விரைவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்


வரும் 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது.

கடந்த 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் இடம் பெற்றது. இதில் இங்கிலாந்து அணி, பிரான்சை வீழ்த்தி தங்கம் வென்றது. 

இதன் பின் கிரிக்கெட் நீக்கப்பட்டது. கடந்த 1998 காமன்வெல்த் போட்டியில் மட்டும் கிரிக்கெட் இடம் பெற்றது. 

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளில் ஏதாவது புதிய விளையாட்டு போட்டியை சேர்க்க முயற்சிகள் நடக்கும். இந்த வரிசையில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. 

இதை, கடந்த 2010ல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி.,) ஏற்றுக் கொண்டது. தவிர, ஐ.ஒ.சி.,யின் தலைவர் ஜாக்ஸ் ரோகியும், 2011ல் வரவேற்பு தெரிவித்து இருந்தார்.

இருப்பினும், இது கோரிக்கை அளவிலேயே இருந்து வருகிறது. இப்போது வரும் 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விண்ணப்பித்துள்ளது. 

இதுகுறித்து மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.,) உலக கிரிக்கெட் கமிட்டி வெளியிட்ட செய்தியில், " ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுவதை எம்.சி.சி., வரவேற்கிறது. 

கிரிக்கெட்டின் சிகரமான "டுவென்டி-20' போட்டி முறையில் இதை விளையாட வேண்டும். 

ஒருவேளை ஐ.ஒ.சி., ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், ஐ.சி.சி.,க்கு சற்று வருமான இழப்பு ஏற்படும். ஆனால், உலகளவில் கிரிக்கெட் பரவ வழி ஏற்படும்,' என, தெரிவித்துள்ளது.

சச்சின் சாதனையை தகர்த்தார் தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் தோனி, சச்சினின் சாதனையை தகர்த்தார். 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்காவது நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, கேப்டன் தோனி முதலில், லியான் பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். 

அடுத்து பட்டின்சன் வேகத்தில் ஒரு பவுண்டரி அடித்த தோனி, 224 ரன்கள் எடுத்த போது அவரிடமே சிக்கினார். இதன் மூலம் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் சச்சினை (217 ரன்கள்) பின்தள்ளி, தோனி முதலிடம் பிடித்தார். 

எதிர் முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புவனேஷ் குமார் (38) சிடில் வேகத்தில் வெளியேற, இந்திய அணி முதல் இன்னிங்சில் 572 ரன்களுக்கு "ஆல் அவுட்' ஆனது. 

ஆஸ்திரேலிய அணிக்கு பட்டின்சன் 5 விக்கெட் கைப்பற்றினார்.

இந்தியாவின் முதலிடத்துக்கு ஆபத்து


ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் "நம்பர்-1' இடத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

இதில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, 117 புள்ளிகளுடன் "நம்பர்-2' இடத்தை தக்கவைத்துக் கொண்டது. அடுத்த நான்கு இடங்களில் ஆஸ்திரேலியா (116 புள்ளி), தென் ஆப்ரிக்கா (112), இலங்கை (110), பாகிஸ்தான் (107) அணிகள் உள்ளன.

இப்பட்டியலில், முதலிடத்தை கைப்பற்றும் வாய்ப்பு தென் ஆப்ரிக்க அணிக்கு ஏற்பட்டுள்ளது. மார்ச் 10ம் தேதி முதல் துவங்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க அணி 120 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறலாம். இதன்மூலம் ஏப்., 1ம் தேதி வெளியிடப்பட உள்ள ஐ.சி.சி., ரேங்கிங்கில் முதலிடம் பிடித்து, ஒருநாள் போட்டி சாம்பியன்ஷிப் விருதுடன் பரிசு பெறலாம். இந்திய அணி, 2வது இடத்துக்கு தள்ளப்படும்.

ஒருவேளை தென் ஆப்ரிக்க அணி 4-1 என தொடரை வெல்லும் பட்சத்தில், 117 புள்ளிகளுடன் 2வது இடத்தை இங்கிலாந்துடன் பகிர்ந்து கொள்ளும். தசமபுள்ளிகள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு 2வது இடம் கிடைக்கும்.

ஆம்லா முதலிடம்:

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா, டிவிலியர்ஸ் முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர். அடுத்த இரு இடங்களை இந்தியாவின் விராத் கோஹ்லி, கேப்டன் தோனி தக்கவைத்துக் கொண்டனர். மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, ஒரு இடம் பின்தங்கி 12வது இடத்தில் உள்ளார்.

அஷ்வின் முன்னேற்றம்:

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், ஒரு இடம் முன்னேறி, 13வது இடத்தை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன், நியூசிலாந்தின் மில்ஸ் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

மற்றொரு இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா, 9வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் சயீன் அஜ்மல், வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன், இங்கிலாந்தின் ஸ்டீவன் பின் உள்ளனர்.

ஹபீஸ் "நம்பர்-1':

"ஆல்-ரவுண்டர்'களுக்கான ரேங்கிங்கில், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த நான்கு இடங்களை வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், இலங்கையின் மாத்யூஸ், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைத்துக் கொண்டனர்.

சச்சின் அரைசதம் - சரிவில் இருந்து மீண்டது இந்தியா


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், சச்சின், விராத் கோஹ்லி அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. 

முதல் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்திருந்தது. கிளார்க் (103), சிடில் (1) அவுட்டாகாமல் இருந்தனர். 

இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு, கேப்டன் கிளார்க் 130 ரன்களில், ஜடேஜாவிடம் சரணடைந்தார். சிடில் (19), 100வது டெஸ்டில் பங்கேற்கும் ஹர்பஜன் "சுழலில்' சிக்கினார். 

அடுத்து வந்த லியான் (3) ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 380 ரன்களுக்கு "ஆல் அவுட்' ஆனது. பட்டின்சன் (15) அவுட்டாகாமல் இருந்தார். 
இந்திய அணிக்கு அஷ்வின் 7 விக்கெட் வீழ்த்தினார். ஜடேஜா 2, ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட் சாய்த்தனர். 

இந்திய அணிக்கு சேவக், முரளி விஜய் ஜோடி துவக்கம் அளித்தது. வேகத்தில் மிரட்டிய பட்டின்சன் முதலில், முரளி விஜயை (10) "போல்டாக்கினார்'. பின் பட்டின்சன் வீசிய போட்டியின் 6வது ஓவரின் 2வது பந்தை சேவக் சந்தித்தார். 

பந்து "பேட்டில்' பட்டு "ஸ்டம்ப்பை' நோக்கி போனது. இதை சேவக் தடுக்க தவறியதால் பந்து "பைல்சில்' பட சேவக் பரிதாபமாக வெளியேறினார். 

அடுத்து வந்த அனுபவ வீரர் சச்சின், வந்த வேகத்தில் மூன்று பவுண்டரி அடித்து நம்பிக்கை அளித்தார். இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த புஜாரா அவ்வப்போது பவுண்டரி அடித்தார். இவர் 44 ரன்களில் பட்டின்சனிடம் சரணடைந்தார். 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், டெஸ்ட் அரங்கில் 67வது அரைசதம் கடந்தார்.  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி அரைசதம் கடந்தார்.  

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. கோஹ்லி (50), சச்சின் (71) அவுட்டாகாமல் இருந்தனர். 

சச்சின் ஓய்வு பெற்றால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும்


சச்சின் போன்ற மகத்தான வீரர்கள் ஓய்வு பெற்றால், டெஸ்ட் போட்டிகள் அழிந்து விடும்,'' என, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா தெரிவித்தார்.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் அடித்தவர். தற்போது நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து 1996ல் இலங்கை அணிக்கு உலக கோப்பை வென்று தந்த ரணதுங்கா கூறியது:

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கல்வி கற்பது போன்றது. ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகள் என்பது பொழுது போக்கானது. பொழுது போக்கான போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றது மகிழ்ச்சி. 

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவது என, இவர் முடிவு செய்தால் இப்போட்டியே அழிந்து விடும். சச்சினுக்கு, ஏதாவது ஒரு போட்டி சிறப்பாக அமைந்து விட்டால், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு எவ்வித தொல்லையும் இல்லாமல் தொடர்வார். இதனால், சச்சின் தொடர்ந்து டெஸ்டில் விளையாடத் தேவையான திறனை கொடுக்கும் படி இறைவனிடம் கேட்டுக் கொள்வேன். 

டி.ஆர்.எஸ்., வேண்டும்:

அம்பயர் தீர்ப்பில் ஏற்படும் தவறுகளை சரிசெய்வது எப்படி என, கடந்த 20 ஆண்டுகளாக குழப்பமாக இருந்தது. இப்போது வந்துள்ள அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை முறை (டி.ஆர்.எஸ்.,) சிறப்பானது. 

பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் பீல்டர் என, அனைவருக்கும் இது சாதகமானது. இதை அனைத்து நாடுகளிலும் கட்டாயம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். ஆனால், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்க மறுக்கிறது. இதற்காக, பி.சி.சி.ஐ.,யை குற்றம் சொல்லவில்லை. 

யார் தவறு:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) மீது தான் தவறு உள்ளது. டி.ஆர்.எஸ்., விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமையை, தொடரை நடத்தும் அணியின் கையில் கொடுத்திருக்கக் கூடாது. கிரிக்கெட்டை மட்டும் தான் காப்பாற்ற வேண்டும். அதை விட்டுவிட்டு, ஒரு நாட்டினை மட்டும் பாதுகாக்க ஐ.சி.சி., முயற்சிக்கக் கூடாது. 

தேசம் முக்கியமல்ல:

தவிர, "டுவென்டி-20' போட்டிகளில் தேசம் முக்கியமல்ல, பணத்துக்காக மட்டும் தான் விளையாடப்படுகிறது. இதனால், கவாஸ்கர், சச்சின், அசார், டிராவிட், கங்குலி மற்றும் லட்சுமண் போன்ற சிறந்த வீரர்கள் உருவாக முடிவதில்லை. 

இப்போதுள்ள வீரர்கள் தொழில்நுட்ப ரீதியாக என்பதை விட, அடித்து விளையாடுவதில் தான் ஆர்வமாக உள்ளனர். இப்படி இருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது. இந்திய அணியை பொறுத்தவரையில் அதிகமான அதிரடி வீரர்கள் உள்ளனர். இவர்கள் தொழில்நுட்ப முறையில் கவனம் செலுத்த வேண்டும். 

இதை ஆஸ்திரேலிய தொடரில் செயல்படுத்தினால், அந்த அணியை எளிதாக வீழ்த்தலாம். இப்போதுள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டனாக தோனி தொடர்வது தான் நல்லது.

இவ்வாறு ரணதுங்கா கூறினார்.

இந்திய அணியில் சேவக்குடன் களமிறங்குவது யார்?


நாளை முதல் டெஸ்ட் துவங்கவுள்ள நிலையில், சேவக்குடன் இணைந்து இந்திய அணிக்கு துவக்கம் தருவது யார் என்பது குறித்து "சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. 

இதற்கான இந்திய வீரர்கள் நேற்று சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். காம்பிருக்குப் பதில் இந்திய அணியில் துவக்க வீரர்களாக சேர்க்கப்பட்ட முரளி விஜய், ஷிகர் தவான் சேர்க்கப்பட்டனர். 

இதில் சேவக்குடன் இணைந்து யார் அணிக்கு துவக்கம் தருவது என, இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், நேற்றைய பயிற்சியின் போது முதலில் வந்த முரளி விஜய், நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். 

ஷிகர் குழப்பம்:  பின் டில்லியின் ஷிகர் தவானும் பேட்டிங் பயிற்சி செய்தார். தொடர்ந்து பயிற்சியாளர் டங்கன் பிளட்சருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் "டிரஸ்சிங்' அறைக்கு சென்றனர்.

மறுபடியும் பயிற்சிக்கு வந்த போது ஷிகர் தவானும் சேர்ந்து வந்தார். இதை பார்த்த போது, நாளை சேவக்குடன் யாரை களமிறக்குவது என, அணி நிர்வாகம் முடிவு செய்யாததை தெளிவாக காட்டியது.

இஷாந்த் சோர்வு: டிண்டா, புவனேஷ்வர் குமார் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் பவுலிங் பயிற்சி செய்தனர். இதில் இஷாந்த் சர்மா மட்டும் கடுமையான பயிற்சி காரணமாக சோர்வாக காணப்பட்டார்.

 சச்சின், விராத் கோஹ்லி, புஜாராவுக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், பிரக்யான் ஓஜா மற்றும் ரவிந்திர ஜடேஜா பவுலிங் செய்தனர். மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் போது, ஹர்பஜன் சிங் மட்டும் அவ்வப்போது தான் பவுலிங் செய்தார்.

100வது டெஸ்டில் சாதிப்பாரா ஹர்பஜன்


இந்தியா "ஏ', ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது பயிற்சி போட்டி "டிரா' ஆனது. இந்தியா "ஏ' சார்பில் "சுழலில்' சக்சேனா, துருவ் அசத்தினர்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 22ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. 

இதற்கு முன், சென்னையில் நடந்த இரண்டாவது பயிற்சி போட்டியில் (மூன்று நாள்) இந்தியா "ஏ', ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 

இந்தியா "ஏ' அணி முதல் இன்னிங்சில் 451 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது.

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஹென்ரிக்ஸ் 33 ரன்களில் வெளியேறினார். பீட்டர் சிடில் (2), ரன்-அவுட்டானார். 

வேட் 44 ரன்களுக்கு துருவ் பந்துவீச்சில் அவுட்டானார். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, "பாலோ ஆன்' பெற்றது. இந்தியா "ஏ' அணி சார்பில் சக்சேனா 4, ராகேஷ் துருவ் 4 விக்கெட்கள் கைப்பற்றினர். 

வாட்சன் அரைசதம்:

216 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. இம்முறையும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்த வாட்சன் பவுண்டரிகளாக விளாசினார். 

இவருக்கு எட் கோவன் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்த போது வாட்சன் (60) அவுட்டானார். அரை சதம் கடந்த எட் கோவன் (53), சக்சேனா பந்தில் வீழ்ந்தார். 

ஹியுஸ் (19) நீடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுக்க, போட்டி "டிரா' ஆனது. கவாஜா (30), வேட் (19) அவுட்டாகாமல் இருந்தனர். 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை வலுப்படுத்த இந்தியா உதவி


தீவிரவாதிகளுக்கு எதிரான போரால் ஆப்கானிஸ்தான் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அங்கு அமைதி திரும்பி வருகிறது. இதையடுத்து அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காண கவனம் செலுத்தி வருகிறது. 

இதில் ஒரு அங்கமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை பலமிக்கதாக உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணி உருவாக்கப்பட்டு உலக கோப்பையில் பங்கேற்றது. 

அவர்கள் அனைவரும் 19 வயதைக் கடந்து விட்டதால் 20 வீரர்கள் கொண்ட புதிய அணியை உருவாக்கியுள்ளது. மலேசியாவில் வருகிற மே 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏசியன் கிரிக்கெட் கவுன்சில் கோப்பைக்கான போட்டி நடக்கிறது. இதில் இடம்பெற ஆப்கானிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

இதில் சிறப்பாக விளையாடினால்தான் உலக கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெறமுடியும். இதையடுத்து அணியை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலப்படுத்த ஆப்கானிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உதவியை நாடியுள்ளது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மும்பை வந்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இதில் ஆப்கானிஸ்தான் அணியை பலப்படுத்த தேவையான உதவிகளை இந்தியாவிடம் முறைப்படி கோரப்பட்டது. 

கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய சவுரவ செயலாளர் சஞ்சய் ஜக்டேல், பொது மேலாளர் ரத்னானர் ஷெட்டி ஆகியோரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் அதன் சேர்மன் ஷகாஸதா மசூத் திட்ட மேலாளர் பஷீர் ஸ்டானெக்ஸாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் சாதனை


பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரை கைப்பற்றியது.

3 டெஸ்ட் கொண்ட தொடரில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்டில் 211 ரன்னில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இருந்தது. 

தற்போது கேப்டவுனில் நடந்த 2-வது டெஸ்டில் 4 விக்கெட்டில் வென்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை வென்றது.

தென்ஆப்பிரிக்க அணி தொடர்ந்து 6-வது டெஸ்ட் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது. மேலும் தொடர்ந்து 5-வது டெஸ்டில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிமூலம் தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் புதிய சாதனை படைத்தார். டெஸ்டில் இவரது தலைமையில் 49 வெற்றி கிடைத்துள்ளது. 

இதன்மூலம் டெஸ்டில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார். இதன்று முன்பு ரிக்கிபாண்டிங் 48 டெஸ்டில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

IPL 6 - பெங்களூர் அணிக்கு முரளிகார்த்திக் ஒப்பந்தம்


6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இந்திய சுழற்பந்து வீரர் முரளி கார்த்திக் விளையாடுகிறார். புனே வாரியாஸ் அணியில் இருந்து அவர் பெங்களூர் அணிக்கு ஒப்பந்தமாகி உள்ளார். 

புனே அணி அடிப்படை விலையான ரூ.2.2 கோடிக்கு முரளி கார்த்திக்கை  பெங்களூர் அணிக்கு விற்றது. தமிழகத்தை சேர்ந்த முரளி கார்த்திக் முதல் 3 ஐ.பி.எல். போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடினார். 4-வது மற்றும் 5-வது ஐ.பி.எல்.லில் புனே வாரியர்ஸ் அணியில் ஆடினார். தற்போது பெங்களூர் அணிக்கு ஆட உள்ளார்.

இர்பான் பதானின் இரட்டை ஆசை


இந்திய அணியின் "ஆல்-ரவுண்டர்' இர்பான் பதான், 28. முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து விரைவாக மீண்டுள்ளார். இவர் மீண்டும் அணியில் இடம்பெற வேண்டுமென கேப்டன் தோனியே எதிர்பார்க்கிறார்.

இர்பான் கூறியது: பயிற்சிக்காக, பெங்களூரு வந்துள்ளேன். என் இரண்டாவது வீடாக, இந்த நகரத்தை நினைக்கிறேன். சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் காயத்தினால், பங்கேற்க முடியவில்லை. இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. 

சிறு வயதிலேயே, குறிப்பிட்ட இலக்கோடுதான் விளையாடுவேன். தொடர்ச்சியான பயிற்சியினால், அதை அடையவும் செய்துள்ளேன். அதிகமான புகழ்ச்சியையும் கண்டுள்ளேன். 

அதே நேரம், தோல்விகளையும் சந்தித்துள்ளேன். என் நோக்கம் எல்லாம் கிரிக்கெட் விளையாடுவதுதான். ஆனால், ஓய்வுக்கு பின், அரசியலா, "பாலிவுட்டா' என உறுதியாக சொல்ல முடியாது. 

என் விருப்பங்களுக்கு கட்டுப்பாடு கிடையாது. "நான் தனியா இருக்கிறேனா?' எனக்கேட்கிறார்கள். தற்போது நான் தனி மனிதன்தான். அறிவு, அழகு என இரண்டும் பெற்ற நல்ல பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறேன். விரைவில் "செட்டிலாகி' விடுவேன்.

இவ்வாறு இர்பான் கூறினார். 

ஐ.பி.எல்., தொடரில் சர்ச்சை கிளப்பிய பெண்கள்


 ஐ.பி.எல்., தொடரில் எழுந்த பெரும்பாலான சர்ச்சைகளுக்கு பெண்கள் தான் காரணமாக இருந்துள்ளனர். 

கடந்த 2008ல் முதன் முதலாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மூலம் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) துவக்கப்பட்டது. இதன் சார்பில் "டுவென்டி-20' போட்டிகள் வெற்றிகரமாக நடந்தன. இருப்பினும் முதல் தொடரில் இருந்து பெண்களால் தொல்லை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. அவற்றில் சிலவற்றை காணலாம்.

நடன பெண்கள்: போட்டிகளின் போது வீரர்கள் பவுண்டரி, சிக்சர்கள் அடிக்கும் போது, மைதானத்துக்கு வெளியே ரசிகர்களை குஷிப்படுத்த, நடனப் பெண்கள் கொண்டு வரப்பட்டனர். இவர்களது உடை, அங்க அசைவுகள் ஆபாசமாக உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதனால், போகப் போக "அடக்கி' வாசித்தனர்.

சுனந்தா புரஸ்கர்: கடந்த 2010ல் கொச்சி அணி உரிமையாளர்கள் யார் என்பதில் சர்ச்சை வெடித்தது. மத்திய இணை அமைச்சர் சசி தரூர், தனது காதலி சுனந்தா புரஸ்கருக்கு கொச்சி ஐ.பி.எல்., அணியை வாங்கி கொடுத்தார் என, அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி குற்றம் சுமத்தினார்.

இப்பிரச்னையில் லலித் மோடி, சசி தரூரின் பதவி பறிபோனது. 

பூர்ணா படேல்: 2010ல் மத்திய விமானத்துறை அமைச்சராக இருந்த பிரபுல் படேலின் மகள் பூர்ணா படேல். ஐ.பி.எல்., விருந்தோம்பல் பிரிவு மானேஜராக இருந்த இவர், தந்தையின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, விமானங்களை வேறுவழியில் செல்ல உத்தரவிட்டார். அதாவது, ஐ.பி.எல்., வீரர்களின் வசதிக்கு ஏற்ப, விமான போக்குவரத்தையே மாற்றி அமைத்தார்.

லைலா மகமூது: ஐ.பி.எல்., அணிகளின் வருமானம் குறித்து மத்திய வருமான வரித்துறை 2010ல் விசாரணையை துவங்கியது. அப்போது, லலித் மோடியின் அலுவலகத்தில் "ரெய்டு' நடப்பதற்கு சற்று முன், அங்கிருந்து "லாப்டாப்' மற்றும் சில பைல்களுடன், சந்தேகத்துக்கு இடமாக ஒரு பெண் வெளியேறியது, சி.சி.டி.வி., கேமராவில் பதிவானது. கடைசியில் இந்த பெண், பெங்களூரு அணி உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகள் என்று தெரிந்தது.

கேபிரியல்லா: மும்பை அணிக்காக நடனமாட வந்த பெண் தென் ஆப்ரிக்காவின் கேபிரியல்லா. போட்டிகளுக்குப் பின் நடக்கும் "பார்ட்டிகளின்' போது, வீரர்கள் மோசமாக நடந்து கொள்வதாக தெரிவிக்க, தென் ஆப்ரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

பிரித்தி - ஷில்பா: பஞ்சாப், ராஜஸ்தான் அணி உரிமையாளர்களாக பாலிவுட் நடிகைகள் பிரித்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி உள்ளனர். இவர்கள் உரிமையாளர்கள் ஒப்பந்தத்தை மீறியதாக பி.சி.சி.ஐ., குற்றம் சுமத்தியது. இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர்.

ஐந்தாவது தொடரின் போது கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் ஷான் மார்ஸ், சர்ச்சைக்குரிய முறையில் "அவுட்டானார்'. இதை, மைதானத்துக்கு வெளியில் இருந்த பிரித்தி ஜிந்தா கடுமையாக எதிர்த்தார். பின் போட்டி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சர்ச்சை ஏற்படுத்தினார்.

சோகல் ஹமீது: கடந்த மே 17ல் பெங்களூரு வீரர் பாமர்ஸ்பச், டில்லி ஓட்டலில் அமெரிக்க பெண் சோகல் ஹமீதுக்கு "செக்ஸ்' தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். பின் இருவரும் சமாதானமாக வழக்கு வாபஸ் ஆனது.

சோபியா ஹயாத்: புனே அணியின் ராகுல் சர்மா, பார்னல் உட்பட 96 பேர், கடந்த மே 20ல் மும்பையில் நடந்த "போதை பார்ட்டியில்' பங்கேற்று சிக்கினர். இதில் மாடல் மற்றும் நடிகையான சோபியா ஹயாத் மற்றும் நம்ரதா குமார் என, இரு பெண்களுடன் 6 ஐ.பி.எல்., நடன பெண்களும் சிக்கியது, தொடரின் "இமேஜை' களங்கப்படுத்தியது.

வரும் ஏப்., 3ல் துவங்கும் ஆறாவது ஐ.பி.எல்., தொடரிலாவது இது போன்ற பிரச்னைகள் எழாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாக உள்ளது.

காம்பீர் நீக்கத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 

இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள்  தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியதாவது:- 

இந்திய அணியில் இருந்து காம்பீர் நீக்கப்பட்டுள்ளார். அவரது நீக்கம் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். ஏனென்றால் ஆஸ்திரேலிய வீரர்களை எதிர்கொள்வதில் அவர் கெட்டிக்காரர். 

ஆஸ்திரேலிய அணியில் மைக் ஹஸ்சி இல்லாதது எப்படி இழப்போ? அது மாதிரி தான் காம்பீர் இல்லாதது இந்தியாவுக்கு பாதிப்பே. 

ஹர்பஜன்சிங் மீண்டும் தேர்வாகி இருப்பது இந்திய அணிக்கு சிறப்பானதே. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எப்போதுமே தாக்கத்தை ஏற்படுத்துவார். டிராவிட், லட்சுமண் ஓய்வால் ஆஸ்திரேலிய அணி நிம்மதி அடைந்து இருக்கும். இருவரும் 2001-ம் ஆண்டு கொல்கத்தா டெஸ்டில் ஆடிய அபாரமான ஆட்டத்தை யாராலும் மறக்க இயலாது. 

ஆஸ்திரேலிய அணியில் தலைசிறந்த வீரர்கள் இருப்பதால் இந்த டெஸ்ட் தொடரை நம்பிக்கையோடு எதிர்கொள்வார்கள். கேப்டன் கிளார்க்குக்கு இந்த டெஸ்ட் தொடர் கூடுதல் நெருக்கடியாக இருக்கும் என்று நினைக்கவில்லை. அவர் இந்தியாவுக்கு எதிராகத் தான் அறிமுகம்  ஆனார். கடந்த சில ஆண்டுகளாக அவரது பேட்டிங் சிறப்பாக உள்ளது. 

நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது அவருக்கு நன்றாக தெரியும். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சுழற்பந்து வீரர்கள் சுவான், பனேசர் சிறப்பாக செயல்பட்டார்கள். 

அது மாதிரியாக சிறந்த சுழற்பந்து ஆஸ்திரேலிய அணியில் இல்லை. ஆனால் வேகப்பந்து வீச்சு சமபலம் வாய்ந்ததாக உள்ளது. பீட்டர் சிடில், பேட்டின்சன், மைக்கேல் ஸ்டார்க் ஆகியோர் சிறந்த வேகப்பந்து வீரர்கள் ஆவார்கள். 

இவ்வாறு ஹைடன் கூறியுள்ளார். 

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் வர்ணனையாளராக ஹைடன் பணியாற்றுகிறார். 3-வது மற்றும் 4-வது டெஸ்டுக்கு வர்ணனையாளராக செயல்படுகிறார். 

2001-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தபோது ஹைடனின் ஆட்டத்தை மறந்து இருக்க முடியாது. அவர் அந்த தொடரில் 2 சதம் அடித்தார். அதுவும் சென்னையில் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார்.

16 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் "டுவென்டி-20' போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரே ஒரு "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்கிறது. பிரிஸ்பேனில் நடக்கும் இப்போட்டியில் "டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் டேரன் சமி "பேட்டிங்' தேர்வு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல் (8) ஏமாற்றினார். அடுத்து வந்த டேரன் பிராவோ (32) ஓரளவு கைகொடுத்தார். போலார்டு (26), டுவைன் பிராவோ (13) நிலைக்கவில்லை. 

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை கையாண்ட ஜான்சன் சார்லஸ் (57, 7 பவுண்டரி, 1 சிக்சர்) அரைசதம் கடந்தார். 20 ஓவர் முடிவில், வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. 

கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச் (4) ஏமாற்றினார். மார்ஸ் (21) நிலைக்கவில்லை. அடுத்து வந்த கேப்டன் பெய்லி (15), பென் ரோகர் (16), ஹாடின் (22) ஏமாற்றினர். 

வோக்ஸ் (51) அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 164 ரன்கள் மட்டும் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு போலார்டு 3 விக்கெட் வீழ்த்தினார். 

 இந்த வெற்றியின் மூலம், 16 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவை, தனது சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியுள்ளது. 

இதற்கு முன் கடந்த 1997ல் பெர்த்தில் நடந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

ஹர்பஜன் சிங்-ன் அடுத்த அவதாரம்


இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சினிமா பட தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், 32. சமீபகாலமாக "பார்ம்' இல்லாமல் தவித்து வந்த இவர், சக வீரர் அஷ்வினிடம் தன் இடத்தை பறிகொடுத்தார். 

அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்.

இதற்கிடையே தனது நீண்ட நாள் நண்பரான சந்தன் மதனுடன் இணைந்து சினிமா தயாரிப்பாளராகும் கனவை நிறைவேற்றவுள்ளார். 

இது தொடர்பாக பஞ்சாபி படங்களில் அனுபவம் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங்கை சந்தித்து ஹர்பஜன் பேசியுள்ளார்.

இது குறித்து சந்தன் மதன் கூறுகையில்,""ஹர்பஜன் சிங்குடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். 

முதலில் பஞ்சாபி படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். 

அது வெற்றி பெறும் பட்சத்தில், விரைவில் பாலிவுட் படம் தயாரிக்க முடிவு செய்துள்ளோம். 

முதல் படம் வரும் மே மாதம் வெளியிட முடிவு செய்துள்ளோம். ஹர்பஜன் சிங்கிற்கு நடிக்க விருப்பம் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை,''என்றார்.

சர்ச்சையில் சிக்கினார் பிரவீன்குமார்


கிரிக்கெட் வாரியம் சார்பில் நடந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கிரிக்கெட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

ஓ.என்.ஜி.சி–வருமான வரி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, ஓ.என்.ஜி.சி. அணிக்காக பிரவீன்குமார் களம் இறங்கினார்.
 
வருமானவரி அணி வீரர் அஜிதேஷ் ஆர்கல் பேட் செய்து கொண்டிருந்த போது, பிரவீன்குமார் ஷார்ட் பிட்ச்சாக வீசிய ஒரு பந்தை, நடுவர் நோ–பால் என்று அறிவித்தார். 

இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், எதிரில் நின்ற அஜிதேசை தகாத வார்த்தைகளால் கண்டபடி திட்டிதீர்த்தார்.
 
இது குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் தனஞ்செய் சிங், ‘போட்டியில் விளையாடுவதற்கு ஏற்ற சரியான மனநிலையில் பிரவீன்குமார் இல்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
 
பிரவீன்குமார் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுமா? என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டியிடம் கேட்ட போது, இது கிரிக்கெட் வாரியத்தின் உள்விவகாரம். 

தற்போதைய நிலைமையில் இந்த விஷயத்தில் எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாது’ என்றார்.

ஹர்பஜன் இன், காம்பிர் அவுட்



ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ஹர்பஜன் சிங் மீண்டும் இடம் பிடித்தார். 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பிப்., 22ல் சென்னையில் துவங்குகிறது. 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை, சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக் குழு இன்று அறிவித்தது. 

இதில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். சமீபகாலமாக "பார்ம்' இல்லாமல் தவித்து வந்த துவக்க வீரர் காம்பிர் நீக்கப்பட்டுள்ளார். 

அதிரடி துவக்க வீரர் சேவக் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தவிர, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான் ஆகியோர் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றுள்ளனர். 

இரானி கோப்பை போட்டியில் சதம் அடித்த ரெய்னா இடம் பெறவில்லை. இவருடைய இடத்தை "ஆல் ரவுண்டர்' ரவீந்திர ஜடேஜா பிடித்தார். 

15 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் முரளி விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணி விவரம்: தோனி (கேப்டன்), சேவக், ஷிகர் தவான், புஜாரா, சச்சின், விராத் கோஹ்லி, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், அஷ்வின், பிரக்யான் ஓஜா, புவனேஷ்வர் குமார், ரகானே, டிண்டா, முரளி விஜய், இஷாந்த் சர்மா.

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.52 கோடி அபராதம்


போட்டிகள் தொடர்பான சந்தை வர்த்தக ஒழுங்குப்படுத்தும் கமிஷன், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.52.24 கோடியை அபராதமாக விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘‘ஐ.பி.எல். உள்ளிட்ட லீக் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. 

போட்டிக்கான அணிகளின் உரிமையாளர் உரிமம், டி.வி. ஒளிபரப்பு உரிமம், ஸ்பானர்ஷிப் ஒப்பந்தம் ஆகியவற்றை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. 

பொருளாதாரத்தில் அசுர பலத்துடன் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆதிக்கத்தின் காரணமாக, வேறு எந்த தகுதியான போட்டியாளர்களும் இந்த போட்டிகள் மற்றும் அதன் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை’’ என்று சுரிந்தர் சிங் பார்மி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அபராதத்தை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தியா மீண்டும் நம்பர் 3


ஐ.சி.சி., "டுவென்டி-20' அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

சர்வதேச "டுவென்டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

இதில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் "நம்பர்-3' இடத்தில் நீடிக்கிறது. இலங்கை (131 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (122 புள்ளி) முதலிரண்டு இடங்களை தக்கவைத்துக் கொண்டன.  

பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 6வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, 9வது இடத்தில் தொடர்கிறார். மற்ற இந்திய வீரர்களான யுவராஜ் சிங் (13வது இடம்), காம்பிர் (17வது இடம்) "டாப்-20' வரிசையில் உள்ளனர்.

இப்பட்டியலில், முதல் மூன்று இடங்களில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், இலங்கையின் மகிளா ஜெயவர்தனா உள்ளனர்.

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் அஷ்வின் 16வது இடத்தில் உள்ளார். "டாப்-20' வரிசையில் இந்திய வீரர்கள் வேறு யாரும் இல்லை. முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், இலங்கையின் அஜந்தா மெண்டிஸ், இங்கிலாந்தின் சுவான் நீடிக்கின்றனர்.

"ஆல்-ரவுண்டர்களுக்கான' தரவரிசையில், இந்தியாவின் யுவராஜ் சிங், 3வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.

40வது முறையாக மும்பை சாம்பியன்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், மும்பை அணி 40வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. பைனலில், இன்னிங்ஸ் மற்றும் 125 ரன்கள் வித்தியாசத்தில், சவுராஷ்டிரா அணியை வீழ்த்தியது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனல், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை, சவுராஷ்டிரா அணிகள் விளையாடின. 

முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 148 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் மும்பை அணி 6 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்திருந்தது.

ஷா அரைசதம்: நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த மும்பை அணியின் குல்கர்னி (18) வந்த வேகத்தில் வெளியேறினார். பொறுப்பாக ஆடிய ஹிகன் ஷா (55) அரைசதம் அடித்தார். அடுத்து வந்த ஷர்துல் தாகூர் (10) ஏமாற்றினார். 

அன்கீத் சவான் (41) ஓரளவு கைகொடுக்க, முதல் இன்னிங்சில் மும்பை அணி 355 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது.

அபார பந்துவீச்சு: பின், 207 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய சவுராஷ்டிரா அணி, மும்பை அணி "வேகத்தில்' தடுமாறியது. அஜித் அகார்கர் வேகத்தில், கோடக், ஜோகியானி, வசவதா "டக்-அவுட்' ஆகினர். குல்கர்னி பந்தில் ராகுல் தேவ் (5), கேப்டன் ஜெயதேவ் ஷா (6), ஷெல்டன் ஜாக்சன் (9) சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இன்னிங்ஸ் வெற்றி: சிறிது நேரம் தாக்குப்பிடித்து, இரட்டை இலக்க ரன் எடுத்த, சனந்தியா (16), தர்மேந்திராசிங் ஜடேஜா (22) ஆகியோர் குல்கர்னி பந்தில் அவுட்டானார்கள். அகார்கரிடம், ஜெயதேவ் உனத்கத் (9) சிக்கினார். 

இரண்டாவது இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 82 ரன்களுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் மற்றும் 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மும்பை சார்பில் குல்கர்னி 5, அகார்கர் 4, அபிஷேக் நாயர் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய மும்பை அணியின் வாசிம் ஜாபர், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

தொடரும் ஆதிக்கம்

பைனலில், சவுராஷ்டிரா அணியை வீழ்த்திய மும்பை அணி, ரஞ்சி கோப்பை வரலாற்றில் 40வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதுவரை 44 முறை பைனலுக்கு முன்னேறிய மும்பை அணி, 40 முறை கோப்பை வென்றது. கடைசியாக 2010ல் சாம்பியன் பட்டம் வென்றது.

* மும்பை அணியை தொடர்ந்து, டில்லி (7 முறை), கர்நாடகா (6 முறை), பரோடா (5 முறை), மத்திய பிரதேசம்/ஹோல்கர் (4 முறை) அணிகள் அதிக முறை கோப்பை வென்றுள்ளன. பெங்கால், தமிழகம், ராஜஸ்தான், ஐதராபாத், மகாராஷ்டிரா, ரயில்வேஸ் அணிகள் தலா 2 முறை சாம்பியன் பட்டம் வென்றன. மேற்கு இந்தியா, நவான்நகர், அரியானா, உத்தர பிரதேசம் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றின.

ரூ. 5 கோடி பரிசு 

ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ. 2 கோடி பரிசு வழங்கப்பட்டது. இது தவிர, மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,), ரூ. 3 கோடி பரிசு அறிவித்துள்ளது. இரண்டாவது இடம் பிடித்த சவுராஷ்டிரா அணிக்கு ரூ. ஒரு கோடி அளிக்கப்பட்டது. பிப். 5ம் தேதி மும்பை அணியினருக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் பிப். 6-10ம் தேதிகளில் நடக்கவுள்ள இரானி கோப்பை தொடரில், "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிக்கு எதிராக விளையாட "நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன்' என்ற அடிப்படையில், மும்பை அணி தகுதி பெற்றது.

சச்சின் மகிழ்ச்சி

"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், ரஞ்சி கோப்பை பைனலில், மும்பை அணிக்காக 6 முறை பங்கேற்றார். இதில் 5 முறை மும்பை அணி கோப்பை வென்றது. கடந்த 1990-91ல் நடந்த பைனலில் மும்பை அணி, 2 ரன்கள் வித்தியாசத்தில் அரியானாவிடம் தோல்வி அடைந்தது. 

இதுகுறித்து, சச்சின் கூறுகையில், ""40வது முறையாக எங்கள் மும்பை அணி ரஞ்சி கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது, அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. ஒவ்வொரு வீரர்களும், தங்கள் பொறுப்புணர்ந்து விளையாடினர். கடந்த சீசனில் ஏமாற்றிய அஜித் அகார்கர், இம்முறை கேப்டனாக மட்டுமல்லாமல், "ஆல்-ரவுண்டராக' அசத்தினார்,'' என்றார்.

100வது டெஸ்டில் விளையாட ஹர்பஜன்சிங் ஆர்வம்


இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஹர்பஜன்சிங் பந்துவீச்சு திறமை குன்றியதால் அவர் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

நீண்ட இடைவேளிக்கு பிறகு ஹர்பஜன்சிங் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். 

மும்பையில் நடந்த 2-து டெஸ்டில் மட்டும் ஆடினார். எஞ்சிய டெஸ்டில் நீக்கப்பட்டார். மும்பை டெஸ்டில் ஹர்பஜன்சிங் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதோடு 2 விக்கெட்டை கைப்பற்றினார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்தது. அப்போது இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு ஆளானது. 

ஹர்பஜன்சிங் 99 டெஸ்டில் விளையாடி உள்ளார். 100-வது டெஸ்டில் விளையாடுவதை ஆர்வமாக கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்று 100-வது டெஸ்டில் விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். 

இந்திய அணியில் மீண்டும் இடம்பெற அவர் இரானி டிராபி போட்டியில் சிறப்பாக ஆட வேண்டும். இரானி கோப்பையில் ரஞ்சி சாம்பியனான மும்பை அணிக்கு எதிரான டெஸ்ட் ஆப் இந்தியா அணியில் ஹர்பஜன் இடம் பெற்றுள்ளார். 5 நாட்கள் நடைபெறும் இந்த ஆட்டம் இன்று தொடங்கியது. 

100-வது டெஸ்டில் விளையாடும் ஆர்வம் குறித்து ஹர் பஜன்சிங் கூறியதாவது:- 

எனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கும்போது இந்த அளவுக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை. கடந்த ஆண்டு அணியில் இடம்பெற்ற போது 100-வது டெஸ்டில் விளையாட இயலும் என்று நினைத்தேன். தற்போது மீண்டும் அணியில் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. 

100-வது டெஸ்டில் விளையாடுவதை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். 100-வது டெஸ்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இருக்கும்போது அதிக நெருக்கடி ஏற்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

ஹர்பஜன்சிங் 99 தொடரில் விளையாடி 408 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

விஸ்வரூபம் எடுப்பாரா விராத் கோஹ்லி?


இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 24. சிறந்த "மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேனான இவர், இதுவரை 14 டெஸ்ட் (891 ரன்கள்), 98 ஒருநாள் (4054 ரன்கள்), 20 சர்வதேச "டுவென்டி-20' (558 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். 

இவருக்கு கடந்த ஆண்டு ராசியானதாக அமைந்தது. 17 ஒருநாள் போட்டியில் 5 சதம், 3 அரைசதம் உட்பட 1026 ரன்கள் எடுத்த இவர், அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். 

தவிர, சர்வதேச அளவில் மூன்றாவது இடம் பிடித்தார். இதேபோல டெஸ்ட் (9 போட்டி, 689 ரன்கள்), சர்வதேச "டுவென்டி-20' (14 போட்டி, 471 ரன்கள்) போட்டிகளிலும் ரன் மழை பொழிந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ஆனால் இந்த ஆண்டு, இவருக்கு மிகவும் மோசமாக துவங்கி உள்ளது. இதுவரை விளையாடிய 7 ஒருநாள் போட்டியில், ஒரே ஒரு அரைசதம் மட்டும் அடித்த இவர், 168 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சொதப்பிய இவர் (0, 6, 7 ரன்கள்), இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடந்த போட்டியில் மட்டும் 77 ரன்கள் எடுத்தார். மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களில் (15, 37, 26, 0 ரன்கள்) வெளியேறி ஏமாற்றினார்.

"பார்மின்றி' தவிக்கும் இவர், விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில், அடுத்து வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் மழை பொழியலாம்.

இதுகுறித்து விராத் கோஹ்லி கூறுகையில், ""நான் ஒரு சாதனையாளராக மாற விரும்புகிறேன். 

இதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. விரைவில் இழந்த "பார்மை' மீட்டு, இந்தியாவுக்காக நிறைய வெற்றிகளை பெற்றுத் தருவதே இலக்கு,'' என்றார்.