டெஸ்ட் ரேங்கிங் - இந்தியா பின்னடைவு

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி, இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை (ரேங்கிங்) பட்டியல் வெளியானது. 

இதில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2–1 என, வென்ற ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகள் கூடுதலாக பெற்று இரண்டாவது இடத்துக்கு (115) முன்னேறியது.

இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருந்து, மூன்றாவது இடத்துக்கு (112) தள்ளப்பட்டது. தொடரை இழந்த போதிலும், தென் ஆப்ரிக்க அணியின் ‘நம்பர்–1’ இடத்துக்கு (127) ஆபத்து இல்லை.

இங்கிலாந்து (107), பாகிஸ்தான் (100) மற்றும் இலங்கை (89) அணிகள் 4, 5 மற்றும் 6 வது இடத்திலுள்ளன.

லாராவை விட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன்

தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் காலிஸ் அளித்த பேட்டியில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் லாராதான் என்று கூறினார். தெண்டுல்கரின் சாதனைகள் வியக்கத்தக்க என்றும் தெரிவித்தார்.
ஆனால் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்த வீரர் பிரெட்லி லாராவை விட தெண்டுல்கரே உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:–

தெண்டுல்கர் பந்தை கணித்து விளையாடுவதில் மிகவும் வல்லமை பெற்றவர். பந்தை அதிவேகமாக கணிக்க கூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இதனால்தான் அவரை உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதுகிறேன். லாராவை விட தெண்டுல்கருக்கு பந்து வீசுவதுதான் மிகவும் கடினமானது.

எனது முதல் டெஸ்டில் அவரது ஆட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்து இருக்கிறேன். அவரை பலமுறை அவுட் செய்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமே.

அவரை அவுட் செய்ய கூடுதல் கவனம் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் என்னை பொறுத்தவரை அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்.

இவ்வாறு பிரெட்லி கூறியுள்ளார்

அடுத்ததடுத்த தோல்விகள் அதிர்ச்சி அளிக்கவில்லை - கோஹ்லி



ஆசிய கோப்பை தொடரின் அடுத்ததடுத்த தோல்விகள் அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை,’’ என இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 

இதில் தனது முதல் லீக் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணி, இலங்கை, பாகிஸ்தான் என இரண்டு அணிகளுக்கு எதிராக தாக்குபிடிக்கமுடியாமல் தோல்வியை தழுவியது. தவிர, இத்தொடரின் பைனலுக்கான வாய்ப்பையும் கோட்டைவிட்டு வெளியேறியது.

இந்நிலையில் இந்தியாவின் இரட்டை தோல்வி அதிர்ச்சி அளிக்கவில்லை என இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது:

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி அதிர்ச்சி எதுவும் ஏற்படுத்தவில்லை. இந்திய வீரர்கள் போரடிய விதத்தை பார்த்து பெருமைப்படுகிறேன். போட்டியின் போது அதிக பனிப்பொழிவு இருந்தது. இது இந்திய வீரர்களின் வேலையை அதிகப்படுத்தியது. இதில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் இந்திய வீரர்கள் வெற்றிக்கு கொடுத்த போராட்டத்தை யாரும் மறக்கமுடியாது.

தவிர, வலிமையான அணிக்கு எதிராக அனுபவம் இல்லாத வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். குறிப்பாக அமித் மிஸ்ரா செயல்பாடு திருப்தி அளிக்கும் விதத்தில் இருந்தது. ‘டுவென்டி–20’ போட்டிளை போல எளிய முயற்சியில் 50 ஓவர் போட்டிகளில் வெற்றிபெற முடியாது.

குறைந்த ரன்கள் இலக்காக இருந்தால் அப்ரிதி, குல் விரைவாக ரன்கள் சேர்க்க முயற்சிப்பார்கள், அப்போது விக்கெட் கைப்பற்ற அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். அது சிறந்த முறையில் கைகொடுத்தது. 

ஆனால் அஷ்வின் பந்தில் இரண்டு சிக்சர் அடித்த அப்ரிதி அணியை வெற்றி பெற செய்தார். பொதுவாக பனிப்பொழிவு இருக்கும் போது பவுலர்களை எந்த குறையும் சொல்லமுடியாது. 

ஆனால் பீல்டிங்கில் கிடைத்த சில அரிய வாய்ப்புகளை பயன்படுத்தியிருந்தால், இந்திய அணி வெற்றி பெற்றிருக்கலாம். போட்டியில் வெற்றி, தோல்வி என்பதை நாம் நிர்ணயிக்க முடியாது. 

அதனால் இந்த தோல்விகள் அதிர்ச்சி எதுவும் ஏற்படுத்தவில்லை. வெற்றிபெற இந்திய வீரர்கள் கடினமாக கடைசிவரை போராடிய  விதம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.

இந்தியாவை விரட்டினார் அப்ரிதி - கடைசி ஓவர் வரை டென்ஷன்

ஆசிய கோப்பை பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த அப்ரிதி, வெற்றி இலக்கை விரட்ட கைகொடுத்தார். தவிர, இந்தியாவின் பைனல் கனவுக்கும் வேட்டு வைத்தார்.
வங்கதேசத்தில் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த 6வது லீக் போட்டியில் ‘பரம எதிரிகளான’ இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில், ஸ்டுவர்ட் பின்னி நீக்கப்பட்டு, அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். 


தவான் ஏமாற்றம்:

இந்திய அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. முகமது ஹபீஸ் பந்தில் ஷிகர் தவான் (10) வீழ்ந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு ‘அடி’ விழுந்தது. இம்முறை கேப்டன் விராத் கோஹ்லி (5), குல் ‘வேகத்தில் அவுட்டானார். 

பின் ரோகித் சர்மா, ரகானே சேர்ந்து அணியை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஜூனைடு கான், குல் பந்துவீச்சில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட ரோகித் (56) ஒருநாள் அரங்கில் தனது 22வது அரைசதத்தை பூர்த்தி செய்து அவுட்டானார். 


தல்ஹா அசத்தல்:

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், ரகானே சேர்ந்து ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்த ரன் வேகம் அப்படியே குறைந்தது. அறிமுக பவுலர் தல்ஹா வேகத்தில் ரகானே 23 ரன்களுக்கு(50 பந்துகள்) அவுட்டானார். சிறிது நேரத்தில் கார்த்திக்கும் (23) நடையை கட்டினார். தோனியும் இல்லாததால் அணியின் ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது.

கடைசி கட்டத்தில் அம்பதி ராயுடு, ரவிந்திர ஜடேஜா ஜோடி விரைவாக ரன் சேர்த்தது. அப்ரிதி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராயுடு (58), அரைசதம் கடந்து வெளியேறினார். 

உமர் குல் வீசிய போட்டியின் 48வது ஓவரில் அஷ்வின் 2 பவுண்டரி, ஜடேஜா ஒரு சிக்சர் அடித்தனர். சயீத் அஜ்மல் ‘சுழலில்’ அஷ்வின் (9), ஷமி (0) அவுட்டாகினர். இந்திய அணி 50 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்தது. ஒருநாள் அரங்கில் தனது 9வது அரைசதம் அடித்த ஜடேஜா (52), மிஸ்ரா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

பாகிஸ்தான் அணிக்கு அஜ்மல் அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.


நல்ல துவக்கம்:

எட்டக்கூடிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஷார்ஜீல் (25), ஷேசாத் (42) ஜோடி நல்ல அடித்தளம் கொடுத்தது. மிஸ்பா (1) ரன் அவுட்டானார். பின் வந்த உமர் அக்மலை (4) மிஸ்ரா ‘பெவிலியனுக்கு’ அனுப்ப, பாகிஸ்தான் அணி, 113 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது.

பின் வந்த சோயப் மக்சூத் கைகொடுக்க, பாகிஸ்தான் அணி சீராக முன்னேறியது. அஷ்வின் பந்தில் ஹபீஸ்(75) அவுட்டானார். சோயப்(38) ரன் அவுட்டாக, லேசான பதட்டம் ஏற்பட்டது. ஆனாலும், ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த அப்ரிதி, இந்திய அணிக்கு ‘செக்’ வைத்தார். 


அப்ரிதி அதிரடி:

கடைசி ஓவரில் இந்திய வெற்றிக்கு 2 விக்கெட் தேவைப்பட்டது. பாகிஸ்தான் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. அஷ்வின் பந்துவீசினார். முதல் பந்தில் சயீத் அஜ்மல்(0) போல்டானார். இரண்டாவது பந்தில் ஜூனைத் கான் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் அப்ரிதி ஒரு இமாலய சிக்சர் அடித்து, இந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கினார். 4

வது பந்தையும் சிக்சருக்கு அனுப்பிய இவர், வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பைனலுக்கு அனேகமாக முன்னேறியது. அப்ரிதி(18 பந்தில் 34 ரன், 2 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்டநாயகன் விருதை ஹபீஸ் தட்டிச்சென்றார்.

சங்ககராவிடம் சரிந்தது இந்தியா - கடைசி ஓவரில் இலங்கை வெற்றி



ஆசிய கோப்பை லீக் போட்டியில் சொதப்பிய இந்திய அணி, இலங்கையிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

துாணாக நின்று சதம் அடித்த சங்ககரா, இலங்கை அணிக்கு கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய இந்திய வீரர் ஷிகர் தவானின் ஆட்டம் வீணானது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. பதுல்லாவில் நேற்று நடந்த தொடரின் 4வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 

இலங்கை அணியில் சுரங்கா லக்மலுக்கு பதிலாக அஜந்தா மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியில் வருண் ஆரோன் நீக்கப்பட்டு, ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.


தவான் அபாரம்:

இந்திய அணிக்கு ரோகித் சர்மா (13) மோசமான துவக்கம் கொடுத்தார். பின் ஷிகர் தவான், கேப்டன் விராத் கோஹ்லி சேர்ந்து அசத்தலாக ஆடினர். மலிங்கா வீசிய 5வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த தவான், ஒருநாள் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார்.  இரண்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த போது, அஜந்தா மெண்டிஸ் ‘சுழலில்’ கோஹ்லி (48) போல்டானார்.

அடுத்து வந்த ரகானே (22) பெரிய அளவில் சோபிக்கவில்லை. தொடர்ந்து அசத்திய தவான், திசாரா பெரேரா வீசிய 26வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். அபாரமாக ஆடிய இவர் (94), மெண்டிஸ் பந்தில் போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 


‘மிடில்–ஆர்டர்’ ஏமாற்றம்:

இதற்கு பின் வந்தவர்கள் சொதப்பினர். தினேஷ் கார்த்திக் (4), அம்பதி ராயுடு (18) சொற்ப ரன்னில் வெளியேறினர். ஸ்டூவர்ட் பின்னி ‘டக்–அவுட்’ ஆனார். மலிங்கா ‘வேகத்தில்’ அஷ்வின் (18) நடையை கட்டினார். புவனேஷ்வர் குமார் (0), மெண்டிஸ் பந்தில் அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா, ஒரே ஒரு சிக்சர் மட்டும் அடித்தார். மெண்டிஸ் பந்தில் இரண்டு சிக்சர் விளாசிய முகமது ஷமி ஆறுதல் தந்தார்.

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (22), முகமது ஷமி (14) அவுட்டாகாமல் இருந்தனர். 

இலங்கை சார்பில் அஜந்தா மெண்டிஸ் 4, சேனநாயகே 3 விக்கெட் கைப்பற்றினர்.


குசால் அரைசதம்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா, திரிமன்னே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முகமது ஷமி வீசிய 6வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த திரிமன்னே, அஷ்வின் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். 

முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த போது அஷ்வின் பந்தில் திரிமன்னே (38) அவுட்டானார். முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த குசால் பெரேரா, ஒருநாள் அரங்கில் தனது 3வது அரைசதம் அடித்தார். இவர், 64 ரன்கள் எடுத்த போது அஷ்வினிடம் சரணடைந்தார்.


‘ஹாட்ரிக்’ நழுவல்:

ஆட்டத்தின் 32வது ஓவரை வீசிய ரவிந்திர ஜடேஜா ‘இரட்டை அடி’ கொடுத்தார். இந்த ஓவரின் முதலிரண்டு பந்தில் ஜெயவர்தனா (9), சண்டிமால் (0) அடுத்தடுத்து அவுட்டானார்கள். மூன்றாவது பந்தில் கேப்டன் மாத்யூஸ் 2 ரன்கள் எடுக்க, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. பின், முகமது ஷமி ‘வேகத்தில்’ மாத்யூஸ் (6) பெவிலியன் திரும்பினார்.


சங்ககரா சதம்:

அடுத்து வந்த சேனநாயகே (12), சதுரங்கா டி சில்வா (9) நிலைக்கவில்லை. இதையடுத்து இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், அபாரமாக ஆடிய சங்ககரா போட்டியை மீண்டும் இலங்கை வசம் கொண்டு வந்தார். 

முகமது ஷமி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இவர், ஒருநாள் அரங்கில் தனது 18வது சதத்தை பதிவு செய்தார். இவர், 84 பந்தில் 103 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின் இணைந்த திசாரா பெரேரா, அஜந்தா மெண்டிஸ் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.

இலங்கை அணி 49.2 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திசாரா பெரேரா (11), மெண்டிஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா தலா 3, அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணிக்கு 4 புள்ளிகள் வழங்கப்பட்டன.