தன்னம்பிக்கை வீரர் டிராவிட்

இரண்டு ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் மீண்டும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் ராகுல் டிராவிட். அணியிலிருந்து அவ்வப்போது புறக் கணிக்கப்பட்ட போதும், அயராத தன்னம்பிக்கை காரணமாக மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

இந்திய சுவர் :இந்திய அணியின் "பெருஞ்சுவர்' என வர்ணிக்கப்படும் டிராவிட், தனது பொறுப்பான ஆட்டத்தால் அணியை சரிவிலிருந்து மீட்கும் வல்லமை படைத்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் சச்சின், கங்குலி, டிராவிட் இல்லாமல், இந்திய அணி எந்த ஒரு நாள் தொடர்களிலும் பங்கேற்றது இல்லை.

இதில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் மட்டுமே அணியிலிருந்து இதுவரை, தேர்வாளர்களால் நீக்கப்பட்டது இல்லை.கங்குலி, டிராவிட் இருவரும் பார்ம் இல்லாத காரணத்தால் அணியிலிருந்து பலமுறை நீக்கப்பட்டுள்ளனர். இதில் கங்குலி ஓய்வு பெற்று விட்டார்.

அதிரடி நீக்கம் :தற்போது ராகுல் டிராவிட் தன்னம்பிக்கையுடன் அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த 2007 ம் ஆண்டு மோசமான பார்மை காரணம் காட்டி, ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் டிராவிட். அந்த ஆண்டு 31 போட்டிகளில் விளையாடியிருந்த இவரது சராசரி 37.4 சதவீதம். இதை மோசமான செயல்பாடு என்று கூறமுடியாது.

இருப்பினும் டிராவிட் அணி நிர்வாகத்தால் ஓரங் கட்டப்பட்டார். இதுவரை 333 ஒரு நாள் போட்டிகளில் 10585 ரன்கள் எடுத்துள்ளார் டிராவிட். சராசரி 39.49 சதவீதம்.

காரணம் என்ன? :ரோகித் சர்மா, விராத் கோஹ்லி உள்ளிட்ட இளம் வீரர்களின் எழுச்சியே, டிராவிட்டின் நீக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனாலும் 2வது "டுவென்டி-20' உலககோப்பையின் படுதோல்வி இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. டிராவிட் போன்ற அனுபவவீரரின் அவசியத்தை உணர்த்தியது. ரோகித் சர்மாவின் செயல்பாடும் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. 41 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித்தின் சராசரி வெறும் 24.8
சதவீதம் தான்.

மீண்டும் தேவை :இந்நிலையில் மிடில் ஆர்டரை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற் பட்டது. அடுத்து நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட முக்கிய தொடர்களை கணக்கில் கொண்டு, சரியான நேரத்தில் டிராவிட் டுக்கு மீண்டும் வாய்ப்பு அளித் துள்ளனர்.

2 ஆண்டுகள் அணியில் இடம்பெறாவிட்டாலும், டிராவிட் ஒரு நாள் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவிக்கவில்லை. மீண்டும் ஒரு நாள் அணியில் இடம் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் இருந்தார். அவரது தன்னம் பிக்கை வெற்றி தேடித் தந்துள்ளது.

இலங்கை முத்தரப்பு தொடரில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், அடுத்த உலககோப்பை (2011) தொடர் வரை இந்திய அணியில் டிராவிட் நீடிக்கலாம்.

ஊக்க மருந்து சோதனை : ஐ.சி.சி., புதிய முடிவு

ஊக்க மருந்து சோதனை விவகாரத்தில் இந்தியாவின் நெருக்கடிக்கு ஐ.சி.சி., பணிந்துள்ளது. கிரிக்கெட்டுக்கு என்று பிரத்யேகமாக ஒரு விதிமுறை அல்லது சர்ச்சைக்குரிய புதிய விதிமுறையில் சலுகை அளிக்க வேண்டுமென உலக ஊக்க மருந்து தடுப்பு மையத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த 2006ல் உலக ஊக்க மருந்து தடுப்பு மையத்தில் ஐ.சி.சி., சேர்ந்தது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறையின் படி, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வீரர்கள் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தனர். இவர்களுக்கு இந்திய கிரிக்கெட் போர்டும் (பி.சி.சி.ஐ.,) ஆதரவு தெரிவித்தது. தற்போது இந்தியாவுக்கு சாதகமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) கருத்து தெரிவித்து உள்ளது.

இது குறித்து ஐ.சி.சி., தலைமை நிர்வாகி ஹாரூன் லார்கத் கூறுகையில்,"" கிரிக்கெட்டுக்கு என்று தனியாக விதிமுறையை ஏற்படுத்த வேண்டும் என உலக ஊக்க மருந்து தடுப்பு மையத்தை வலியுறுத்த உள்ளோம்.

இதில் சிக்கல் ஏற்படும்பட்சத்தில், புதிய விதிமுறையை தளர்த்தி சில சலுகைகள் அளிக்க வேண்டும். இப்பிரச்னை பற்றி ஐ.சி.சி., செயற்குழுவில் விவாதித்து உரிய முடிவு எடுக்கப்படும்,''என்றார்

ஐசிசி விருது: தோனி உள்பட 9 இந்திய வீரர்களின் பெயர் பரிந்துரை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விருதுகளுக்கு இந்திய அணியின் கேப்டன் தோனி உள்பட 9 இந்திய வீரர்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஐசிசி சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு இந்திய அணியின் கேப்டன் தோனி 3 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருதின வீரர் என 3 பிரிவுகளில் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கெüரமிக்க வீரர் விருதுக்கு கெüதம் கம்பீர், ஹர்பஜன் சிங் ஆகிய இந்திய வீரர்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்காக இந்தியாவின் கம்பீர், ஹர்பஜன், விவிஎஸ் லஷ்மண் ஆகியோரது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த ஒரு தின ஆட்டக்காரர் விருதுக்காக தோனியுடன், யுவராஜ்சிங், சேவாக் ஆகியோரது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

20-20 போட்டிகளில் சிறந்த முறையில் பரிமளித்தவர் விருதுக்காக இந்தியாவின் ஜாகீர்கான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி ஹரூன் லாக்ரட் இதைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சேவாக் உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்

சேவக் மீது வழக்குப் பதிவு

பணமோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், சேவக் மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின்அதிரடி துவக்க ஆட்டக்காரர் சேவக்.

இவரின் தொழில் பார்ட்னர் சித்தார்த். கடந்த 2006 ம் ஆண்டு சேவக்கிற்கு சொந்தான உணவு விடுதியை, குத்தகையில் எடுத்து நடத்துவதற்கு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளார். இதன் படி அலகாபாத்தில் ஆசிரியராக உள்ள ரஜத் சர்மா என்பவர், சித்தார்த்தை அணுகியுள்ளார்.

விடுதி நடத்தும் உரிமையை அவரிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு சித்தார்த் விற்றுள்ளார். இருப்பினும், ஒப்பந்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும், விடுதி உரிமை ரஜத்திடம் கொடுக்கப்படவில்லை.

இதனால் சேவக் மற்றும் சித்தார்த் மீது அலகாபாத் போலீஸ் நிலையத்தில் ரஜத் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை எனத் தெரிகிறது.

இதனால் ரஜத், அலகாபாத் கோர்ட்டில் இருவர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்தார். இதை விசாரித்த நீதிபதி, இருவர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யுமாறுபோலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஹர்பஜனுக்கு ரூ. 3000 அபராதம்

பதிவு எண் இல்லாமல், தனது "ஹம்மர்' சொகுசு காரை பயன்படுத்திய ஹர்பஜனுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணிசுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் இவர், சமீபத்தில் ரூ. ஒருகோடி மதிப்பிலான "ஹம்மர்' சொகுசு காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தார். "கார்பரேட் டிராபி' கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஹர்பஜன், "ஹம்மர்' காரில் நேற்று முன் தினம் ஜலந்தரிலிருந்து சண்டிகர் வந்தார்.

காரில் பதிவு எண் இல்லை. இதனை கவனித்த சண்டிகர் டிராபிக் போலீஸ் நிர்வாகம், ஹர்பஜனுக்கு அபராதம் விதித்தது. இது குறித்து சண்டிகர் டிராபிக் போலீஸ் எஸ்.பி., டூன் கூறுகையில்,"" சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்தாலும், சாதாரண மனிதராக இருந்தாலும் சரி. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது தான்.

ஹர்பஜன் மட்டுமல்ல, வேறுயாராவது பதிவு எண் இல்லாமல் காரை ஓட்டினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஹர்பஜனுக்கு ரூ. 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளோம்,'' என்றார்.இதற்கு முன்: ஹர்பஜனுக்கு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் ஐ.பி.எல்., தொடரில் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்து பிரச்னை ஏற்படுத்தினார்.

பிரபல மதுபான விளம்பரத்தில் நடித்ததால் பிரச்னையை எதிர்கொண்டார். தவிர, "டிவி' நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஒருவருடன் இணைந்து நடனமாடினார். இது அவர் சார்ந்த சமுதாய மக்களிடையே கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. பின்னர் தனதுசெயலுக்கு மன்னிப்புக் கேட்டு தப்பித்தார். தற்போது தான் வாங்கிய ஹம்மர் சொகுசு காரின் மூலம் புதிய பிரச்னையை சந்தித்துள்ளார்