கிரிக்கெட் வாரிய கமிட்டியில் கங்குலி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தொழில்நுட்ப கமிட்டியில் முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி சேர்க்கப்பட்டுள்ளார்.

வாரியத்தின் 80-வது வருடாந்திர பொதுக்குழு மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் வாரியத்தின் தலைவர் சஷாங்க் மனோகர் கூறியதாவது:

சுநீல் காவஸ்கர் தலைமையில் உள்ள வாரியத்தின் தொழில்நுட்ப கமிட்டியில் முன்னாள் நடுவர் வி.கே.ராமசாமி, முன்னாள் வீரர் கே.ஸ்ரீகாந்த் ஆகியோருடன் கங்குலியும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் அக்டோபர் 25-ல் நடைபெறுவதாக இருந்த ஒரு தின ஆட்டம் வடோதராவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

போட்டிகளை நிர்வகிக்கும் நிறுவனமான ஐஎம்ஜியுடனான ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தபோது 7 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினர். வாரியத்தின் செயல்பாடுகளில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது

"பாகிஸ்தானுடன் கம்பீர் விளையாடுவார்'

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் இந்திய வீரர் கெüதம் கம்பீர் விளையாடுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் என்.சீனிவாசன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மும்பையில் இருந்து இந்திய அணி புறப்படும் முன் கம்பீர் உடற் தகுதி பெற்றதாக நிபுணர்கள் அறிவித்ததாக சீனிவாசன் கூறினார்.

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடருக்கு முன் கம்பீர் காயமடைந்தார். 2 வாரம் ஓய்வில் இருக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது

சச்சின், திராவிட்டை சமாளிக்க வியூகம்: யூனிஸ்கான்

இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட்டை சமாளிக்க வியூகம் வகுத்திருக்கிறோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் யூனிஸ்கான் கூறினார்.

யூனிஸ்கான் காயமடைந்துள்ள நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவுடனான ஆட்டத்தில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

இந்தியாவுடனான லீக் ஆட்டத்தில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். இன்னும் 2 நாட்கள் முழுமையாக உள்ள நிலையில் நான் தேறி விடுவேன். வலி நிவாரணி ஊசிகளை செலுத்திக் கொண்டு போட்டியில் பங்கேற்பேன்.

இந்தியா, ஆஸ்திரேலியாவுடனான ஆட்டங்கள் பாகிஸ்தானுக்கு முக்கியமானவை.

ஒரு நாள் போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோர் உள்ளனர். ஆனால் அவர்களைச் சமாளிக்க எங்களது பந்துவீச்சாளர்கள் வியூகம் வகுத்துள்ளனர்.

2003-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி கண்டது. பாகிஸ்தான் 270 ரன்கள் எடுத்திருந்தபோதும் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை. அன்றைய தினம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் இன்றைய நிலை வேறாக உள்ளது. எப்படியும் இந்தியாவை வெல்வோம் என்றார் அவர்.

கைவிரலில் காயம்: யுவராஜ்சிங் விலகல்

பயிற்சியின்போது இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் யுவராஜ் சிங் வலது கை விரலில் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. செப்டம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை இந்திய அணி வீரர்கள் யுனிவர்சிட்டி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது யுவராஜ்சிங்குக்கு வலது கைவிரலில் காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் ஏற்பட்டதையடுத்து அவரை 6 வாரம் ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக இந்தியா திரும்புகிறார்.

ஏற்கெனவே சேவாக், கம்பீர், ஜாகீர்கான், இர்பான் பதான் ஆகியோர் காயமடைந்து அணியிலிருந்து விலகிய நிலையில் யுவராஜ்சிங்கும் விலகியுள்ளார். இதனால் அணிக்கு பின்னடைவு ஏற்படும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

கிரிக்கெட் தரவரிசை: இந்தியா முதலிடம்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கிரிக்கெட் தரவரிசையில் உள்ள நாடுகள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டது. இதில் இந்தியா 126 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இந்தியா இருந்தது. ஒரே ஒரு நாள் மட்டும் முதலிடத்தில் இருந்த இந்தியா அதற்கு அடுத்த நாளே 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்தியா மீண்டும் முதலிடத்துக்கு தற்போது வந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இலங்கை - தென்னாப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்ததையடுத்து அந்த அணி 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இதையடுத்து இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியது. தற்போது இந்தியா 126 புள்ளிகளுடன் உள்ளது. ஆஸ்திரேலியா 125 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. 3-ம் இடத்தில் தென்னாப்பிரிக்கா 124 புள்ளிகளுடன் இருக்கிறது.

இலங்கை 4-ம் இடத்திலும், பாகிஸ்தான் 5-ம் இடத்திலும் உள்ளன.