நம்பர்-1 இடத்தை காவு கொடுக்கும் தோனி

நாட்டிங்காம் டெஸ்டில் "ரன் அவுட்டான' இங்கிலாந்து வீரர் இயான் பெல்லை மீண்டும் விளையாட அனுமதித்து, பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் இந்திய கேப்டன் தோனி. இவரது செயலால் டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் "நம்பர்-1' இடத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து ரசிகர்களின் பாராட்டை பெற வேண்டும் என்பதற்காக தவறான அணுகுமுறையை தோனி கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாட்டிங்காமில் நடக்கிறது. இதன் இரண்டாவது இன்னிங்சில், இங்கிலாந்தின் பெல் 137 ரன்கள் எடுத்திருந்த போது, பந்து எல்லைக்கோட்டை கடந்தாக நினைத்து, "கிரீசை' விட்டு வெளியேறினார்.

அந்த நேரத்தில் முகுந்த் "பெயில்சை' தகர்க்க பெல்லுக்கு எதிராக ரன் அவுட் கேட்கப்பட்டது. மூன்றாவது அம்பயரும் "அவுட்' கொடுத்தார்.

தேநீர் இடைவேளைக்குப் பின், இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் மற்றும் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் வேண்டுகோளுக்கு இணங்க, மிகுந்த பெருந்தன்மையுடன் "அவுட்டை' வாபஸ் பெறுவதாக தோனி தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் பெல் களமிறங்கினார். ஏற்கனவே, போட்டியில் இந்திய அணி பின்தங்கிய நிலையில், தோனியின் இந்தச் செயல் அதிர்ச்சியடைய செய்தது.

அரங்கில் இருந்த 17 ஆயிரம் இங்கிலாந்து ரசிகர்களின் பாராட்டை பெறுவதற்காக, கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை ஏமாற்றினார். விதிமுறைப்படி "அவுட்' என்பதால், தோனி உறுதியாக இருந்திருந்தால், இங்கிலாந்து இவ்வளவு பெரிய முன்னிலை பெற்றிருக்க முடியாது.

இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடத்தை இழக்க நேரிடும். அதே நேரத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் முதலிடத்தை தட்டிச் செல்லும். இந்த உண்மையை அறிந்த தோனி, மிகப் பெரும் தவறை செய்து விட்டார். களத்தில் யாருக்கும் கருணை காட்டத் தேவையில்லை என்பதை இவர் உணர வேண்டும்.

தோனியின் இந்த செயலை எதிர்பார்த்தது போல இங்கிலாந்து வீரர்கள் மற்றும் பத்திரிகைகள் வெகுவாக பாராட்டியுள்ளன.

இதுகுறித்து "டெய்லி மிரர்' பத்திரிகையில் முன்னாள் வீரர் இயான் போத்தம் தெரிவித்து
இருப்பது:

பெல் விஷயத்தில் அம்பயர்கள் செய்தது சரிதான். தேவையில்லாமல் "கிரீசை' விட்டு வெளியேறிய அவர் "அவுட்' தான். இதை ஏற்று பெல், பேட்டிங் செய்ய மீண்டும் களமிறங்கி இருக்கக்கூடாது. இவரது இடத்தில் நான் இருந்திருந்தால், "அவுட்டை' ஏற்றுக்கொண்டு, பால்கனியில் உட்கார்ந்து மற்றவர்கள் ரன்கள் எடுப்பதை பார்த்துக் கொண்டிருப்பேன்.

ஆனால் தோனி பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு, பெல்லை விளையாட அனுமதித்துள்ளார். விளையாட்டு உணர்வை பாதுகாக்க வேண்டும் என்று தான், தோனி இப்படிச் செய்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு இயான் போத்தம் கூறியுள்ளார்.


கவனக் குறைவு:

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் கூறுகையில்,"" இதுபோன்று "அவுட்' ஆவதை நாம் விரும்பமாட்டோம் என்றாலும், பெல் கவனக் குறைவாக இருந்திருக்கக் கூடாது,'' என்றார்.

இதுகுறித்து இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் முன்னணி பத்திரிகைகளில் கூறப்பட்டு இருப்பது:


"தி டெய்லி டெலிகிராப்'

கிரிக்கெட் விதி 27.8ன் படி, மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர் ஒருவரை எந்தவகையிலும், மீண்டும் பேட்டிங் செய்ய அனுமதிக்கக்கூடாது. ஆனால் இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், பயிற்சியாளர் ஆன்டி பிளவர் கேட்டுக் கொண்டதால், தோனி இதை அனுமதித்தார்.

இந்திய அணியினரின் பெருந்தன்மையான செயலால், இரண்டு நாடுகள் இடையிலான கிரிக்கெட் உறவு வலுப்படும். ஆனால் இந்த டெஸ்டில் பங்கேற்றவர்கள் என்ற முறையில், எப்போதும் நிலையான வலி இருந்து கொண்டே இருக்கும்.


"டெய்லி மெயில்'

ஏற்கனவே இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், பெல்லின் செயல் அவரது முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது. ஸ்டிராஸ், ஆன்டி பிளவர் வேண்டுகோளை, தோனி ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது. இதை செய்ததன் மூலம், இந்திய அணி கேப்டன் தோனியும், பயிற்சியாளர் பிளட்சரும், கிரிக்கெட் உணர்வில் வெற்றிபெற்று விட்டனர். ஆனால், இதற்கான தேவை இல்லை என்றாலும், தோனி தவறான செயலை செய்துவிடவில்லை.


"தி கார்டியன்'

இங்கிலாந்து வீரர் பெல், கிரிக்கெட் குறித்து நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். இதேபோன்ற வாய்ப்புகள் வேறு எந்த விளையாட்டிலும் கிடைக்காது. அப்படியிருந்தும் அவரால் கூடுதலாக 22 ரன்கள் தான் எடுக்க முடிந்தது.


"தி இன்டிபென்டன்ட்'

பெல் அவுட் என்று அறிவிக்கப்பட்ட பின், வெளியேறிய இந்திய அணியினரை, ரசிகர்கள் கிண்டல் செய்தனர். அதன் பின் தோனி எடுத்த முடிவால், 17,000 ரசிகர்களின் பாராட்டுகளை தட்டிச் சென்றார்.


விதிமுறையை மிஞ்சிய கிரிக்கெட் உணர்வு

இங்கிலாந்து வீரர் பெல் பிரச்னை குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத, முன்னாள் அம்பயர் ஒருவர் கூறுகையில்,"" எந்த ஒரு வீரரும் "அவுட்டாகி' களத்துக்கு வெளியில் சென்று விட்டால், எதிரணி கேப்டன் அனுமதித்தாலும் கூட, மீண்டும் பேட்டிங் செய்ய வரமுடியாது. இது தான் விதி.

ஆனால், இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் அனைத்து அம்பயர்களுக்கும் ஏற்கனவே ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில்,"கேப்டன் அனுமதிக்கும் பட்சத்தில், விதிமுறை என்ற பெயரில், அம்பயர்கள் கிரிக்கெட் உணர்வை நசுக்க அனுமதிக்கக் கூடாது,' என, தெரிவித்துள்ளது. இதனால் தான் நேற்று முன்தினம் பெல், விளையாட அனுமதிக்கப்பட்டார்,'' என்றார்.


பெல் செய்தது தவறு

நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியில் பெல் செயல் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறுகையில்,"" எல்லைக் கோட்டில் பந்தை தடுத்த பிரவீண் குமாரின் செயலைப் பார்த்து, அது பவுண்டரி என்ற முடிவுக்கு பெல் வந்துள்ளார். ஆனால் அம்பயர் அது பவுண்டரி என்றோ, தேநீர் இடைவேளை என்றோ எதுவும் அறிவிக்கவில்லை. பின் இந்திய வீரர்கள் "அவுட்' கேட்டபோது, தான் தவறு செய்து விட்டோம் என்று தெரிந்தது,'' என்றார்.


கும்ளே பாராட்டு

தோனியின் செயல்குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கும்ளே கூறுகையில்,"" இங்கிலாந்து அணியின் கேப்டன், பயிற்சியாளர் இருவரும் கேட்டதால் தான், பயிற்சியாளரும், தோனியும் முடிவை மாற்றியுள்ளனர். இதற்கு பின்புறம் எது இருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில், தோனியின் முடிவு பாராட்டத்தக்கது. ஏனெனில் தனி மனிதனை விட, விளையாட்டு <உணர்வு தான் முக்கியமானது. இதைத்தான் தோனி செய்தார்,'' என்றார்.


இயான் பெல் ஒப்புதல்

சர்ச்சைக்குரிய முறையில் "ரன் அவுட்டான' இங்கிலாந்து வீரர் இயான் பெல், சம்பவம் குறித்து கூறுகையில்,"" பிரவீண் குமார் வீசிய கடைசி பந்து என்பதால், ஓவர் முடிந்து தேநீர் இடைவேளை என்பதால் தான், மூன்றாவது ரன் எடுத்த பின் "கிரீசை' விட்டு வெளியேறினேன். இது முட்டாள் தனமானது தான். தவிர, அம்பயர் ஆசாத் ராப்பும் "ரிலாக்சாக' இருந்தார்,'' என்றார்.

1 comments: