ஸ்ரீசாந்த் புதிய அவதாரம்

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், புதிய அவதாரம் எடுத்துள்ளார். உலக கோப்பை அணியில் இடம் பெறாத இவர் "எஸ்-36' இசைக்குழுவை துவக்கியுள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரீசாந்த். சமீபத்திய தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவருக்கு, உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் சோர்ந்து இருந்த இவர், தற்போது "எஸ்-36' என்ற இசைக்குழுவை துவக்கியுள்ளார்.

இதில் "எஸ்' என்பது ஸ்ரீசாந்த் என்பதையும், 36 என்பது இவரது ராசியான "டி-சர்ட்டையும்' குறிக்கும். இந்த குழுவில் பின்னணி பாடகர் மது பாலகிருஷ்ணன், தீபக் வாரியர் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக்குழுவின் முதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கொச்சியில் நடந்தது. இதில் <உலக கோப்பை தொடரில் பங்கேற்கும், இந்திய அணியை உற்சாகப்படுத்தும் விதத்தில், இவர் எழுதிய "ஹலோ ஷேர் பங்கே...' எனத்துவங்கும் இந்தி பாடலை மேடையில் பாடி அசத்தினார்.

தவிர, "அன்புள்ள அழகே...' என்ற பாடல் <உட்பட பல தமிழ் பாடலையும் பாடினார். காமினி என்ற இந்திப்படத்தின் பாடலுக்கு நடனமாடி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில்,"" இந்தக்குழுவில் இணைந்து பாடல்கள் எழுதுவது, பாடுவது, நடனம் ஆடுவது, பியானோ உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிப்பது என அனைத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக செய்யவுள்ளேன். ஏனெனில் என்னைவிட சிறந்தவர்கள் இதில் உள்ளனர். நான் அவர்களுக்கு ஆதரவாக மட்டும் இருப்பேன்,'' என்றார்.

இந்தக்குழு துபாயில் முறைப்படி அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்பாக இந்தியாவில் பெங்களூரு, மும்பை, சண்டிகரில் பல நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்துள்ளனர்.

துபாய் நிகழ்ச்சியில், தென் இந்தியா மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பர்-1 அணியில் இருப்பது பெருமை: சச்சின்

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையிலான இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் உள்ளது. இதில், இடம் பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது,'' என, சச்சின் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள், டெஸ்டில் 50 சதம் அடித்து அசத்தியவர் இந்திய சாதனை பேட்ஸ்மேன் சச்சின். இவருக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய வீரர் மற்றும் ஸ்பெஷல் டெஸ்ட் வீரர் என்ற விருதை, "காஸ்டிரால்' நிறுவனம் வழங்கியது.

இதற்கு முன் கடந்த 2009ல், இதே நிறுவனம் வழங்கிய சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் பெற்றுள்ளார். இவர் தவிர, தோனி, ஹர்பஜன், டிராவிட், யூசுப் பதான் ஆகியோரும் விருது பெற்றனர். விழாவில் பங்கேற்ற சச்சின் கூறியது:

இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியை தோற்கடித்து, இந்திய அணி "நம்பர்-1' டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தை முதன் முதலாக பெற்றது. அப்போது, இது 30 அல்லது 40 நாட்களுக்குத் தான் நீடிக்கும் என்று, பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அடுத்து வந்த தென் ஆப்ரிக்க தொடரில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்தோம். உடனே "நம்பர்-1' இடம் பறிபோகும் என்றனர். ஆனால், இப்போது ஒரு ஆண்டுக்கும் மேலாக இதே இடத்தில் நீடிக்கிறோம்.

இந்த இடத்தை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதற்காக பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். கடினமாக உழைத்துள்ளோம். பயிற்சியாளர் கிறிஸ்டனும் அணியில் வியக்கத்தக்க வகையில் மாற்றம் கொண்டு வந்தார். கடந்த 2007க்கு பின் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இத்தகைய அணியில் இருப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.


வயது தடையல்ல:

இதுவரை நான்கு முறை காயத்துக்கு "ஆப்பரேஷன்' செய்துள்ளேன். இந்த நேரத்தில் அணியில் வருவதும், போவதுமாக இருந்தேன். பின் 2007க்குப் பின் பெரிய அளவில் காயம் எதுவுமில்லாததால், மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டில், நீடிக்க வயது ஒரு தடையே அல்ல.

நான் 16 வயதில் போட்டிகளில் பங்கேற்க துவங்கினேன். இது போல யாரும் எந்த வயதிலும் துவங்கலாம், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம்.

ஆனால் எப்படி விளையாடுகின்றோம் என்பது தான் முக்கியம். இந்த உலக கோப்பை தொடரில் சிலவற்றை நிறைவேற்ற விரும்புகிறேன். அது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.

இவ்வாறு சச்சின் கூறினார்

இந்தியாவுக்கு உலக சாம்பியன் வாய்ப்பு

இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலிமையாக உள்ளது. இம்முறை வீரர்கள் தங்களது திறமைக்கு ஏற்ப விளையாடினால், உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம், ''என, கபில் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பை வென்று சாதித்தது. தற்போது இந்திய துணை கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை தொடர்(பிப். 19-ஏப். 2) நடக்க உள்ளது. இது குறித்து "கிரிக்கெட் ஜாம்பவான்' கபில் தேவ் கூறியது:

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி, உலக கிரிக்கெட்டில் இதற்கு முன் எப்போதும் பார்க்காத வகையில், வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. பவுலிங்கில் மட்டும் சற்று பலவீனமாக இருந்தாலும், பார்ப்பதற்கு சமபலமாக தோன்றுகிறது. இந்திய வீரர்கள் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தினால், புதிய உலக சாம்பியனாக உருவெடுக்கலாம்.

இந்திய அணியைப் பொறுத்தவரை உள்ளூரில் விளையாடுவது தான் மிகப்பெரிய பலம். அதுவே பெரிய பலவீனமும் கூட. அணியின் கேப்டன் தோனி, என்னைவிட சிறப்பானவர். மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராகவும், கேப்டனாகவும் ஜொலிக்கிறார். இந்தியர்கள் அனைவரும் விரும்பும் உலக கோப்பையை, தோனி இம்முறை கைப்பற்றி சாதிப்பார் என்று நம்புகிறேன்.


யாரும் இல்லை:

கடந்த 1983ல் "கறுப்பு குதிரைகளாக' செயல்பட்ட நாங்கள், யாரும் எதிர்பாராத வகையில் கோப்பை வென்றோம். ஆனால் இம்முறை எந்த அணியும் "கறுப்பு குதிரையாக' செயல்படும் என நினைக்கவில்லை. ஏனெனில் 3 அல்லது 4 அணிகள் ஒன்றைவிட ஒன்று விஞ்சும் வகையில் உள்ளன.

இங்கிலாந்து சிறப்பான அணியாக மீண்டு வந்துள்ளது. தவிர, இலங்கை அணி மீது எப்போதுமே நம்பிக்கை உண்டு. இதே போன்று தான் ஆஸ்திரேலியாவும் உள்ளது.


கணிக்க முடியாது:

வலிமையான பவுலர்களை கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியும், யாரையும் வீழ்த்த வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் அதிகம் நம்பமுடியாத அணியாக உள்ளது. இவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று கணிக்கவே முடியாது. குறிப்பிட்ட நாளில் சிறப்பாக செயல்பட்டு, திடீரென எந்த அணியையும் சாய்த்து விடுவார்கள்.


மகிழ்ச்சியான தேர்வு:

உலக கோப்பை தொடரின் விளம்பர தூதராக சினிமா நட்சத்திரம், பாடகர் அல்லது அரசியல்வாதி என யாரையும் தேர்வு செய்யாமல், சச்சினை தேர்வு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஐ.சி.சி.,க்கு நன்றி சொல்ல வேண்டும். சக வீரர் ஒருவர், இப்படி தூதராக இருப்பது பெருமிதம் கொள்ளச்செய்கிறது.

கிரிக்கெட்டை, கிரிக்கெட் விளையாடும் நபரால் மட்டுமே சிறப்பாக விளம்பரம் செய்ய முடியும். இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக, சிறப்பான விளையாட்டு வீரராக திகழும் சச்சினைத் தவிர, இதற்கு வேறு பொறுத்தமான நபர் யாருமில்லை.
இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.

தோனிக்கு நெருக்கடி: கங்குலி கருத்து

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில், மாற்று விக்கெட் கீப்பர் தேர்வு செய்யப்படாததால், போட்டியின் போது தோனிக்கு நெருக்கடி ஏற்படலாம்,'' என, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து பத்தாவது உலக கோப்பை (பிப்.19-ஏப்.2) கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் வாய்ப்பு பெறவில்லை. தவிர, இரண்டாவது விக்கெட் கீப்பராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

இதுகுறித்து, கடந்த 2003ல் இந்திய அணியை உலக கோப்பை பைனலுக்கு அழைத்துச் சென்ற, முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது: உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில், திறமைøயான இளம் மற்றும் அனுபவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இம்முறை இந்திய அணி கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. தவிர, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு போட்டியில் சாதிக்க கைகொடுக்கும். ஒருவேளை கோப்பை வெல்ல தவறினாலும், ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து இந்திய அணிக்கு கிடைக்கும்.

அணியில், இளம் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவரை அணியில் சேர்க்காதது ஏன் எனத் தெரியவில்லை. இத்தொடரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அணிகளும் தலா இரண்டு விக்கெட் கீப்பருடன் களமிறங்குகின்றன.

ஆனால் இந்திய அணியில் கேப்டன் தோனி மட்டும் விக்கெட் கீப்பராக உள்ளார். இவருக்கு மாற்று வீரராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இது, போட்டியில் தோனிக்கு நெருக்கடி அளிக்கலாம். ஏனெனில் போட்டியின்போது லேசான காயம் அல்லது ஓய்வு தேவைப்படும் பட்சத்தில், மாற்று கீப்பராக நிறுத்த அனுபவ வீரர் இல்லை.

இதனால் இவர், தனது உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. ஜாகிர், ஹர்பஜன், நெஹ்ரா உள்ளிட்ட திறமையான பவுலர்கள் இடம் பெற்றிருப்பது பலம்.

ஒவ்வொரு அணிகளும், உலக கோப்பை தொடருக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் பிரட் லீ, டெய்ட் உள்ளிட்ட திறமையான பவுலர்கள் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்ரிக்க அணியில் "ஆல்-ரவுண்டர்' காலிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. எனவே, எந்த அணி கோப்பை வெல்லும் என்பதை தற்போது உறுதியாக கூற முடியாது.

சமீபத்தில், நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் கொச்சி அணி சார்பில் விளையாட, அந்த அணி நிர்வாகம் என்னை அணுகியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதுவரை எந்த ஒரு ஐ.பி.எல்., அணியும் என்னை அணுகவில்லை.

ஏற்கனவே கூறியது போல, பாரத ரத்னா விருது பெற இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தகுதியானவர். இவ்விருது இவருக்கு விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு கங்குலி கூறினார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் - ஹாட்ரிக் சாதனையாளர்கள்

1975-ல் தொடங்கி 2007 வரையிலான 9 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5 வீரர்கள் ஹாட்ரிக் விக்கெட் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தியாவின் சேத்தன் சர்மா, பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக், இலங்கையின் சமிந்தா வாஸ், ஆஸ்திரேலியாவின் பிரட் லீ, இலங்கையின் லசித் மலிங்கா ஆகியோரே அந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள்.

அதிலும் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை நிகழ்த்தியவர் என்ற பெருமை இந்தியாவின் சேத்தன் சர்மாவையேச் சாரும்.


1987-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் நாகபுரியில் நடந்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது.


நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தபோது, சேத்தன் சர்மாவை பந்துவீச அழைத்தார் கபில்தேவ். அப்போது பேட்டிங் செய்த ரூதர் போர்டை கிளீன் போல்டு ஆக்கி வெளியேற்றினார் சர்மா.


அதன் பிறகு வந்த இயன் ஸ்மித்தை கிளீன் போல்டு ஆக்கவே, சேத்தன் ஹாட்ரிக் வாய்ப்பை நெருங்கினார். அடுத்த பந்திலும் விக்கெட் வீழ்த்தி சர்மா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவாரா என்று எதிர்பார்ப்பில் இந்திய ரசிர்கள் உறைந்துபோயிருந்தனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.


அடுத்து வந்த இவென் ஷட்பீல்டையும் கிளீன் போல்டு ஆக்கி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார் சர்மா. இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் ஹாட்ரிக் சாதனையைப் படைத்து இந்தியாவுக்கு அவர் பெருமை சேர்த்தார். மூன்று விக்கெட்டுகளையும் போல்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்த ஒரே வீரர் சேத்தன் சர்மா மட்டுமே.


சக்லைன் முஷ்டாக்: 1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். இதன்மூலம் உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.


40-வது ஓவரை வீசிய சக்லைன் முஷ்டாக், அந்த ஓவரின் முதல் பந்தில் ஹென்றி ஓலங்காவையும், இரண்டாவது பந்தில் ஹக்கிளையும், மூன்றாவது பந்தில் பங்வாவையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.

இதில் ஓலங்கா, ஹக்கிள் ஆகியோர் அப்போதைய பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் மொயின்கானால் ஸ்டம்ப்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டனர். பங்வா எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

உலகக் கோப்பையை வெல்ல இந்தியா தகுதியான அணி

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல தகுதியான அணி என்று முன்னாள் வீரர் சுனில் காவஸ்கர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையை நடத்திய நாடுகள் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதை இந்த முறை இந்திய அணி முறியடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பாஸ்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்திருந்த அவர் மேலும் கூறியது: இப்போதுள்ள இந்திய அணி அனுபவ வீரர்கள், இள வீரர்கள் என சமபலம் நிறைந்த சிறந்த அணியாக உள்ளது.

அதனால் இதுவரை உலகக் கோப்பையை நடத்திய நாடுகள் கோப்பையை வென்றதில்லை என்பதை முறியடித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு இருப்பதாக கருதுகிறேன். இந்தியா உலகக் கோப்பையை வெல்ல தகுதியான அணி என்று நம்புகிறேன்.


கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. எனவே வீரர்களைப் பற்றி விமர்சிக்காமல், இந்தியர்கள் அனைவரும் இந்திய அணிக்கு தங்களின் முழு ஆதரவையும் அளிக்க வேண்டும். இப்போது இந்திய அணியின் ஒரே பலவீனம் பீல்டிங்தான்.


பௌலர்களிடமும் சில குறைகள் உள்ளன. அதை கண்டுபிடித்து சரி செய்ய கேப்டன் முயற்சிக்க வேண்டும். மற்றபடி வேறு எந்த பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை.


இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இங்குள்ள மைதானங்கள், சீதோஷ்ண நிலை ஆகியவற்றைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும் அவர்களுக்கு இருக்கும்.


இந்தியாவில் போட்டி நடைபெறுவதில் உள்ள பலமும், பலவீனமும் ரசிகர்களின் எதிர்பார்ப்புதான். அது வீரர்களின் கவனத்தை சிதறடிக்கக்கூடும். இந்த முறை ஆஸ்திரேலியா தவிர மற்ற அணிகளும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது. இருப்பினும் மற்ற அணிகளை விட இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல கூடுதல் வாய்ப்புள்ளது என்றார்.

சிக்சர் மன்னர்கள்

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிக்சர் அடித்து சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்த ஒரு சிறப்பு பார்வை.


டெஸ்ட் அரங்கில், கடந்த ஆண்டு அதிக சிக்சர் அடித்தவர்களில், தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் முதலிடம் பிடித்தார். இவர் 11 டெஸ்டில் பங்கேற்று 18 சிக்சர் அடித்துள்ளார். இந்தியா சார்பில் ஹர்பஜன் சிங், 16 சிக்சர் அடித்து முதலிடம் பிடித்தார்.


இவ்வரிசையில் "டாப்-5' வீரர்கள்:

வீரர் போட்டி சிக்சர்

டிவிலியர்ஸ் (தெ.ஆ.,) 11 18

காலிஸ் (தெ.ஆ.,) 11 17

ஹர்பஜன் (இந்தியா) 12 16

தோனி (இந்தியா) 13 11

கெய்ல் (வெ. இண்டீஸ்), பிரண்டன் மெக்கலம் (நியூசி.,), பிராட் ஹாடின் (ஆஸி.,), சச்சின் (இந்தியா),
சேவக் (இந்தியா) உள்ளிட்டோர் தலா 10 சிக்சர் அடித்து 5வது இடத்தில் உள்ளனர்.


அப்ரிதி அசத்தல்:

ஒருநாள் போட்டி கிரிக்கெட் அரங்கில், கடந்த ஆண்டு அதிக சிக்சர் அடித்தவர்களில் பாகிஸ்தானின் "பூம்பூம்' அப்ரிதி முதலிடம் பிடித்தார். இவர், 18 போட்டியில் பங்கேற்று 27 சிக்சர் விளாசினார். இந்தியா சார்பில் அதிரடி யூசுப் பதான் 14 சிக்சர் அடித்து, முதலிடம் பிடித்தார்.


இவ்வரிசையில் "டாப்-5' வீரர்கள்:

வீரர் போட்டி சிக்சர்

அப்ரிதி (பாக்.,) 18 27

ரோஸ் டெய்லர் (நியூசி.,) 20 20

கேமிரான் ஒயிட் (ஆஸி.,) 25 20

டிவிலியர்ஸ் (தெ.ஆ.,) 16 19

பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து), தமிம் இக்பால் (வங்கதேசம்) தலா 15 சிக்சர் அடித்து 5வது இடத்தை பகிர்ந்து

வார்னர் விளாசல்:

சர்வதேச "டுவென்டி-20' அரங்கில், கடந்த ஆண்டு அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் முதலிடம் பிடித்தார். இவர், 15 போட்டியில் விளையாடி 22 சிக்சர் விளாசினார். இந்தியா சார்பில் சுரேஷ் ரெய்னா 11 சிக்சர் அடித்து முதலிடம் பிடித்தார்.

இவ்வரிசையில் "டாப்-5' வீரர்கள்:

வீரர் போட்டி சிக்சர்

வார்னர் (ஆஸி.,) 15 22

வாட்சன் (ஆஸி.,) 13 19

கேமிரான் ஒயிட் (ஆஸி.,) 15 19

அப்துல் ரசாக் (பாக்.,) 17 18

உமர் அக்மல் (பாக்.,) 18 17.

இன்று கடைசி ஆட்டம்: வரலாறு படைக்குமா இந்தியா?

இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது.

4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளன. இதனால் செஞ்சூரியன் ஆட்டமே தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஆட்டமாக அமைந்துள்ளது.

இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை வென்றதில்லை. அதனால் இந்த முறை கடைசி ஒருநாள் ஆட்டத்தை வென்று தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் விராட் கோலி, யூசுப் பதான் நீங்கலாக மற்ற பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக விளையாடி வருகின்றனர்.

நல்ல தொடக்கம் இல்லாமல் இந்தியா தடுமாறி வருகிறது. கடந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சும் எடுபடவில்லை.அதேசமயம் தென்னாப்பிரிக்காவின் முன்னணி வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தபோதும், பின்வரிசை வீரர்கள் சிறப்பாக அணியை மீட்டு வருகின்றனர்.

பௌலிங்கில் சோட்சோபி, ஸ்டெயின், மோர்கல் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். எனவே தொடரை வெல்ல இந்தியா கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.


போட்டி நேரம்: மதியம் 1.30 மணி.


நேரடி ஒளிபரப்பு: டென் கிரிக்கெட்

கங்குலிக்கு வாய்ப்பு: கொச்சி அணி மறுப்பு

ஐ.பி.எல்., ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட கங்குலி, கொச்சி அணியில் வாய்ப்பு பெறுவார் என்று செய்திகள் வெளியாகின. இதனை கொச்சி அணியின் நிர்வாகம் மறுத்துள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதில் 2008, 2010 தொடரில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி.

நான்காவது தொடருக்கான ஏலத்தில் கோல்கட்டா உட்பட, 10 அணிகளின் உரிமையாளர்களில், ஒருவர் கூட இவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் கோல்கட்டாவில் ஷாருக் கானுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதன் பின் இவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்தன.

இந்நிலையில், கொச்சி அணி கங்குலியை சேர்த்துக்கொள்ள முன்வந்துள்ளது. இந்த அணியில் லட்சுமண் தவிர, வேறு பிரபலமான வீரர்கள் யாரும் இல்லாததால் கங்குலியை சேர்ப்பதற்கு, ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக் குழுவை கொச்சி நிர்வாகம் அணுகியுள்ளது.

ஐ.பி.எல்., விதிப்படி சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை, பொது ஏலத்தில் மட்டுமே எடுக்க முடியும். தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்ய முடியாது. இதனால் கங்குலி விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மற்ற 9 அணி உரிமையாளர்கள், சம்மதிக்கும் பட்சத்தில், கங்குலி கொச்சி அணியில் இணைவார் எனத் தெரிகிறது.

இதற்கு பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால், மற்ற அணிகளை சரிக்கட்டும் முயற்சியில் கொச்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. இதில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில், முன்பு கோல்கட்டா அணியில் இருந்த பிரண்டன் மெக்கலம், ஹாட்ஜ், ஓவைஷா ஆகியோருடன், கங்குலி மீண்டும் "கேப்டனாக' களமிறங்கலாம்.

இதேபோல ஏலத்தில் விலை போகாத வாசிம் ஜாபர், வி.ஆர்.வி.சிங் ஆகியோரும் எதாவது ஒரு அணியில் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


கொச்சி மறுப்பு:

இதனிடையே கங்குலி தொடர்பான செய்திக்கு கொச்சி அணி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அணியின் சக உரிமையாளர் கெய்க்வாட் கூறுகையில்,"" அணியில் கங்குலியை சேர்ப்பது குறித்து அவரிடம் எதுவும் பேசவில்லை. இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கே இடமில்லை,'' என்றார்.

உலக கோப்பை போட்டியில் முதல் தடவையாக ஆடும் 7 வீரர்கள்

உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் கேப்டன் டோனி, தெண்டுல்கர், ஷேவாக், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், நெக்ரா, முனாப் பட்டேல் ஆகியோர் ஏற்கனவே உலக கோப்பை போட்டியில் ஆடியுள்ளனர்.

இவர்களில் தெண்டுல்கர் ஏற்கனவே 5 தடவை உலக கோப்பையில் ஆடி இருக்கிறார். இப்போது இவர் 6-வது தடவையாக ஆட உள்ளார்.

அவர் உலக கோப்பையில் மொத்தம் 36 போட்டிகளில் ஆடி இருக்கிறார். கேப்டன் டோனி கடந்த உலக கோப்பை போட்டியில் இடம் பெற்று இருந்தார். அப்போது அவர் 3 போட்டிகளில் மட்டுமே ஆடினார்.

இதே போல உலக கோப்பையில் ஷேவாக் 14 போட்டிகளிலும், யுவராஜ்சிங் 14 போட்டிகளிலும், ஹர்பஜன் சிங் 12 போட்டிகளிலும், ஜாகீர்கான் 14 போட்டிகளிலும், நெக்ரா 9 போட்டிகளிலும், முனாப்பட்டேல் 3 போட்டிகளிலும் ஆடி உள்ளனர்.

காம்பீர், ரெய்னா, கோக்லி, யூசுப்பதான், பிரவீன்குமார், பியுஷ் சாவ்லா, அஸ்வின் ஆகியோருக்கு இது தான் முதல் உலக கோப்பை போட்டி ஆகும். இவர்களில் காம்பீர் முன்னணி இடத்தில் இருக்கிறார்.

அவர் 105 சர்வதேச போட்டிகளில் ஆடி 3680 ரன்கள் குவித்து உள்ளார். அவருடைய ரன் சராசரி 40.43.

சுரேஷ் ரெய்னா 108 சர்வ தேச போட்டிகளில் ஆடி 2571 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ரன் சராசரி 35.70.

வீராட் கோக்லி 42 போட்டிகளில் ஆடி 1555 ரன்கள் குவித்து உள்ளார். அவரது சராசரி 45.73.

யூசுப்பதான் 42 சர்வதேச போட்டிகளில் ஆடி 528 ரன்கள் எடுத்துள்ளார். இவர் சராசரி 29.33.

கொச்சி அணியின் ரோல் மாடல்

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் கேரளாவின் கொச்சி அணியில் இணைந்து விளையாட உள்ளார் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் கொச்சி அணியின் "ரோல் மாடலாக' இருப்பார் என்கிறார் அணியின் பயிற்சியாளர் ஜெப் லாசன்.

இந்திய அணியின் "சர்ச்சைக்குரிய' இளம் வீரர் ஸ்ரீசாந்த். கடந்த மூன்று ஐ.பி.எல்., தொடர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இவர் விளையாடினார். கடந்த 2008 தொடரில், மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது, ஹர்பஜனிடம் "செல்லமாக' கன்னத்தில் வாங்கிக் கொண்டு, தேம்பி அழுதவர்.

களத்தில் இவரது ஆக்ரோஷசத்தை கட்டுப்படுத்துவது என்பது, கேப்டன் தோனியால் கூட முடியாத காரியம். இதை தோனியே சமீபத்தில் ஒத்துக்கொண்டுள்ளார்.

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் புதியதாக கொச்சி அணி இணைய, ஸ்ரீசாந்த் எப்படியும் இதில் தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப, சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ஏலத்தில், இவரை, ரூ. 4.08 கோடி கொடுத்து கொச்சி அணி ஏலத்தில் எடுத்தது.

இதுகுறித்து கொச்சி அணியின் பயிற்சியாளர் ஜெப் லாசன் கூறுகையில்,"" ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தவிர, தென் ஆப்ரிக்காவிலும் சிறப்பான பார்மில் அசத்துகிறார். விலை மதிப்பில்லாத வீரரான இவர், கொச்சி அணியின் "ரோல் மாடலாக' இருப்பார்,'' என்றார்.

கொச்சி அணியில் விளையாட இருப்பது குறித்து, ஸ்ரீசாந்த் தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில்,"" சொந்த அணியான கொச்சியில் இணைந்து விளையாட இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக எனக்கு ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,' என தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. பெரிய அளவில் மாற்றம் ‌‌‌‌இல்லை. இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் (பிப்.18-ஏப்.2) தொடரை நடத்துகின்றன.

இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கடந்த மாதம் அறிவித்தது.

இதிலிருந்து உலக கோப்பைக்கான கிரிக்கெட் அணியில் பங்குபெறும் வீரர்கள் , 15 பேர் கொண்ட அணி,இன்று சென்னையில் அறிவிக்கப்பட்டனர்.

பி.சி.சி.ஐ., தேர்வாணைய குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பின்னர் பி.சி.சி.ஐ,.செயலர் சீனிவாசன் வீரர்கள் பெயர்களை அறிவித்தார்.


இதன் விவரம் வருமாறு:

தோனி (கேப்டன்), சச்சின், சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ், ஹர்பஜன், ஜாகிர் கான், பிரவீண் குமார், முனாப் படேல். நெஹ்ரா,அஷ்வின்,பியுஸ் சாவ்லா, யூசுப் பதான்.

அஷ்வின் தமிழக வீரர் என்பது குறிப்பிடத்தக்கது

ஜன. 17ல் இந்திய அணி தேர்வு

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, ஜன., 17ல் சென்னையில் தேர்வு செய்யப்பட உள்ளது.

இந்தியா, இலங்கை,வங்கதேச நாடுகள் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடரை நடத்தவுள்ளன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி "பி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. தவிர, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து என, மொத்தம் 7 அணிகள் இந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

உலக கோப்பை தொடரின் துவக்கவிழா வரும் பிப்., 18ல் வங்கதேசத்தில் நடக்கிறது. மறுநாள் தாகாவில் நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது.

இதற்கான 30 வீரர்கள் அடங்கிய உத்தேச அணி கடந்த டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன் தோனி, சச்சின், சேவக் உள்ளிட்ட வழக்கமான வீரர்களுடன், பியுஸ் சாவ்லா, புஜாரா, பார்த்திவ் படேல், சிகர் தவான், ரகானே போன்றவர்கள் இடம் பெற்று இருந்தனர்.

இதில் இருந்து தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் அடங்கிய அணி தேர்வு செய்யப்பட உள்ளது. ஸ்ரீகாந்த் தலைமையிலான தேசிய தேர்வுக்குழுவினர், சென்னையில் ஜன., 17ல் இந்திய அணியை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வட்டாரங்கள் கூறுகையில்,"" சென்னையில் நாளை மறுநாள் உலக கோப்பை இந்திய அணி அறிவிக்கப்படும்,'' என்று தெரிவித்துள்ளது.

விலை மதிப்பற்ற இந்திய வீரர்கள்

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் உலகப்புகழ் பெற்றது. இதில் இணைந்து விளையாடுவதற்காக, பிற நாட்டு வீரர்கள் தேசிய அணிகளைக் கூட புறக்கணிக்கத் தயாராக இருந்தனர்.

ஆனால் சமீபத்தில் முடிந்த நான்காவது தொடருக்கான ஏலத்தில், இந்திய இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்கத்தான் அதிக போட்டி நிலவியது. கோடிகளை கொட்டிக் கொடுத்து இவர்களை வாங்கினர்.

இரண்டு நாட்கள் நடந்த ஏலத்தில் 350க்கும் அதிகமாக வீரர்கள் இடம் பெற்று, 200க்கு மேற்பட்டோர் விலை போகாமலே திரும்பினர். இதில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக 45, ஆஸ்திரேலியா 36, தென் ஆப்ரிக்கா 18, இலங்கை 9, இங்கிலாந்து 7, நியூசிலாந்து 7, வெஸ்ட் இண்டீஸ் 3 மற்றும் வங்கதேசம், நெதர்லாந்தில் இருந்து தலா ஒரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் முதல் நாள் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட "டாப்-10' வீரர்களில் காம்பிர் (ரூ. 11.04 கோடி), யூசுப் பதன் (ரூ. 9.66 கோடி), உத்தப்பா (ரூ. 9.66 கோடி), ரோகித் சர்மா (ரூ. 9.07 கோடி), இர்பான் பதான் (ரூ. 8.74 கோடி), யுவராஜ் சிங் (ரூ. 8.28 கோடி), சவுரப் திவாரி (ரூ. 7.25 கோடி) என, முதல் ஏழு பேர் இளம் இந்திய வீரர்கள் தான்.

இரண்டாவது நாளிலும் உமேஷ் யாதவ் (ரூ. 3.40 கோடி), முனாப் படேல் (ரூ 3.17 கோடி), வேணு கோபால் ராவ் (ரூ. 3.17 கோடி), பாலாஜி (ரூ. 2.27 கோடி), வினய் குமார் (ரூ. 2. 15 கோடி), அசோக் டின்டா (ரூ. 1.70 கோடி), கோனி (ரூ. 1.32 கோடி) என, ஏழு வீரர்கள் இளம் இந்திய வீரர்கள் தான் "டாப்-10' ல் இருந்தனர்.


காரணம் என்ன?

கடந்த 2008, 2009ல் நடந்த ஏலத்தில் எல்லாம் பிளின்டாப், பீட்டர்சன், டெய்ட், பாண்டிங், ஷேன் பாண்ட், ஓரம் என வெளிநாட்டு வீரர்களை குறிவைத்து, அதிக தொகையை கொட்டிக் கொடுத்தனர். ஆனால் இவர்கள் தொடர் நடக்கும் நேரங்களில் தங்கள் சொந்த அணிக்காக பங்கேற்க செல்கின்றனர். கிடைக்கும் நேரத்தில் வந்து ஏதாவது 4 போட்டியில் மட்டும் பங்கேற்று, முழு ஒப்பந்த தொகையையும் பெற்று விடுகின்றனர்.


விழிப்பான உரிமையாளர்கள்:

பல கோடிகளை கொடுத்தும், அணி கடைசியில் தோற்க நேரிடுகிறது. இந்திய வீரர்களாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் விளையாட தயாராக இருப்பார்கள். இந்த அனுபவம் தந்த பாடம், அணி உரிமையாளர்களை, ஏலத்தின் போது அதிகமாகவே யோசிக்க வைத்துள்ளது. இதனால் துவக்கத்தில் இருந்த இந்திய இளம் மட்டும் வீரர்களை குறிவைத்து எடுத்தனர்.


இளமைக்கு லாபம்:

இந்திய அணிக்காக ஒருசில போட்டிகளில் மட்டும் பங்கேற்ற அசோக் டின்டா, கோனி, உனத்கட், வினய் குமார் மற்றும் மனோஜ் திவாரி அதிக அறிமுகம் ஆகாத வேணுகோபால் ராவ் கூட கோடிகளில் விலை போனார்கள். அதேநேரம், எத்தனை கங்குலி, கெய்ல், லாரா, ஜெயசூர்யா போன்ற பெரிய சீனியர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.


குறைந்த தொகை:

வெளிநாட்டு வீரர்களில் இலங்கையின் ஜெயவர்தனா மட்டும், அதிகபட்சமாக ரூ. 6.90 கோடிக்கு ஏலம் போனார். கடந்த முறை 3 கோடிக்கும் அதிகமாக பெற்ற ஷான் டெய்ட்டுக்கு, இம்முறை ரூ. 1.36 கோடி தான் கிடைத்தது. 7.5 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்தின் பீட்டர்சனுக்கு, அதே பெங்களூரு அணி இம்முறை 2.95 கோடி ரூபாய் தான் கொடுத்தது.

மொத்தத்தில் இந்திய வீரர்களுக்காக நடத்தப்படும் இந்த தொடர், இளம் வீரர்களுக்கு இம்முறை அதிக லாபகரமாகவே இருந்தது.

ஐ.பி.எல்., தொடரில் 14 லீக் போட்டிகள்

நான்காவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும், தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 2008 ம் ஆண்டு முதல் "டுவென்டி-20' தொடர் நடந்து வருகிறது. நான்காவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர், இந்த ஆண்டு ஏப். 8 ம் தேதி இந்தியாவில் துவங்குகிறது.

இந்த முறை புதிதாக இணைக்கப்பட்ட கொச்சி மற்றும் புனே அணிகளை சேர்த்து, மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதனையடுத்து பங்கேற்கும் அணிகள் மற்றும் அவை மோத உள்ள அணிகளின் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வெளியிட்டுள்ளது.

இதன் படி, 10 அணிகளும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும் சொந்த ஊரில் 7 போட்டிகளிலும்,வெளியூரில் 7 போட்டிகளிலும் விளையாட உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொச்சி, புனே வாரியர்ஸ், கோல்கட்டா, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய 5 அணிகளுக்கு எதிராக உள்ளூரிலும், வெளியூரில் தலா 2 போட்டிகளில் விளையாடும். தவிர, டில்லி, டெக்கான் அணிகளுடன் உள்ளூரிலும், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக வெளியூரிலும் தலா ஒரு போட்டியில் விளையாட உள்ளது.


போட்டி அட்டவணை

அணி எதிரணிகள் (உள்ளூர் மற்றும் வெளியூர்) உள்ளூரில் மட்டும் வெளியூர் மட்டும்

புனே டில்லி,டெக்கான்,பஞ்சாப்,மும்பை,சென்னை கொச்சி,கோல்கட்டா பெங்களூரு, ராஜஸ்தான்

டில்லி டெக்கான்,பஞ்சாப்,மும்பை,புனே,கொச்சி கோல்கட்டா,பெங்களூரு ராஜஸ்தான், சென்னை

டெக்கான் பஞ்சாப்,மும்பை,புனே,டில்லி,கோல்கட்டா பெங்களூரு,ராஜஸ்தான்
சென்னை, கொச்சி

பஞ்சாப் மும்பை,புனே,டில்லி,டெக்கான்,பெங்களூரு ராஜஸ்தான்,சென்னை கொச்சி, கோல்கட்டா

மும்பை புனே,டில்லி,டெக்கான்,பஞ்சாப்,ராஜஸ்தான் சென்னை,கொச்சி கோல்கட்டா, பெங்களூரு

சென்னை கொச்சி,புனே,கோல்கட்டா,பெங்களூரு,ராஜஸ்தான் டில்லி,டெக்கான் பஞ்சாப், மும்பை

கொச்சி கோல்கட்டா,பெங்களூரு,ராஜஸ்தான்,சென்னை,டில்லி டெக்கான்,பஞ்சாப் மும்பை, புனே

கோல்கட்டா பெங்களூரு,ராஜஸ்தான்,சென்னை,கொச்சி,டெக்கான் பஞ்சாப்,மும்பை புனே, டில்லி

பெங்களூரு ராஜஸ்தான்,சென்னை,கொச்சி,கோல்கட்டா,பஞ்சாப் மும்பை,புனே டில்லி,டெக்கான்

ராஜஸ்தான் சென்னை,கொச்சி,கோல்கட்டா,பெங்களூரு,மும்பை புனே,டில்லி டெக்கான், பஞ்சாப்


ரஞ்சி வீரர்களுக்கு வாய்ப்பு

ரஞ்சிக் கோப்பை மற்றும் முதல் தர போட்டிகளில் விளையாடி வரும், இந்திய வீரர்களை நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் தேர்வு செய்ய ஐ.பி.எல்., அணிகளுக்கு பி.சி.சி.ஐ., அனுமதி வழங்கி உள்ளது.

இதன் படி, இத்தொடர்களில் கடந்த 2009ம் ஆண்டுக்குப் பின் காலடி வைத்துள்ள இளம் வீரர்களுக்கு ரூ. 10 லட்சமும், 2006 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரையில் இடம் பெற்ற வீரர்களுக்கு ரூ. 20 லட்சமும், 2005 ம் ஆண்டு முதல் விளையாடி வரும் வீரர்களுக்கு ரூ. 30 லட்சமும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பெங்களூருவில் நடந்த வீரர்கள் ஏலத்தில், ரூ. 40 கோடியை செலவு செய்ய பி.சி.சி.ஐ., அனுமதி அளித்திருந்தது. ஏலத்தில் செலவு செய்தது போக, மீத பணம் வைத்திருக்கும் அணிகள் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வரும் இந்திய வீரர்களை நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் தேர்வு செய்து கொள்ளலாம்.

சர்வதேச வீரர்களைப் போல இவர்களுக்கு 3 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும்.

கங்குலி விலை போகாதது ஏன்?

ஐ.பி.எல்., ஏலத்தில், இந்திய அணியின் "மாஜி' கேப்டன் கங்குலியின் நிலைமை ரொம்ப பரிதாபம். இவரை எந்த ஒரு அணியும் விலைக்கு வாங்க முன்வரவில்லை.

நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நேற்று பெங்களூருவில் நடந்தது. தோனி(சென்னை), சச்சின்(மும்பை) போன்ற நட்சத்திர வீரர்களை அந்தந்த அணிகள் தக்க வைத்துக் கொண்டன.

ஆனால், 38 வயதான கங்குலியை, ஷாருக் கானின் கோல்கட்டா அணி தக்க வைக்க மறுத்தது. இதையடுத்து பொது ஏலத்தில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆரம்பத்தில் இவர் ரூ. 91 லட்சம் பிரிவில் தான் இருந்தார். பின் இவராகவே தனது அடிப்படை தொகையை ரூ. 1.84 கோடி பிரிவுக்கு மாற்றிக் கொண்டார். இங்கு தான் பிரச்னை ஆரம்பமானது. இவருக்கு அதிக தொகை கொடுக்க எந்த ஒரு அணியும் தயாராக இல்லை.

இந்த முறை அனைத்து அணிகளும் இளம் வீரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுத்தன. ரவிந்திர ஜடேஜா, பியுஸ் சாவ்லா போன்ற இளம் வீரர்களை கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கின. ஆனால், மூத்த வீரர்களான கங்குலி, வெஸ்ட் இண்டீசின் லாரா(41 வயது) போன்றவர்களை நிராகரித்தன.

இன்று நடக்கும் இரண்டாவது சுற்று ஏலத்தில் கங்குலியை யாராவது ஏலத்தில் எடுக்க வாய்ப்பு உண்டு. ஆனா<லு<ம் முதல் நாளில் இவரை யாரும் வாங்காதது பெரும் பின்னடைவு தான். கும்ளே போல ஆரம்பத்திலேயே ஐ.பி.எல்., ஏலத்தில் இருந்து விலகியிருக்கலாம்.

இது குறித்து ஏலத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில்,""கங்குலி தனது அடிப்படை விலையை உயர்த்தியது தவறு. தவிர, கடந்த மூன்று ஐ.பி.எல்., தொடர்களில் தனது திறமையை நிரூபிக்கவில்லை. டிராவிட், லட்சுமண் போன்ற வீரர்கள் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், கங்குலி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார். இதன் காரணமாக தான் இவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதே நிலைமை தான் லாராவுக்கும். ஓய்வு பெற்ற இவரும் சர்வதேச போட்டிகளில் சுமார் மூன்று ஆண்டுகளாக பங்கேற்கவில்லை. இவர்கள் மீது கோடிகளை கொடுத்து "ரிஸ்க்' எடுக்க அணிகளின் நிர்வாகிகள் தயாராக இல்லை,''என்றார்.


நேற்றைய ஏலத்தில் விலைபோகாத சில முன்னணி வீரர்கள்:

கங்குலி, முரளி கார்த்திக், மெண்டிஸ், ஸ்வான், ஆண்டர்சன், பெர்னாண்டோ, லூக் ரைட், பவுச்சர், லாரா, கிப்ஸ், ரைடர், கிறிஸ் கெய்ல்.

ஐ.பி.எல். பஞ்சாப் அணி சம்பள பாக்கியை தரவில்லை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியில் இலங்கை வீரர் சங்ககரா, ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஸ் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். அவர்களுக்கும் மற்ற வீரர்களுக்கும் ஒப்பந்தப்படி உரிய சம்பளத்தை முழுமையாக பஞ்சாப் அணி உரிமையாளர்கள் வழங்க வில்லை.

அவர்கள் பல முறை பணத்தை கேட்டும் பஞ்சாப் அணி வழங்காமல் இழுத்தடித்து கொண்டிருந்தது.இதையடுத்து சங்ககரா ஷான்மார்ஸ் இருவரும் இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

இதில் கிரிக்கெட் சங்கம் தலையிட்டு சம்பளத்தை பெற்று தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். இது தொடர்பாக கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் கூறும் போது இந்த பிரச்சினை எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதுபற்றி ஆட்சி மன்ற குழுவில் விவாதித்து இருக்கிறோம் என்றார். ஆனால் இதுபற்றி பஞ்சாப் அணி செய்தி தொடர்பாளர் ஒருவரிடம் கேட்டதற்கு வீரர் களுக்கு அனைத்து சம்பள பாக்கியையும் வழங்கி விட்டோம் என்றார்.

இதே போல ராஜஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் பலருக்கும் முழுமையான சம்பளத்தை இன்னும் வழங்கவில்லை என்றும் புகார்கள் வந்துள்ளன

ஐ.சி.சி. கனவு அணியில் தெண்டுல்கர்- ஷேவாக்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அறிமுகமாகி 40 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி இதுவரை விளையாடிய வீரர்களை வைத்து கனவு அணியை தேர்வு செய்ய ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முடிவு செய்தது. இதற்காக முதலில் 48 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவற்றில் இருந்து 11 வீரர்களை ஐ.சி.சி. இணைய தளம் மூலம் ரசிகர்கள் தேர்வு செய்தனர். 97 நாடுகளில் இருந்து 6 லட்சம் பேர் இதில் வாக்களித்தனர். இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

ஐ.சி.சி. கனவு அணியில் இந்தியாவை சேர்ந்த தெண்டுல்கர், ஷேவாக், முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். டோனி, கும்ப்ளே, ஹர்பஜன், கங்குலிக்கு வாய்ப்பு இல்லை.

2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு (434 ரன்) எதிராக தென் ஆப்பிரிக்கா 438 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது. சிறந்த ஒரு நாள் போட்டியாக தேர்வு செய்யப்பட்டது.

ஒரு நாள் போட்டியில் ஐ.சி.சி. கனவு அணி வருமாறு:-

தொடக்க வீரர்கள்: தெண்டுல்கர், ஷேவாக் (இந்தியா)

மிடில் ஆர்டர்: லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), பாண்டிங் (ஆஸ்திரேலியா).

ஆல்ரவுண்டர்: கபில்தேவ் (இந்தியா).

விக்கெட் கீப்பர்: கில் கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா)

வேகப்பந்து வீரர்கள்: வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்), மெக்ராத் (ஆஸ்திரேலியா) ஆலன் டொனால்டு (தென் ஆப்பிரிக்கா).

சுழற்பந்து வீரர்: முரளீதரன் (இலங்கை)

12-வது வீரர்: பெவன் (ஆஸ்திரேலியா)