கேப்டன் பதவியை துறந்தது பாதிப்பா? மனம் திறக்கிறார் சேவக்


டில்லி அணியின் கேப்டனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் என் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படாது,'' என, சேவக் தெரிவித்தார். 

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக், 34. கடந்த ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணியின் கேப்டனாக இருந்த இவர், அணியை அரையிறுதி வரை கொண்டு சென்றார். அதன்பின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். புதிய கேப்டனாக இலங்கையின் ஜெயவர்தனா நியமிக்கப்பட்டார். 

இது குறித்த சேவக் கூறியது: 

கேப்டனாக இருக்கிறோமா, இல்லையா என நான் எண்ணிப்பார்ப்பதில்லை. தவிர, இந்தப்பதவியால், எந்தவொரு நெருக்கடியையும் உணர்ந்ததில்லை. என் பேட்டிங்கும் பாதிப்படையவில்லை. 

அப்படி கேப்டன் பதவியால் எனக்கு, அதிக நெருக்கடி இருந்திருந்தால், கடந்த ஐ.பி.எல்., தொடரில், என்னால் எப்படி ஐந்து அரை சதங்களை அடித்திருக்க முடியும். தவிர, கடந்த தொடரில், டில்லி அணி சார்பில் (495) அதிக ரன்கள் எடுத்தேன். 


சரியான வாய்ப்பு

இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் சிறப்பான வீரர். இவர் தொடரிலிருந்து விலகியதன் மூலம், இவரின் பங்களிப்பை இழக்கிறோம். இருப்பினும், இவரது இடத்தை மற்ற வீரர்கள் நிரப்புவர். தவிர, தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால், அணியின் வெற்றிக்கு உதவலாம். 

உதாரணமாக, கடந்த தொடரின் பைனலில், பிஸ்லாவின் அதிரடி ஆட்டத்தால், கோல்கட்டா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதைப்போல, இம்முறை டில்லி அணிக்காக யாராவது வெற்றி தேடித் தருவார்கள் என நம்புகிறேன். 

ஒவ்வொரு அணியும், சமமான திறமைகளை கொண்டுள்ளது. ஆனால், வெற்றி பெறுவது என்பது, குறிப்பிட்ட நாளில், அந்த அணியின் செயல்பாட்டை பொறுத்தே உள்ளது. 

நமது நாட்டில், விளையாட்டில் திறமையானவர்கள் அதிகம் உள்ளனர். இதனை, இவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். 

இவ்வாறு சேவக் கூறினார். 

சென்னை அணியில் மினி இந்தியா


கேப்டன் தோனி, அஷ்வின், ஜடேஜா, முரளி விஜய் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, "மினி' இந்திய அணியாக காட்சி அளிக்கிறது.

 சமீபத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 4-0 என வென்றது. இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது கேப்டன் தோனி, முரளி விஜய், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா அடங்கிய நால்வர் கூட்டணி தான்.

இத்தொடரில் இந்திய அணி கைப்பற்றிய 79 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளில், 53 ஐ, அஷ்வின்-ஜடேஜா ஜோடி தான் பெற்றது. இதில் அஷ்வின் மட்டும் 29 விக்கெட்டுகள் வீழ்த்தி, தொடர் நாயகன் விருதை வென்றார். ஜடேஜா 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 


முரளி அபாரம்:

பேட்டிங்கில் அதிக ரன்கள் (2 சதம் உட்பட 430) எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளவர் முரளி விஜய். சென்னை டெஸ்டில் 224 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய தொடரில் ஆதிக்கத்தை துவங்கி வைத்தவர் இந்திய அணி கேப்டன் தோனி (326 ரன்கள்). இந்த நால்வரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளனர். 


முதுகெலும்பு ரெய்னா:


அடுத்து, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிக்கான இந்திய அணியின் முதுகெலும்பாக இருப்பவர் ரெய்னா. கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றி தேடித்தரும் இவர், சென்னை அணியில் தான் உள்ளார்.

உள்ளூர் போட்டிகளின் "ரன் மெஷின்' என்றழைக்கப்படும் பத்ரிநாத்தும், இங்கு தான் உள்ளார். இவர், சென்னை அணியின் "மிடில் ஆர்டரை' பலப்படுத்துவார். விக்கெட் கீப்பராக விரிதிமன் சகாவும் கூடுதலாக இணைந்துள்ளார்.


"பாபா' சக்தி:

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடரில், இந்திய அணி கோப்பை வெல்ல உதவியவர் பாபா அபராஜித். இந்திய அணியின் சிறந்த "ஆல்-ரவுண்டராக' வளர்ந்து வரும் இவர், தமிழகத்துக்காக ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்ற அனுபவத்துடன், ஆறாவது தொடரில் அசத்த காத்திருக்கிறார். 

மொத்தத்தில், சென்னை அணியின் 11 வீரர்களில், 8 பேர் இந்திய அணியின் வீரர்களாக உள்ளனர். இதனையடுத்து, மஞ்சள் நிற உடையணிந்த இந்திய அணியாக மாறி உள்ளது.

IPL 6 - சென்னை போட்டிகளுக்கு தொடர்கிறது சிக்கல்


சென்னையில் ஐ.பி.எல்., போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என, மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் வரும் ஏப்., 3ம் தேதி துவங்குகிறது. இதில், இலங்கை அணியில் இருந்து 13 வீரர்கள், பஞ்சாப் தவிர மற்ற 8 அணிகளில் பங்கேற்கின்றனர். 

கடைசிக் கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க கூடாது என தமிழக அரசு தெரிவித்தது.

இதை ஏற்றுக்கொண்ட ஐ.பி.எல்., நிர்வாகம், மாற்று வழியை தேடியது. கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் அனைத்து போட்டிகளையும் நடத்தலாம் என அணி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதற்கு ஐ.பி.எல்., நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

கடைசியில், சென்னையில் மட்டும் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டர் என உறுதி தெரிவித்தது. இத்துடன் பிரச்னை முடிந்தது என்ற நிலையில், மேலும் பல திருப்பங்கள் ஏற்படும் எனத் தெரிகிறது. 


உரிமையாளர்கள் எதிர்ப்பு:

அதாவது,"சென்னைக்கு எதிரான போட்டிகளில் முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கினால், அது அந்த அணிக்கு சாதகமாகி விடும்,' என, அணி உரிமையாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். இதில், இலங்கை வீரர்கள் யாரும் இல்லாத பஞ்சாப் அணியும் சேர்ந்து கொண்டு எதிர்ப்பது தான் வினோதமாக உள்ளது. 

ஒருவேளை சமாதானம் ஆகாத பட்சத்தில் சென்னையில் நடக்கவுள்ள போட்டிளை கேரளாவின் கொச்சிக்கு மாற்ற முடிவு, பி.சி.சி.ஐ., செய்துள்ளதாக தெரிகிறது. தவிர, விசாகப்பட்டின மைதானத்தையும் தயார் நிலையில் வைக்குமாறு கேட்டுள்ளனர். 


"பிளே-ஆப்' மாற்றம்:

இத்தனை எதிர்ப்பையும் மீறி 8 லீக் போட்டிகள் நடந்தாலும், மே 21, 22ல் நடக்கவுள்ள "பிளே ஆப்' போட்டிகள் கட்டாயம் சென்னையில் நடக்காது என்று தெரிகிறது. ஏனெனில், பைனலுக்கான தகுதிப் போட்டி என்ற நிலையில், முன்னணி வீரர்களை சேர்த்தாக வேண்டிய நிலை இருப்பதால், எந்தநேரத்தில் இடம் மாற்றம் செய்யப்படலாம். இந்த போட்டிகளில் பெரும்பாலும் விசாகப்பட்டினத்தில் நடக்கும் எனத் தெரிகிறது.


மாத்யூஸ் கேப்டன்

தமிழக மண்ணில் இலங்கைக்கு எதிர்ப்பு வலுக்கிறது. ஆனால், இங்குள்ள டில்லி, ஐதராபாத் ஐ.பி.எல்., அணிகளின் கேப்டனாக இலங்கை அணியின் ஜெயவர்தனா, சங்ககரா தான் உள்ளனர்.

 இந்நிலையில் புனே அணியின் கேப்டன் கிளார்க், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து, இலங்கையின் மாத்யூஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

எனது வழியில் புஜாரா - டிராவிட் பெருமிதம்


டெஸ்ட் போட்டிகளில் புஜாரா, என்னைப் போல விளையாடுகிறார். தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான வீரராக வலம் வருவார்,'' என, டிராவிட் தெரிவித்தார்.

டெஸ்ட் அணியில் இருந்து டிராவிட் ஓய்வு பெற்ற பின், அவரது இடத்துக்கு வந்தவர் புஜாரா. இதுவரை 13 டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர், 1180 ரன்கள் எடுத்தார். 

இவரது சராசரி 65.55 ரன்கள். இதில் 4 சதம், 3 அரைசதங்கள் அடங்கும். இதுவரை ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காத இவர், 61 உள்ளூர் 50 ஓவர் போட்டிகளில் 2735 ரன்கள் (8 சதம், 17 அரைசதம்) எடுத்துள்ளார் (சராசரி 56.97). புஜாரா.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் கூறியது:

டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக துவக்கியுள்ளார் புஜாரா. துவக்கத்தில் நான் விளையாடியதை விட அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். பல்வேறு புதிய "ஷாட்டுகளை' அடித்து விளையாடும் இவர், டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகும் விதம், அப்படியே என்னைப் போலவே உள்ளது. 

இவர், தொடர்ந்து சீரான முன்னேற்றம் அடைந்து வருகிறார். அதேநேரம், ஒருநாள், "டுவென்டி-20' என, வித விதமான போட்டிகள், மாறுபட்ட ஆடுகளங்கள் என்று வரும் போது, பல்வேறு ஏற்ற இறக்கங்களை புஜாரா சந்திக்க வேண்டியது வரும். ஆனால், இப்போது போல உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது தொடர்ந்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் முத்திரை பதிக்கலாம்.


"பவுன்சர்' பயம்:

சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த போது, அன்னிய மண்ணில் "பவுன்சர்' பந்துகளை எதிர்கொள்வதில் மிகவும் சிரமப்பட்டேன். ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு முதன் முதலாக சென்ற போது, அங்குள்ள "டாப்-ஆர்டர்' வீரர்களை கவனித்தேன். அவர்கள் அளவுக்கு அதிகமான உயரத்தில் வரும் பந்துகளை அடிக்காமல் விட்டு விடுவதை கவனித்தேன். நானும் இதைப் பின்பற்றினேன். 

ஆனால், இந்திய வீரர்கள் இதை அடிக்க முற்படுவர். ஏனெனில், இங்குள்ள ஆடுகளங்களில் இப்படி வரும் பந்துகளை விட்டுவிட்டால், "ஸ்டம்சின்' மேல் பட்டு போல்டாகி விடும். இதற்கேற்ப, எந்த பந்தை அடிப்பது, எதை விடுவது என்பதில் விரைந்து முடிவெடுக்க வேண்டும். ஆனால், இது மிகவும் கடினமானது. 

இப்போது புஜாராவுக்கு அன்னிய மண்ணில் அடுத்தடுத்து போட்டிகள் உள்ள நிலையில், சூழ்நிலைக்கு ஏற்படு மாற்றிக் கொண்டு கவனமாக செயல்பட வேண்டும். 


கடினமான "ஷாட்:

பீட்டர்சன், டேவிட் வார்னர் போன்றவர்கள், திடீரென அப்படியே மாறி நின்று, "சுவிட்ச் ஹிட்' முறையில் பந்தை அடிப்பர். இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால், இதற்கு அசாத்திய திறமை வேண்டும். அதேநேரம், இதுபோல விளையாடும் பட்சத்தில் "வைடு' விதிகளில் மாற்றம் வந்து விடும். 


காப்பற்ற வழி:

டெஸ்ட் போட்டிகள் நீடித்து நிலைக்க வேண்டுமெனில், ஒவ்வொரு அணிகளும் அதிக டெஸ்டில் விளையாட வேண்டும். இப்போட்டியை காப்பாற்ற இதை விட்டால் வேறு வழியில்லை. அப்போது தான் டெஸ்ட் கிரிக்கெட் மேலும் முன்னேற்றம் அடையும். இப்படி ஒரு நிலையை பார்க்க ஆவலாக உள்ளேன். 

இவ்வாறு டிராவிட் கூறினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து மைக்கேல் கிளார்க் விலகல்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் 31 வயதான மைக்கேல் கிளார்க், இந்திய தொடரின் போது காயமடைந்தார். 

முதுகின் கீழ் பகுதியில் வலியால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லியில் நடந்த கடைசி டெஸ்டில் விளையாடவில்லை. கிளார்க்குக்கு 17 வயதில் இருந்தே அடிக்கடி இந்த பாதிப்பு இருந்து வருகிறது. 

சிட்னியில் அவருக்கு அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், புதிதாக எந்த காயமும் ஏற்படவில்லை, ஏற்கனவே உள்ள காயம் அதிகமாகி இருப்பது தெரியவந்தது. அத்துடன் அவர் தசைப்பிடிப்பாலும் அவதிப்பட்டு வருகிறார். 

இந்த காயத்தில் இருந்து அவர் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப 7 முதல் 10 வாரங்கள் ஆகும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முழு உடல்தகுதியுடன் அவர் தயாராகுவதற்கு ஏற்ப தேவையான சிகிச்சை, பயிற்சி முறைகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஏறக்குறைய இரண்டு மாதங்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டி இருப்பதால் அடுத்த வாரம் தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் புனே வாரியர்ஸ் அணிக்காக ரூ.2.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். மேலும் புனே வீரர் யுவராஜ்சிங் கேப்டன் பொறுப்பை ஏற்க தயங்குவதால், கிளார்க்கை கேப்டனாக்க முயற்சி நடந்தது. 

அணியை வழிநடத்துவதற்காக அவருக்கு ரூ.11 கோடி அளிக்க அந்த அணி நிர்வாகம் முன்வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அவரது விலகலால் புனே அணியின் கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சீசனில் சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்தார். 

அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அனேகமாக யுவராஜ்சிங் அல்லது ராஸ் டெய்லர் ஆகியோரில் ஒருவர் கேப்டன் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளது.  

சச்சினுக்கு மட்டும் சலுகையா?


டெஸ்ட் போட்டிகளில் கடந்த இரு ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காத சச்சினுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. கடந்த 23 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் நீடித்து வரும் இவர், சதத்தில் சதம் அடித்து வரலாறு படைத்தவர். 

கடந்த ஆண்டு திடீரென ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார்.டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் சச்சின், சமீபகாலமாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். 

கடந்த 2011, ஜனவரியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்த பின், இதுவரை பங்கேற்ற 21 டெஸ்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

கடைசியாக களமிறங்கிய 10 இன்னிங்சில் (76, 5, 2, 81, 13, 7, 37, 21, 32, 1) இரு முறை மட்டும் அரைசதம் கடந்தார். இவர் இன்னும் அணியில் நீடிக்க அனுமதித்துள்ளனர்.

அதேநேரம், கடைசி 10 இன்னிங்சில் (117, 25, 30, 9, 23, 49, 0, 2, 19, 6) ஒரு சதம் அடித்த சேவக்கை, அணியில் இருந்து நீக்கினர். இவ்விஷயத்தில் சேவக்கிற்கு ஒரு நியாயம், சச்சினுக்கு ஒரு நியாயம் தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசன் கூறியது:

இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகச் சிறந்த வீரர் சச்சின். மற்ற வீரர்களில் இருந்து வித்தியாசமானவர். இவரது திறமை குறித்து ஒவ்வொரு தொடருக்கு ஒருமுறையும் ஆராய்ந்து கொண்டிருப்பது சரியல்ல. 

சச்சின் ஓய்வு குறித்து யாரும் விவாதிக்க கூடாது. இது அவரது சொந்த விஷயம். இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அவரைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்பதும் அழகல்ல. ஏனெனில், நான் அணி தேர்வாளர் இல்லை.

இவ்வாறு சீனிவாசன் கூறினார்.

டெல்லி டெஸ்ட் - தெண்டுல்கருக்கு கடைசி போட்டியாக இருக்குமா?


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடி வருகிறார். 

தற்போது டெல்லியில் நடைபெறும் டெஸ்ட் போட்டி தான் தாய் மண்ணில் தெண்டுல்கர் மோதும் கடைசி போட்டியாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

காரணம் ஐ.சி.சி. அட்டவணைப்படி அடுத்த ஒரு ஆண்டுக்கு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரும் கிடையாது. அடுத்த மாதம் தெண்டுல்கர் 40 வயதை எட்டுகிறார். 

எனவே டெல்லி டெஸ்ட் தெண்டுல்கருக்கு இந்திய மண்ணில் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இதுபற்றி முன்னாள் கேப்டன் கவாஸ்கரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:- 

டெல்லி போட்டி தான் தெண்டுல்கரின் கடைசி போட்டி என்று யாரும் சொல்லி விட முடியாது. அது தான் அவரின் கடைசி போட்டி என்று யாருக்கும் தெரியாது. 

2006-07- முதல் அவரின் ஓய்வு பற்றிய பேச்சு வந்து கொண்டு இருக்கிறது என்றாலும் அவர் விளையாடிக் கொண்டு இருக்கிறார். எனவே கடைசிப் போட்டி பற்றி அவருக்கு மட்டுமே தெரியும். 

இவ்வாறு கவாஸ்கர் கூறினார். 

சென்னையில் ஐ.பி.எல்., போட்டி நடக்குமா?


இலங்கை பிரச்னை காரணமாக தமிழகத்தில் பதட்டம் நிலவுவதாக தெரிவித்து, ஐ.பி.எல்., போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டாம் என, அணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட, இலங்கையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடக்கின்றன. அரசு எதிர்ப்பு காரணமாக, சென்னை வந்த இலங்கை கால்பந்து வீரர்கள், திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கை வீரர்கள் பங்கேற்பர் என்பதால், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்த முடியாது என, தமிழக அரசு அறிவித்தது. 

இதனால், வரும் ஏப்., 3ல் துவங்கவுள்ள ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடருக்கு சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. ஏனெனில், பஞ்சாப் தவிர, மற்ற 8 அணிகளில் இலங்கை அணியின் 13 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்னை அணியில் குலசேகரா, தனஞ்செயா உள்ளனர். 

இவர்கள் சென்னை மண்ணில் களமிறங்கினால் கடும் எதிர்ப்பு ஏற்படும். எனவே, சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்களை சேர்க்க வேண்டாம் என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அறிவுறுத்தியாக செய்திகள் வெளியாகின. 

ஆனால், சென்னையில் ஐ.பி.எல்., போட்டிகளையே நடத்த வேண்டாம் என, அணி உரிமையாளர்கள் இப்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதன் விவரம்:

கடந்த 2010ல் ஆந்திராவின் தெலுங்கானா போராட்டம் நடந்த போது, டெக்கான் அணியின் போட்டிகள் ஐதராபாத்தில் இருந்து மாற்றப்பட்டன. இதுபோல இப்போதும் நடக்க வேண்டும். 

அணியாக விளையாடி வரும் நிலையில், திடீரென சென்னைக்கு வரும் போது மட்டும், வீரர்களை மாற்றினால் அணியின் வெற்றியை பாதிக்கும். டில்லி, ஐதராபாத் அணிகளின் கேப்டன்களாக உள்ள ஜெயவர்தனா, சங்ககராவை வெளியில் உட்கார வைக்க முடியுமா. மும்பை அணி மலிங்கா இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. 

தவிர, அஞ்சத்தக்க சென்னை அணியை, சொந்த மண்ணில் குழப்பத்துடன் சந்திப்பது பாதிப்பை ஏற்படுத்தும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து சென்னை அணி நிர்வாகம் கருத்து தெரிவிக்கவில்லை. தவிர, சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன், இந்திய அணி கேப்டன் தோனி தான், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன். 

இப்படி, ஐ.பி.எல்., தொடரின் தலைமையகமாக சென்னை உள்ள நிலையில், இந்த கோரிக்கை ஏற்கப்படுமா எனத்தெரியவில்லை. இதுகுறித்து ஐ.பி.எல்., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" தமிழகத்தின் சூழ்நிலை நன்கு தெரியும். 

விரைவில் இதுகுறித்து முடிவெடுப்போம். மற்றபடி, சென்னையில் இருந்து போட்டிகளை மாற்றும் எண்ணமெல்லாம் கிடையாது. இந்த செய்திகள் அடிப்படையற்றவை,'' என்றார்.

பாண்டிங்கை தொடர்ந்து கில்கிறிஸ்ட்


வெஸ்ட் இண்டீசில் நடக்கும் கரீபிய பிரிமியர் லீக் (சி.பி.எல்.,) தொடரில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்கை தொடர்ந்து, கில்கிறிஸ்ட்டும் இரண்டாவது வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், 41. கடந்த 2008ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 

இதன் பின் ஆண்டு தோறும் இந்தியவில் நடக்கும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக பங்கேற்றுவருகிறார். 

இவர் தற்போது வெஸ்ட் இண்டீசில் முதல் முறையாக நடக்கவுள்ள சி.பி.எல்., தொடரில் பங்கேற்க, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை தொடர்ந்து இரண்டாவது வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

இத்தொடர் வரும் ஜூலை 29 முதல் ஆக., 26 வரை நடக்கவுள்ளது. இதில், ஆன்டிகுவா அண்டு பார்புடா, பார்படாஸ், கயானா, ஜமைக்கா, டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. 

இதில் 90க்கு மேல் சர்வதேச வீரர்களை ஒப்பந்தம் செய்ய சி.பி.எல்., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

இது குறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில்,""சி.பி.எல்., தொடரில் பங்கேற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. 

இந்த கிரகத்தின் அழகிய இடங்களில் ஒன்றான வெஸ்ட் இண்டீசில் மீண்டும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான். முன்பு இங்கு போட்டியில் பங்கேற்ற நினைவுகள் என் மனதில் இருந்து இன்னும் நீங்கவில்லை,''என்றார். 

சமூக வலைத்தளங்களில் சச்சின் தான் மாஸ்டர்


இந்திய அணியின் சச்சின் குறித்து தான், சமூக வலைத்தளங்களில் அதிகமான நபர்கள் விமர்சித்துள்ளனர் என, ஐ.பி.எம்., ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றன. மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்று, தொடரை வென்று சாதித்தது. 

போட்டிகளின் போது, சமூக வலைத்தளங்களான "டுவிட்டர்', "பேஸ்புக்', "யூ டியூப்' போன்றவற்றில் இந்திய அணியின் பவுலிங்கை விட, சச்சின் குறித்து தான் அதிகமாக பேசியுள்ளனர். 

இது குறித்து தனியார் நிறுவனமான, ஐ.பி.எம்., நடத்திய ஆய்வில்," தற்போது நடந்து வரும் இந்தியா, ஆஸ்திரேலிய தொடர் குறித்து சுமார் 1.2 லட்சம் பேர், கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். 

இதில் 50 சதவீதத்தினர், இந்திய அணி வீரர் சச்சினின் சாதனை, எதிர்கால ஓய்வு திட்டம் குறித்து தான் விமர்ச்சித்துள்ளனர். 

இவருக்கு அடுத்து கேப்டன் தோனி, முரளி விஜய் ஆகியோர் விளாசிய சதங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 

ரவிந்திர ஜடேஜாவின் "ஆல்-ரவுண்டர்' திறமை குறித்தும் அதிகம் பேசியுள்ளனர். சமூக வலைத்தளங்களில், இந்திய பவுலர்களில் அதிகமாக பிரபலமானவர் இவர் தான். 

அதிரடி சதம் அடித்து, உலக சாதனை படைத்த ஷிகர் தவான் குறித்து பேசியுள்ளனர்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெஸ்ட் அரங்கிலிருந்து விடைபெறுகிறாரா சச்சின்?


டில்லி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் விடைபெறுவார் என கூறப்படுகிறது.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. இதுவரை, 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள் (49 சதம், 96 அரைசதம்), 197 டெஸ்டில் 15,804 ரன்கள் (51 சதம், 67 அரைசதம்) எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 100 சதம் அடித்துள்ளார். 

கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் தேர்வு செய்யப்படாமல் போக, திடீரென ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். விரைவில் 40 வயதை பூர்த்தி செய்யவுள்ள சச்சின், சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் தடுமாறுகிறார். 

கடந்த 2011, ஜனவரியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்த பின், இதுவரை பங்கேற்ற 20 டெஸ்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக களமிறங்கிய 10 இன்னிங்சில் (8, 8, 76, 5, 2, 81, 13, 7, 37, 21) இரு முறை அரைசதம் கடந்தார். 

"ஒவ்வொரு தொடரில் பங்கேற்பது குறித்தும், யோசித்து தான் முடிவு செய்கிறேன். எனது உடல் ஒத்துழைக்கும் வரை கிரிக்கெட் போட்டியில் தொடர்வேன், ' என, சச்சின் சமீபத்தில் தெரிவித்தார். 

ஆனால், மொகாலி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தவிர, முரளி விஜய், தவான், புஜாரா, விராத் கோஹ்லி, ஜடேஜா என, அடுத்த தலைமுறை தயாராகி விட்டதால், சச்சினுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இந்த ஆஸ்திரேலிய தொடருக்குப் பின், இந்திய அணி வரும் டிசம்பரில் தான் தென் ஆப்ரிக்கா சென்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அடுத்து, 2014 ல் நியூசிலாந்து (பிப்ரவரி-மார்ச்), இங்கிலாந்து (ஜூலை-ஆகஸ்ட்) செல்கிறது. மீண்டும் சொந்த மண்ணில் 2014, அக்டோபர் மாதம் தான் டெஸ்ட் தொடரில் (வெஸ்ட் இண்டீஸ்) பங்கேற்கும்.

இந்தச் சூழலில், நாளை துவங்கும் டில்லி போட்டி தான் சச்சின் சொந்த மண்ணில் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடை பெறுவார் என்று நம்பப்படுகிறது. 


அனுபவம் தேவை

கடந்த 23 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் நீடித்து வருகிறார் சச்சின். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் சரியாக விளையாடவில்லை எனில், இவருடன் பேச வேண்டும் என்ற முடிவில் தேர்வுக்குழுவினர் இருந்தனர். ஆனால், சென்னையில் 81 ரன்கள் எடுக்க, சச்சினை நெருங்க முடியவில்லை. 

வரும் டிசம்பரில் தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணியில் சச்சின் மட்டும் தான் அனுபவ வீரர். அங்குள்ள ஆடுகளங்கள் குறித்து இவருக்கு நன்கு தெரியும். இந்த அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள சச்சின் தேவை. இல்லையெனில், இளம் வீரர்கள் அடங்கிய பாகிஸ்தான் டெஸ்ட் அணி, சமீபத்தில் ஸ்டைன், மார்கல் போன்ற தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர்களிடம் "உதை' வாங்கிய நிலை, நமக்கும் நேரலாம்.

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?


ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு, வறட்சி நிவாரணமாக, 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும். நிதி கொடுக்காத அணிகளை, மகாராஷ்டிராவில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மாட்டோம்' என, சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

சிவசேனா செய்தி தொடர்பாளர், சஞ்சய் ரவத் கூறியதாவது:ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின், 6வது சீசன், ஏப்ரல், 3ம் தேதி துவங்கி மே மாதம், 26ம் தேதி வரை நடக்கிறது. மும்பையில் மட்டும், எட்டு போட்டிகள் நடக்கவுள்ளன. 

மகாராஷ்டிராவில், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து உள்ளன.மாநிலத்தின் பல பகுதிகளில், குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் உதவ வேண்டும். போட்டிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை, மகாராஷ்டிரா மக்களுக்காக, வறட்சி நிவாரண நிதியாக அளிக்க வேண்டும்.குறைந்தது, 500 கோடி ரூபாயாவது, வறட்சி நிவாரண நிதியாக அளிக்க வேண்டும். 

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள், அறக்கட்டளை நோக்கத்துடன் நடத்தப்படுவது இல்லை; வர்த்தக நோக்கத்தில் நடத்தப்படுகின்றன.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய விவசாய அமைச்சருமான, சரத் பவார், மகாராஷ்டிரா முதல்வரும் காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, பிரித்விராஜ் சவான் ஆகியோர், இது தொடர்பாக ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்களிடம் வற்புறுத்த வேண்டும்.நிதி கொடுக்காத அணிகளை, மும்பையில் விளையாட அனுமதிக்க கூடாது. 

மகாராஷ்டிரா அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்காவிட்டால், சிவசேனா கட்சி, அந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.இவ்வாறு, சஞ்சய் ரவத் கூறினார்.மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர், ராஜ் தாக்கரேயும், ""மகாராஷ்டிராவில் வறட்சியான சூழல் நிலவுவதால், அங்கு, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது,'' என, கூறியுள்ளார்.

வரலாறு படைத்தது இந்தியா


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரையும் 3-0 என வென்றது. 

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக தொடர்ந்து மூன்று டெஸ்டில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. 

மூன்றாவது டெஸ்ட் மொகாலியில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 408, இந்தியா 499 ரன்கள் எடுத்தன. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. ஹியுஸ் (53), லியான் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு, முதலில் லியான் (18 ) ஓஜாவிடம் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் கிளார்க் ஓஜா பந்தில், இரண்டு பவுண்டரி அடித்தார். இவர் 18 ரன்கள் எடுத்த போது, இத்தொடரில் ஐந்தாவது முறையாக ஜடேஜா பந்தில் அவுட்டானார். 

எதிர்முனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹியுஸ் (69) அஷ்வின் "சுழலில்' சிக்கினார். ஹென்ரிக்ஸ் (2) ஜடேஜாவின் "சூப்பர் கேட்ச்' மூலம் வெளியேறினார். சிடில் (13) நிலைக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாடின் (30) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 

ஸ்டார்க் (35) ஜடேஜாவிடம் சரணடைய, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 223 ரன்களுக்கு "ஆல் அவுட்' ஆனது. இதையடுத்து இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர் தவானுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால், முரளி விஜய் உடன் புஜாரா துவக்க வீரராக களமிறங்கினார். முரளி விஜய் (26) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. புஜாரா (24) லியான் "சுழலில்' சிக்கினார். கோஹ்லி (34) ஓரளவு கைகொடுத்தார்.  

சச்சின் (21) ரன் அவுட்டானார்.  கடைசி நேரத்தில் ஜடேஜா, தோனி அதிரடியில் மிரட்ட இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  தோனி (18), ஜடேஜா (8) அவுட்டாகாமல் இருந்தனர். 

புவனேஷ்வர் அசத்தல் - ஆஸி., திணறல்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி டெஸ்டில், புவனேஷ்வர் வேகத்தில் அசத்த, துவக்க வீரர்களை இழந்த ஆஸ்திரேலிய அணி திணறுகிறது. 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. 

மூன்றாவது போட்டி பஞ்சாப்பில் உள்ள மொகாலியில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 408 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 283 ரன்கள் எடுத்திருந்தது. 

முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, இன்றைய போட்டியில் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அறிமுக வீரர் தவான், 187 ரன்கள் எடுத்தபோது லியான் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில் கோவனிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார். 

இதையடுத்து அறிமுக போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையும் தவான் தவறவிட்டார். அடுத்து வந்த புஜாரா (1) அம்பயரின் தவறான முடிவால் வந்த வேகத்தில் "பெவிலியன்' திரும்பினார். 

மறுமுனையில் லியான் பந்தில் பவுண்டரி அடித்த தமிழக வீரர் முரளி விஜய், டெஸ்ட் அரங்கில் 3வது சதத்தை பதிவு செய்தார். இவர் 153 ரன்கள் எடுத்த போது ஸ்டார்க் வேகத்தில் சிக்கினார். 

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் (37) நிலைக்கவில்லை. பின் வந்த கேப்டன் தோனி (4) விரைவாக பெவிலியன் திரும்பினார். ஜடேஜா (8) ஏமாற்றினார். அடுத்து வந்த அஷ்வின் (4) ஏமாற்றினார். 

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபுறம் நம்பிக்கையுடன் போராடிய விராத் கோஹ்லி அரைசதம் கடந்தார். பின் வந்த புவனேஷ்வர் குமார் (18) நிலைக்கவில்லை. இஷாந்த் சர்மா டக்-அவுட்டானார். ஓஜாவும் (1) சிடில் பந்தில் வெளியேற, இந்திய அணி முதல் இன்னிங்சில் 499 ரன்கள் எடுத்தது. கோஹ்லி (67) அவுட்டாகாமல் இருந்தார். 

ஆஸ்திரேலிய அணிக்கு சிடில் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். 

பின் 91 ரன்கள் பின்தாங்கிய நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, புவனேஷ்வர் வேகத்தில் அதிர்ந்தது. இவர் முதலில் வார்னரை (2) வெளியேற்றினார். அடுத்து கோவனை (8) அவுட்டாக்கினார்.  

பின் வந்த ஸ்மித்தை (3) போல்டாக்கினார். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்தது.

6-வது ஐ.பி.எல். விளம்பர வருமானம் ரூ.950 கோடி



6-வது ஐ.பி.எல். போட்டிக்கான விளம்பர வருவாய் ரூ.950 கோடியாக அதிகரித்து உள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 20 ஓவர் போட்டிக்கு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால் அதற்கு வருமானம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. 

ஐ.பி.எல். போட்டிக்கான ஸ்பான்சர் (விளம்பரதாரர்)கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் டெலிவிஷன் ஒளிபரப்பு உரிமம் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரித்து வருகிறார்கள். 

முதலாவது ஐ.பி.எல். போட்டி நடந்த போது அதன் விளம்பர வருவாய் ரூ.250 கோடியாக இருந்தது. இந்த நிலையில் விரைவில் தொடங்க இருக்கும் ஐ.பி.எல். போட்டிக்கான விளம்பர வருவாய் ரூ.950 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்பான்சர்கள் அதிகரிப்பு, விளம்பர கட்டணம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் வருவாய் அதிகரித்து உள்ளது. 10 சதவீதம் முதல் 15 சதவீதம் விளம்பர கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

தற்போது பெப்சிகோ, வோடாபோன் ஆகிய மெயின் ஸ்பான்சர்கள் மூலம் தலா ரூ.40 முதல் ரூ.60 கோடியும், இணை ஸ்பான்சர்களான டாடா போடான், கார்போன், கோத்ரெஜ், சாம்சங், பேனசோனிக், உஷா அப்ளையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் ரூ.25 முதல் 30 கோடி வரை விளம்பர வருவாய் கிடைக்கிறது. 

செட்மேக்ஸ், சோனி ஆகிய சேனல்களுக்கு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6-வது ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் ரூ.950 கோடி விளம்பர வருவாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த போட்டியில் ரூ.750 கோடி விளம்பர வருவாய் கிடைத்தது. தற்போது அதை விட 27 சதவீதம் வருவாய் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 6-வது ஐ.பி.எல். போட்டி வருகிற ஏப்ரல் 3-ந் தேதி தொடங்குகிறது. 

அதற்குள் மேலும் பல ஸ்பான்சர்கள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் விளம்பர வருவாய் மேலும் அதிகரிக்கும் என்றும் ஐ.பி.எல். நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ஐ.சி.சி. தரவரிசையில் முதல் முறையாக முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் புஜாரா


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் புஜாரா முதல் முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். 

ஐதராபாத் டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் அவர் 23-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

சச்சின் தெண்டுல்கர் 19-வது இடத்திலும் (2 இடம் சரிவு), கேப்டன் டோனி 21-வது இடத்திலும், விராட் கோலி 24-வது இடத்திலும் உள்ளனர். முதல் இரு இடங்களில் தென்ஆப்பிரிக்காவின் அம்லா, ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் இருக்கிறார்கள். 

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் முதல் முறையாக முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் மொத்தம் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய அஸ்வின் 11-வது இடத்தில் இருந்து 8-வது இடத்தை பிடித்துள்ளார். 

மற்றொரு இந்திய பவுலர் பிரக்யான் ஓஜா 9-வது இடத்தில் இருக்கிறார். முதல் மூன்று இடங்களில் தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், பிலாண்டர், பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் தொடருகிறார்கள்.

14 ஆண்டுக்கு பின் சதம் அடிப்பாரா சச்சின்?


இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 14 ஆண்டுக்கு பின் பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் சதம் அடிப்பார் என, மொகாலி ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள 3வது டெஸ்ட் போட்டி மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இம்மைதானம் இந்திய வீரர் சச்சினுக்கு சோதனைக் களமாக உள்ளது.

சச்சின், 1999ல் இங்கு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் முதன்முறையாக (126 அவுட் இல்லை) சதம் அடித்தார். அதன்பின் இங்கு 5 முறை (88, 55, 94, 88, 98) அரைசதத்தோடு வெளியேறினார். இதில் இரண்டு முறை 90 ரன்களுக்கு மேல் அவுட்டானார். 

கடைசியாக 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு நடந்த டெஸ்டில் 98 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இவர், இதுவரை இங்கு விளையாடிய 10 டெஸ்டில் ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 709 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் ராகுல் டிராவிட் (735 ரன்கள்) உள்ளார்.

இம்மைதானத்தில் விளையாடிய ஒருநாள் போட்டியிலும் சச்சின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இவர், இங்கு ஒரு முறை கூட சதம் அடித்ததில்லை. நான்கு முறை (99, 85, 67, 62) அரைசதம் அடித்தார். அதிகபட்சமாக 2007ல் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கு விளையாடிய போட்டியில் 99 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

கடைசியாக 2011ல் இங்கு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதியில் 85 ரன்களுடன் வெளியேறினார். இவர், இதுவரை இங்கு விளையாடிய 7 ஒருநாள் போட்டியில் 366 ரன்கள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் அரங்கில், கடைசியாக செஞ்சுரியனில் 2011ல் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் சதம் (146 ரன்கள்) அடித்தார் சச்சின். அதன்பின் 8 முறை (56, 91, 76, 94, 73, 80, 76, 81) அரைசதம் அடித்தார்.

தவிர இந்திய மண்ணில், கடைசியாக 2010ல் பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் (214 ரன்கள்) அடித்தார். 

அதன் பின் இந்தியாவில் விளையாடிய டெஸ்டில், 6 முறை (53, 61, 76, 94, 76, 81) அரைசதம் அடித்து அவுட்டானார். இம்முறை மொகாலி மைதானத்தில் சதம் அடித்து அசத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆறாவது ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை அறிவிப்பு

ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஏப்., 6ம் தேதி எதிர்கொள்கிறது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் ஆண்டுதோறும் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. 

நடப்பு ஆண்டுக்கான 6வது ஐ.பி.எல்., தொடர், ஏப். 3ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. ஏப். 3ம் தேதி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் "நடப்பு சாம்பியன்' கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் போல, "ரவுண்டு ராபின்' மற்றும் "பிளே ஆப்' தகுதிச் சுற்றுகள் நடத்தப்படுகிறது. "ரவுண்டு ராபின்' சுற்றில் ஒரு அணி, மற்ற 8 அணிகளுடன் தலா 2 முறை லீக் போட்டியில் மோதும். 

இச்சுற்றின் கடைசி போட்டி வரும் மே 19ம் தேதி நடக்கவுள்ளது. முடிவில், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் "பிளே-ஆப்' தகுதிச் சுற்றுக்கு (3 போட்டிகள்) தகுதி பெறும். 

மொத்தம் 72 லீக் போட்டிகள், 3 "பிளே-ஆப்' தகுதிச் சுற்றுப் போட்டிகள், ஒரு பைனல் உட்பட மொத்தம் 76 போட்டிகள் நடக்கவுள்ளன.

முதலிரண்டு "பிளே-ஆப்' சுற்றுப் போட்டிகள் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மே 21, 22ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. 

மூன்றாவது "பிளே-ஆப்' மற்றும் பைனல், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், வரும் மே 24, 26ம் தேதிகளில் நடக்கவுள்ளது.

புனே வாரியர்ஸ் அணிகள் விளையாடும் போட்டிகள் புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடத்தப்படும். 

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் ஏப்., 6ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.


நடிகை அனுஷ்கா சர்மாவுடன் காதல் - ரெய்னா ஒப்புதல்


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. இவருக்கும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி வந்தனர். இந்த இருவரது காதல் கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இருவரும் தங்களுக்கு காதல் எதுவும் இல்லை என்று கூறிவந்தனர். இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவுடன் காதல் இருப்பதை ரெய்னா ஒப்புக் கொண்டார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

புது நடிகை அனுஷ்கா சர்மாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு பிடித்தமானவர். இங்கிலாந்து பயணத்தின்போது நான், டிராவிட், டோனி ஆகியோர் பல படங்களை பார்த்து இருக்கிறோம்.

ராஜேஷ்கண்ணா, அமிதாப்பச்சன் நடிப்பை பார்த்து நான் மெய்சிலிர்த்தேன் தற்போதைய தலை முறையில் ரன்பீர் கபூரின் மிகவும் பிரமாதமாக நடிக்கிறார்.

எனது திருமணம் குறித்து எனது குடும்பத்தினர் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

இவ்வாறு ரெய்னா கூறியுள்ளார்.

26 வயதான அனுஷ்கா சர்மா மாடல் அழகியாக திகழ்ந்தார். 2008-ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். இதுவரை 7 இந்தி படங்களில் நடித்துள்ளார். 

இந்திய அணியில் இருந்து சேவக் நீக்கப்பட்டார்


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து, அதிரடி "சீனியர்' துவக்க வீரர் சேவக் நீக்கப்பட்டார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-0 என, முன்னிலையில் உள்ளது. 

மூன்று (மார்ச் 14-18) மற்றும் நான்காவது (மார்ச் 22-26) டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில் ஏமாற்றி வந்த சேவக், 34, அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவர், கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான ஆமதாபாத் டெஸ்டில் சதம் அடித்தார். பின் சொந்த மண்ணில் விளையாடிய 9 இன்னிங்சில், (25, 30, 9, 23, 49, 0, 2, 19, 6) ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. 

ஆஸ்திரேலியா சென்ற போது பங்கேற்ற நான்கு டெஸ்டின், 8 இன்னிங்சில் 198 ரன்கள் தான் எடுத்தார். இரு ஆண்டுகளில் ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியின், நான்கு இன்னிங்சிலும் சேர்த்து 27 ரன்கள் தான் எடுத்தார். 

இருப்பினும், இந்திய அணி வெற்றி பெற்றதால், மீதமுள்ள போட்டிகளிலும் சேவக் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய திருப்பமாக சேவக் அணியில் இருந்து நீக்கப்பட்டார். சமீபத்தில் தான் இவரது சக துவக்க வீரர் காம்பிர், மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

சேவக்கிற்குப் பதில் புதியதாக யாரும் சேர்க்கப்படவில்லை. அதாவது 15 பேர் அணி, 14 பேர் அணியாக குறைக்கப்பட்டது. இதனால், முரளி விஜயுடன் சேர்ந்து, மற்றொரு டில்லி வீரர் ஷிகர் தவான் துவக்கம் தரலாம். 

மற்றபடி அணியில் மாற்றம் இல்லை. இரட்டைசதம் அடித்த புஜாரா, விராத் கோஹ்லி அணியில் தொடர்வர். பவுலிங்கில் அஷ்வின், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா கூட்டணியில் மாற்றம் இல்லை. வேகப்பந்து வீச்சில் இஷாந்த் சர்மா அதிக விக்கெட் வீழ்த்தவில்லை எனினும், புவனேஷ்வருடன் சேர்ந்து நீடிக்கிறார்.

அணி விவரம்: தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), விராத் கோஹ்லி, முரளி விஜய், ஷிகர் தவான், சச்சின், புஜாரா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், ரகானே, பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் மற்றும் டிண்டா.


ஓய்வா... அப்படீன்னா...

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சேவக் கூறுகையில்,"" கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் கிடையாது. எனது திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடின முயற்சி செய்து மீண்டும் அணியில் இடம் பிடிப்பேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற வாழ்த்துக்கள்,'' என்றார்.


9 ஆண்டுக்குப் பின்...

2004ல் முதல் காம்பிர்-சேவக் இணைந்து, அணிக்கு துவக்கம் கொடுத்தனர். இவர்கள் இணைந்து விளையாடிய 87 இன்னிங்சில், 4412 ரன்கள் (சராசரி 52.52) எடுத்துள்ளனர். சிறந்த துவக்க ஜோடி வரிசையில் 5வது இடம் பெற்றது.

இருவரும் இப்போது நீக்கப்பட, 9 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக இவர்கள் இல்லாமல் முற்றிலும், புதிய ஜோடியுடன் இந்திய அணி மொகாலியில் களமிறங்குகிறது.


மீண்டு வருவார்

சேவக் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஹைடன் கூறுகையில்,"" சக வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கும் கேப்டன்களில் தோனியும் ஒருவர். சில நேரங்களில் கடின முடிவு எடுக்க வேண்டியதாகிறது. சேவக் இப்போது "பார்ம்' இல்லாமல் இருப்பது தற்காலிகமானது தான். இவர் மீண்டு வருவார். என்னைப் பொறுத்தவரை, சேவக் அணிக்கு திரும்பவில்லை என்றால் தான் ஆச்சரியம்,'' என்றார்.


கவாஸ்கர் ஆதரவு

சேவக் நீக்கப்பட்டது குறித்து, முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ""ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள மொகாலி ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சேவக் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். 

டெஸ்ட் அணியில் இருந்து சேவக்கை நீக்கியதால், இவரது கிரிக்கெட் வாழ்க்கை முற்று பெற்றதாக அர்த்தமில்லை. விரைவில் இழந்த "பார்மை' மீட்டு, டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என நம்புகிறேன். வரும் காலங்களில் இவரை "மிடில்-ஆர்டரில்' களமிறக்கலாம். இவரது அனுபவம், "மிடில்-ஆர்டரில்' நிச்சயம் கைகொடுக்கும்,'' என்றார்.

2019 வரை தோனி தான் கேப்டன்


இந்திய அணியின் கேப்டனாக வரும் 2019 உலக கோப்பை தொடர் வரை தோனி நீடிக்க வேண்டும்,'' என, கவாஸ்கர் விருப்பம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதையடுத்து தோனியின், 31, மவுசு பன்மடங்கு அதிகரித்துள்ளது. தனக்கு எதிரான விமர்சனங்களை தகர்த்த இவர், இந்தியாவின் வெற்றிக் கேப்டனாக சாதனை படைத்தார். 

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பின் கிடைத்த ஒரு மாத இடைவெளியில், தன்னைத் தானே ஆய்வு செய்தார் தோனி. கேப்டனாக இவரது அணுகுமுறை மாறியது. அணியை மிகுந்த உறுதியுடன் வழிநடத்த துவங்கினார். திறமைக்கு ஏற்ப செயல்படாமல், கவனக்குறைவாக விளையாடும் வீரரிடம், தனது அதிருப்தியை உணர வைத்தார். 

பேட்டிங்கில் "சூப்பர் பார்மில்' உள்ளார். நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். இவரது தலைமைப்பண்பிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதால், வரும் 2019 உலக கோப்பை தொடர் வரை கேப்டனாக நீடிக்க வேண்டும். 

அதுவரை கேப்டனை மாற்றுவது தொடர்பாக நாம் விவாதிக்க கூடாது. ஆனாலும், வயது காரணமாக 2019 வரை தோனி விளையாடுவாரா என தெரியவில்லை. இது பற்றி அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். 

இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்று கூறுவது கடினம். பட்டோடி, வடேகர், கங்குலி அல்லது டிராவிட் தான் சிறந்த கேப்டன் என வாதம் நடப்பது உண்டு. ஆனால், புள்ளி விவரங்களின் அடிப்படையில் தோனி தான் வெற்றிக் கேப்டன் என்று உறுதியாக கூறலாம்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார். 

புஜாரா, முரளி விஜய்யிடம் இருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்க வேண்டும்


இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந் நாட்டு முன்னாள் வீரரும், டெலிவிசன் வர்ணனை யாளருமான டீன்ஜோனஸ் விமர்சனம் செய்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 

இந்திய சுற்றுப் பயணத்துக்காக ஆஸ்திரேலிய அணி தன்னை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ள வில்லை. 4 டெஸ்டில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே ஆடியது. 

இது போதாது இந்திய தொடருக்கு முன்பு 2 அல்லது 3 பயிற்சி ஆட்டம் என்பது போதுமானதாக இல்லை. புஜாரா, முரளிவிஜய் ஆகியோரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர்களிடம் இருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஏராளமாக பாடம் கற்க வேண்டும். 

இந்திய மைதானங்களில் எப்படி ரன் குவிக்க வேண்டும் என்பதை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அறிந்து இருப்பது அவசியமாகிறது. இதேபோல ஆஸ்திரேலிய பவுலர்களும் சிறப்பாக பந்துவீசுவதில்லை. இந்தியாவில் ஆஸ்திரேலியா கடுமையாக போராட வேண்டும். 

இவ்வாறு டீன்ஜோன்ஸ் கூறியுள்ளார்.

ஐதராபாத் டெஸ்ட்: புஜாரா, விஜய் சதத்தால் இந்தியா ரன் குவிப்பு


இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் குவித்து `டிக்ளேர்' செய்தது. கேப்டன் கிளார்க் 91 ரன்னும், மேத்யூ வாடே 62 ரன்னும் எடுத்தனர். 

புவனேஸ்வர்குமார், ரவிந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டும், ஹர்பஜன் 2 விக்கெட்டும் எடுத்தனர். முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் 4 ரன்னிலும், முரளிவிஜய் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 

இன்று (ஞாயிற்றுக் கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். ஆட்டம் தொடங்கிய 5-வது ஓவரில் ஷேவாக் ஆட்டம் இழந்தார். அவர் 6 ரன்னில் பீட்டர் சிடிலின் பந்தில் மேத்யூ வாடேயிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது ஸ்கோர் 17 ஆக இருந்தது. ஷேவாக் இந்த தொடரில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். அவர் சென்னை டெஸ்டில் முதல் இன்னிங்சில் 2 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தார். 

2-வது விக்கெட்டுக்கு முரளிவிஜய்யுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரது  ஆட்டமும் மிகவும் மந்தமாக இருந்தது. அடித்து ஆடாமல் மிகவும் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 28.5-வது ஓவரில் தான் இந்தியா 50 ரன்னை தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்து இருந்தது. 

முரளிவிஜய் 109 பந்தில் 29 ரன்களுடனும், புஜாரா 55 பந்தில் 15 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மதிய உணவு இடை வேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து பொறுமையுடன் ஆடினார்கள். முரளிவிஜய் அரை சதம் அடித்தார். இது அவருக்கு டெஸ்ட் அரங்கில் 3 வது அரை சதமாகும். 

அதைத்தொடர்ந்து புஜாராவும் 50 ரன்னை தொட்டார். இந்த ஜோடி மிகவும் நிதானமாக விளையாடி ரன்னின் எண்ணிக்கையே உயர்த்தியது. புஜாரா நேர்த்தியாக ஆடி சதம் அடித்தார். எதிர் முனையில் விளையாடிய விஜய்யும் சதத்தை நிறைவு செய்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த ஜோடியை பிரிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் கிடைக்க வில்லை. 

புஜாரா நேர்த்தியாக விளையாடி 150 ரன்னை தொட்டார். இறுதியில் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 311 ரன்கள் சேர்த்தது. புஜாரா 162 ரன்களுடனும், விஜய் 129 ரன்களுடனும் களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 74 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது.