சர்ச்சை கிளப்பிய உலக கோப்பை டி சர்ட்

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில், 20வது உலக கோப்பை கால்பந்து தொடர், வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை, பிரேசிலில் நடக்கவுள்ளது.

உலக கோப்பை தொடரை பார்க்க  ரசிகர்கள் வரவுள்ள நிலையில், பாலியல் தொழில் கொடி கட்டிப் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தடுக்க பிரேசில் நிர்வாகம் பெரும் பாடுபட்டு வருகிறது. இதனிடையே, விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் ஜெர்மனியின் பிரபல அடிடாஸ் நிறுவனம், பெண்களின் பின்னழகை குறிக்கும் வகையில் வெளியிட்ட கால்பந்து ‘டி சர்ட்’, சர்ச்சை கிளிப்பியுள்ளது. 

இது விற்பனைக்கு வந்த ஒரு சில மணி நேரத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பிரேசில் சுற்றுலாத் துறை கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, இந்த ‘டி சர்ட்டுகளை’ திரும்ப பெறுவதாக அறிவித்தது அடிடாஸ் நிறுவனம். 

ஸ்ரீசாந்த் 100 சதவீதம் அப்பாவி - சூதாட்ட நடிகர் புது தகவல்



பிரிமியர் தொடர் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த் உண்மையில் 100 சதவீதம் அப்பாவி,’’ என, பாலிவுட் நடிகர் வின்டூ தாராசிங் தெரிவித்தார்.

ஆறாவது பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, இந்திய அணியின் ராஜஸ்தான் வீரர் ஸ்ரீசாந்த், அன்கித் சவானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. தவிர, சென்னை அணியின் ‘கவுரவ’ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், பாலிவுட் நடிகர் வின்டூ தாராசிங் சிக்கினர்.

இதனிடையே, ஆங்கில ‘டிவி’ சானல் ஒன்று நடத்திய புலனாய்வு நடவடிக்கையில், பிரிமியர் தொடர் சூதாட்டம், பெட்டிங் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை, தாராசிங் தெரிவித்துள்ளார். 

புலனாய்வு செய்தியில் தாராசிங் கூறியது:

இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசன், பிரிமியர் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி, இடையிலான மோதல் காரணமாகத்தான், பிரிமியர் தொடர் சூதாட்டம் வெளியே வந்தது.

இதில் லலித் மோடிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் சரத்பவார் செயல்படுகிறார். சீனிவாசனை வெளியேற்றிவிட துடிக்கிறார் லலித் மோடி. இவரது மருமகன் என்பதால் தான், குருநாத்தை லலித் மோடி சிக்கவைத்தார். ஏனெனில், குருநாத்துக்கு எதிரான ஒவ்வொரு ஆதாரங்களும், சீனிவாசனுக்கு நெருக்கடி தரும் என, இவருக்குத் தெரியும்.


ஸ்ரீசாந்த் அப்பாவி:

ஸ்ரீசாந்த்தை பொறுத்தவரை ‘பிக்சிங்கில்’ தொடர்பே கிடையாது. இவர் ஒரு அப்பாவி. அதாவது ஒரு ஓவரில் நான் 14 ரன்கள் தருவதாக சம்மதிக்கிறேன்.

முதல் 2 பந்தில் 2 பவுண்டரி அடித்தால், மீதமுள்ள 6 ரன்கள் எடுப்பது எளிதாகி விடும். ஆனால், ஸ்ரீசாந்த் முதல் 4 பந்தில் 6 ரன்கள் தான் கொடுத்தார். அடுத்த இரு பந்தில் 8 ரன்கள் கொடுக்க என்ன உத்தரவாதம் உள்ளது.

உண்மையில், ஸ்ரீசாந்துக்கு எதிராக அமைந்த அனைத்து செய்திகளும், அவரை குற்றவாளியாக மாற்றிவிட்டன. இவை எல்லாம் முட்டாள்தனமானது. ஸ்ரீசாந்த் 100 சதவீதம் நிரபராதி.

இவ்வாறு வின்டூ தாராசிங் கூறினார்.

ஆடுகள பராமரிப்பாளருடன் காம்பிர் மோதல்



டில்லி மைதான ஆடுகள பராமரிப்பாளர், இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கட் சுந்தரத்தை, அடிக்கப் பாய்ந்துள்ளார் காம்பிர்.

இந்திய  அணியின் துவக்க வீரர் காம்பிர், 32. மோசமான ‘பார்ம்’ காரணமாக அணியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டார். களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் இவர், கடந்த பிரிமியர் தொடரின் போது, ‘சீனியர்’ டிராவிட், கோஹ்லியுடன் மோதலில் ஈடுபட்டார்.

இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த 24ம் தேதி ஆடுகள பராமரிப்பாளர், இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கட் சுந்தரம், டில்லி பெரோஷா கோட்லா மைதான பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு பயிற்சியில் இருந்த காம்பிர், வெங்கட் சுந்தரத்துடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டு, பேட்டினை கொண்டு கோபத்துடன் அடிக்க பாய்ந்துள்ளார். 

இதுகுறித்து வெங்கட் சுந்தரம், டில்லி கிரிக்கெட் சங்க நிர்வாகத்திடம் முறைப்படி, புகார் அளித்துள்ளாராம். நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்த சில நாட்களில், இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) முறையிட உள்ளார் என்று தெரிகிறது.


வெங்கட் சுந்தரம் கூறியது:

வழக்கமாக எனது வேலை குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அங்கு வந்த காம்பிர், எனது உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என, பணியாளர்களிடம் தெரிவித்தார், என்னைப் பார்த்து,‘போய் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடு. இங்கு வந்து தலையிடாதே,’ என கத்தினார். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அடிக்க வரவில்லை. தவிர, காம்பிர் மீது புகார் கொடுக்கவும் இல்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.


காம்பிர் மறுப்பு:

சம்பவம் குறித்து காம்பிர் கூறுகையில்,‘‘ வெங்கட் சுந்தரத்தை சந்தித்தது உண்மை தான். வரும் 27ம் தேதி நடக்கவுள்ள (விஜய் ஹசாரே தொடர்) ஒருநாள் போட்டிக்காக, டில்லி அணிக்கு சாதகமான ஆடுகளத்தை தருமாறு கேட்டுக் கொண்டேன், அவ்வளவு தான். 

மற்றபடி எதுவும் நடக்கவில்லை. பத்திரிகைகளில் வந்த செய்தியில் உண்மையில்லை,’’ என்றார்.

ஜூனியர் உலக கோப்பையில் ஏமாற்றம்



ஜூனியர் உலக கோப்பை தொடரில் இருந்து, ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி நடையை கட்டியது. நேற்று நடந்த பரபரப்பான காலிறுதியில் கடைசி ஓவரில் இங்கிலாந்திடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அரையிறுதியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.       
                 
ஐ.சி.சி., சார்பில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. துபாயில் நேற்று நடந்த காலிறுதியில், ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விஜய் ஜோல், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.                              

ஹூடா அபாரம்: இந்திய அணிக்கு அன்குஷ் பைன்ஸ் (3), அகில் ஹெர்வாத்கர் (2) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ‘டக்-அவுட்’ ஆனார். ரிக்கி புய் (7) ஏமாற்றினார். இந்திய அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

பின் இணைந்த கேப்டன் விஜய் ஜோல், தீபக் ஹூடா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டனர். அபாரமாக ஆடிய ஹூடா அரைசதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த போது, ஜோல் (48) அரைசத வாய்ப்பை இழந்து வௌியேறினார். பொறுப்பாக ஆடிய ஹூடா (68) ‘ரன்-அவுட்’ ஆனார்.           
                   
சர்பராஸ் நம்பிக்கை: அடுத்து வந்த அமிர் கானி (7), குல்தீப் யாதவ் (16) நிலைக்கவில்லை. அசத்தலாக ஆடிய சர்பராஸ் கான், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆட்டத்தின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்த சர்பராஸ் கான், அரைசதத்தை பதிவு செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்தது. சர்பராஸ் கான் (52), சமா மிலிந்த் (7) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் மாத்யூ பிஷர் 3 விக்கெட் வீழ்த்தினார்.                         

டக்கெட் அரைசதம்: 

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஹாரி பின்ச் (10) ஏமாற்றினார். ரியான் ஹிகின்ஸ் (1) நிலைக்கவில்லை. ஜோனாதன் டாட்டர்சால் (23), எட் பர்னார்டு (24) பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த பென் டக்கெட் அரைசதம் அடித்தார். இவர், 61 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் அவுட்டானார். கேப்டன் வில் ரோட்ஸ் (10) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய ஜோ கிளார்க் (42) நம்பிக்கை தந்தார்.   

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்டன. மிலிந்த் வீசிய 50வது ஓவரின் முதல் பந்தை, ராப் சாயர் பவுண்டரிக்கு விரட்டினார். 

இங்கிலாந்து அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராப் ஜோன்ஸ் (28), ராப் சாயர் (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது இங்கிலாந்தின் பென் டக்கெட்டுக்கு வழங்கப்பட்டது.

இத்தோல்வியின் மூலம், சீனியர்கள் வழியில் ஜூனியர்களும் அன்னிய மண்ணில் சோபிக்க தவறினர். தவிர, ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு பறிபோனது. 

இந்திய அணி 5-8வது இடங்களுக்கான போட்டியில் இலங்கையுடன் (இடம்-துபாய், பிப்., 24) விளையாடுகிறது. இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. வரும் பிப்., 24ம் தேதி துபாயில் நடக்கும் அரையிறுதியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 

சச்சின் தொடரில் ரூ. 180 கோடி



ச்சினுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் தொடர் மூலம் பி.சி.சி.ஐ.,க்கு சுமார் ரூ. 180 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இந்திய ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் உட்பட பல சாதனைக்கு சொந்தக்காரர். இவர், தனது 200வது டெஸ்ட் போட்டியை சொந்த மண்ணில் விளையாடி, ஓய்வு பெற வேண்டும் என்பதற்காக வெஸ்ட் இண்டீசுடன் ஒரு தொடரை(2 டெஸ்ட்+3 ஒருநாள் போட்டி) இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) அவசரம் அவசரமாக கடந்த ஆண்டு ஏற்பாடு செய்தது.

இத்தொடர் மூலம் பி.சி.சி.ஐ., சுமார் ரூ. 180.60 கோடியை மட்டும் அள்ளிய விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.  ஒளிபரப்பு உரிமம் (ரூ. 32.2 கோடி, ஒருபோட்டிக்கு), தொடர் ஸ்பான்சர் உரிமம் (ரூ. 2 கோடி), ஜெர்சி உரிமம் (ரூ.1.92 கோடி) உள்ளிட்டவை அடங்கும்.

* இதன்படி பார்க்கும் போது, மொத்தம் 5 போட்டிகள் (2 டெஸ்ட், 3 ஒருநாள்) கொண்ட தொடரில் பி.சி.சி.ஐ.,யின் வருமானம் ‘ஸ்பான்சர்’ ஒப்பந்தம் மூலம் மட்டும் (ரூ. 32.2 கோடி* 5= ரூ. 161 கோடி) + (ரூ. 2 கோடி x5 =10 கோடி) + (ரூ. 1.92 கோடி x 5= 9.6 கோடி) மொத்தமாக ரூ. 180.60 கோடி. 

இதில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுக்கு வழங்கப்பட்ட ரூ. 1.50 கோடியை தவிர்த்து, ரூ.179.10 கோடி  பி.சி.சி.ஐ.,க்கு வருமானம் கிடைத்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியது:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளின் பரஸ்பர ஒப்பந்த அடிப்படையில் தான் நடத்தப்பட்டது. அப்போதைய ஐ.சி.சி.,யின் அட்டவணைப்படி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 1 ‘டுவென்டி–20’, 7 ஒருநாள் போட்டிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

ஆனால் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் செய்யப்பட்ட மாற்றம், சச்சினின் கடைசி டெஸ்ட் போன்ற காரணங்களுக்காக தான் வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடத்தப்பட்டது. ஐ.சி.சி.,யால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இத்தொடர் நடத்தப்படவில்லை.

சமீபத்தில் நடந்த உறுப்பினர்கள் கூட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு, வீரர்களின் செலவு ரூ. 1.50 கோடி , விசா உள்ளிட்ட செலவுத் தொகையை திருப்பித்தரும்படி கேட்ட விஷயத்தை, தலைவர்  சீனிவாசன் தெரிவித்தார். 

இதை கொடுக்க வேண்டிய கட்டாயம் பி.சி.சி.ஐ.,க்கு இல்லை. இருப்பினும் இத்தொகையை வழங்க பி.சி.சி.ஐ., உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

ஏன் தோனி இப்படி?



பயிற்சியாளரும் சரியில்லை. கேப்டன் தோனியும் சரியில்லை’’ என, முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.

2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்றது. இதன் பின் பயிற்சியாளராக இருந்த கிறிஸ்டன் பதவி விலகினார். இதையடுத்து ஜிம்பாப்வேயின் டங்கன் பிளட்சர், புதிய பயிற்சியாளர் ஆனார்.

அன்று முதல் இந்திய அணியை தோல்வியும் தொற்றிக் கொண்டது. உள்ளூர் போட்டிகளில் அசத்தும் இந்திய அணி வீரர்கள், அன்னிய மண்ணில் சொதப்புகின்றனர். 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும் கோப்பை வென்று விட்டனர்.

இதற்கு தோனியை குற்றம் சுமத்தும் அதேநேரம், பயிற்சியாளர் பிளட்சருக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து பிஷன் சிங் பேடி கூறியது:

இந்திய அணி கேப்டன் தோனி, களத்தில் வெற்றி பெறத் தேவையான திட்டங்களை வகுப்பதில்லை. பவுலர்களுக்கு நல்ல கேப்டனாக இருந்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன், இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய ஒரு டெஸ்ட் போட்டியை பார்த்தேன்.

அப்போது, தனது சுழற்பந்துவீச்சாளரரிடம் (அமித் மிஸ்ரா அல்லது பியுஸ் சாவ்லா) ‘விக்கெட் வீழ்த்தி விடாதே, விக்கெட் வீழ்த்தி விடாதே,’ என கூறியதை அங்கிருந்த, ‘ஸ்டம்ப் மைக்ரோபோன்’ வழியாக கேட்டேன். 

இதையடுத்து, ‘நல்ல வேளை இம்மாதிரியான கேப்டனுக்கு கீழ் விளையாடவில்லை,’ எனக்கு நானே கூறிக்கொண்டேன். தோனி தற்போது நெருக்கடியில் உள்ளார். இந்நேரத்தில் இவரை விமர்ச்சிக்க விரும்பவில்லை.

எடுபடுமா 2 கேப்டன் பார்முலா?



இந்திய கிரிக்கெட் அணியை தோல்வியில் இருந்து மீட்க, இரண்டு கேப்டன்களை நியமிக்கலாம். டெஸ்டுக்கு விராத் கோஹ்லியும், ஒருநாள் போட்டிக்கு தோனியும் அணியை வழிநடத்தலாம்.

கடந்த 2007, உலக கோப்பை (50 ஓவர்) தொடரில், முதல் சுற்றில் இந்திய அணி வெளியேற, அடுத்து நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில், சீனியர்களை புறக்கணித்துவிட்டு, தோனிக்கு கேப்டன் பொறுப்பு தரப்பட்டது.

இதில் கோப்பை வென்று சாதிக்க, அதே ஆண்டில் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பும் இவரைத் தேடிவந்தது. தொடர்ந்து 2008ல் கும்ளேக்குப் பின் டெஸ்ட் அணிக்கும் கேப்டன் ஆனார்.

அடுத்த 8 மாதத்தில் இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. இதெல்லாம் இப்போது பழைய கதை ஆகிவிட்டது. கும்ளே, டிராவிட், கங்குலி, சச்சின், லட்சுமண் என, அடுத்தடுத்து ஓய்வுபெற, தோல்வி துரத்த துவங்கியது.

இருப்பினும், உள்ளூரில் வெளுத்து வாங்கிய தோனி (15ல் 11 வெற்றி, 2 தோல்வி, 2 ‘டிரா’), அன்னிய மண்ணில் சறுக்கினார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் அதாவது, 2011, ஜூன் மாதத்துக்குப் பின், பங்கேற்ற 15 டெஸ்டில் 1 வெற்றி, 10 தோல்வி, 4 ‘டிரா’ என, நிலைமை படுமோசமாக உள்ளது.

எதிரணிகளை மிரட்டும் திறமை படைத்த வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லை என்று சமாளித்தாலும், தொடர்ச்சியான தோல்விகளை ஏற்க முடியாது. ஏனெனில், கடந்த நவ., 2013ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வென்ற பின், இன்னும் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை.

இதனால், கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரம், அடுத்த ஆண்டு (2015) உலக கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், ஒருநாள் அணிக்கு கேப்டனை மாற்றுவது சிக்கலாகி விடும்.

இதனால், டெஸ்ட் அணிக்கு மட்டும், விராத் கோஹ்லியை கேப்டனாக்க வேண்டும். ஏனெனில், கடந்த தென் ஆப்ரிக்கா, சமீபத்திய நியூசிலாந்து தொடரில் 3 சதம் அடித்து, நிலையான ஆட்டத்தை வெளிப்டுத்தி வருகிறார். 

திராணி இல்லாத கேப்டனா தோனி



உள்ளூரில் ‘புலியாக’ திகழும் தோனி, சமீப காலமாக வெளிநாடுகளில் சொதப்புகிறார். இவர், தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, குறைந்தபட்சம் டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை, 2011 ல் 50 ஓவர் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி உட்பட இந்திய அணிக்காக 37 கோப்பைகள் வென்று தந்தவர் கேப்டன் தோனி. 

ஆனாலும் சமீப காலமாக  அன்னிய மண்ணில் ஏமாற்றுகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில், இவரது தலைமையில் 14 டெஸ்டில் 10ல் இந்திய அணி தோற்றது. அன்னிய மண்ணில் அதிக டெஸ்டில் தோற்ற கேப்டன்கள் வரிசையில் முதலிடத்தில் (11) உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் அசார், பட்டோடி, கங்குலி (தலா 10) உள்ளனர்.

கடந்த ஜன., 2012ல் தோனி கூறுகையில்,‘‘ 2013 இறுதியில் ஏதாவது ஒரு போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்,’’ என, தெரிவித்தார்.

இப்போது 2014, பிப்., ஆகிவிட்டது. இருப்பினும், விலகுவதாக தெரியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்த, அதிரடி மற்றும் ஆக்ரோஷமான முடிவுகள் எடுக்க வேண்டிய தோனி, தொடர்ந்து சொதப்புகிறார்.

வெலிங்டனில் நியூசிலாந்து அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் கண்டது. ஆனால், ஜாகிர் கான், முகமது ஷமி, இஷாந்த் சர்மாவுடன், சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவுடன் களமிறங்கினார் தோனி. பயிற்சி போட்டியில் அசத்திய ஈஷ்வர் பாண்டேக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

ஆடுகளம் வேகத்துக்கு சாதகமான நிலையில், திடீரென தோனி பவுலிங் செய்தார். அடுத்த ஓவரில் ரோகித் சர்மா, கோஹ்லியை பவுலிங் செய்ய பணித்து, தற்காப்பு பாணியில் செயல்பட்டார். இது நியூசிலாந்து வீரர்களுக்கு வசதியாக போய்விட்டது.

இதைப்பார்த்த சாதாரண பள்ளி அளவில் விளையாடும் வீரர்கள் கூட, இவர் என்ன திட்டத்துடன் செயல்படுகிறார் என்று தெரியாமல் குழம்பினர்.

தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்பதால் கூட, தோனிக்கு களைப்பு ஏற்பட்டு திராணியில்லாமல் போயிருக்கலாம். இதனால், குறைந்தபட்சம் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி விராத் கோஹ்லிக்கு வழிவிடலாம்.

இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்டின் குரோவ் கூறுகையில்,‘‘அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க வேண்டுமானால், தோனிக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிறது. எனவே, டெஸ்ட் கேப்டன் பொறுப்பை கோஹ்லி வசம் ஒப்படைக்கலாம்,’’என்றார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் கூறுகையில்,‘‘இக்கட்டான நேரங்களில் தோனி தற்காப்பு பாணியை கையாள்கிறார். அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளார். தொடர்ந்து பழைய பந்தை பயன்படுத்தி ரன்களை கட்டுப்படுத்த முயல்கிறார். 

இதற்கு உதாரணமாக டர்பன் டெஸ்டை குறிப்பிடலாம். இதில், 146 ஓவர்கள் முடிந்தும் புதிய பந்தை எடுக்கவில்லை. இன்னும் ஒரு ஆண்டுகளுக்கு டெஸ்ட் அணியின் கேப்டனாக நீடிக்கலாம். அன்னிய மண்ணில் டெஸ்டில் வெல்ல, கொஞ்சம் ‘ரிஸ்க்’ எடுப்பது அவசியம் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்,’’என்றார்.

இந்திய வாய்ப்பு அம்போ - மெக்கலம் இரட்டை சதம்



வெலிங்டன் டெஸ்டில் கேப்டன் பிரண்டன் மெக்கலம் இரட்டை சதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட், வெலிங்டனில் நடக்கிறது. 

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 192 ரன்கள், இந்தியா 438 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து, 6 ரன்கள் முன்னிலை பெற்றது. மெக்கலம் (114), வாட்லிங் (52) அவுட்டாகாமல் இருந்தனர்.


வாட்லிங் சதம்:

நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த மெக்கலம், வாட்லிங் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜாகிர், இஷாந்த் பந்தில் மெக்கலம் பவுண்டரி அடிக்க, அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். 

எதிர்முனையில் தன்பங்கிற்கு ஜடேஜா, ஜாகிர் கான் பந்தில் பவுண்டரி அடித்த வாட்லிங், டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்தார். 


புதிய சாதனை:

ஜாகிர் வேகத்தில் இரண்டு பவுண்டரி அடித்த மெக்கலம், டெஸ்ட் அரங்கில் தனது 3வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அதிக இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் (3 இரட்டைசதம்) முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். 

தவிர, அடுத்ததடுத்த போட்டிகளில் இரட்டைசதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். சர்வதேச அரங்கில் 6வது வீரர் ஆனார் மெக்கலம்.

மீண்டும் சூது கவ்வும் - தோனி, ரெய்னா, ஆர்.பி.சிங்



சூதாட்டம் குறித்து நீதிபதி முத்கல் குழு அளித்த அறிக்கையில், தோனி, ரெய்னாவைத் தொடர்ந்து ஆர்.பி.சிங் பெயரும் இடம் பெற்றது தெரிய வந்துள்ளது.

ஆறாவது பிரிமியர் தொடர் சூதாட்டத்தில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கினார். 

இதுகுறித்து விசாரித்த அரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு, கடந்த 10ம் தேதி அறிக்கை சமர்பித்தது.

இதில் இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னா உட்பட 6 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ‘‘குருநாத், தோனி மற்றும் சிலர் இணைந்து, 2013, மே 12ம் தேதி நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ‘பிக்சிங்’ செய்தனர் என, புக்கிகள் தெரிவித்துள்ளதாக இடம் பெற்றுள்ளது. 


சம்பத் உறுதி:

இந்த செய்தியை உறுதி செய்து, போலீஸ் அதிகாரி சம்பத் குமார் கூறுகையில், ‘‘போலி பாஸ்போர்ட் தொடர்பான விசாரணையின் போது, கிரிக்கெட் சூதாட்டம் குறித்து செய்திகள் கிடைத்தன. இதுகுறித்து கிட்டி என்பவரை விசாரித்த போது, குருநாத், தோனி மற்றும் ரெய்னாவின் பெயர்களை தெரிவித்தார். இது உண்மை தான்,’’ என்றார்.

இதுகுறித்து மேலும் விசாரிக்க இருந்த நிலையில் தான், சம்பத் குமார் திருச்சி ரயில்வே பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதனிடையே, சுப்ரீம் கோர்ட்டில் அளித்த அறிக்கையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் பெயரும் உள்ளது. சூதாட்டம் குறித்து கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்திடம் விசாரித்த போது, மூன்று வீரர்கள் பெயரை, டில்லி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆர்.பி.சிங்கிடம் விசாரணை நடந்தது.

என்ன காரணங்களுக்காகவோ, போதிய ஆதாரம் இல்லை என்று தெரிவித்து, மூவரது பெயரையும், விசாரணை வளையத்தில் இருந்து நீக்கி விட்டனர். இந்த விவரங்கள், நீதிபதி முகுல் முத்கல் குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாம்.


இறுகும் பிடி:

தோனியின் நெருங்கிய நண்பர் ஆர்.பி.சிங். இவரது பெயர் அறிக்கையில் உள்ளது, தோனிக்கு கூடுதல் நெருக்கடி தான். 2011, இங்கிலாந்து தொடரில் ஜாகிர் கான் காயமடைய, திடீரென ஆர்.பி.சிங் இடம் பெற்றார்.

2008 முதல் டெஸ்டில் பங்கேற்காத இவரை, 3 ஆண்டுக்குப் பின் அணியில் சேர்த்த தோனியின் முடிவு, எல்லோருக்கும் வியப்பபைத் தந்தது. இதில் பெரியளவில் ‘பெட்டிங்’ நடந்திருக்கலாம் என, அப்போது செய்திகள் வெளியானது.

இதேபோல, கடந்த பிரிமியர் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடினார் ஆர்.பி.சிங். சென்ற ஆண்டு ஏப்., 13ல் நடந்த போட்டியில், சென்னை அணி வெற்றி பெறும் வகையில், கடைசி பந்தை, இவர் ‘நோ–பாலாக’ வீசியது சந்தேகத்தை கிளப்பியது. 

இதனிடையே, மார்ச் 3ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, தோனி, ரெய்னா, ஆர்.பி.சிங் உள்ளிட்ட 6 வீரர்களின் தொடர்பபை முழுமையாக விசாரிக்க கோர்ட் உத்தரவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் 2வது இடத்துக்கு ஆபத்து



ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ‘நம்பர்–2’ இடத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக இன்று துவங்கும் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வௌியிடப்படும், சிறந்த டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், தென் ஆப்ரிக்க அணி 133 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தில் உள்ளது. இந்தியா (117 புள்ளி), ஆஸ்திரேலியா (111), இங்கிலாந்து (107), பாகிஸ்தான் (100) அணிகள் ‘டாப்–5’ வரிசையில் உள்ளன.

இப்பட்டியலில், தென் ஆப்ரிக்காவின் முதலிடத்துக்கு பாதிப்பு இல்லை. தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்த போதிலும், 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடரும். இதன்மூலம் முதலிடத்துக்கான ஐ.சி.சி., டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை தக்கவைத்துக் கொள்ளும்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இரண்டாவது இடத்துக்கு பலத்த போட்டி நிலவுகிறது. இந்திய அணி, 2வது இடத்தில் நீடிக்க, முதலில் நியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் இன்று துவங்கும் 2வது டெஸ்டில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா இழக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா, இரண்டாவது இடத்துக்கு முன்னேற, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும். இதன்மூலம் 117 புள்ளிகளுடன் 2வது இடம் பிடிக்கலாம். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1–1 என சமன் செய்தால் கூட, இந்திய அணி (114) மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும்.

ஒலிம்பிக் அரங்கில் மீண்டும் இந்தியா



இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு (ஐ.ஒ.ஏ.,)விதிக்கப்பட்டிருந்த தடையை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி.,) நீக்கியுள்ளது. இதனால், 14 மாதத்திற்கு பின், இந்தியா மீண்டும் ஒலிம்பிக் அரங்கிற்கு திரும்பியுள்ளது. 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஒ.சி.,) புதிய விதிகளின்படி தேர்தல் நடத்த முன்வராத, இந்திய ஒலிம்பிக் சங்கம்(ஐ.ஒ.ஏ.,) , கடந்த 2012, டிச., 4ல் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 9ம் தேதி, புதிய விதியின் படி, ஐ.ஓ.ஏ., தேர்தல் நடந்தது. 


ராமச்சந்திரன் தேர்வு:

இதில், இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு தலைவராக உள்ள ராமச்சந்திரன், புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தவிர, புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

தங்களின் விதிப்படி, தேர்தல் நடத்தியதால், சர்வதேச ஒலிம்பிக் சங்கம், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை இன்று நீக்கியது. இது, இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இது குறித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.ஒ.ஏ., செயலாளர் ராஜிவ் மேத்தா கூறுகையில்,‘‘ சர்வதேச ஒலிம்பிக் சங்கம், இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக தொலைபேசியில் தெரிவித்தது,’’ என்றார். 


மூவர்ணக்கொடி:

தடை நீக்கப்பட்டதால், தற்போது சோச்சியில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்திய வீரர்கள் மூவர்ணக் கொடியுடன் பங்கேற்கலாம். 

இந்தியாவை காவு வாங்கிய தவறான தீர்ப்பு



ஆக்லாந்து டெஸ்டில் அம்பயர்களின் தவறான தீர்ப்பு, இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது. முக்கியமான கட்டத்தில் ரகானே, கேப்டன் தோனிக்கு தவறாக ‘அவுட்’ கொடுக்கப்பட்டதால் வெற்றி பறிபோனது. 

துணிச்சலாக போராடிய ஷிகர் தவான் சதம் வீணானது. 40 ரன்களில் வென்ற நியூசிலாந்து அணி, தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், ஆக்லாந்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503, இந்தியா 202 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 105 ரன்களுக்கு சுருண்டது. 

இதையடுத்து இந்திய அணிக்கு 407 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, ஒரு விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. 


கோஹ்லி அரைசதம்:

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணிக்கு புஜாரா (23) ஏமாற்றினார். பின் விராத் கோஹ்லி, ஷிகர் தவான் சேர்ந்து பொறுப்பாக ஆடினர். 

இவர்கள் 3வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்து நம்பிக்கை தந்தனர். சோதி ஓவரில் 3 பவுண்டரி விளாசிய கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் தனது 9வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர் 67 ரன்கள் எடுத்த போது வாக்னர் பந்தில் அவுட்டானர்.

எதிர்முனையில் தன்பங்கிற்கு சோதி பந்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்த ஷிகர் தவான் (115), தனது 2வது சதத்தை பூர்த்தி செய்து, அவுட்டானார். தொடர்ந்து வந்த ரகானே (18) அம்பயரின் தவறான தீர்ப்பால் வெளியேற, தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்தது.


ரோகித் ஏமாற்றம்:

சவுத்தி பந்தில் ரோகித் சர்மா (19) நடையை கட்டினார். தொடர்ந்து வந்த ரவிந்திர ஜடேஜாவின் துணையுடன் கேப்டன் தோனி துணிச்சலாக போராடினார். இவர்கள், ஒருநாள் போட்டி போல் விரைவாக ரன்கள் சேர்க்க, இந்திய அணி இலக்கை நோக்கி சீராக முன்னேறியது.

வெற்றி பெற 83 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பவுல்ட் பந்தில் தேவையில்லாத ‘ஷாட்’ அடித்த ரவிந்திர ஜடேஜா (26) அவுட்டானார். ஜாகிர் கான் (17) ஓரளவு கைகொடுத்தார். தோனிக்கு (39) எதிராக அம்பயர் தீர்ப்பு அமைய, இந்திய அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 366 ரன்களுக்கு  ‘ஆல் அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. 

ஆட்டநாயகன் விருதை நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம் தட்டிச்சென்றார். இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் 14ல் வெலிங்டனில் துவங்குகிறது.


2வது வீரர்

அன்னிய மண்ணில் 4வது இன்னிங்சில் சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார் ஷிகர் தவான். முன்னதாக 1979ல் இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடந்த டெஸ்டில் கவாஸ்கர் 221 ரன்கள் அடித்தார்.

* இப்போட்டியில் 115 ரன்கள் விளாசிய தவான், 4வது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 9வது இடம் பிடித்தார். 

ஹர்பஜன், காம்பிருக்கு சோதனை



நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன், ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிகள் மோதும் இரானி கோப்பை போட்டி, இன்று பெங்களூருவில் துவங்குகிறது.   

ரஞ்சி கோப்பை தொடர் துவங்கி (1934) 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் கடந்த 1959–60 முதல் இரானி கோப்பை போட்டி (5 நாட்கள்) நடக்கிறது. இதில், ரஞ்சி கோப்பை தொடரின் ‘நடப்பு சாம்பியன்’ மற்றும் ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிகள் மோதும்.

இதையடுத்து, இந்த ஆண்டு பட்டம் வென்ற கர்நாடக அணி, ஹர்பஜன் சிங் தலைமையிலான ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணியை எதிர்த்து இன்று பெங்களூருவில் களமிறங்குகிறது.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் விக்கெட் வீழ்த்த தடுமாறுகிறார். இந்நிலையில், ஹர்பஜன் சிங் சாதிக்கும் பட்சத்தில் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பு கிடைக்கும்.

இதேபோல ஷிகர் தவான், முரளி விஜய் இருவரும் இந்திய அணிக்கு சரியான துவக்கம் தர தவறுகின்றனர். இதனால், ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிக்கு காம்பிர் சிறந்த ரன்குவிப்பை கொடுத்தால், இந்திய அணியில் தேர்வு செய்யப்படலாம். 

தவிர, மகாராஷ்டிரா அணிக்காக ரஞ்சி தொடரில் அதிக ரன்கள் எடுத்த கேதர் ஜாதவ் (1,223 ரன்கள்), பங்கஜ் சிங், அசோக் டிண்டா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோனும் உதவுவர் எனத் தெரிகிறது. 


சொந்தமண் பலம்:

கர்நாடக அணி சொந்தமண்ணில் களமிறங்குவது பலம். தவிர, ஸ்டூவர்ட் பின்னி, மனிஷ் பாண்டே, உத்தப்பா, லோகேஷ் ராகுல், காருண் நாயர் பேட்டிங்கில் கைகொடுக்க காத்திருக்கின்றனர். பவுலிங்கில் கேப்டன் வினய் குமார், அபிமன்யு மிதுன், ஸ்ரீநாத் அரவிந்த் உதவலாம்.

குளிர்கால ஒலிம்பிக் கோலாகல துவக்கம்



குளிர்கால ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று கோலாகலமாக துவங்கியது.

ரஷ்யாவின் சோச்சியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நேற்று துவங்கியது. இதில், 88 நாடுகளை சேர்ந்த 2800க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 

இதன் துவக்க விழா வண்ணமயமாக நடந்தது. ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று ரஷ்யாவின் பாரம்பரியத்தை விளக்கும் நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். 

ஆடல், பாடல், ‘லேசர் ஷோ’, வாணவேடிக்கை என நிகழ்ச்சிகள் களை கட்டின. 


இந்தியா பரிதாபம்:

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிமுறைப்படி தேர்தலை நடத்தாத, இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) தடை செய்யப்பட்டது. 

இதனால், நேற்றைய அணிவகுப்பின் போது ஷிவ் கேசவன், ஹமிான்சு தாகூர் உள்ளிட்ட 3 இந்திய வீரர்கள் மூவர்ணக் கொடி ஏந்தி வராதது பெரும் அவமானமாக அமைந்தது. 

இவர்கள் ‘சுதந்திரமான வீரர்கள்’ என்ற அடிப்படையில் ஒலிம்பிக் கொடியுடன் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

கெவின் பீட்டர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது



வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவரது பெயர் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்கா தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் கெவின் பீட்டர்சன். 

அங்கு முதல் தர போட்டியில் விளையாடிய நிலையில் அந்த நாட்டு அணியில் கடைப்பிடிக்கப்படும் இன ரீதியான இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேறி 2001–ம் ஆண்டில் இங்கிலாந்தில் குடியேறினார். 

இதன் பின்னர் 2004–ம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணிக்குள் அடியெடுத்து வைத்த கெவின் பீட்டர்சன் அருமையான பேட்டிங் மூலம் அனைவரையும் கவர்ந்தாலும், அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகும். 

2008–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற கெவின் பீட்டர்சன், பயிற்சியாளர் பீட்டர் மூர்சுடனான மோதல் காரணமாக 5 மாதத்தில் கேப்டன் பதவியை இழந்தார். 

இதுமட்டுமின்றி 2012–ம் ஆண்டில் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளரை விமர்சித்து சமூக வலைதளம் மூலம் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு செய்தி அனுப்பி சர்ச்சையில் சிக்கி அணியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டார். 

2010–ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய கெவின் பீட்டர்சன் 2005, 2009, 2010–11, 2013–ம் ஆண்டுகளில் ஆஷஸ் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்று இருந்தார். 

சமீபத்தில் 0–5 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பிடித்து இருந்த கெவின் பீட்டர்சன் மோசமான ஆட்டம் காரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் ‘அடுத்த ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு. 

எனவே தற்போது ஓய்வு பெறும் திட்டம் இல்லை’ என்று கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஆஷஸ் தோல்வியை தொடர்ந்து இங்கிலாந்து அணியை வலுப்படுத்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதன் ஒரு கட்டமாக பயிற்சியாளர் ஆண்டி பிளவர் நீக்கப்பட்டார். மேலும் கெவின் பீட்டர்சனையும் அணியில் இருந்து முழுமையாக கழற்றி விடுவது என்ற துணிச்சலான நடவடிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது. 

இந்த மாதத்தில் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் வங்காளதேசத்தில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சனின் பெயர் பரிசீலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது, பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக அமைந்துள்ளது. ‘அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு புதிய வலுவான அணியை உருவாக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை அணி நிர்வாகத்தினரால் ஒருமனதாக எடுக்கப்பட்டது. 

இருப்பினும் பீட்டர்சனை நீக்க எடுத்த முடிவு கடினமானதாகும்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பீட்டர்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடந்த 9 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து விளையாடியது பெருமையாக கருதுகிறேன். எனது நம்பமுடியாத கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 

இங்கிலாந்து அணியின் அற்புதமான வெற்றிகளில் பங்கேற்றதையும், சிறந்த வீரர்களுடன் இணைந்து ஆடியதையும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். இருப்பினும் இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாமல் போவது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.   

33 வயதான கெவின் பீட்டர்சன் 104 டெஸ்டில் விளையாடி 23 சதங்களுடன் 8181 ரன்னும், 136 ஒருநாள் போட்டியில் ஆடி 9 சதங்களுடன் 4440 ரன்னும், இருபது ஓவர் போட்டியில் 37 ஆட்டத்தில் விளையாடி 1176 ரன்னும் எடுத்துள்ளார்.

முத்தான மூன்று கலவை கோஹ்லி



சச்சின், டிராவிட், சேவக் ஆகிய மூன்று வீரர்களின் கலவையாக இளம் விராத் கோஹ்லி உள்ளார்,’’ என, மார்டின் குரோவ் தெரிவித்தார்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி, 25. நியூசிலாந்து மண்ணில் களமிறங்கிய முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இதுவரை பங்கேற்ற 130 ஒருநாள் போட்டிகளில் 18 சதம், 30 அரைசதம் உட்பட மொத்தம் 5,445 ரன்கள் எடுத்துள்ளார்.

இவர் குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்டின் குரோவ் கூறியது:

இந்தியாவின் அசத்தலான இளம் வீரர் கோஹ்லி. இவர் சச்சின், டிராவிட், சேவக் என, மூன்று பேரும் சேர்ந்த கலவையாக உள்ளார். டிராவிட்டிடம் இருந்து தீவிரமாக போராடும் குணம், சேவக்கிடம் இருக்கும் துணிச்சலை பெற்றுள்ள இவர், சச்சினைப் போல அசாதாரணமான வீரராக உள்ளார். 

மொத்தத்தில், இவர்களிடம் இருந்து ஒவ்வொன்றையும் கற்று, தனக்கென தனி பாணியை வகுத்துள்ளார். இவை அனைத்தும் சேர்ந்து கோஹ்லியை சிறப்பான வீரராக மட்டும் மாற்றவில்லை. 

கிரிக்கெட்டில் ஒரு சிறந்த மேதையாக உருவாக்கியுள்ளது. அதாவது மாணவனாக இருந்த இவர், ஆசிரியராக விரைவில் மாறிவிட்டார். எதிர்காலத்தில் ‘மாஸ்டர்’ ஆகிவிடுவார்.

கடந்த 2008ல் நடந்த பிரிமியர் தொடரில், பெங்களூரு அணிக்கு பயிற்சியாளராக இருந்த போதே கோஹ்லியை கவனித்தேன். கிரிக்கெட்டினை கற்றுக்கொள்ளும் ஆர்வம், எழுச்சி அதிகமாக இருந்தது.

அதிகமான குழப்பம் காரணமாக, யாரைப் போல, எப்படி விளையாடுவது என, கேட்பார். எதைப்பற்றியும் சிந்திக்காமல் நேராக அடித்து விளையாடினால் போதும் என, அவரை உற்சாகப்படுத்தினேன். இன்று இதுதான் இவருக்கு ‘பெஸ்ட் ஷாட்’ ஆகவுள்ளது. 

தவிர, துணிச்சலாகவும், அழகாகவும் அடித்து விளையாடுவது தான் இவரது ‘ஸ்டைல்’. தவிர, சச்சினிடம் இருந்தும் நிறைய கற்றுக் கொண்டுள்ளார். கோஹ்லியின் குணத்தை பார்க்கும் போது பெரும்பாலும் சச்சினைப் போலவுள்ளது.

அடுத்து வரும் ஆண்டுகளில், ஏறக்குறைய சச்சினைப் போலவே மாறிவிடுவார். அதேநேரம், களத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷத்தை சற்று குறைத்துக் கொண்டால் நல்லது. சச்சின், டிராவிட் போன்றவர்கள் கோஹ்லிக்கு இதை கற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு மார்டின் குரோவ் கூறினார்.

பாரத ரத்னா பெற்றார் சச்சின்



நாட்டின் மிக உயர்ந்த ‘பாரத ரத்னா’ விருதை இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பெற்றார்.  இதன் மூலம் இளம் வயதில் இவ்விருதை பெற்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார் சச்சின்.             

இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்திய இவர், சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தார்.  

இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இவருக்காக, விளையாட்டு வீரர்களும் இவ்விருதை பெறும் வகையில், சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு, 2011 டிசம்பர் மாதம் முன்வந்தது.                        
கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன், ஓய்வு பெற்றார் (நவ., 16) சச்சின். அன்றைய தினம்  ‘பாரத ரத்னா’ விருது இவருக்கு வழங்கப்படும் என மத்திய அரசு  அறிவித்தது. 

டில்லியில் உள்ள  ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்த வண்ணமயமான விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் பிரனாப் முகர்ஜி,  இவ்விருதை சச்சினுக்கு வழங்கி கவுரவித்தார். சச்சினின் மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். 


இதிலும் சாதனை:

இன்று ‘பாரத ரத்னா’ விருதை பெற்ற 40 வயதான சச்சின், இவ்விருதை குறைந்த வயதில் வென்றவர் என்ற பெருமை பெற்றார். தவிர, முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.

20 ஓவர் போட்டியால் கிரிக்கெட்டுக்கு அழிவு

டெஸ்ட் (5 நாள்), ஒருநாள் போட்டி (50 ஓவர்) மற்றும் 20 ஓவர் போட்டி ஆகிய 3 நிலைகளில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது.

இதில் 3 மணி நேரத்திற்குள் முடியும் 20 ஓவர் போட்டியை தான் ரசிகர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். 

பேட்ஸ் மேன்கள் பந்தை சிக்சர், பவுண்டரிகளாய் அடிப்பதை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் 20 ஓவர் போட்டிக்கு அதிக அளவில் ஆதரவு காணப்படுகிறது.

இந்த நிலையில் 20 ஓவர் போட்டியால் கிரிக்கெட்டுக்கு அழிவு ஏற்படும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

20 ஓவர் போட்டியில் பந்துகள் சிக்சர், பவுண்டரிகளாய் பறக்கிறது. இந்தப் போட்டி பேட்ஸ்மேன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பேட்டிங்கும், பந்துவீச்சும் சமநிலையில் இருக்க வேண்டும்.

பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் மட்டுமே 20 ஓவர் போட்டி உள்ளது. பந்துவீச்சாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. 

இரண்டையும் சமமாக பார்க்க வேண்டும். இதே நிலை நீடித்தால் கிரிக்கெட் விளையாட்டுக்கு அழிவு காலம் தான். 

போட்டி மற்றும் பொழுது போக்குக்கு இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும்.

சலுகைகளை அனுபவிக்கும் தோனி



இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) இருந்து, அதிகாரம் மற்றும் சலுகைகளை அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்,’’ என, பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.        
          
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் போட்டிகளில் உலக கோப்பை வென்று தந்தார். 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றினார். இதனால், கிரிக்கெட் உலகம் தோனியை புகழ்கிறது.

இதனிடையே, சமீப காலமாக அன்னிய மண்ணில் தோனி தலைமையிலான இந்திய அணி மோசமான தோல்விகளை சந்திக்கிறது. இதனால், இவரை கடுமையாக விமர்சித்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி.         
         
இதுகுறித்து அவர் கூறியது:              
   
என்னைப் பொறுத்தவரையில், நான் தோனியின் பெரிய ரசிகன் அல்ல. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. பி.சி.சி.ஐ.,யின் அதிகாரம், சலுகைகளை அதிகமாக அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்.    
              
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டைகர் பட்டோடி, கவாஸ்கர் கூட, இப்படி ஒரு சலுகை மற்றும் சுதந்திரத்தை, பி.சி.சி.ஐ.,யிடம் இருந்து பெற்றிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.        
          
இவரை சகவீரர்கள் கூட எளிதில் அணுக முடியாது. கடந்த 2012ல் லட்சுமண் ஓய்வு பெற்றார். இதை கேப்டன் தோனியிடம் தெரிவிக்க முயன்றார். ஆனால், தோனி எங்கிருக்கிறார் என்றே லட்சுமணால் கண்டறிய முடியவில்லை.                  
எங்கள் காலத்தில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்களில் வெற்றி பெற்றோம். இதற்கு பி.சி.சி.ஐ.,யில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.50 வீதம் ரூ.௨௦௦ மட்டுமே பரிசு கொடுத்தனர். இப்போது அப்படியல்ல.                  
ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்றால், பணம் அவரைத் தேடிவரும். இப்போது பணத்தை தேடி அலைவதால், கிரிக்கெட் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.                  
பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனுக்கும், சென்னை அணியின் சில வீரர்களுக்கும் தொடர்புகள் உள்ளன. உதாரணமாக புஜாராவையும், ரெய்னாவையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும். ரெய்னாவை விட புஜாரா நன்றாகத்தான் விளையாடுகிறார்.       
           
ஆனால், பி.சி.சி.ஐ., வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரெய்னாவுக்கு ‘ஏ’ பிரிவு (ரூ. 1 கோடி), புஜாராவுக்கு ‘பி’ பிரிவு (ரூ. 50 லட்சம்). இதற்கு ரெய்னாவுக்கும் சீனிவாசனுக்கும் உள்ள தொடர்பு தான் காரணம்.                  
இவ்வாறு பிஷன் சிங் பேடி கூறினார்.

இந்திய அணி பிந்தியது ஏன்?



இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி, தொடர்ந்து செய்யும் தவறுகளால், அன்னிய மண்ணில் தோல்வி தொடர் கதையாகிறது. 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0–4 என, இழந்தது. உலக கோப்பை தொடரில் ‘நடப்பு சாம்பியன்’, ஒருநாள் அரங்கில் ‘நம்பர்–1’ என்ற அந்தஸ்துடன் அங்கு சென்று, இப்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

அன்னிய மண்ணில் தொடர்ச்சியாக 8வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்க மறுப்பதால், தோல்வி தொடர் கதையாகிறது. தற்போது நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி அடைந்த தோல்விக்கான காரணங்கள்:


தெளிவற்ற கேப்டன்:

தென் ஆப்ரிக்க தொடரில் அடைந்த தோல்விக்குப் பின், ‘மிஸ்டர் கூல்’ கேப்டன் தோனி, நியூசிலாந்து தொடருக்கு ஏதாவது மாற்றங்கள் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எப்போதும் போல களமிறங்க, 8வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, இந்தியாவை பந்தாடி விட்டது.

இத்தொடரில் ‘டாஸ்’ வென்றது; பேட்டிங்கில் ஆறுதல் தந்தது மட்டும் தான் தோனி செய்த சரியான செயல். மற்ற அனைத்திலும் குழப்பவாதியாக மாறிவிட்டார்.

துவக்க வீரர்கள் ஏமாற்றிய நிலையில், 4வது போட்டியில் ஷிகர் தவானை நீக்கிவிட்டு, கோஹ்லியை களமிறக்கி தவறு செய்தார். ரோகித்துடன் ரகானேவை அனுப்பியிருக்க வேண்டும்.

ரெய்னா மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, முதல் மூன்று போட்டிக்குப் பின் தான் இவரை வெளியேற்றினார். இதற்குள் தொடரை வெல்ல முடியாத நிலை வந்துவிட்டது. அஷ்வினை தொடர்ந்து அணியில் சேர்க்கிறார்.

கிழித்து தைத்த டெய்லர் - 33 ஆண்டுக்குப் பின் மோசமான தோல்வி



ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பவுலிங், பேட்டிங்கில் ஒட்டு மொத்தமாக சொதப்பிய இந்திய அணி, 87 ரன்களில் வீழ்ந்து, நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுக்குப் பின் மோசமான தோல்வியை பதிவு செய்தது. 

ராஸ் டெய்லர் மீண்டும் சதம் அடித்து அசத்த, ஒருநாள் கோப்பையை தட்டிச் சென்றது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து சென்ற இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியின் முடிவில், இந்திய அணி, 0–3 என தொடரை இழந்தது. கடைசி ஒருநாள் போட்டி, வெலிங்டனில் நேற்று நடந்தது.
இத்தொடரில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, ‘பீல்டிங் தேர்வு செய்தார்.


மீண்டும் தவான்:

ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டுவர்ட் பின்னி நீக்கப்பட்டு, ஷிகர் தவான் மீண்டும் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில், டிம் சவுத்திக்கு பதில் மாட் ஹென்றி அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். பென்னட் இடத்தில் மெக்லீனகன் களமிறங்கினார்.

நியூசிலாந்து அணிக்கு ஜெசி ரைடர் (17), கப்டில் (16) ஜோடி சுமாரான துவக்கம் அளித்தது. இதனால் 13 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி தடுமாறியது. பின் இணைந்த வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி, வழக்கம் போல இந்திய வீரர்களின் பவுலிங்கை எளிதாக சமாளித்தது. 


டெய்லர் சதம்:

வில்லியம்சன், இத்தொடரில் தொடர்ந்து 5வது அரை சதத்தை எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்த போது வில்லியம்சன், 88 ரன்களில் அவுட்டானார். 

கேப்டன் பிரண்டன் மெக்கலம் (23) நிலைக்கவில்லை. தொடர்ந்து ரன்வேட்டை நடத்திய டெய்லர், ஷமி வேகத்தில் பவுண்டரி அடித்து, ஒருநாள் அரங்கில் 10வது சதத்தை பூர்த்தி செய்தார். இத்தொடரில் தொடர்ந்து அடிக்கும் இரண்டாவது சதம் இது. இவர் 102 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

வந்த வேகத்தில் அதிரடியாக ரன்கள் சேர்த்த நீஷம், போட்டியின் கடைசி ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து மிரட்ட, நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது. நீஷம் (34), ரான்கி (11) அவுட்டாகாமல் இருந்தனர். 

இந்திய அணி சார்பில் ஆரோன் 2, புவனேஷ்வர், ஷமி, கோஹ்லி தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.


ரோகித் சொதப்பல்:

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி, ஆமைவேக துவக்கம் கொடுத்தது. ரோகித் சர்மா (4), ஷிகர் தவான் (9) அடுத்தடுத்து நடையை கட்டினர். பின் வந்த ரகானே (2) மறுபடியும் ஏமாற்றினார். இதனால் இந்திய அணி, 15 ஓவரில் 34 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து வந்த அம்பதி ராயுடுவும், நிதானத்தை வெளிப்படுத்த, இந்திய அணி 20 ஓவரில் 58 ரன்கள் மட்டுமே எடுக்க, ரசிகர்கள் வெறுப்படைந்தனர். ராயுடு (20) அவுட்டானார். 


கோஹ்லி நம்பிக்கை:

பின் இணைந்த கோஹ்லி, தோனி ஜோடி சற்று நம்பிக்கை தந்தது. நீஷம் பந்தில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்த கோஹ்லி, ஒருநாள் அரங்கில் 30வது அரைசதம் கடந்தார்.

ரன்வேகத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கிய கோஹ்லி, 82 ரன்னுக்கு ‘பெவிலியன்’ திரும்பினார். கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 138 ரன்கள் தேவை என்ற நிலையில், அஷ்வின் (7), ரவிந்திர ஜடேஜாவும் (5) விரைவில் வெளியேற, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. மனம் தளராமல் போராடிய தோனி, 47 ரன்களில் அவுட்டானார்.

புவனேஷ்வர் (20), ஆரோன் ‘டக்’ அவுட்டாக, இந்திய அணி 49.4 ஓவரில், 216 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டாகி’ 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார். ஒருநாள் தொடரை 4–0 என வென்ற நியூசிலாந்து அணி, கோப்பை தட்டிச் சென்றது.


மோசமான தோல்வி:

 1975–76, 1980–81ல் நியூசிலாந்து சென்ற இந்திய அணி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 33 ஆண்டுக்குப் பின், மீண்டும் மோசமான தோல்வியடைந்துள்ளது.


தோனி ‘8000’

நேற்று தோனி 1 ரன் எடுத்தபோது ஒருநாள் அரங்கில், 8000 ரன்கள் எடுத்த வீரரானார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் (214) இம்மைல்கல்லை எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமை பெற்றார் தோனி.

இந்தியாவின் கங்குலி (200), சச்சின் (210), வெஸ்ட் இண்டீசின் லாரா (211) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இவர்கள் மூவருமே பேட்டிங்கில் முதல் மூன்று இடத்தில் களமிறங்கியவர்கள். பின்வரிசையில் களமிறங்கும் (5–7 இடம்) தோனி, அதிவேகமாக 8000 ரன்களை எட்டியுள்ளார்.


கைகொடுக்காத ராசி

* நியூசிலாந்து தொடரின் ஐந்து போட்டியிலும் கேப்டன் தோனி ‘டாஸ்’ வென்றார். இப்படி, இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் அனைத்து போட்டியிலும் தோனி ‘டாஸ்’ வெல்வது இரண்டாவது முறை.

* இதற்கு முன் 2009ல் வெஸ்ட் இண்டீஸ் சென்றபோது, ஒருநாள் தொடரின் 4 போட்டியிலும் ‘டாஸ்’ வென்றார். அப்போது தொடரை 2–1 என கைப்பற்றிய இந்திய அணி, தற்போது 0–4 என இழந்தது.


தோல்விக்கு என்ன காரணம்

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில், ‘‘தொடர் முழுவதும் நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். எங்களைப் பொறுத்தவரை சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் மாற்றிக் கொண்டு, திறமை வெளிப்படுத்தாதது தான் தோல்விக்கு முக்கிய காரணம்,’’ என்றார்.