3 வாரத்தில் களம் காண்கிறார் யுவராஜ்

நுரையீரல் கட்டியால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இப்போது குணமடைந்து வருகிறார். அவர் 3 வாரங்களில் மீண்டும் கிரிக்கெட்டில் பங்கேற்பார் என்று அவருடைய தாயார் ஷப்னம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் களத்திலும், வெளியிலும் புதிய யுவராஜ் சிங்கைப் பார்க்கலாம். யுவராஜின் வாழ்க்கையே மாறியுள்ளது.

எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பதை அவர் இப்போது உணர்ந்துள்ளார்.

அவர் எப்போதுமே போராடும் குணமுள்ளவர். இப்போதும் பலமானவராகவும், துணிச்சல் மிக்கவராகவும் உருவெடுத்துள்ளார்.

அவர் தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட காலத்தில் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளார்.

அவருடைய நுரையீரலில் ஏற்பட்ட கட்டி அபாயகரமானது என்பதை அவர் அறிந்திருந்தாலும், அந்த வலியை அவர் யாரிடமும் பகிந்து கொண்டதில்லை.

அது முழுமையாகக் குணமடைய இன்னும் சில நாள்கள் ஆகலாம். அதை பொறுப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றார்.

ஸ்ரீசாந்தின் வாய்ப்பு நழுவியது

கால்விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, கேரளா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், ரஞ்சி கோப்பை "பிளேட்' லீக் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இவருக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடிக்கும் வாய்ப்பு நழுவியது.

உள்ளூர் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை "பிளேட்' லீக் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள கேரளா அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இடம் பெற்றிருந்தார்.

சமீபத்தில் இவரது கால் விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர், எட்டு வாரங்கள் வரை எவ்வித போட்டியிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


நழுவிய வாய்ப்பு:

இதன்மூலம் ஸ்ரீசாந்துக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு வேகப்பந்துவீச்சாளர் பிரவீண் குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் காயம் காரணமாக பிரவீண் குமார், அதிரடியாக நீக்கப்பட்டார். இவருக்கு மாற்று வீரரை, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) தேர்வுக்குழு இன்று தேர்வு செய்கிறது. இதில் இர்பான் பதான், ஸ்ரீசாந்த், அபிமன்யு மிதுன் உள்ளிட்டோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால் காயம் காரணமாக ஸ்ரீசாந்தின் பொன்னான வாய்ப்பு வீணானது.


இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறியதாவது:

முக்கியமான நேரத்தில் காயமடைந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. காயத்தை பரிசோதித்த டாக்டர்கள், "ஆப்பரேஷன்' செய்யும் படி அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் நான் "ஆப்பரேஷன்' செய்யப்போவதில்லை. மாறாக ஆயுர்வேத மருத்துவம் மேற்கொண்டு வருகிறேன். இதன்மூலம் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையலாம்.

ஏனெனில் முன்னதாக ஏற்பட்ட காயத்துக்கு, ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் பூரண குணமடைந்தேன். காயத்தில் இருந்து மீண்டு வரும் நான், டிச., 12ம் தேதி முதல், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

எட்டு வாரங்கள் வரை போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தேன். டெஸ்ட் தொடருக்கு முன், முழுமையாக குணமடைவேன் என்ற நம்பிக்கை இல்லை.

ஆனால் ஒருநாள் தொடருக்கு முன், நூறு சதவீத உடற்தகுதி பெற்றுவிடுவேன் என எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ராகுல் டிராவிட் தேர்வு

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகமானது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இத்தொடரின் 5-வது சீஸன் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக, ராகுல் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல்.-ன் முதல் முன்று சீசன்களிலும் ராகுல் டிராவிட் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார்.

கடந்த 4 -வது சீசனில்தான் ராஜஸ்தான் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 4 சீசன்களிலும் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே இருந்து வந்தார்.

அவருடைய தலைமையின் கீழ் 2008-ஆம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அசத்தல் வெற்றி

சொந்த மண்ணில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விராத் கோஹ்லி(117), ரோகித் சர்மாவின்(90) அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, 5 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ராம்பாலின் அதிரடி ஆட்டம் வீணானது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. கட்டாக்கில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது.


மழையால் தாமதம்:

லேசான மழை காரணமாக, இப்போட்டி சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது. முதல் போட்டியில் விளையாடிய அதே இந்திய வீரர்கள், நேற்றும் களமிறங்கினர். வெஸ்ட் இண்டஸ் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அந்தோனி மார்டினுக்கு பதிலாக ரவி ராம்பால் விளையாடினார். "டாஸ் வென்ற இந்திய கேப்டன் சேவக், "பீல்டிங் தேர்வு செய்தார்.


திணறல் துவக்கம்:

இந்திய "வேகங்கள் உமேஷ் யாதவ், வினய் குமார் போட்டுத் தாக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன. அட்ரியன் பரத் (0), சாமுவேல்ஸ் (4), டேரன் பிராவோ (13), ஹயாத் (0), ராம்தின் (2) சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒருகட்டத்தில் 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.


சிம்மன்ஸ் அரைசதம்:

விக்கெட் ஒருபக்கம் சரிந்தாலும், மறுபக்கம் பொறுப்பாக ஆடிய சிம்மன்ஸ், ரவிந்திர ஜடேஜா பந்தில் ஒரு சூப்பர் பவுண்டரி அடித்து, தனது 10வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அஷ்வின் வீசிய ஆட்டத்தின் 24வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசிய போலார்டு (35), அதே ஓவரில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் டேரன் சமி (2), ரசல் (11) பெரிய அளவில் சோபிக்கவில்லை.


ராம்பால் அபாரம்:

பின், சிம்மன்சுடன் இணைந்த ரவி ராம்பால், அதிரடியாக ரன் சேர்த்தார். இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட சிம்மன்ஸ் (78), ஜடேஜாவின் துல்லிய "த்ரோவில் ரன்-அவுட்டானார். அடுத்து வந்த கீமர் ரோச்சுடன் இணைந்த ராம்பால், ஒருநாள் அரங்கில் தனது முதலாவது அரைசதத்தை பதிவு செய்தார். அஷ்வின், ஜடேஜா, ஆரோன் ஆகியோரது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ராம்பால், அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. ராம்பால் 66 பந்தில் 86 ரன்கள்(6 சிக்சர், 6 பவுண்டரி), ரோச் 24 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, வினய் குமார், ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


மழை குறுக்கீடு:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு பார்த்திவ் படேல் (2) ஏமாற்றினார். அடுத்து வந்த காம்பிர் (12) நிலைக்கவில்லை. அதிரடியாக ஆட நினைத்த சேவக், இரண்டு முறை கண்டம் தப்பினார். இந்திய அணி 11.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் சேவக் (26) அவுட்டானார்.


இளமை எழுச்சி:

அடுத்து இணைந்த இளம் வீரர்களான விராத் கோஹ்லி, ரோகித் சர்மா ஆட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டனர். அபாரமாக ஆடிய விராத் கோஹ்லி, ஒருநாள் அரங்கில் தனது 8வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரோகித் சர்மா, தனது 10வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்த போது கோஹ்லி (117) வெளியேறினார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (0) ஏமாற்றினார்.

பின், ரோகித் சர்மாவுடன் இணைந்த ரவிந்திர ஜடேஜா, ரசல் வீசிய ஆட்டத்தின் 49வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 48.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் (90), ஜடேஜா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை விராத் கோஹ்லி தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 5ம் தேதி ஆமதாபாத்தில் நடக்க உள்ளது.


ராம்பால் உலக சாதனை

இந்தியாவுக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரவி ராம்பால், 66 பந்தில் 86 ரன்கள் (6 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், பத்தாவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

முன்னதாக 2009ல், அபுதாபியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தானின் முகமது ஆமிர், பத்தாவது வீரராக களமிறங்கி 73 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

பேட்டிங்கில் எழுச்சி பெறுவோம் - சேவக்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, பேட்டிங்கில் எழுச்சி பெறுவோம்,'' என, இந்திய கேப்டன் சேவக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. கட்டாக்கில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி 48.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில், "திரில்' வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதுகுறித்து இந்திய கேப்டன் சேவக் கூறியதாவது: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் துவக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேவேளையில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில், "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்காதது பின்னடைவான விஷயம்.

இதனால் இந்திய அணி ஒரு கட்டத்தில் 59 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து திணற நேர்ந்தது. எனவே இப்போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, அடுத்து வரும் போட்டிகளில் பேட்டிங்கில் எழுச்சி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. குறிப்பாக நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், நான் மற்றும் விராத் கோஹ்லி "கிளீன் போல்டானது' சற்றும் எதிர்பாராதது.

பார்த்திவ் படேல், கவுதம் காம்பிர், சுரேஷ் ரெய்னா மூவரும் தங்களது விக்கெட்டை எளிதாக பறிகொடுத்தது பின்னடைவாக அமைந்தது. அடுத்து வரும் போட்டிகளில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் சோபிக்கத்தவறினால், அதற்கு மன்னிப்பு கிடையாது.

இப்போட்டியில் இளம் வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. குறிப்பாக பவுலிங் மற்றும் பீல்டிங்கில் அசத்தினர். இது, அடுத்து வரும் போட்டிகளிலும் தொடரும் என நம்புகிறேன். இக்கட்டான நேரத்தில் ரோகித் சர்மா பேட்டிங்கில் கைகொடுத்தவிதம் பாராட்டுக்குரியது.

மிகச் சிறந்த பேட்ஸ்மேனான இவர், கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி, திறமையை நிரூபித்தார். ஒவ்வொரு போட்டியிலும் இவரது பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவது வரவேற்கத்தக்கது.

எத்தனை ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறோம் என்பது முக்கியமல்ல. வெற்றி மட்டும் தான் இலக்கு. இப்போட்டியில் கிடைத்த வெற்றிக்கு ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, வினய் குமார் ஆகியோரின் பொறுப்பான பேட்டிங் முக்கிய காரணம்.

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இம்மைதானத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 211 ரன்களுக்கு சுருட்டியவிதம் பாராட்டுக்குரியது. இதற்கு வருண் ஆரோன், உமேஷ் யாதவ், வினய் குமார், அஷ்வின் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு முக்கிய காரணம்.

கட்டாக்கில் நடந்த முதலாவது போட்டியில், அதிக அளவில் ரசிகர்கள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும், ஊக்கமும் வெற்றிக்கு வழிவகுக்கும். இதனை அடுத்து வரும் போட்டிகளிலும் எதிர்பார்க்கிறேன்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை "நம்பர்-1' இடத்துக்கு முன்னேற செய்வதே இலக்கு. இதற்காக எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல், முழுத்திறமையை வெளிப்படுத்தி வெற்றி நடையை தக்கவைத்துக் கொள்ள போராடுவோம்.

இவ்வாறு சேவக் கூறினார்