சாம்பியன்ஸ் டிராபி: இன்று இந்தியா-ஆஸி., மோதல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய வாழ்வா... சாவா... போட்டியில் இந்திய அணி, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. தொடரின் அரையிறுதி வாய்ப்பை பெற, இன்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தோனி தலைமையிலான அணி களமிறங்குகிறது.

சாம்பியன்ஸ் டிராபி (மினி <உலக கோப்பை) தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. "ஏ' பிரிவு லீக் போட்டியில் இன்று இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது.


தோனி அதிர்ச்சி:

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் பவுலர்கள் மோசமாக சொதப்பியது, கேப்டன் தோனிக்கு கடும் அதிர்ச்சி அளித்தது.


டிராவிட் ஆறுதல்:

பேட்டிங்கில் துவக்க வீரர் காம்பிர், பார்முக்கு திரும்பியுள்ளது வரவேற்கத்தக்கது. சச்சின் இன்று நம்பிக்கை கொடுப்பார் என தெரிகிறது. ரெய்னா, டிராவிட் கடைசி வரை நிலைத்து நின்று வெற்றிக்கு உதவ வேண்டும்.

தோனி, விராத் கோஹ்லி இருவரும் சூழ்நிலை கண்டு பொறுப்பாக விளையாட வேண்டும். தன்மீதான நம்பிக்கையை யூசுப் பதான் தொடர்ந்து வீணடித்து வருகிறார்.


பவுலிங் சொதப்பல்:

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர்கள் சொதப்பினர். கேப்டன் தோனி, நேரடியாக பவுலர்கள் மீதே குற்றம் சுமத்தினார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இஷாந்த் துவக்கத்தில் விக்கெட் வீழ்த்தி அணியினரை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஆஷிஸ் நெஹ்ரா அசத்தலை இன்றும் தொடர்வார் என நம்பலாம். ஆர்.பி.சிங் சரியாக செயல்படாத பட்சத்தில் பிரவீண் குமாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.


ஏமாற்றிய ஹர்பஜன்:

சயீத் அஜ்மல், மெண்டிஸ், வான் டர் மெர்வி போன்ற இளம் வீரர்கள் இந்த தொடரில் அசத்தி வரும் நிலையில் இந்தியாவின் அனுபவ ஹர்பஜன், ஏமாற்றுவது வருத்தம் தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதும் சாதிக்கும் இவர், இன்றும் ஆறுதல் கொடுப்பார் என தெரிகிறது.


பாண்டிங் பலம்:

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வென்ற உற்சாகத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் போட்டியில் வென்றுள்ளது. இன்றும் கேப்டன் பாண்டிங், பெய்னே, வாட்சன், மைக்கேல் ஹசி, பெர்குசன் ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுக்கலாம். முதல் போட்டியில் களமிறங்காத துணைக்கேப்டன் மைக்கேல் கிளார்க், இன்று விளையாட உள்ளார்.


பிரெட் லீ எழுச்சி:

நீண்ட ஓய்வுக்கு பின் களமிறங்கிய பிரெட் லீ, சிறப்பாக செயல்படுகிறார். பந்து வீச்சில் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் ஜான்சன் அசத்துவது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவர்கள் தவிர, பீட்டர் சிடில், வாட்சன், ஹோப்ஸ் என வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல அடித்தளம் அமைக்கிறார்கள். சுழலில் ஹவுரிட்ஜ் நன்கு செயல்படுவது கேப்டனுக்கு நலமே.

பகலிரவு போட்டி என்பதால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்வது <உறுதி. இரு அணிகளும் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குவதால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

-----


யாருக்கு அரையிறுதி வாய்ப்பு

இன்று இந்திய அணி வெல்லும் பட்சத்தில் அரையிறுதி செல்ல வாய்ப்பு பிரகாசமாகும். தவிர, தோல்வியடைந்தால் தொடரை விட்டு வெளியேற நேரும். பிரிவு "ஏ'ல் இருந்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மட்டும் அரையிறுதிக்கு தகுதிபெறும். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தொடரை விட்டு வெளியேறும்.


இந்தியா ஆதிக்கம் :

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் இந்திய அணி இரண்டு முறையும், ஆஸ்திரேலிய அணி, ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
----


இரு அணிகள் இதுவரை...
* இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 96 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் இந்திய அணி 32, ஆஸ்திரேலிய அணி 57 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

* ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக கடந்த 2003ல் 2 விக்கெட்டுக்கு 359 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி கடந்த 2001ல் தனது அதிகபட்ச ஸ்கோராக 315 ரன்கள் எடுத்துள்ளது.

* குறைந்த ரன்னாக இந்திய அணி கடந்த 1981ல் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி கடந்த 1991ல் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

*கடந்த 2007ல் இந்திய அணியின் முரளி கார்த்திக், 27 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சு. ஆஸ்திரேலிய அணி சார்பில் மெக்லே, 39 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
-------


சச்சின் ஆதிக்கம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவின் சச்சின் இதுவரை, 2730 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரண்டு இடத்தில் அசாருதீன் (990), டிராவிட் (928) உள்ளனர்.

இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங், இதுவரை 1713 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரு இடங்களில் கில்கிறிஸ்ட் (1622), ஹைடன் (1450) உள்ளனர்.
-------


பிரெட் லீ மிரட்டல்

இரு அணிகளுக்கு இடையே அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ (49) முதலிடத்திலும், இந்தியாவின் கபில் தேவ் (45) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் போட்டிக்கு ஆபத்து?

"டுவென்டி-20' போட்டிகளின் வரவிற்கு பின் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமல்ல ஒருநாள் போட்டிகளுக்கும் வரவேற்பு குறைந்துள்ளது. விரைவில் ஒருநாள் போட்டிகள் மறைந்து விடும் என அஞ்சப்படுகிறது.

அவ்வளவு எளிதில் இது நடக்குமா அல்லது மீண்டும் எழுச்சி பெறுமா என்பது குறித்து பார்ப்போம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டு, குறிப்பிட்ட ஓவர்கள் கொண்டு விளையாடும் ஒருநாள் போட்டி முறை, 1962ல் கொண்டு வரப்பட்டது.

அப்போது தலா 65 ஓவர்கள் கொண்ட போட்டியாக விளையாடப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் முதன் முதலாக 1975ல் நடந்த உலக கோப்பை 60 ஓவர்கள் கொண்டதாக இருந்தது. பின் அதுவும் குறைந்து தற்போது 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.

கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்களின் பிறப்பிடமாக இருக்கும் இங்கிலாந்து, கடந்த 2003ல் மூன்றரை மணி நேரத்தில் முடிந்து விடக்கூடிய "டுவென்டி-20' கிரிக்கெட் போட்டியை உள்ளூரில் அறிமுகம் செய்தது.

பின் 2005ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் அறிமுகப்படுத்தியது. இந்த வகை போட்டியின் அசுர வளர்ச்சியால், முதன் முதலாக ஐ.சி.சி., சார்பில் நடந்த 2007 உலக கோப்பை தொடர் நடத்தப்பட்டது.

இதில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றது. பின் 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. உலகிலேயே அதிக ரசிகர்கள் நேரிலும், "டிவி'யிலும் கண்டுகளித்த தொடராக சாதனை படைத்தது.

குறைந்த பார்வையாளர்கள்:
இப்படி "டுவென்டி-20' போட்டிக்கு அமோக ஆதரவு கிடைக்க, ஒருநாள் போட்டிக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இதன் உச்சகட்டமாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, 2010ம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டி அட்டவணையில் இருந்து ஒருநாள் போட்டிகளை நீக்கியது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் வார்ன்,""டெஸ்ட், "டுவென்டி-20' என இருவித கிரிக்கெட் மட்டும் போதும். ஒருநாள் போட்டி தேவையில்லை,'' என்றார்.

அதிகரித்த ஒருநாள்:
ஆனாலும், ஐ.சி.சி., அட்டவணையில் இடம் பெற்றுள்ள ஒரு நாள் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கின்றன. கடந்த 1980 முதல் 1989 வரையில் 516 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. 2000 முதல் இந்த ஆண்டு வரை 1353 போட்டிகள் நடந்துள்ளது. இதனை பார்க்கையில் ஒரு நாள் போட்டிகள் எளிதில் மறையாது என்பது தெளிவாகிறது.

ஐ.சி.சி., ஆதரவு:
இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை நிர்வாகி ஹாருண் லார்கட் கூறுகையில்,"" ஒருநாள் கிரிக்கெட் மிக வெற்றிகரமான போட்டி. தற்போதைக்கு 50 ஓவர்கள் போட்டியில் இருந்து விலகி செல்லும் எண்ணம் இல்லை. இதில் மாற்றம் செய்வதற்கு சச்சின் போன்றவர்கள் தெரிவித்துள்ள கருத்தை வரவேற்கிறோம்,'' என்றார்.

சவாலான நாட்கள்:
அடுத்து வர இருக்கும் ஒன்றரை ஆண்டுகள் ஒருநாள் போட்டிகளுக்கு சவாலான நாட்கள். வரும் 2011ல் ஆசிய துணைக்கண்டத்தில் நடக்க இருக்கும் <உலக கோப்பை (50 ஓவர்) தொடர், ஒருநாள் போட்டிகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு துணைக்கண்டத்து நிர்வாகிகள் கடுமையாக போராட வேண்டும். ஒருவேளை இந்திய அணி மீண்டும் "நம்பர்-1' இடத்தை பிடித்து விட்டால் அது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, வர்த்தக ரீதியிலும் இந்த போட்டிகளுக்கு உள்ள வரவேற்பை அதிகரித்து விடும்.

சச்சின் "பார்முலா'
ஒருநாள் போட்டிகளில் விறுவிறுப்பை அதிகரிக்க இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்,"" 100 ஓவர்களை பிரித்து தலா 25 ஓவர்கள் வீதம் நான்கு இன்னிங்சாக விளையாடலாம்,'' என்கிறார்.

மற்றொரு இந்திய வீரர் கும்ளே,""50 ஓவர்கள் என்பதை 40 ஓவர்களாக குறைத்து விளையாடலாம்,'' என்றார். வழக்கம் போல இங்கிலாந்து ஏற்கனவே 50 ஓவர்களை குறைத்து தலா 40 ஓவர்கள் கொண்ட "புரோ-40' போட்டிகளை அறிமுகம் செய்துள்ளது.
புதிய கருத்து நன்மையா?

* சச்சினின் கருத்துப்படி நான்கு இன்னிங்சாக விளையாடுவதால் ஒவ்வொரு 25 ஓவர்கள் துவக்கத்தின் போதும் அதிக பரபரப்பு இருக்கும்.

* மிடில் ஆர்டரில் சோம்பலாக செல்லும் நிலையை
மாற்றலாம்.

* பகலிரவு போட்டிகளில் "டாஸ்' வெல்லும் அணிக்கு போட்டி சாதகமாக முடிவதை தடுக்கலாம். ஏனெனில் இரு அணிகளும் பகலில் மற்றும் இரவில் தலா 25 ஓவர்கள் விளையாடும்.

* "டுவென்டி-20' போட்டிகள் போல பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் இருக்கும். இது பார்வையாளர்களிடம் வரவேற்பை அதிகரிக்கும்.

பவுலர்கள் பரிதாபம்

* தலா 4 இன்னிங்சாக மாற்றுவதால் முதலில் ஆட்டமிழந்த வீரர் மறுபடியும் களமிறங்கலாம். இது பவுலர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும்.

* எந்த பேட்ஸ்மேன்களும் சதம் அடிக்க முடியாமல் போகலாம்.

* பின் வரிசை வீரர்கள் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு இருக்காது

இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடனான லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.

இது பகலிரவு ஆட்டமாக செஞ்சுரியன் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

டாûஸ வென்ற பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ்கான் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

துவக்க ஆட்டக்காரர்களாக கம்ரன் அக்மலும், இம்ரான் நசீரும் களமிறங்கினர். ஆனால் இருவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. நஸீர் 20 ரன்களிலும், கம்ரன் அக்மல் 19 ரன்களிலும் பெவிலியின் திரும்பினர். இந்த விக்கெட்டுகளையும் நெஹ்ரா வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து வந்த கேப்டன் யூனிஸ்கானை 20 ரன்களில் அவுட்டாக்கினார் ஆர்.பி. சிங்.

இந்நிலையில் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷோயிப் மாலிக்கும், முகமது யூசுப்பும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ஸ்கோர் 180-ஐத் தொட்ட பிறகு இருவரும் அதிரடியாக விளையாடினர். மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் பெüண்டரி பறந்தது. குறிப்பாக ஸ்லிப் திசையில் பெüண்டரிகளை விரட்டி ஸ்கோரை இருவரும் உயர்த்தினர்.

அதிரடியாக விளையாடிய மாலிக் சதமடித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த யூசுப்பை 87 ரன்களில் அவுட்டாக்கினார் நெஹ்ரா. 88 பந்துகளில் இந்த ரன்களை அவர் சேர்த்தார். மாலிக் - யூசுப் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஷாகித் அப்ரிதி 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மாலிக் 128 ரன்களில் வீழ்ந்தார். 126 பந்துகளில் இந்த ரன்களை அவர் எடுத்தார்.

முகமது ஆமிர், உமர் அக்மல், உமர் குல் ஆகியோர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நவீத் உல் ஹசன் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியத் தரப்பில் நெஹ்ரா 4 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், ஆர்.பி. சிங், ஹர்பஜன் சிங், பதான், ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்தியா தோல்வி:

303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்திய அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது

ஆஸ்திரேலியாவுடனான தொடரில் விளையாடுவேன்: சேவாக்

ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறினார்.

இதுகுறித்து மும்பையில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

அக்டோபர் 25-ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒரு தினத் தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்குள் நான் முழு உடல் தகுதியுடன் இந்திய அணியில் இடம்பெறுவேன்.

உடல்ரீதியாக நான் இன்னும் முழுதுமாக தயாராகவில்லை. பெüண்டரி எல்லையிலிருந்து என்னால் பந்தை எறியமுடியவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா தொடர் துவங்க இன்னும் ஒரு மாதம் உள்ளது. அதற்குள் நான் தயாராகிவிடுவேன்.

இருப்பினும் சாம்பியன்ஸ் லீக் போட்டி, ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடுவேன்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. துணை கேப்டன் பதவியில் எனக்கு விருப்பமில்லை. என்னை விட இளைஞராக உள்ள வீரருக்கு அதை வழங்கலாம். இதன்மூலம் நான் பேட்டிங்கில் கவனம் செலுத்தலாம் என்றுதான் நான் கூறியிருந்தேன். அதை இப்போதும் கூறுகிறேன். கேப்டன் பதவிக்கு நான் என்றும் ஆசைப்பட்டதில்லை என்றார் அவர்

சச்சின் விக்கெட்டே எனது இலக்கு: ஆமீர்

இந்தியாவுடனான ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டே எனது இலக்கு என பாகிஸ்தான் இளம் வீரர் முகமது ஆமீர் (18) கூறினார்.

ஜோஹன்னஸ்பர்கில் இருந்து ஆமீர் கூறியதாவது: சச்சின் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அவரது விக்கெட்டை கைப்பற்றுவதில் ஆர்வமாக உள்ளேன். அதற்காக எப்படிப் பந்துவீசுவது என பயிற்சியும் எடுத்துள்ளேன்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது என்பது எனது கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மறக்க முடியாத சில ஆட்டங்களைப் பார்த்துள்ளேன். டெண்டுல்கருக்கு வாசிம் அக்ரம் எப்படி பந்துவீசினார் என்பதை விடியோவில் பார்த்து தெரிந்து கொண்டுள்ளேன்.

சச்சின் விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்துவது எனக்கு மட்டும் உற்சாகத்தைக் கொடுப்பதல்ல. முழு அணியுமே அதனால் மகிழ்ச்சி அடையும்.

மொத்த அணியுமே இந்தியாவுடனான ஆட்டத்தை எதிர் நோக்கியுள்ளது. இந்தியாவுடனான ஆட்டத்தில் தனிப்பட்ட முறையில் எப்படி விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. இணைந்து எப்படி செயல்படப் போகிறோம் என்பதே முக்கியம் என்றார்.

மேற்கிந்தியத் தீவுகளுடனான முதல் ஆட்டத்தில் ஆமீர் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது