சச்சின் இல்லாமல் முதல் முறையாக...

உலக கோப்பை அரங்கில் முதல் முறையாக சச்சின் இல்லாமல் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.

உலக கோப்பை(50 ஓவர்) வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இதற்கு ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சினின் ஆட்டம் முக்கிய காரணம். 

1992ல் சிட்னியில் நடந்த உலக கோப்பை தொடரில், 19வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக களம் கண்டார். 

இதில் அரை (54*) சதம் விளாசினார். பின், 1996(31, சிட்னி), 1999 (45, மான்செஸ்டர்), 2003 (98, செஞ்சுரியன்), 2011 (85, மொகாலி) என அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.

ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை அரங்கில் 5 போட்டிகளில் 313 ரன்கள் குவித்தார். இதன் சராசரி 78.25. 

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் விடைபெற்ற நிலையில், வரும் உலக கோப்பை தொடரில் (பிப்.,14– மார்ச் 29) பங்கேற்க இயலாது. 

இத்தொடரில் முதல் முறையாக, சச்சின் இல்லாமல் இந்திய அணி, பாகிஸ்தானை (பிப்.,15, அடிலெய்டு) எதிர்கொள்ளவுள்ளது. 

இதில் சச்சினின் இடத்தை ரோகித் சர்மா, விராத் கோஹ்லி போன்ற இளம் வீரர்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

படுக்கையை நகர்த்திய பேய் - பயந்து ஓடிய பாக்., வீரர்

பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் சோகைல் தங்கியிருந்த ஓட்டல் அறையின் படுக்கையை பேய் நகர்த்தியதாம். இந்த பயத்தில் அலறி ஓடிய இவர், மானேஜர் அறையில் தஞ்சம் அடைந்தாராம்.

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 

கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ரிட்ஜஸ் லாடிமிர் ஓட்டலில் வீரர்கள் தங்கியுள்ளனர். இதில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஹாரிஸ் சோகைல், 26, தங்கியிருந்த அறையில், நள்ளிரவில் திடீரென படுக்கை நகர்ந்துள்ளது.

உடனடியாக விழித்து எழுந்த இவருக்கு, அறைக்குள் பேய் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட, பயந்து போய் வெளியேறினார். பக்கத்து அறையில் இருந்த அணி மானேஜர் நவீது அக்ரம் சீமாவிடம் சொல்லி, வேறு அறைக்கு சென்று விட்டார்.

இதுகுறித்து சீமா கூறுகையில்,‘‘ ஹாரிஸ் காய்ச்சலால் அவதிப்பட்டது கூட பயத்திற்கு காரணமாக இருக்கலாம். தனது படுக்கை யாரோ ஒருவரால் தள்ளப்பட்டது என, உறுதியாக நம்புகிறார்,’’ என்றார்.

ஓட்டல் அமைந்துள்ள பகுதியில் 2011ல்  ஏற்பட்ட பூகம்பத்தில் 185 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு  பின் ஓட்டல் புதுப்பிக்கப்பட்ட நிலையில், முதன் முறையாக வீரர் ஒருவர் ‘பேய்’ புகார் கூறியுள்ளார்.

இந்த புகாரை ஓட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது.

கிரிக்கெட் அரங்கில் இதுபோல பேய் பீதி ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. 2005ல் இங்கிலாந்தின் லம்லி கேசில் ஓட்டலில் தங்கிய ஷேன் வாட்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் பேய் உலாவுவதாக கூறினர்.

கடந்த ஆண்டு ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் லண்டனில் உள்ள லாங்காம் ஓட்டலில், பேய் தொல்லை காரணமாக அறையை மாற்றினர்.

ஐ.பி.எல்., சூதாட்டம் - மவுனம் கலைத்தார் தோனி

ஐ.பி.எல்., சூதாட்ட பிரச்னையில் என் பெயரையும் இணைத்து வெளியாகும் கற்பனை செய்தியை எப்போதும் தடுக்க முடியாது,’’ என, இந்திய அணி கேப்டன் தோனி கூறினார்.      

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்த ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்ப்பித்தது. 

இதில், சென்னை அணி கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட 13 வீரர்கள் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கான தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. 

இதில், சீனிவாசன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதே நேரம், சென்னை அல்லது பி.சி.சி.ஐ., தலைவர் பதவி என ஏதாவது ஒன்றில் மட்டுமே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.      

சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா மற்றும் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்ய 3 நீதிபதிகள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல மாதங்களாக, வாய் திறக்காத தோனி, முதல் முறையாக பேசியுள்ளார்.       

இது குறித்து தோனி கூறுகையில்,‘‘ ஐ.பி.எல்., சூதாட்ட சர்ச்சையில் எனது பெயரும் இடம் பெற்றுள்ளதாக வந்த கற்பனை செய்தியை எதிர்பார்க்கவில்லை. இதனை ஒருபோதும் தடுக்க முடியாது. இவ்விஷயத்தை கவனமாக கையாள்கிறேன். ஒருவேளை இப்பிரச்னை முற்று பெற்றாலும், ஓரிரு நாட்களில் மற்றொரு கற்பனை செய்தி வெளியாகலாம்,’’ என்றார்.

வேதனையில் சாதனை வீரர்கள்

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கான அணியில் யுவராஜ் சிங், பீட்டர்சன், போலார்டு உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது வியப்பான விஷயம். இவர்களை பற்றி  விவரம்:


யுவராஜ் சிங், 33(இந்தியா):

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த ‘ஆல்–ரவுண்டர்’ தான் யுவராஜ். மொத்தம் 293 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 8,329 ரன்கள் குவித்துள்ளார். 

கடந்த 2011 உலக கோப்பை தொடரில் 362 ரன்கள் எடுத்து, 15 விக்கெட் வீழ்த்தி, ‘தொடர் நாயகனாக’ ஜொலித்தார் சமீபத்திய  ரஞ்சி கோப்பை தொடரில் தொடர்ந்து ‘ஹாட்ரிக்’ சதம் விளாசினார். இதேபோல, சேவக், காம்பிருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.


அலெஸ்டர் குக், 30,(இங்கிலாந்து):

ஆன்ட்ரூ ஸ்டிராசிற்குப் பின், இங்கிலாந்து அணியை வழி நடத்த சரியான நபர் என்று கண்டறியப்பட்டவர் அலெஸ்டர் குக். மொத்தம் 92 போட்டிகளில் 3,204 ரன்கள் குவித்துள்ளார். கடைசியில், உலக கோப்பை தொடர் துவங்க இருந்த நேரத்தில், கழற்றி விடப்பட்டார்.


பீட்டர்சன், 34,(இங்கிலாந்து):

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர் பீட்டர்சன். 136 போட்டிகளில், 4,440 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்த அதிக ரன்கள் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர். இருந்த போதும், ஆஷஸ் தொடர் தோல்வியை காரணம் காட்டி, அணியில் இருந்து நீக்கப்பட்டார் 


போலார்டு, 27, பிராவோ, 31,(வெ,இண்டீஸ்):

 ஒருநாள் அணியில் ‘ரெகுலர்’ வீரர்கள் போலார்டு (91 போட்டி, 2,042 ரன்), டுவைன் பிராவோ (164 போட்டி, 2,968 ரன்). இவர்கள் இல்லாமல் ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குவது கிடையாது. 

இருவருமே சிறந்த ‘ஆல் ரவுண்டர்கள்’. 

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பாதியில் ரத்து செய்து விட்டு திரும்பிய விஷயத்தில், இவர்களுக்கு பங்கு இருக்கும் என்று சந்தேகப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு, உலக கோப்பை அணியில் இடம் தராமல் பழி தீர்த்துக் கொண்டது.


லியான், 27

தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ‘நம்பர்–1’ சுழற்பந்து வீச்சாளர் லியான் தான். சமீபத்திய இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் முதலிடம் (23) பெற்றவர்.

இருப்பினும், வேகத்துக்கு சாதகமான ஆடுகளங்களில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் தோகர்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து, லியானை கைவிட்டு விட்டனர் போல. 

இதேபோல, அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் (ஆஸி.,), மெக்லாரன் (தென் ஆப்.,), ஜேம்ஸ் நீஷம் (நியூசி.,), உமர் குல் (பாக்.,) என, கடைசி நேரத்தில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ‘ஹீரோக்களின்’ பட்டியல் நீளுகிறது.

நியூசி., ஜோடி உலக சாதனை - இலங்கையை மீண்டும் வென்றது

எலியாட், ரான்கி ஜோடி உலக சாதனை படைக்க, இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்தின் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 4 போட்டிகள் முடிவில், நியூசிலாந்து அணி 2–1 என, முன்னிலையில் இருந்தது.

ஐந்தாவது போட்டி டுனிடினில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணிக்கு கப்டில், ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பிரண்டன் மெக்கலம் (25), கேப்டன் வில்லியம்சன் (26), ராஸ் டெய்லர் (20) சீரான இடைவெளியில் அவுட்டாகினர். நியூசிலாந்து அணி 93 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

பின் இணைந்த ரான்கி, எலியாட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரான்கி, 74வது பந்தில், தனது முதல் சர்வதேச சதம் கடந்தார். 


உலக சாதனை:

இவருக்கு நல்ல ‘கம்பெனி’ கொடுத்த எலியாட், தன் பங்கிற்கு 2வது சதம் அடிக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 360 ரன்கள் குவித்தது. 6வது விக்கெட்டுக்கு 30 ஓவர்களில் 267 ரன்கள் சேர்த்த ரான்கி, எலியாட் ஜோடி, புதிய உலக சாதனை படைத்தது.


இலங்கை தோல்வி:

கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு திரிமான்னே (45), ஜெயவர்தனா (30), மெண்டிஸ் (18) சற்று ஆறுதல் தந்தனர். தில்ஷன் ஒருநாள் அரங்கில் 21 வது சதம் அடித்தார்.

இருப்பினும், இலங்கை அணி 43.4 ஓவரில், 252 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 108 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 3–1 என, முன்னிலை பெற்றது. 

இந்திய அணியில் போதுமான மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள்

இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டும், சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனுமான ராகுல் டிராவிட் பேட்டி ஒன்றில் கூறியதாவது:–

இந்திய அணி உலக கோப்பையை மீண்டும் கைப்பற்ற நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அணியில் போதுமான அளவு மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். இந்திய அணியோடு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கடந்த உலக கோப்பையை போலவே இந்த உலக கோப்பையின் போட்டி முறை இருக்கிறது. இது என்னை கவர்ந்து இழுக்கவில்லை. இந்த முறையில் முன்னணி அணிகள் கால் இறுதிக்கு எளிதில் தகுதி பெற்றுவிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டிவிலியர்ஸ் உலக சாதனை

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்த தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் சாதனை மழை பொழிந்தார். அதிவேக அரைசதம், அதிவேக சதம் கடந்து உலக சாதனை படைத்தார். தென் ஆப்ரிக்க அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.     

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. 

இரண்டாவது போட்டி ஜோகனஸ்பர்க்கில் நேற்று நடந்தது. மார்பக புற்று நோய் விழிப்புணர்வுக்காக தென் ஆப்ரிக்க வீரர்கள் ‘பிங்க்’ நிற உடையணிந்து விளையாடினர். ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.


சூப்பர் ஜோடி: 

வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சொதப்பலாக பந்துவீச, தென் ஆப்ரிக்க அணியின் முதல் மூன்று வீரர்களும் சதம் கடந்தனர். ரோசவ் 128 ரன் எடுத்தார்.       

பின் டிவிலியர்ஸ், ஆம்லா விளாசித் தள்ள அணியின் ஸ்கோர் 400 ரன்களை தாண்டியது.      டிவிலியர்ஸ்,149 ரன்களுக்கு( 44 பந்து, 16 சிக்சர், 9 பவுண்டரி) அவுட்டானார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 439 ரன்கள் குவித்தது. ஆம்லா (153 ரன்கள், 14 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.            

கெய்ல் ஏமாற்றம்: 

கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெய்ல் (19) ஏமாற்றினார். டுவைன் ஸ்மித் (69) அரைசதம் கடந்தார். சாமுவேல்ஸ் (40) ஓரளவு ஆறுதல் தந்தார். ரசல் ‘டக்–அவுட்’ ஆனார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 38 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்து, 148 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

டேரன் சமி (25), கேப்டன் ஹோல்டர் (21) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் மார்னே மார்கல், பிலாண்டர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

விறுவிறு உலக கோப்பை விதிகள் - டிராவிட் வியப்பு

உள்வட்டத்துக்குள் 5 பேர் நிற்பது, இரண்டு புதிய பந்துகள் என, புதிய விதிகளால், உலக கோப்பை தொடரில் விறுவிறுப்பு அதிகரிக்கும்,’’ என, டிராவிட் தெரிவித்தார்.      

ஐ.சி.சி., சார்பில் 11வது உலக கோப்பை கிரிக்கெட், வரும் பிப்., 14 முதல் மார்ச் 29 வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் நடக்கவுள்ளது.    
  
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் கூறியது:      

கடந்த 2011ஐ விட, ஒருநாள் போட்டிகளில் இம்முறை பல புதிய விதிமுறைகள் வந்துவிட்டன.  இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்துவதால், வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ஆதிக்கம் செலுத்தலாம். ஆஸ்திரேலிய மைதானங்கள் சற்று பெரியது என்பதால், பவுண்டரிகள் அடிப்பது அவ்வளவு எளிதல்ல.    
   
முதல் 10 ஓவர்களில் 2 பீல்டர்கள் தான் உள் வட்டத்துக்கு வெளியே நிற்க வேண்டும். 40 ஓவர்களுக்கு முன்பாக ‘பேட்டிங் பவர்பிளேயை’ முடிப்பது, இந்த நேரத்தில் 3 பீல்டர்கள் மட்டும் வெளியில் இருப்பது தவிர, 50 ஓவர் முழுவதும் உள்வட்டத்துக்குள் 5 பீல்டர்கள் எப்போதும் நிற்க வேண்டும்.       


கேப்டன்களுக்கு சிக்கல்:

இது கேப்டன்களுக்கு சவாலானது. ஏனெனில், இந்த விதி காரணமாக ஐந்து முக்கிய பவுலர்கள் அணியில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  இவர்களை வைத்து கட்டாயம் விக்கெட் வீழ்த்தியே ஆக வேண்டும். 

‘பார்ட் டைம்’ பவுலரை வைத்து சமாளிக்க முடியாது. இதனால்,  பீல்டிங் கட்டுப்பாடு காரணமாக, அதிக ரன்கள் சென்று விடும். இதுபோன்ற விதிகள், இம்முறை உலக கோப்பை தொடரை பெரிதும் எதிர்பார்க்க வைத்துள்ளன.


  ‘சுழல்’ முக்கியம்: 

இங்குள்ள ஆடுகளங்கள் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்றாலும், சுழற்பந்து வீச்சாளர்கள் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பர்.      

உலக கோப்பை தொடர் நீண்ட நாட்களுக்கு நடக்கும். இது கோடை காலம் என்பதால், ஆடுகளங்களின் தன்மை மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இதற்கு தகுந்தாற் போல் பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் வித்தியாசமான தாக்குதல் யுக்திகளுடன் சிறப்பாக செயல்பட்டால் சாதிக்கலாம்.      

இவ்வாறு டிராவிட் கூறினார்.

இந்தியாவுக்கு மீண்டும் உலக கோப்பை - கங்குலி கணிப்பு

உலக கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும்,’’ என, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக இங்கிலாந்து அணி விளையாடுகிறது. மெல்போர்னில் நாளை நடக்கவுள்ள லீக் போட்டியில், இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

முத்தரப்பு தெடாருக்கு பின், வரும் பிப்., 14ல் துவங்கவுள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியது: தோனி தலைமையிலான இந்திய அணிக்கு மீண்டும் உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

மீடியாவில் பேசுவதற்காக இதைக் கூறவில்லை. ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒருநாள் போட்டி முற்றிலும் மாறுபட்டது என்பதால், பவுலர்களும் சிறப்பாக செயல்படுவார்கள். டெஸ்ட் அணியை காட்டிலும், ஒருநாள் அணி சிறப்பாகவே உள்ளது.

உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த அணியாக வலம் வரும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு லீக் போட்டியில், மிகக் குறைந்த ஸ்கோரை எடுத்த இங்கிலாந்து அணி, எளிதில் தோல்வி அடையவில்லை. ஆஸ்திரேலியாவின் 7 விக்கெட்டுகளை இங்கிலாந்து பவுலர்கள் கைப்பற்றினர்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

சாதனை மழையில் ஆஸி., - உலக கோப்பைக்கு இன்னும் 29 நாட்கள்

உலக கோப்பை வரலாற்றில், பைனல் போட்டிகள் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால், 2003ல் நடந்த பைனல் ஒருதலைபட்சமாக இருந்தது. 

இதில், ஆஸ்திரேலியா மட்டும் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணி, படுமோசமாக விளையாடி அதிர்ச்சி அளித்தது.        
                
தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் நடந்த இந்த பைனலில், "டாஸ்' வென்ற அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி சற்றும் எதிர்பாராதவிதமாக "பீல்டிங்' தேர்வு செய்தார். இந்த முடிவு எந்த அளவுக்கு தவறானது என்பதை ஜாகிர் கான் வீசிய முதல் ஓவரே சுட்டிக் காட்டியது. 

இந்த ஓவரில் மட்டும் இவர் 8 "எக்ஸ்டிராஸ்' விட்டுக் கொடுத்தார். தொடர்ந்து நமது பவுலர்கள் சொதப்ப, ஆஸ்திரேலிய அணிக்கு கில்கிறிஸ்ட்(57), ஹைடன்(37) அதிரடி துவக்கம் தந்தனர். 

பின் கேப்டன் பாண்டிங்(140*), டேமியன் மார்ட்டின்(88*) இணைந்து வாணவேடிக்கை காட்டினர். 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்தது.                        

ஒட்டுமொத்தமாக 37 "எக்ஸ்டிராஸ்' வழங்கிய இந்திய அணிக்கு, ஹர்பஜன் மட்டும் 2 விக்கெட் வீழ்த்தி ஆறுதல் அளித்தார்.        
                
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயயே "ஷாக்' காத்திருந்தது. மெக்ராத் பந்தில் சச்சின்(4) வீழ்ந்தார். அதிரடியாக ஆடிய சேவக்(82), லேமன் "த்ரோவில்' ரன் அவுட்டாக, கோப்பை கனவு தகர்ந்தது. 

கங்குலி(24), டிராவிட்(47), யுவராஜ்(24) ஆகியோர் வரிசையாக நடையை கட்ட, இந்திய அணி 39.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.                
        
இந்தியாவை பொறுத்தவரை கோப்பை வெல்ல தவறியது. அதே நேரத்தில், அப்போதைய புள்ளிவிபரப்படி பைனலில் அதிகபட்ச ஸ்கோர்(359), அதிகபட்ச தனி நபர் ஸ்கோர்(பாண்டிங் 140), மூன்றாவது விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன் சேர்த்த ஜோடி(பாண்டிங்-மார்ட்டின் 234 ரன்), அதிக சிக்சர் அடித்தவர்(பாண்டிங் 8), என பல்வேறு சாதனைகளுடன், ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.  

தோனி–கோஹ்லி ஒப்பிடலாமா? கங்குலி காட்டம்

டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை இப்போது தான் விராத் கோஹ்லி ஏற்றுள்ளார். போதிய அனுபவம் பெறும் போது, சிறப்பாக செயல்படுவார். இவரது தலைமைப் பண்பை தோனியுடன் ஒப்பிடுவது சரியல்ல,’’ என, கங்குலி தெரிவித்தார்.  
    
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 0–2 என இழந்தது. இதன் இரண்டு (அடிலெய்டு, சிட்னி) போட்டியில் கோஹ்லி கேப்டனாக செயல்பட்டார். 

களத்தில் இவரது ஆக்ரோஷ செயல்பாடு அனைவரையும் கவர்ந்தது. பின் டெஸ்டில் இருந்து தோனி ஓய்வு பெற, கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்டார். தற்போது இருவரையும் ஒப்பிட்டு பேசுகின்றனர்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது: 

தோனி, கோஹ்லியின் தலைமைப் பண்பை   ஒப்பிடுவது கடினமானது. இப்படி பேசுவது தவறானது. தற்போதுதான் கோஹ்லி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகமுள்ளது. 

எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன். வெற்றி பெற வேண்டும் என்ற போராடும் குணம் இவரிடம் உள்ளது. 

அணியை ஆக்ரோஷத்துடன் வழிநடத்தினார். இன்னும் அனுபவம் பெற்றால், கேப்டன் பதவியில் முன்னேற்றம் அடைவார்.        

உலக கோப்பை அணி - மீண்டும் கிளார்க் கேப்டன்

உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் காயத்தில் அவதிப்படும் மைக்கேல் கிளார்க் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இவர் அடுத்த மாதம் 21ம் தேதிக்கு முன் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. 

இதில் காயத்தால் (தோள்பட்டை) அவதிப்படும் கிளார்க் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் மட்டும் பங்கேற்ற இவர், காயத்தால் அடுத்த மூன்று போட்டிகளில் விலகினார். 

இதனால், ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றார். காயம் இன்னும் குணமாகாக நிலையில், கிளார்க்கிற்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு தரப்பட்டுள்ளது.


தோகர்டிக்கு வாய்ப்பு:

 மற்றபடி பெய்லி, வார்னர், வாட்சன் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்கள் மிட்சல் ஜான்சன், ஹேசல்வுட் இடம்பிடித்துள்ளனர். சுழல் வீரர் தோகர்டிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 


நிரூபிக்க வேண்டும்:

இது குறித்து ஆஸ்திரேலிய அணி தேர்வாளர் ரோட் மார்ஷ் வெளியிட்ட செய்தியில்,‘‘ உலக கோப்பை அணியில் கேப்டன் பொறுப்பை கிளார்க் ஏற்றுள்ளார். 

வங்கதேசத்துக்கு எதிரான (பிப்.,21) போட்டிக்கு முன்பாக, கிளார்க் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். இல்லை எனில், இவருக்குப்பதில் வேறு வீரர் தேர்வு செய்யப்படுவார்,’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை, கிளார்க் பங்கேற்கவில்லை எனில், கேப்டன் பொறுப்பை பெய்லி ஏற்கலாம். 

அணி விவரம்: கிளார்க் (கேப்டன்), பெய்லி (துணை கேப்டன்), கம்மின்ஸ், தோகர்டி, பால்க்னர், ஆரோன் பின்ச், ஹாடின், ஹேசல்வுட், மிட்சல் ஜான்சன், மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், ஸ்டார்க், வார்னர், வாட்சன். 

டிராவிட் சாதனை முறியடிப்பு

நேற்று 140 ரன்கள் எடுத்த கோஹ்லி (7 இன்னிங்ஸ், 639 ரன்கள்), ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரில், அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் பட்டியலில், முன்னாள் கேப்டன் டிராவிட்டை முந்தி முதலிடம் பிடித்தார்.

கடந்த 2003–04ல் ஆஸ்திரேலிய மண்ணில் டிராவிட், 619 ரன்கள் (8 இன்னிங்ஸ்)  எடுத்திருந்தார். லட்சுமண் (494 ரன்கள், 2003), சச்சின் (493 ரன்கள், 2007) 3, 4வது இடத்தில் உள்ளனர்.


 86 ஆண்டுக்குப் பின்...

நேற்று 4வது சதம் கடந்த விராத் கோஹ்லி, ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் 4 சதம் அடித்த மூன்றாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமை பெற்றார்.

இதற்கு முன், முன்னாள் இங்கிலாந்தின் சட்கிளிபே (1924–25), ஹேமண்டு (1928–29) ஆஸ்திரேலிய மண்ணில் பங்கேற்ற டெஸ்ட் தொடரில், தலா 4 சதம் அடித்தனர்.

தற்போது 86 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய மண்ணில், ஒரே தொடரில் நான்கு சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார்  கோஹ்லி.

உலக கோப்பை அணி - யுவராஜ், விஜய்க்கு நோ

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்த்த யுவராஜ் சிங் புறக்கணிக்கப்பட்டார். ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஸ்டூவர்ட் பின்னி வாய்ப்பு பெற்றனர்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ளது. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி கடந்த டிச., 4ல் அறிவிக்கப்பட்டது.

இதிலிருந்து 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் படேல் தலைமையில் நடந்தது. இதில், கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளட்சர் ‘வீடியோ கான்பெரன்சிங்’ முறையில், ஆஸ்திரேலியாவில் இருந்து பங்கேற்றனர்.

பின் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் படேல் அணியை அறிவித்தார். துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரகானே இடம் பெற்றனர்.

‘மிடில் ஆர்டரில்’ துணைக் கேப்டன் கோஹ்லி, ரெய்னா, கேப்டன் தோனி வருகின்றனர். 3 சுழற்பந்து வீச்சாளர்களாக அஷ்வின், அக்சர் படேலுடன், காயத்தில் இருந்து இன்னும் மீளாத ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டது சர்ச்சை கிளப்பியுள்ளது.

உலக கோப்பை போட்டி நடக்கும் மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ் என, 4 பேர் இடம் பெற்றனர். இவர்களுடன், ஸ்டூவர்ட் பின்னி, அம்பதி ராயுடுவும் அணியில் இடம் பிடித்தனர். 


‘இருவர்’ பரிதாபம்:

ரஞ்சி கோப்பை தொடரில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்ததால் எப்படியும் அணியில் இடம் பெறுவார் என்று நம்பப்பட்ட யுவராஜ் சிங்கிற்கு, ஏமாற்றம் தான் கிடைத்தது. இதேபோல, தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முரளி விஜய்க்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

கோஹ்லியின் ஆக்ரோஷம் சரியா?

களத்தில் கோஹ்லி ஆக்ரோஷமாக செயல்படுவதில் என்ன தவறு இருக்கிறது. இவரது அணுகுமுறையை ஆஸ்திரேலிய அணியினரே பாராட்டுகின்றனர்,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார். 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 0–2 என தொடரை இழக்க, டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி திடீரென ஓய்வை அறிவித்தார். 

வரும் 6ம் தேதி சிட்னியில் துவங்கும் நான்காவது டெஸ்டில் கேப்டனாக விராத் கோஹ்லி களமிறங்க உள்ளார். இவர், களத்தில் அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷம் காட்டுவதாக விமர்சிக்கப்படுகிறது. இத்தொடரில் ஜான்சன், ஹாடினுடன் கடும் வார்த்தை போரில் ஈடுபட்டார். 

இது குறித்து இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி கூறியது:

கோஹ்லி ஆக்ரோஷமாக விளையாடுவதாக சொல்கின்றனர். இதில் என்ன தவறு இருக்கிறது. கடந்த 3 டெஸ்டில் வெறும் 5 ரன் எடுத்து சொதப்பியிருந்தால், நான் ஏதாவது கேள்வி கேட்க முடியும். 

ஆனால், 499 ரன்கள் குவித்துள்ளார். இது  சரியாகத் தான் செயல்படுகிறார் என்பதை உணர்த்துகிறது. களத்தில் ஆக்ரோஷமாக இருப்பதை விரும்புகிறார். இந்த அணுகுமுறை, இவரது திறமையை முழுமையாக வெளிப்படுத்த  உதவுகிறது.


பாராட்டு:

வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் கூட இவரது ஆக்ரோஷ செயல்பாட்டை புகழ்ந்தார். தவிர, ஆஸ்திரேலிய அணியினரே கோஹ்லியை பாராட்டுகின்றனர். 

நீண்ட காலத்திற்கு பின் இப்படியொரு ஆட்டத்தை இவர்கள் பார்த்தனர். இளம் கேப்டனான இவர், மிக விரைவில்  முதிர்ச்சியான வீரராக உருவெடுப்பார். 

பிராட்மேனை நெருங்கும் சங்ககரா

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், சங்ககரா இரட்டை சதம் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 356 ரன்கள் எடுத்த இலங்கை அணி முன்னிலை பெற்றது. 

இதன்மூலம் சங்ககரா, டெஸ்ட் அரங்கில் அதிகமுறை இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனை நெருங்குகிறார்.

நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து வென்றது. 

இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், வெலிங்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 221 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககரா (33) அவுட்டாகாமல் இருந்தார்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கையின் சங்ககரா, நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தார். அபாரமாக ஆடிய இவர், டெஸ்ட் அரங்கில் தனது 38வது சதத்தை பதிவு செய்தார். 

மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த சண்டிமால் (67) அரைசதம் அடித்தார். தமிகா பிரசாத் (11), ஹெராத் (15) ஏமாற்றினர். தனிநபராக அசத்திய சங்ககரா (203), டெஸ்ட் வரலாற்றில் 11வது முறையாக இரட்டை சதம் அடித்தார். 

இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிகமுறை இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனுக்கு (12 முறை) பின், இரண்டாவது இடம் வகிக்கிறார். லக்மல் (5) ஏமாற்றினார்.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 356 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. நியூசிலாந்து சார்பில் பிரேஸ்வெல், நீஷம் தலா 3, டிரண்ட் பவுல்ட் 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்து, 113 ரன்கள் பின்தங்கி இருந்தது. டாம் லதாம் (9), ரூதர்போர்டு (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

சச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா

டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னிங்ஸ்) சாதனையை தகர்த்தார்.

நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது. இரண்டாவது மற்றும் கடைசி போட்டி வெலிங்டன் இன்று துவங்கியது. இதன் முதல் இன்னிங்சில், நியூசிலாந்து அணி 221 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. 

இலங்கை அணிக்கு கருணாரத்னே (16), சில்வா (5) ஏமாற்றினர். பின் வந்தவர்கள் அடுத்தடுத்து அவுட்டாக, அனுபவ வீரர் சங்ககரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

பவுல்ட் பந்தில் 2 ரன்கள் எடுத்த இவர், டெஸ்ட் அரங்கில் 12 ஆயிரம் ரன்களை எட்டினார். முதல் நாள் ஆட்ட முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககரா (33) அவுட்டாகாமல் இருந்தார். 


சச்சினை முந்தினார்

சங்ககரா ஒட்டு மொத்தமாக 224 இன்னிங்சில் விளையாடி 12 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம், சச்சின், பாண்டிங்கை விட குறைந்த இன்னிங்சில் இந்த சாதனையை எட்டியுள்ளார். இருவரும் 247 இன்னிங்சில்தான் 12 ஆயிரம் ரன்களை எட்டினர். 


முதல் இலங்கை வீரர்

இலங்கை வீரர் சங்ககரா 5 ரன்கள் எடுத்தபோது, டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 12 ஆயிரம் ரன்கள் எடுத்த 5வது வீரரானார். தவிர, இந்த இலக்கை எட்டிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையுைம் படைத்தார். இதுவரை 130 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 12028 ரன்கள் குவித்துள்ளார். 

இப்பட்டியலில், முதல் மூன்று இடங்களில் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின் (15921), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (13378), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (13289) உள்ளனர். இந்தியாவின் டிராவிட் (13288) நான்காவது இடத்தை வகிக்கிறார். 

எடுபடாத கோஹ்லி சமாதானம் - ஓய்வு முடிவில் தோனி உறுதி

டெஸ்ட் போட்டிகளில் இருந்தே ஓய்வு பெறும் அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது,’’ என, தோனியிடம் கேட்ட கோஹ்லி, அவரை சமாதானம் செய்ய முயற்சித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்தியாவுக்கு 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் உலக கோப்பை வென்று தந்தவர் தோனி. டெஸ்ட் போட்டிகளிலும் துவக்கத்தில் சிறப்பாகத்தான் செயல்பட்டார்.       

2011 உலக கோப்பை தொடருக்கு முன் 24 டெஸ்டில் 14 வெற்றி, 7 ‘டிரா’ செய்த தோனிக்கு 3 போட்டிகளில் மட்டும் தான் தோல்வி. இதன் பின் களமிறங்கிய 36 டெஸ்டில், 13 வெற்றி, 15 தோல்வி (8 ‘டிரா’) கிடைத்தது.   
    
இதனால் தான் டெஸ்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றதாக தெரிகிறது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி ‘டிரசிங் ரூமில்’ ஏற்பட்ட பல சர்ச்சைகளும், இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.  
     
இதனிடையே தோனியின் முடிவை மாற்ற, கோஹ்லி முயற்சித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில் கோஹ்லி கூறியது:      

மெல்போர்ன் டெஸ்ட் முடிந்த அன்று ‘டிரசிங் ரூம்’ வந்த தோனி, அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்களையும் அழைத்தார். எதற்கும் கவலைப்படாத வழக்கமான பாணியில், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.        

ஓட்டலுக்கு சென்ற பின் தோனியிடம் சென்று,‘ ஓய்வு முடிவு எடுக்கும் அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது,’ என்று கூறி, சமாதானம் செய்ய முயற்சித்தேன். இருப்பினும், அவரது முடிவை யாராலும் தடுக்க முடியவில்லை. இது தான் உண்மை.    
   
இவ்வாறு கோஹ்லி கூறியதாக, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.      

எடுபடாத முயற்சி:  கோஹ்லியை போல, இந்திய கிரிக்கெட் போர்டும் (பி.சி.சி.ஐ.,) தோனியை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளது. பி.சி.சி.ஐ., உயரதிகாரி ஒருவர் கூறியது:      

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்ததும், ஓய்வு பெறுவது என்ற முடிவில் உறுதியாக இருந்தார் தோனி. அதேநேரம், மெல்போர்ன் டெஸ்டில் எப்படியும் வென்று விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இது நடக்கவில்லை என்றதும், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.       

தோனியின் இம்முடிவை பி.சி.சி.ஐ., ஏற்க இல்லை. இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் டெஸ்டில் பங்கேற்க வேண்டும் என, நினைத்தோம். ஆனால் விருப்பம் இல்லாதவரை எத்தனை நாளைக்கு தாங்கிக் கொண்டிருப்பது. இவ்விஷயத்தில் தோனி தான் பிடிவாதமாக இருந்தார்.  
    
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தோனிக்கு சிக்கல் கொடுத்த கூட்டணி - ஓய்வின் பின்னணி என்ன?

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி திடீரென ஓய்வு பெற்றதற்கு, விராத் கோஹ்லி–ரவி சாஸ்திரி கூட்டணியே காரணம் என கூறப்படுகிறது. 

இவர்களது ஆதிக்கம் அதிகரிக்க, தோனி ஓரங்கட்டப்பட்டுள்ளார். வேறுவழியின்றி ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி தந்துள்ளார்.

இந்திய அணிக்கு இரண்டு உலக கோப்பை பெற்று தந்த பெருமைமிக்கவர் தோனி. டெஸ்டில் மட்டும் சறுக்கினார். அதிலும் அன்னிய மண்ணில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தார். தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் இவருக்கு விராத் கோஹ்லி கூடுதல் தொல்லை தந்தார்.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் காயம் காரணமாக தோனி பங்கேற்வில்லை. அப்போது அணிக்கு முதல் முறையாக தலைமை ஏற்ற கோஹ்லி, இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். இது, இந்திய அணியின் இயக்குனரான முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரியை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து இவருக்கு ஆதரவு தந்துள்ளார்.

பின் விரல் காயத்தில் இருந்து மீண்ட தோனி, பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது டெஸ்டுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இப்போட்டியின் பயிற்சியில் காயமடைந்த தவான் களமிறங்க மறுக்க, கோஹ்லி முன்னதாக களமிறக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கோஹ்லி, தவானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சை கிளப்பினார்.

தொடர்ந்து மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்டிலும் கோஹ்லியின் ஆக்ரோஷம் நீடித்தது. ஆஸ்திரேலியாவின் ஜான்சன், ஹாடினுடன் வார்த்தை போரில் ஈடுபட்டார். கேப்டன் போலவே செயல்பட்டார். இது களத்தில் அமைதியை விரும்பும் ‘கேப்டன் கூல்’ தோனிக்கு அதிருப்தியை தந்தது. 

ரன் மழை பொழிந்து நல்ல ‘பார்மில்’ இருந்த கோஹ்லியை இவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. பயிற்சியாளர் பிளட்சரின் ஒத்துழைப்பு மட்டுமே இருந்துள்ளது. ஆனால், அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி, கோஹ்லிக்கு ஆதரவாக இருந்துள்ளார். 

அணி தேர்வு உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகளில் பிளட்சர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். தனக்கு ஒத்துவராத ரவி சாஸ்திரி–கோஹ்லி ‘அரசியலை’ சமாளிப்பதை காட்டிலும் ஓய்வு பெறுவதே சிறந்தது என தோனி நினைத்துள்ளார். இந்த பனிப் போர் காரணமாக தான், தோனி ஓய்வு குறித்து ரவி சாஸ்திரி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

தவிர, ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கில் தோனியின் பெயரும் உள்ளது. இதில், சுப்ரீம் கோர்ட் இன்னும் ஒரு மாத காலத்தில் தீர்ப்பு அளிக்க இருக்கிறது. இதனையும் மனதில் வைத்து தான் டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி விடைபெற்றதாக தெரிகிறது.