இந்திய அணியின் ‘இயக்குனராக’ கடந்த 18 மாதங்கள் இருந்தவர் ரவி சாஸ்திரி. இவர் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என, பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
புதிய திருப்பமாக ‘சுழல்’ ஜாம்பவான் கும்ளேயும், போட்டியில் குதித்தார். கடைசியில் வாய்ப்பு கும்ளேவுக்கு சென்றது.
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியது:
கடந்த 2014 ஆக., மாதம் ‘இயக்குனராக’ பொறுப்பேற்ற போது, வீரர்கள் மிகவும் பலவீனமாக இருந்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக வலிமையாக மீண்டு வந்தோம். டெஸ்ட், ‘டுவென்டி–20’ போட்டிகளில் ‘நம்பர்–1’, ஒருநாள் தரவரிசையில் ‘நம்பர்–2’ இடத்தை பிடித்தோம்.
அன்னிய மண்ணில் கடுமையாக போராடினோம். இங்கிலாந்து மண்ணில் 24 ஆண்டுக்குப் பின் ஒருநாள் தொடரை வென்றோம்.
1993க்குப் பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் கோப்பை கைப்பற்றினோம். 50 ஓவர், ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினோம், ஆசிய கோப்பை சாம்பியன் என, பல வெற்றிகள் கிடைத்தது.
இதை எல்லாம் தோல்விகள் என்று கூறினால், அப்புறம் என்னத்த சொல்றது. பயிற்சியாளர் ஆகாதது ஏமாற்றமே.
அதேநேரம் எதிர்பார்த்தது தான். ஒரு செடியை ஊன்றி, தண்ணீர் ஊற்றி மரமாக வளர்த்து, அது பழம் கொடுக்கும் நிலையில், பறிக்க விடாமல் செய்வது போன்றது தான் இச்செயல்.
வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பின், இந்திய அணி சொந்தமண்ணில் தான் நிறைய டெஸ்டில் பங்கேற்கவுள்ளது. இதில் எப்படியும் சாதிக்கலாம்.
ஆனால் அணி வீரர்களுடன் நான் இல்லை. இது தான் வாழ்க்கை.
நான் பதவிக்கு வந்த போது, பி.சி.சி.ஐ.,யை கோர்ட், மீடியா, ரசிகர்கள் என, பல தரப்பும் விளாசிக் கொண்டிருந்தது.
இந்திய அணி மட்டும் வெற்றி பெற்று வந்தது. கடைசியில் இப்படி ஆகிவிட்டது. இந்திய கிரிக்கெட் என்று வரும் போது இது எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை.