நம்புங்க இன்னும் இருக்கு பைனல் வாய்ப்பு

முத்தரப்பு தொடரில் அதிசயம் அரங்கேறியது.நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில், விராத் கோஹ்லி சதம் விளாச, இந்திய அணி 321 ரன்களை 36.4 ஓவரில் எடுத்து "சூப்பர்' வெற்றி பெற்றது.

இதன் மூலம் முக்கியமான போனஸ் புள்ளியை பெற்று, "பைனல்' வாய்ப்பை தக்க வைத்தது. இலங்கையின் தில்ஷன், சங்ககராவின் சதம் வீணானது. மார்ச் 2ல் நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை வீழ்த்தினால், இந்தியா பைனலுக்கு செல்வது உறுதி.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதிய லீக் போட்டி ஹோபர்ட்டில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்த இர்பான் பதானுக்குப் பதில், ஜாகிர் கான் இடம் பெற்றார்.


சூப்பர் ஜோடி:

இலங்கை அணிக்கு கேப்டன் ஜெயவர்தனா, தில்ஷன் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ஜாகிர் கான் பந்தில் சிக்சர் அடித்த ஜெயவர்தனா (22), ஜடேஜா சுழலில் வீழ்ந்தார். பின் தில்ஷனுடன் இணைந்த சங்ககரா, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


இரண்டு சதம்:

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷன், ஒருநாள் அரங்கில் 11வது மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதம் அடித்தார். சங்ககரா தன்பங்கிற்கு 13வது மற்றும் இந்தியாவுக்கு எதிரான 4வது சதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடியை பிரிக்க தோனி எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. இரண்டாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்த போது, ஒருவழியாக பிரவீண் குமார் வேகத்தில், சங்ககரா (105 ரன்கள், 87 பந்து) போல்டானார்.


இமாலய இலக்கு:

பெரேரா (3) ரன் அவுட்டானார். மாத்யூஸ் 14 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் தில்ஷன், சிக்சர்களாக விளாச, இலங்கை அணி 50 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 320 ரன்கள் எடுத்தது. ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில், தனது அதிகபட்ச ரன்களை எடுத்த தில்ஷன் (160 ரன்கள், 165 பந்து), சண்டிமால் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.


கடின கணக்கு:

இந்திய அணி 40 ஓவரில் 321 ரன்கள் எடுத்து வென்றால் மட்டுமே, "போனஸ்' புள்ளி கிடைக்கும் என்ற நிலையில் களமிறங்கியது. சேவக், சச்சின் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. குலசேகராவின் அடுத்தடுத்த ஓவர்களில் இருவரும் தலா ஒரு 2 பவுண்டரி விளாசினர். மலிங்கா ஓவரில் சேவக், அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர், 5.3 ஓவரில் 50 ரன்களை எட்டியது.

இந்நிலையில் சேவக் (30), சச்சின் (39) இருவரும் சீரான இடைவெளியில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர்.


இனித்த இளமை:

இதன் பின் "இளம்' வீரர்கள் காம்பிர், விராத் கோஹ்லி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்கள் பந்துகளை வீணாக்காமல், ஒன்று இரண்டு ரன்களை எளிதில் எடுக்க, அணியின் "ரன்ரேட்' சீராக இருந்தது. பின், மாத்யூஸ் பந்தில் விராத் கோஹ்லி, சிக்சர் அடித்து அதிரடியை துவக்க 27.2 ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.

மூன்றாவது விக்கெட்டுக்கு 109 பந்துகளில், 115 ரன்கள் சேர்த்த நிலையில், 63 ரன்கள் எடுத்த காம்பிர், ரன் அவுட்டானார்.


அதிரடி சதம்:

அடுத்து வந்த ரெய்னா, விராத் கோஹ்லிக்கு நல்ல "கம்பெனி' கொடுக்க, குலசேகராவின் ஒரு ஓவரில், இவர் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். விராத் கோஹ்லி ஒருநாள் அரங்கில் தனது 9வது சதம் (76 பந்து) அடித்தார். மலிங்கா வீசிய போட்டியில் 35வது ஓவரில் ஒரு சிக்சர், 4 பவுண்டரி என அடுத்தடுத்து விளாச, 35வது ஓவரில் இந்திய அணி 300 ரன்களை கடந்தது.


"சூப்பர்' வெற்றி:

மலிங்காவின் அடுத்த ஓவரில் விராத் கோஹ்லி, மீண்டும் இரண்டு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. நான்காவது விக்கெட்டுக்கு 55 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்த விராத் கோஹ்லி (86 பந்து, 133 ரன்கள்), ரெய்னா (40) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது.


பைனலுக்கு செல்வது எப்படி

முத்தரப்பு தொடரில் இன்னும் ஒரு லீக் போட்டி மீதமுள்ளது (மார்ச் 2, ஆஸி-இலங்கை). இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா (19 புள்ளி), இந்தியா (15), இலங்கை (15) அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. கடைசி லீக் போட்டியில் இலங்கை வெல்லும் பட்சத்தில், இந்திய அணி வெளியேற நேரிடும். மாறாக ஆஸ்திரேலியா வென்றால், இந்தியா, இலங்கை அணிகள் தலா 15 புள்ளிகள் பெற்றிருக்கும். அப்போது இத்தொடர் விதிப்படி, இரு அணிகள் மோதிய 4 போட்டியில் இந்திய அணி 2ல் வெற்றி பெற்றுள்ளதால், பைனலுக்கு சென்று விடும்.


321 ரன்களை அடைந்த வழி

ரன்கள் பந்துகள்

முதல் 50 ரன்கள் 5.3 ஓவர் (33 பந்து)
100 ரன்கள் 11.1 ஓவர் (67 பந்து)
150 ரன்கள் 18.2 ஓவர் (110 பந்து)
200 ரன்கள் 27.2 ஓவர் (164 பந்து)
250 ரன்கள் 31.1 ஓவர் (187 பந்து)
300 ரன்கள் 35 ஓவர் (210 பந்து)
321 ரன்கள் 36.4 ஓவர் (220 பந்து)


எங்கள் கையில் எதுவும் இல்லை: தோனி

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" நான் பங்கேற்ற ஒருநாள் போட்டிகளில் சிறப்பானவற்றில் இதுவும் ஒன்று. 40 ஓவரில் 321 ரன்கள் தேவை என்ற நிலையில், சச்சின், சேவக் நல்ல துவக்கம் கொடுத்தனர். இதை கோஹ்லி, காம்பிர் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். ஒட்டுமொத்தமாக சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்தியதே வெற்றிக்கு காரணம். பைனலுக்கு முன்னேற இனி எங்கள் கையில் எதுவும் இல்லை,'' என்றார்.


அதிவேக சதம்

நேற்றைய போட்டியில் 44 பந்துகளில் அரைசதம் கடந்த விராத் கோஹ்லி, பின் 76 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஒரு நாள் அரங்கில் இவர் எடுத்து அதிவேக சதம் இது தான்.

* இதுவரை 9 சதம் அடித்துள்ளார் கோஹ்லி. இதில் 8 போட்டிகளில் இந்தியா வென்றது.

* நேற்று இவர் எடுத்த 133 ரன்கள் தான், ஒரு நாள் கிரிக்கெட்டில் எடுத்த அதிகபட்ச ரன்கள்.

* ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர் எடுத்த மூன்றாவது அதிகபட்ச ரன்கள் இது. இதற்கு முன் கங்குலி (141, எதிர்-பாகிஸ்தான், அடிலெய்டு-2000), யுவராஜ் சிங் (139, எதிர்-ஆஸ்திரேலியா, சிட்னி, 2004)

* சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் சச்சின், லட்சுமண், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் இருந்த நிலையில், விராத் கோஹ்லி மட்டும் தான் சதம் (116) அடித்து இருந்தார். தற்போது, ஒருநாள் தொடரிலு<ம் சதம் அடித்து அசத்தியுள்ளார்.


சிறந்த "சேஸ்'

நேற்று 321 ரன்களை துரத்திய வெற்றி பெற்ற இந்திய அணிக்கு, ஆஸ்திரேலிய மண்ணில் இது, சிறந்த "சேசாக' அமைந்தது. இதற்கு முன் இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 270 ரன்களை "சேஸ்' செய்து வென்று இருந்தது.

* ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு, ஒருநாள் அரங்கில் இது மூன்றாவது சிறந்த "சேஸ்' . முன்னதாக, இங்கிலாந்து (326 ரன்கள், லார்ட்ஸ்-2002), வெஸ்ட் இண்டீஸ் (325 ரன்கள், ஆமதாபாத், 2002), அணிக்கு எதிராக பெரிய இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.

* தவிர, 2010ல் நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு போட்டியில் 321 ரன்கள் எடுத்து வென்றது.

* இந்திய அணி 300 அல்லது அதற்கு மேலான ரன்களை "சேஸ்' செய்து வெற்றி பெறுவது 12 வது முறை. இதை இலங்கை (4 முறை), இங்கிலாந்து (3), பாகிஸ்தான் (2) மற்றும் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இந்த இலக்கை எட்டியுள்ளது.


இரண்டாவது அணி:300க்கும் மேற்பட்ட ரன்களை 40 ஓவருக்குள் "சேஸ்' செய்து வென்ற அணிகள் வரிசையில் இந்திய அணி இரண்டாவது இடம் பெற்றது. இதற்கு முன் இங்கிலாந்துக்கு (321/7) எதிராக, 2006ல் லீட்சில் நடந்த போட்டியில், இலங்கை அணி 37.3 ஓவரில், 324/2 என்ற ரன்களை எடுத்து முதல் அணியாக சாதித்துள்ளது.

இந்தியா சாதனை வெற்றி - விராத் கோஹ்லி அசத்தல் சதம்

விராத் கோஹ்லியின் அசத்தல் சதம் கைகொடுக்க, இலங்கைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில், சாதனை வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின், கடைசி லீக் போட்டியில் மோதுகின்றன. "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன், பீல்டிங் தேர்வு செய்தார்.

இலங்கை அணியின் ஜெயவர்தனா 22 ரன்கள் எடுத்தார். பின் இணைந்த தில்ஷன், சங்ககரா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சங்ககரா (105), தில்ஷன் சதம் அடித்தனர்.

இலங்கை அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது. தில்ஷன் (160), சண்டிமால் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.


கோஹ்லி சதம்:

40 ஓவரில் 321 ரன்கள் எடுத்து வென்றால் மட்டுமே, "போனஸ் புள்ளி கிடைக்கும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.

சேவக் (30), சச்சின் (39), காம்பிர் (63) ஓரளவு கைகொடுத்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விராத் கோஹ்லி, சதம் அடித்து அசத்தினார்.

மலிங்கா வீசிய போட்டியில் 35வது ஓவரில், கோஹ்லி ஒரு சிக்சர், 4 பவுண்டரி அடுத்தடுத்து அடிக்க இந்திய அணி 300 ரன்களை எட்டியது.

தொடர்ந்து இவரது ஓவரில் விராத் கோஹ்லி "சூப்பர் பவுண்டரி அடிக்க, 36.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்து சாதனை வெற்றி பெற்றது.

சர்ச்சை கிளப்பிய சச்சின் ரன் அவுட்

சிட்னி ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு "ரன் அவுட்' கொடுக்கப்பட்டதும், டேவிட் ஹசிக்கு "அவுட்' மறுக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவ்விரு சம்பவத்திலும் இந்திய அணிக்கு தான் பாதிப்பு என்பதால், அம்பயர்கள் மீது தோனி குறை கூறினார்.

நேற்று இந்தியா "பேட்' செய்த போது 7வது ஓவரை பிரட் லீ வீசினார். காம்பிர் ஒரு ரன்னுக்காக அழைத்தார். மறுமுனையில் இருந்து சச்சின் ஓடி வரும் போது இடையில் புகுந்த பிரட் லீ தேவையில்லாமல் இடையூறு செய்தார்.

அதற்குள் வார்னர் பந்தை நேரடியாக "த்ரோ' செய்ய சச்சின் ரன் அவுட்டானார். இதற்கு சச்சின் அதிருப்தி தெரிவித்தார். ஆனால், களத்தில் இருந்த அம்பயர்கள் பில்லி பவுடன், சைமன் டாபெல் "அவுட்' கொடுத்தனர்.

முன்னதாக ஆஸ்திரேலியா "பேட்' செய்த போது, 24வது ஓவரை அஷ்வின் வீசினார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க அழைத்தார் மாத்யூ வேட். மறுமுனையில் இருந்து டேவிட் ஹசி ஓடி வரும் போது, ரெய்னா பந்தை எறிந்தார்.

அதனை வலது கையால் தடுத்தார் ஹசி. ரன் அவுட்டில் இருந்து தப்பிக்க, பந்தை கையால் வேண்டுமென்றே தடுப்பது கிரிக்கெட் விதிப்படி தவறு. இதையடுத்து தோனி "அப்பீல்' செய்தார். அம்பயர்கள் பில்லி பவுடன், சைமன் டாபெல் விவாதித்தனர். பின் மூன்றாவது அம்பயர் சைமன் பிரையிடம் கேட்கப்பட்டது.

"தன் மீது பந்துபட்டு காயம் ஏற்படுவதை தவிர்க்க தான் ஹசி தடுத்தார். அவுட்டில் இருந்து தப்புவதற்காக அல்ல,' என்று கூறி "அவுட்டை' மறுத்தார் மூன்றாவது அம்பயர். இதனை ஏற்க மறுத்த தோனி, அம்பயர் பவுடனிடம் நீண்ட நேரம் விவாதித்தார். அப்போது ஹசி 17 ரன்கள் தான் எடுத்திருந்தார். அம்பயர் தயவில் அரைசதம் கடந்து, இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

கடந்த 2008ல் சிட்னி மைதானத்தில் ஹர்பஜன், சைமண்ட்ஸ் இடையிலான "குரங்கு' சண்டை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது ரன் அவுட் பிரச்னையை கிளப்பியுள்ளது.

கேப்டன் தோனி கூறுகையில்,""பிரட் லீயின் செயலில் நியாயமில்லை. இவர், சச்சினுக்கு இடையில் புகுந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால் கூடுதல் தூரம் ஓடி, ரன் அவுட்டாக நேர்ந்ததால், சச்சின் மிகுந்த ஏமாற்றமடைந்தார். சம்பவத்தை பார்த்த அம்பயர் பில்லி பவுடன் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும்.

டேவிட் ஹசியை பொறுத்தவரை அவர் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது. தனது முகத்தில் பந்து படுவதை தடுப்பது போல காட்டினார். ஆனால், அவரது கை மிகவும் நீண்டு இருந்தது. பந்தை தடுத்தது நன்கு தெரிந்தது. இவருக்கு ஏன் "அவுட்' தரவில்லை என தெரியவில்லை.

இந்த இரண்டு சம்பவங்களிலும் இந்திய அணிக்கு தான் பாதிப்பு அதிகம். கால்பந்து விளையாட்டில் வீரர்களின் கை, பந்தில் பட்டால் "பெனால்டி' தரப்படும். இதே போல பார்த்தால், டேவிட் ஹசி "அவுட்' தான். மொத்தத்தில் அம்பயர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை.


"பேட்டிங்' காரணம்:

இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு மோசமான "பேட்டிங்' தான் காரணம். 20 ஓவருக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து விட்டோம். யாருமே "பார்மில் இல்லை'.

இவ்வாறு தோனி கூறினார்.

இந்திய அணி படுதோல்வி - சச்சின் ஏமாற்றம்

சிட்னியில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின், முக்கிய லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா 19 புள்ளிகளுடன் பைனலுக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் முதலில் "பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. வார்னர்(68), டேவிட் ஹசி(54), வேட்(56) அரைசதம் கடந்து அசத்தினர்.

எட்டக் கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சேவக்(5) சோபிக்கவில்லை. 100வது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின்(14) சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட்டானார்.

காம்பிர்(23), கோஹ்லி(21), தோனி(14), ரவிந்திர ஜடேஜா(8), அஷ்வின்(26), இர்பான் பதான்(22) தாக்குப்பிடிக்கவில்லை. இந்திய அணி 39.3 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது.


பைனல் வாய்ப்பு எப்படி?:

இந்திய அணி பைனலுக்கு முன்னேறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது இலங்கை(15 புள்ளி), இந்திய(10 புள்ளி)அணிகள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளன.

இந்திய அணி அடுத்த போட்டியில்(பிப்., 28) இலங்கைக்கு எதிராக மிகப் பெரும் வெற்றியை "போனஸ் புள்ளியுடன் பெற வேண்டும்.

"போனசாக ஒரு புள்ளியை பெற தவறினால், பைனல் வாய்ப்பு கிடைக்காது. அதே நேரம் இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில்(மார்ச் 2) தோல்வி அடைய வேண்டும்.

ரன்ரேட்டிலும் முன்னிலை பெறும்பட்சத்தில் இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு கிடைக்கலாம்.

காலை வாருது கிரிக்கெட் - மானம் காக்குது ஹாக்கி

இந்திய ஹாக்கிக்கு நேற்று பொன்னான நாள். லண்டன் ஒலிம்பிக் தகுதி ஹாக்கி தொடரின் பைனலுக்கு பெண்கள், ஆண்கள் அணிகள் முன்னேறின. பரபரப்பான கடைசி லீக் போட்டியில் பெண்கள் அணி, இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆண்கள் அணி, போலந்தை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேற, தகுதி சுற்று ஹாக்கி போட்டி டில்லியில் நடக்கிறது. நேற்று பெண்கள் பிரிவில் நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, இத்தாலி அணிகள் மோதின.

இதில் வென்றால் மட்டுமே பைனலுக்கு முன்னேறி, ஒலிம்பிக் கனவை தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா இருந்தது. இத்தாலியை பொறுத்தவரை "டிரா செய்தாலே போதும் என்ற நிலையில் களமிறங்கியது.

துவக்கத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய போதும், கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 9 மற்றும் 17வது நிமிடங்களில் கிடைத்த மூன்று "பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் இந்திய வீராங்கனைகள். 29வது நிமிடத்தில் கிடைத்த நான்காவது வாய்ப்பையும் தவறவிட்டனர். இதனால் முதல் பாதி ஆட்டம் கோல்(0-0) எதுவுமின்றி முடிந்தது.


தொடர் ஆதிக்கம்:

இரண்டாவது பாதியில் இந்திய வீராங்கனைகள் இத்தாலி பகுதியில் தாக்குதல் நடத்தினர். 47வது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு கிடைத்த "பெனால்டி கார்னர் வாய்ப்பை, இந்தியாவின் சுஷிலா அருமையாக தடுத்தார்.


முதல் கோல்:

பின் இந்தியாவுக்கு 54வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர் வாய்ப்பு வந்தது. இம்முறை ஜஸ்ஜீத் பந்தை வேகமாக அடித்தார். அதை அப்படியே ரிது ராணி, "ரிவர்சில் அடித்து கோலாக மாற்றினார். இதற்கு கடைசி வரை இத்தாலி அணியால் பதிலடி தர முடியவில்லை. முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று, பைனலுக்கு முன்னேறியது.

மற்றொரு லீக் போட்டியில் கனடாவை 4-1 என வென்ற தென் ஆப்ரிக்க அணி, பைனலுக்கு முன்னேறியது. நாளை நடக்கும் பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெறும்.


சந்தீப் அபாரம்:

ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, போலந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் போலந்தின் தாமஸ் "பெனால்டி கார்னர் மூலம் முதல் கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு "பெனால்டி கார்னர் மூலம் இந்தியாவின் சந்தீப் சிங்(26வது நிமிடம்) பதிலடி கொடுத்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு சிவேந்திர சிங்(59) ஒரு கோல் அடித்தார். போலந்து சார்பில் மிராஸ்லாவ்(63) ஒரு கோல் அடித்தார். பின் இந்தியாவின் ரகுநாத்(65) கோல் அடித்தார்.இறுதியில் சந்தீப் சிங்(70)ஒரு கோல் அடித்து, இந்தியாவின் வெற்றியை <உறுதி செய்தார். இம்முறை நூறு சதவீத வெற்றியுடன் இந்தியா பைனலுக்கு முன்னேறியது.

நாளை நடக்கும் பைனலில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும்பட்சத்தில் இந்திய அணி, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு முன்னேற இந்திய கிரிக்கெட் அணி திணறி வரும் நிலையில், ஹாக்கியில் அசத்தியிருப்பது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில், பைனலுக்கு செல்வதில் மூன்று அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.

தற்போது இந்திய அணி கடைசி இடத்தில் (10 புள்ளி) உள்ளது. அணியின் ரன்ரேட்டும் (-0.733) மோசமாக இருக்கிறது. முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியா (14, +0.433), இலங்கை (11, +0.481) அணிகள் உள்ளன.

இப்போதுள்ள நிலையில் இந்திய அணி அடுத்து வரும் இரு போட்டிகளில் (பிப்., 26, 28) வென்று விட்டால், 18 புள்ளியுடன் பைனலுக்கு சென்று விடலாம். ஏனெனில் மற்ற இரு அணிகளில் ஒரு அணியால் மட்டுமே, இத்தனை புள்ளிகளை பெறக்கூடிய நிலை உள்ளது.

மாறாக இந்திய அணி ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால், பைனல் வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து ஒரு ஆய்வு:


வாய்ப்பு 1:

இன்று ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இலங்கை 11
பிப்., 26ல் ஆஸ்திரேலியா வென்றால் 22 புள்ளி, இந்தியா 10
பிப்., 28ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, இலங்கை 11

இதன்படி, ஆஸ்திரேலியா பைனல் வாய்ப்பு உறுதி. அதேநேரம், மார்ச் 2ல் நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இலங்கை தோற்றால் (11) இந்தியா பைனல் செல்லலாம் (14). மாறாக, இலங்கை வென்றால் (15), இந்தியா வெளியேறும்.


வாய்ப்பு 2:

இன்று ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இலங்கை 11
பிப்., 26ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, ஆஸ்திரேலியா 18
பிப்., 28ல் இந்தியா தோற்றால் 14 புள்ளி, இலங்கை 15


வாய்ப்பு 3:

இன்று இலங்கை வென்றால் 15 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 26ல் ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இந்தியா 10
பிப்., 28ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, இலங்கை 15

வாய்ப்பு 2, 3ன் படி, மார்ச் 2ல் நடக்கும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் கடைசி லீக் போட்டியின் முடிவு எப்படி இருப்பினும், இந்த இரு அணிகளும் பைனலுக்கு சென்று விடும். இந்தியா "அவுட்'


வாய்ப்பு 4:

இன்று இலங்கை வென்றால் 15 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 26ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 28ல் இலங்கை வென்றால் 18 புள்ளி, இந்தியா 14

இதன்படி இலங்கை பைனலுக்கு செல்லும். மார்ச் 2ல் நடக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் (18) இரண்டாவது அணியாக பைனலுக்கு செல்லலாம். இதில் தோற்றால் "ரன்ரேட்' அடிப்படையில் (இந்தியா, ஆஸ்திரேலியா) ஒரு அணி முடிவாகும்.

தோனி Vs சேவக் நிறுத்துவார்களா சண்டையை?

கேப்டன் தோனி, சேவக் இடையிலான மோதல் முற்றுகிறது. சுழற்சி முறை "பார்முலா' தொடர்பாக இருவரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதால், இந்திய அணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டுமென கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் சொதப்புகிறது.

இந்தச் சூழலில், "டாப்-ஆர்டரில்' சச்சின், சேவக், காம்பிர் ஆகியோர் "பீல்டிங்கில்' மந்தமாக செயல்படுவதால், சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர் என்று தோனி அதிரடியாக அறிவித்தார். இதற்கேற்ப யாராவது ஒருவருக்கு வாய்ப்பு மறுத்தார்.

தவிர, முத்தரப்பு தொடரின் அனைத்து போட்டிகளிலும் ரோகித் சர்மா இடம் பெறுவார் என குறிப்பிட்டார். இதனை கேட்டு காம்பிர் ஆத்திரமடைந்தார். தோனிக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டார். சேவக்கும் போர்க்கொடி உயர்த்தினார்.


தோனிக்கு எதிர்ப்பு:

இவர்களுக்கு, இலங்கைக்கு எதிரான கடந்த போட்டி சரியான சந்தர்ப்பமாக அமைந்தது. இதில், தடை காரணமாக தோனி பங்கேற்கவில்லை. கேப்டன் பொறுப்பை சேவக் ஏற்றார். தோனி சொன்னதற்கு நேர்மாறாக "டாப்-ஆர்டரில்' சச்சின், சேவக், காம்பிர் ஆகிய மூவரும் இடம் பெற்றனர். அடுத்து தோனிக்கு மிகவும் பிடித்த ரோகித் சர்மாவை தடாலடியாக நீக்கினர்.

இது குறித்து சேவக் கூறிய கருத்துக்கள் அணிக்குள் நிலவும் சண்டையை உறுதி செய்தது. இவர் கூறுகையில்,""ஆஸ்திரேலியாவில் அடுத்த உலக கோப்பை தொடர் நடப்பதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தான் தோனி சொன்னார். எங்களது "பீல்டிங்' பற்றி என்ன சொன்னார் என்று தெரியவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக ஒரே மாதிரி தான் "பீல்டிங்' செய்கிறோம். இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜெயவர்தனா அடித்த பந்தை பறந்து சென்று நான் "கேட்ச்' பிடித்ததை பார்த்தீர்கள் அல்லவா? இப்பிரச்னை பற்றி தோனியிடம் நான் பேச வேண்டிய அவசியமில்லை. அவர் தான் அணியின் தலைவர்.

அவரும் பயிற்சியாளரும் சேர்ந்து "டாப்-ஆர்டர்' வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்பினால், எனக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. என்னை பொறுத்தவரை அனைத்து போட்டிகளிலும் விளையாட தயாராக இருக்கிறேன்,''என்றார்.


அணியில் பிளவு:

முன்னணி வீரர்களான தோனி, சேவக் இடையே ஏற்பட்டுள்ள மோதல், அணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் "மீடியா'வில் வெளிப்படையாக பேசுவது, கோஷ்டி மோதலை வளர்த்தது. இது அணியின் ஆட்டத்திறனை பாதித்ததால், தோல்வி தொடர்கதையாகிறது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, பி.சி.சி.ஐ., உடனடியாக தலையிட வேண்டும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து கபில் தேவ் கூறியது:

தற்போதைய பிரச்னை ஆஸ்திரேலிய மண்ணில் அரங்கேறியுள்ளது. அங்கே என்ன நடக்கிறது என்று நமக்கு தெளிவாக தெரியாது. அணியில் பிளவு என்று கூற மாட்டேன். வீரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவு தான். கேப்டன் என்ற முறையில் தோனியின் கருத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அணி மற்றும் தேசத்தின் நலன் கருதி, இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., தலையிட்டு வீரர்களுடன் பேசி, சுமூக தீர்வு காண வேண்டும்.

பெற்றோர்களுக்கு இடையே கூட கருத்து வேறுபாடு உள்ளது. எனவே, பிரச்னையை பெரிதாக்க தேவையில்லை. நாட்டின் பெருமையை காக்க வேண்டும் என்பதை வீரர்கள் உணர வேண்டும். ஏதாவது தவறாக புரிந்து கொண்டிருந்தால், அதனை சரி செய்ய வேண்டும்.

உலக சாம்பியன் என்பதற்கேற்ப சிறப்பாக விளையாடும்படி இந்திய வீரர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். களத்தில் கடினமாக போராடி வெற்றியை வசப்படுத்துவது அவசியம். ஆஸ்திரேலிய தொடர் முடித்து தாயகம் திரும்பிய பின், அணியின் தவறுகள் பற்றி பி.சி.சி.ஐ., மற்றும் தேர்வாளர்கள் விவாதிக்கலாம்.

இந்திய அணியின் எதிர்காலம் பற்றி உறுதியான முடிவு எடுக்க வேண்டும். "சீனியர்' வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தால் நல்லது. ஒருவேளை நீக்கப்பட்டால், அதற்கான காரணத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


சச்சின் ஓய்வு:

சச்சினை பொறுத்தவரை உலக கோப்பை வென்ற கையுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து தான். அவர் தான் ஓய்வு பற்றி முடிவு எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் பாண்டிங்கை நீக்குகிறார்கள். அதே பாணியை இங்கே பின்பற்ற முடியாது. இரு நாடுகளிலும் வெவ்வேறு வகையான அணுகுமுறை உள்ளது.

இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

பாண்டிங் வழியை பின்பற்றுவாரா சச்சின்?

சத சாதனையை இன்று நிகழ்த்துவார், அடுத்த போட்டியில் நிகழ்த்துவார் என்று ஒவ்வொரு போட்டியையும் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஒரு வருட காலமாக ஏமாற்றம் அளித்து வரும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் வழியை பின்பற்றி ஒருநாள் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற வேண்டும் என்ற முன்னணி வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்து, சச்சினின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்திருப்பதோடு மட்டுமல்லாது, கிரிக்கெட் உலகில் பெரும்பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில், 5 இன்னிங்சில் 18 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியாக ஒருநாள் கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கியது.

இத்தொடரின் 2 போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் கிரிக்கெட் அணியிலிருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள்போட்டிகளுக்கு குட்பை சொல்லியுள்ளார்.

ரிக்கி பாண்டிங் வழியை சச்சின் பின்பற்ற வேண்டும் என்று சிலரும், அவர் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெற வேண்டும் என்று கபில்தேவ் உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளதாவது, சச்சின் டெண்டுல்கர், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்றும், டெஸ்ட் போட்டிகளில் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, கிரிக்கெட் வரலாற்றில், சச்சின் டெண்டுல்கர் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், கடந்த சிலகாலமாக, அவரது செயல்பாடு பாராட்டும்படியாக இல்லை. தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகளில் 90 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில், சச்சின் டெண்டுல்கர் இடம்பெறுவதன் மூலம், இளம்வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இது, இந்திய வீரர்களின் மனநிலையை பெரிதும் பாதிக்கிறது. சச்சின் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதன் மூலம், பல இளம்வீரர்கள் அணியில் இடம்பெற வழிவகை ஏற்படும். இது, இந்திய அணிக்கு செய்யும் மிகப்பெரிய உதவி ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

சுனில் கவாஸ்கர் கூறுகையில், சச்சின் டெண்டுல்கருக்கு தக்க அறிவுரை கூற ஸ்ரீகாந்தால் மட்டுமே முடியும். ஸ்ரீகாந்த் தலைமையிலான அணியில், சச்சின் அறிமுகமானார் . ஸ்ரீகாந்த் தற்போது தேர்வுக்குழு கமிட்டியின் தலைவராக உள்ளார். எனவே, அவரால் மட்டுமே சச்சினுக்கு தக்க அறிவுரை கூறமுடியும் என்று தான் எண்ணுவதாக அவர் கூறியுள்ளார்.

சண்டை...சர்ச்சை...பதவி ஆசை... இந்திய அணியில் உள்குத்து

தோனியின் சுழற்சி முறை "பார்முலாவால்' இந்திய அணியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இவர், தனக்கு பிடித்தமான ரோகித் சர்மா, ரெய்னாவை தக்க வைக்கவே "சீனியர்களை' பலிகடா ஆக்குவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் இவரிடம் இருந்து, கேப்டன் பதவியை பறிப்பதற்கான வேலைகளும் மும்முரமாக நடக்கின்றன.

முத்தரப்பு ஒருநாள் தொடரில் சச்சின், சேவக், காம்பிர் ஆகிய "டாப்-ஆர்டர்' வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படும் என தோனி தெரிவித்தார். இதன்படி சேவக் "வெளியே' இருந்தால், சச்சின் "உள்ளே' வருவார். ஒரு போட்டியில் காம்பிருக்கு ஓய்வு தரப்பட்டது.

"சீனியர்' வீரர்களான இவர்கள் "பீல்டிங்கில்' மந்தமாக செயல்படுவதாக இன்னொரு குண்டை தூக்கி போட்டார் தோனி. இதில், ஓரளவுக்கு தான் உண்மை உள்ளது. சச்சின், 38, "ஸ்லிப்' பகுதியில் சிறந்த "பீல்டரே'. காம்பிர், 30, டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு மிக அருகில் சிறப்பாக "பீல்டிங்' செய்யக்கூடியவர். சேவக், 33, மட்டுமே அவ்வப்போது சொதப்புவார்.

இது பற்றி பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த வீரர் ஒருவர் கூறுகையில்,""இந்திய அணியின் பலம் "பீல்டிங்' அல்ல "பேட்டிங்' தான். 2011ல் "பேட்டிங்' பலத்தால் தான் உலக கோப்பை வென்றோம். 2007ல் "டுவென்டி-20' உலக கோப்பையில் காம்பிர் ரன் மழை பொழிந்தார். இதே போல யுவராஜ் ஒரே ஒவரில் 6 சிக்சர் விளாசியது போன்றவற்றால் தான் சாம்பியன் பட்டம் வெல்ல முடிந்தது,'' என்றார்.


காம்பிர் கோபம்:

தோனி மீது அதிக கோபத்தில் இருப்பவர் காம்பிர் தான். முத்தரப்பு தொடரில் இரு முறை 90 ரன்களுக்கும் மேல் எடுத்த தன்னை குறி வைப்பது இவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தோனியை மறைமுகமாக விமர்சிக்க துவங்கினார். உதாரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் சிக்சர் அடித்து தோனி வெற்றி தேடித் தந்தார்.

அப்போது பேசிய காம்பிர், "48வது ஓவரிலேயே வென்றிருக்க வேண்டும். 50வது ஓவர் வரை சென்றிருக்க தேவையில்லை,''என்றார். இது, இருவர் இடையே இருந்த மோதலை அம்பலப்படுத்தியது.


கேப்டன் ஆசை:

இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 8 டெஸ்ட் தோல்வியை சந்தித்தது, தோனியின் தலைமைப் பதவி குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதனை பயன்படுத்தி இவரிடம் இருந்து கேப்டன் பதவியை தட்டிச் செல்லும் ஆசை சில வீரர்களின் மனதில் பிறந்துள்ளது.

இவரது சுழற்சி முறை வீரர்கள் தேர்வு, டெஸ்டில் தற்காப்பு பாணியிலான பீல்டிங் வியூகம், தாமதமாக பந்துவீசி தடையை சந்திப்பதை விமர்சிக்கின்றனர். வேறு ஒருவரிடம் கேப்டன் பதவியை தர வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

தற்போதைய முத்தரப்பு தொடரில் பேட்டிங்கில் சோபித்த போதும், கேப்டனாக தோனி பிரகாசிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் மீண்டும் தாமதமாக பந்துவீசிய பிரச்னையில் சிக்கினார். இதனால் ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்பட்ட இவர், இலங்கைக்கு எதிரான இன்றைய முக்கிய போட்டியில் பங்கேற்க முடியாமல் போய் விட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் நான்கு வேகங்களுடன் களமிறங்கிய நிலையில், ஒவர்களை விரைவாக முடிக்கும் பொருட்டு சுழற்பந்துவீச்சாளரான ரவிந்திர ஜடேஜாவை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், இவருக்கு ஒரு ஓவர் கூட தோனி கொடுக்கவில்லை.


புதிய தந்திரம்:

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக தான் சுழற்சி முறை என்ற இவரது கருத்தை யாரும் ஏற்கவில்லை. "டாப் ஆர்டரில்' உள்ள மூன்று வீரர்களுக்கு மட்டுமே சுழற்சி முறை பொருந்தும் என்பது தனக்கு பிடித்தமான ரோகித் சர்மா, ரெய்னாவை அணியில் வைத்திருக்க அரங்கேற்றும் தந்திரம் என கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் பெரிதாக சோபிக்காத நிலையிலும், தொடர்ந்து வாய்ப்பு பெறுகின்றனர். அதே நேரத்தில் மற்றொரு இளம் வீரரான மனோஜ் திவாரி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த கையோடு ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். அவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்.

இது குறித்து முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறுகையில்,""சுழற்சி முறை சரியா அல்லது சிறந்த 11 வீரர்கள் அடங்கிய அணியை களமிறக்குவதா என்பது பற்றி இந்திய அணி விரைவில் முடிவு செய்ய வேண்டும். வீண் சர்ச்சைகளை தவிர்த்து, வெற்றிக்கான வழியை கண்டறிய வேண்டும்,'' என்றார். தோனி பாக்ஸ்...

இந்திய அணியால் ஆஸி.,யை வீழ்த்த முடியல

இந்திய அணியால் ஆஸ்திரேலியாவை மீண்டும் ஒருமுறை வீழ்த்த முடியவில்லை. நேற்று நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தயாசத்தில் படுதோல்வி அடைந்தது.

பவுலிங், பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் இந்தியா சொதப்பியது. புயல்வேகத்தில் பந்துவீசிய ஹில்பெனாஸ், பிரட் லீ, ஆஸ்திரேலிய அணிக்கு கைகொடுத்தனர்.

ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு, ஜாகிர் கான் சேர்க்கப்பட்டார். இதையடுத்து நான்கு வேகங்களுடன் களமிறங்கியது.

ஆஸ்திரேலிய அணியில் மெக்கேவிற்கு பதிலாக பென் ஹில்பெனாஸ் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், "பேட்டிங்' தேர்வு செய்தார்.


நல்ல துவக்கம்:

ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், மாத்யூ வேட் இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். ஜாகிர் ஓவரில் வார்னர் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இந்த நேரத்தில் இர்பான் பதான், வார்னரை(43) வெளியேற்ற, நிம்மதி பிறந்தது. பாண்டிங்(7) மீண்டும் ஏமாற்றினார். வேட், பாரஸ்ட் மிகவும் மந்தமாக ஆட, 25வது ஓவரில் தான் ஆஸ்திரேலியாவால் 100 ரன்களை எட்ட முடிந்தது. வேட் 45 ரன்களில் வெளியேறினார்.


கிறிஸ்டியன் அதிரடி:

பின் மைக்கேல் ஹசி, பாரஸ்ட் சேர்ந்து ரன் விகிதத்தை உயர்த்தினர். உமேஷ் யாதவ், ரெய்னா ஓவரில் பவுண்டரிகளாக விளாசிய மைக்கேல் ஹசி(59), பதான் பந்தில் வீழ்ந்தார். இதே ஓவரில் பாரஸ்டும்(52) அவுட்டானார். கடைசி கட்டத்தில் டேவிட் ஹசி, கிறிஸ்டியன் அதிரடியாக ரன் சேர்த்து, போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தினர்.

இவர்கள், வினய் குமாரை ஒருகை பார்த்தனர். இவரது பந்தை சிக்சருக்கு அனுப்பினார் டேவிட் ஹசி. தொடர்ந்து வினய் குமார் வீசிய போட்டியின் 49வது ஓவரில் கிறிஸ்டியன் வரிசையாக நான்கு பவுண்டரிகள் விளாச, ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் எகிறியது. கடைசி 10 ஓவரில் மட்டும் 101 ரன்கள் எடுக்கப்பட, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. டேவிட் ஹசி(26), கிறிஸ்டியன்(30) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தியா சார்பில் இர்பான் பதான் 3 விக்கெட் வீழ்த்தினார்.


விக்கெட் மடமட:

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி, ஹில்பெனாஸ், பிரட் லீ "வேகத்தில்' சிதறியது. "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏனோதானோ என விளையாடினர். பிரட் லீயிடம் முதலில் காம்பிர்(5) காலியானார். ஹில்பெனாஸ் மணிக்கு 145.6 கி.மீ., வேகத்தில் வீசிய பந்தில் சச்சின்(3) நடையை கட்டினார்.

பிரட் லீயின் அடுத்த ஓவரில் ரோகித் "டக்' அவுட்டானார். ஹில்பெனாஸ் வீசிய பந்தை விராத் கோஹ்லி அடிக்க, "ஸ்லிப்' திசையில் நின்ற டேவிட் ஹசி மிகவும் தாழ்வாக பிடித்தார். இது குறித்து சந்தேகம் வர, மூன்றாவது அம்பயரிடம் கேட்கப்பட்டது.

முடிவில் "கேட்ச்' உறுதி செய்யப்பட, கோஹ்லி(12), வெளியேறினார். அப்போது இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்து தத்தளித்தது.


தோனி அரைசதம்:

பின் கேப்டன் தோனி, ரெய்னா இணைந்து சிறிது நேரம் போராடினர். கிறிஸ்டியன் "ஆப் ஸ்டம்புக்கு' வெளியே வீசிய பந்தை வீணாக அடித்த ரெய்னா(28) அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா(18) கைவிட்டார். தன்னுடன் வார்த்தை போரில் ஈடுபட்ட பிரட் லீ ஓவரில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து, பதிலடி கொடுத்தார் தோனி.

இவர் 56 ரன்களுக்கு ஹில்பெனாஸ் பந்தில் வீழ்ந்தார். இர்பான்(19), ஜாகிர்(9) தாக்குப்பிடிக்க தவற, இந்திய அணி 43.3 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் ஹில்பெனாஸ் 5, பிரட் லீ 3 விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய அணியை 230 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதால், ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கான நான்கு புள்ளிகளுடன் சேர்த்து, கூடுதலாக ஒரு புள்ளியை "போனசாக' பெற்றது.

ஆட்ட நாயகன் விருதை ஹில்பெனாஸ் தட்டிச் சென்றார்.

தோனிக்கு தடை - சச்சின் ஏமாற்றம் - இந்தியா படுதோல்வி

பிரிஸ்பேனில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. பாரஸ்ட்(52), மைக்கேல் ஹசி(59) அசத்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். சச்சின்(3), காம்பிர்(5), கோஹ்லி(12), ரோகித்(0), ரெய்னா(28), ரவிந்திர ஜடேஜா(18) விரைவில் வெளியேறினர்.

தோனி 56 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். இந்திய அணி 43.3 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் ஹில்பெனாஸ் 5, பிரட் லீ 3 விக்கெட் வீழ்த்தினர்.

இப்போட்டியில் இந்திய அணி தாமதமாக பந்துவீசியதால், கேப்டன் தோனிக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இவர், இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டியில் பங்கேற்க முடியாது.

7வது ஒருநாள் போட்டியில் சேவாக்குக்கு மீண்டும் ஓய்வு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் சுழற்சி முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

தொடக்க வீரர்களான தெண்டுல்கர், சேவாக், காம்பீர் ஆகியோர் சுழற்சி முறையில் அணியில் ஆடிவருகிறார்கள்.

முதல் ஆட்டத்தில் சேவாக்கும், 2-வது ஆட்டத்தில் காம்பீருக்கும், 3-வது ஆட்டத்தில் தெண்டுல்கருக்கும், 4-வது போட்டியில் மீண்டும் சேவாக்குக்கு ஒய்வு வழங்கப்பட்டது.

இந்திய அணி 5-வது 'லீக்' ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரிஸ்பேனில் சந்திக்கிறது. சுழற்சி முறைப்படி இந்த ஆட்டத்தில் காம்பீருக்கு ஒய்வு கொடுக்கப்படும்.

ஆனால் காம்பீர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருப்பதால் அவருக்கு ஒய்வு கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இலங்கைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 91 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கேப்டன் தோனி தொடக்க வீரர்களின் சுழற்சி முறையை தொடர்ந்து பின்பற்றுவதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.

இந்நிலையில், நாளைய போட்டியில் காம்பீருக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை. இம்முறை மீண்டும் சேவாக்குக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

துவக்க ஆட்டக்காரர்களாக கௌதம் கம்பீரும், சச்சினும் களமிறக்கப்பட உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுவராஜ் சிங் விரைவாக குணமடைய வேண்டி பாடல்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் விரைவாக குணமடைய வேண்டி அவரது ரசிகர் ஒருவர் ’அலா’ என்னும் பாடல் ஒன்றை இசையமைத்துப் பாடியுள்ளார்.
ஹர்கோவிந்த் விஷ்வா என்னும் அந்த ரசிகர், ‘இது படை வீரர்களுக்காக பாடப்படும் பாடல் ரகம். இது யுவராஜுக்கு தைரியம் கொடுப்பதாக அமையும்.இந்தப் பாடலில் யுவராஜ் பற்றிய முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன’ எனக் கூறியுள்ளார்.

பயிற்சிக்கு இந்திய வீரர்கள் NO

இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபடாமல் தங்களது ஓட்டல் அறையில் "ரெஸ்ட்' எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட், 2 "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்றனர்.

இப்போது முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் துவங்கி 64 நாட்கள் ஆனநிலையில், 22 நாட்கள் போட்டியில் பங்கேற்றனர்.

போக்குவரத்துக்கு 10, பயிற்சியில் 16 நாட்கள் செலவிட்டனர். 15 நாட்கள் ஓய்வில் இருந்தனர். நேற்று 16வது நாளாக முழு ஓய்வில் இருந்தனர்.

பெரும்பாலான வீரர்கள் தங்கள் அறைகளில், "வீடியோ கேம்ஸ்' விளையாடி பொழுது போக்கினர். வேறு சிலர் தங்கள் வீடுகளுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டு இருந்தனர்.


எதுவும் தெரியாது:

இதுகுறித்து விராத் கோஹ்லி கூறுகையில்,""நான் "டிவி' பார்ப்பதில்லை. செய்திகள் கேட்பதில்லை. தோனி சொன்னதுக்கு ஏற்ப, கடந்த ஒரு மாதமாக எந்த பத்திரிகையும் தொடவில்லை. இந்தியாவில் இருந்து என்ன செய்திகள் வருகின்றன என்றும் தெரிந்து கொள்வதில்லை. இதனால் தற்போது என்ன நடக்கிறது என்றே தெரியாது,'' என்றார்.


தோனி ஆதரவு:

வீரர்கள் ஓய்வு குறித்து அணியின் கேப்டன் தோனி கூறுகையில்,"" எங்களது பயிற்சிகள் நீண்ட நேரம் நடக்கும். குறைந்தது நான்கு மணிநேரங்கள் செலவிடுவோம். இதனால் தான் இன்று பயிற்சி செய்யவில்லை,'' என்றார்.

வீரர்கள் பயிற்சியில் ஈடுபடாததால், இவர்களை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


அதிக வித்தியாசம்:

அதேநேரம் இன்று போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் ஹசி, பீட்டர் பாரஸ்ட், வார்னர், மெக்கே ஆகியோர், நேற்று முன்தினம் சிறுவர் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பாண்டிங் உள்ளிட்ட சிலர் ரசிர்களுக்காக சமையலில் ஈடுபட்டனர். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் வீரர்கள், ரசிகர்கள் இடையே மோதல் வராது.

பொதுவாக இந்திய அணியினர் "டாஸ்' போடுவதற்கு அரைமணி நேரம் முன்னதாகத்தான் மைதானத்துக்கு வருவர். நமது வீரர்கள் வரும் போது, ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள்.

வின்னர் தோனி - குவிகிறது பாராட்டு

ஒருநாள் போட்டிகளில் பின் வரிசையில் களமிறங்கி, போட்டியை வென்று தரும் "மேட்ச் வின்னராக' உள்ளார் இந்தியாவின் தோனி. இதை இலங்கை, ஆஸ்திரேலிய அணி கேப்டன்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி நாயகனாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. "ரன்ரேட்' அதிகமாக தேவைப்படும். பின்வரிசையில் வரும் போது, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. எப்போதும் ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும்.

இவை அனைத்தையும் மீறி இந்திய அணி கேப்டன் தோனி, சிறப்பாக செயல்படுகிறார் என்றால், முதல் காரணம் இவரது "கூல்' பாணி தான்.

தற்போதைய முத்தரப்பு தொடரில், கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக "சிக்சர்' அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதே போல இலங்கைக்கு எதிராக 3 ரன்கள் எடுத்து போட்டி "டை' ஆக காரணமாக இருந்தார்.


"சேஸ்' மன்னன்:

தோனியை பொறுத்தவரை இரண்டாவதாக "பேட்' செய்யும் போது அசத்துகிறார். "சேஸ்' செய்த போது 49 இன்னிங்சில் இவரது அபார ஆட்டம் வெற்றிக்கு கைகொடுத்தது. இதில் 2 சதம், 14 அரைசதம் உட்பட 1993 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 104.89 ரன்கள். இந்த 49 இன்னிங்சில் தோனி 30 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், "சேஸ்' செய்த போது 50 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார். மொத்தம் இவர் எடுத்த 7 சதம், 44 அரைசதத்தில் பெரும்பாலானவை "சேஸ்' செய்த போது எடுத்தது தான்.


கடின பணி:

கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என்ற பணிகளுடன், போட்டியை வெற்றிகரமாக முடித்து தருவதிலும் தோனி கெட்டிக்காரராக உள்ளார்.

இதுகுறித்து இலங்கை அணி கேப்டன் ஜெயர்வர்தனா கூறுகையில்,"" அடிலெய்டு போட்டியில் ஒரு "இன்ச்' அளவில் போட்டியை எங்களிடம் இருந்து தோனி தட்டிப்பறித்தார். அமைதி மற்றும் நிதானமாக செயல்படும் குணம், இவரை வலிமையானவராக மாற்றியுள்ளது,'' என்றார்.


கிளார்க் பாராட்டு:

ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்÷ல் கிளார்க் கூறுகையில்,"" தோனி அசத்தலான வீரர். புள்ளிவிவரங்களை பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். மெக்கேயின் கடைசி ஓவரில் சிக்சர் அடித்தது மறக்க முடியாதது,'' என்றார்.


எல்லாமே சமம் தான்

நேற்று முன்தினம் இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் சம அளவில் ஸ்கோர் (236/9) எடுத்ததால் முடிவு "டை' ஆனது. இதில் ஸ்கோர் மட்டுமல்ல, பல சமமான ஒற்றுமைகள் அமைந்துள்ளது வியப்பாக உள்ளது.


இதன் விவரம்:

இரு அணிகள் எடுத்த ஸ்கோர்: 236
சந்தித்த ஓவர்கள்: 50
அடித்த பவுண்டரிகள்: 15
விழுந்த விக்கெட்டுகள்: 9
விட்டுக்கொடுத்த உதிரிகள்: 8
பவுலிங் செய்த பவுலர்கள்: 6
அடித்த சிக்சர்கள்: 2
மெய்டன் ஓவர்கள்: 2
"ஸ்டிரைக் ரேட்' 100க்கும் மேல் உள்ள வீரர்கள்: 2
(அஷ்வின், இர்பான் மற்றும் ஹெராத், சேனநாயகே)

இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளர்

இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமிக்கப்படுகிறார். தற்போதைய பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் எரிக் சிம்மன்ஸ் உள்ளார். இவரது இரண்டு ஆண்டுகால பணி, முத்தரப்பு ஒருநாள் தொடருடன் முடிகிறது.

இவரது ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ., புதுப்பிக்கவில்லை. இவருக்கு பதில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோ டேவ்ஸ் நியமிக்கப்படுகிறார்.

இவர் 1997 முதல் 2005 வரை 76 முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல், பயிற்சியாளராக மாறினார்.

தற்போது தெற்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருக்கும் இவர், 2011-12 "பிக்பாஷ்' "டுவென்டி-20' தொடரில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியிலும் பயிற்சியாளராக இருந்தார்.

முத்தரப்பு தொடர் முடிந்ததும், இவர் பவுலிங் பயிற்சியாளராக முறைப்படி பொறுப்பேற்க உள்ளார்.