாக அழைக்கப்படும் கங்குலி, 1999ல் நடந்த உலக கோப்பை தொடரில் முதன் முறையாக பங்கேற்றார். இத்தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா மற்றும் ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
"சிக்சர்' மழை:
இதையடுத்து, இலங்கைக்கு எதிராக மிகப் பெரும் வெற்றி பெற்றால் மட்டுமே, "சூப்பர்-6' சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா களமிறங்கியது. இப்போட்டியில் கங்குலியின் அசத்தல் ஆட்டத்தை என்றும் மறக்க முடியாது.
"சிக்சர்'களாக அடித்து மிரட்டிய இவருக்கு டிராவிட் "கம்பெனி' கொடுத்தார். சதம் கடந்த கங்குலி 158 பந்தில் 183 ரன்கள் எடுத்தார். மொத்தம் 7 சிக்சர், 17 பவுண்டரி அடித்து சாதித்த இவர், உலக கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.
தவிர, டிராவிட்(145)-கங்குலி சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்து சாதித்தனர். இதன் மூலம், உலக கோப்பை அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் எடுத்த ஜோடி என்ற வரலாறு படைத்தனர். இவர்களது அபார ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 373 ரன்கள் எடுத்தது.
"மெகா' இலக்கை விரட்டிய இலங்கை அணி 42.3 ஓவரில் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி "சூப்பர்-6' சுற்றுக்கு முன்னேறியது.
அடுத்து 2003ல் கேப்டன் அந்தஸ்தில் களமிறங்கிய கங்குலி, கபில் தேவுக்கு பின் இந்திய அணியை பைனலுக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற பெருமை பெற்றார். 21 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 1006 ரன்கள் எடுத்துள்ளார்.
"எக்ஸ்டிராஸ்'
உலக கோப்பை அரங்கில், அதிக உதிரிகளை விட்டுக் கொடுத்த அணி ஸ்காட்லாந்து. 1999ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் 59 ரன்களை உதிரியாக, வாரி வழங்கியது.
0 comments:
Post a Comment