வாழ்க்கையில் கனவு காணுங்கள் - சச்சின்

கனவுகள் இல்லாத வாழ்க்கை சுவையற்றது. கனவு காண்பது மிகவும் முக்கியம்,''என, சச்சின் தெரிவித்துள்ளார்.


கிரிக்கெட் உலகின் சாதனை நாயகனாக திகழ்கிறார் இந்தியாவின் சச்சின் (37). ஒருநாள் (17,598), டெஸ்ட் (14,240) என இரண்டிலும் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டு இவருக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் மற்றும் இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்து சாதித்தார். கடந்த 2002க்குப் பின் மீண்டும் சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்தார். ஐ.சி.சி.,யின் சிறந்த வீரர் விருது, இரண்டு ஆசிய விருதுகளை பெற்றார். இப்படி அசத்திக் கொண்டிருந்தாலும், இன்னும் சாதிக்க வேண்டியது அதிகம் உள்ளது என்கிறார் சச்சின். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வழியில், கனவுகள் காண வேண்டும் என்கிறார்.


இது குறித்து லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு சச்சின்


அளித்த பேட்டி:கனவுகள் இல்லாத வாழ்க்கை சுவையற்றதாக இருக்கும். கனவுகள் மிக முக்கியமானவை. ஏனெனில் கனவுகள் இருந்தால் தான், அவற்றை நாம் அடைய முடியும். இந்த கனவுகள் தான் என்னை கடினமாக உழைக்க தூண்டுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டனுடன் இணைந்து, எனது பேட்டிங்கிற்காக கடும் பயிற்சி எடுத்து வருகிறேன். இவரது உதவியில் தான், பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சுதந்திரமாக விளையாட அனுமதிக்கும் அவர், எப்போதாவது சோர்வடைவது போல தெரிந்தால், சிறப்பாக விளையாட தூண்டுவார். கிறிஸ்டன் பயிற்சியாளர் என்பதை விட நல்ல நண்பர் எனலாம்.


எனது அதிர்ஷ்டம்:கடந்த 2005-2006ல் ஆஸ்திரேலியாவின் சாப்பல், என்னை ஓய்வு பெறுமாறு கூறினார். அது அவர் எனக்கு அளித்த "டிப்ஸ்' எனலாம். ஏனெனில் அப்போது விரல், முழங்கை, இடுப்பு என பல வகையிலும் காயத்தால் அவதிப்பட்டேன். அனைத்துமே எனது உடலில் ஏற்பட்ட காயங்கள் தான். இப்போது அவை எல்லாம் மாறி, ஒருமணி நேரம் பயிற்சி செய்ய வேண்டிய தேவை என்றாலும், என்னால் முடிகிறது.இது எனது அதிர்ஷ்டம் தான்.

போட்டிகளில் அபாரமாக செயல்பட விரும்பும் நான், தொடர்ந்து நிலையான மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது எப்படி, சிறந்த போட்டியாளராக இருப்பது எப்படி, பேட்டிங்கில் அடுத்த கட்டத்துக்கு செல்வது எப்படி என கவனம் செலுத்தி வருகிறேன்.

பெரிய எதிர்பார்ப்பு: இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை தொடர் பற்றி தான் எல்லோரும் பேசுகின்றனர். ரசிகர்களுக்கு எங்கள் மீது எதிர்பார்ப்பு வைக்க உரிமை உள்ளது. எனது சொந்த ஊரான மும்பையில் தான் பைனல் என்பதால், பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். கோப்பை கைப்பற்ற நிச்சயமாக பாடுபடுவோம்.
இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.


கிரிக்கெட் மாணவன்

கிரிக்கெட்டில் வியத்தகு சாதனைகள் புரிந்தாலும், தான் இன்னும் மாணவன் தான் என்கிறார் சச்சின். இதுகுறித்து அவர் கூறுகையில்,""என்னுடைய ஆட்டம் மகிழ்ச்சி தருகிறது. ஆனாலும் முழு திருப்தி தரவில்லை. இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். கிரிக்கெட்டில் தொடர்ந்து மாணவனாக இருக்கவே விரும்புகிறேன். அப்போது தான் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்,'' என்றார்.

டுவிட்டர் : இந்திய வீரர்களுக்கு தடை

இந்திய வீரர்கள் "டுவிட்டர்' இணையதளத்தை பயன்படுத்துவதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

"டுவிட்டர்' இணையதளத்தின் மூலம் வெளியிடப்படும் குறுந்தகவல் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்களை சென்றடைகிறது. இதில் இந்தியாவின் சச்சினுக்கு மட்டும் 7,05,374 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இதே தகவல்களால் பல மோசமான முடிவுகளும் ஏற்பட்டுள்ளன. முன்னாள் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி வெளியிட்ட செய்தியால், அவரது பதவியே பறிபோனது. இங்கிலாந்தின் பீட்டர்சன் தேர்வாளர்கள் குறித்து கூறிய தகவலால் அபராதம் கட்டினார். இந்தவரிசையில் இந்தியாவின் யுவராஜ் மற்றும் ரோகித் சர்மாவும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யாதது குறித்து தேர்வாளர்களை கண்டித்து "டுவிட்டரில்' செய்தி வெளியிட்டார் யுவராஜ். தவிர, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான கோவா ஒருநாள் போட்டி குறித்து யுவராஜ் வெளியிட்ட "டுவிட்டர்' செய்தியில்,"" நேற்றிரவு மீண்டும் பெய்த மழையால், "டுவென்டி-20' போல, போட்டி நடக்கும் அல்லது நடக்காமலும் போகும். எப்படியும் மதியம் ஒரு மணிக்கு முன்பாக போட்டி துவங்க வாய்ப்பில்லை,'' என்று வெளியிட்டார்.

ரோகித் அவசரம்:

இதேபோல ரோகித் சர்மா வெளியிட்ட செய்திதான் அதிக பரபரப்பை ஏற்படுத்தியதாம். அதாவது "மேட்ச் ரெப்ரி' கிறிஸ் பிராட், மைதானத்தை சோதனை செய்தபின், முடிவை முறைப்படி அறிவிப்பதற்கு 10 நிமிடம் முன்பாக, ரோகித் சர்மா வெளியிட்ட "டுவிட்டர்' செய்தியில்,"" கோவா போட்டி ரத்து செய்யப்பட்டது,'' என, தெரிவித்தார்.

பி.சி.சி.ஐ., எதிர்ப்பு:

இந்த செய்திகள் பி.சி.சி.ஐ.,க்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" போட்டி நடக்கும் நாட்களில் "டுவிட்டரை' பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்வோம். இது நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து நடைமுறைக்கு வருகிறது,'' என்றார்.

லண்டனில் சச்சினுக்கு விருது

லண்டனில் நடைபெற்ற ஆசிய விருது வழங்கும் விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மக்கள் தேர்வு விருது வழங்கப்பட்டது.

திரைப்படம், விளையாட்டு, வர்த்தகம் என பல்வேறு பிரிவுகளில் முதலாவது ஆசிய விருது வழங்கும் விழா லண்டனில் புதன்கிழமை நடைபெற்றது. லெபாரா நிறுவனம் இந்த விருதுகளை வழங்கியது.

லெபாரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரத்தீசன் யோகநாதன் இந்த விருதை சச்சினுக்கு வழங்கினார்.

விழாவில் அவர் கூறியதாவது: கிரிக்கெட்டில் சச்சின்தான் ஹீரோ. கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் முன்மாதிரியாக சச்சின் உள்ளார். மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் சச்சினும் ஒருவர்.

எதிர்கால சந்ததியினருக்கு தூண்டுகோலாக இருக்கிறார் சச்சின் என்றார் அவர்.

நடிகர் அமிதாப், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தொழிலதிபர் விஜய் மல்லையா, திரைப்படத் தயாரிப்பாளர் யஷ் சோப்ரா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. 2010ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. மக்கள் தேர்வு விருதும் சச்சினுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

மிகவும் வியப்பாக உள்ளது - சச்சின் பெருமிதம்

உலக லெவன் டெஸ்ட் அணியில் பிராட்மேனுடன், என்னையும் சேர்த்து இருப்பதை நம்பவே முடியவில்லை. அதிக வியப்பை தரும் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது,'' என, இந்திய கிரிக்கெட்டின் பேட்டிங் மாஸ்டர் சச்சின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கிய 11 டெஸ்ட் வீரர்களின் பட்டியலை, ஈ.எஸ்.பி.என்., "கிரிக்கின்போ' இணையதளம் வெளியிட்டது. இதில் நான்கு ஆஸ்திரேலிய வீரர்கள், மூன்று வெஸ்ட் இண்டீஸ், இரண்டு இங்கிலாந்து, மற்றும் ஒரு பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போதுள்ள வீரர்களில் இந்தியாவின் சச்சின் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.


மற்றபடி, ஆஸ்திரேலியாவின் பாண்டிங்,மெக்ராத், வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, இந்தியாவின் கபில் தேவ், கவாஸ்கர் ஆகியோருக்கு இடம் கிடைக்க வில்லை. இந்நிலையில் டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 14 ஆயிரம் ரன்களை கடந்து, 50 சதத்தை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விரைவில் படைக்க காத்திருக்கும் சச்சின் (37), உலக லெவன் அணி குறித்து கூறியது:


கிரிக்கெட் ஜாம்பவான்கள் நிறைந்த ஒரு கனவு அணியில் விளையாடுவது என்பது, மிகப்பெரிய வாய்ப்பு ஆகும். டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளைக்குப் பின் பிராட்மேனுடன் இணைந்து களமிறங்குவது அல்லது விவியன் ரிச்சர்ட்சுடன் சேர்ந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைப்பது, கேரி சோபர்சுடன் இணைந்து கிரிக்கெட் குறித்து விவாதிப்பது போன்ற வித்தியாசமான அனுபவங்கள் இதில் கிடைக்கும். இதுபோல மற்ற வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் குறித்து உரையாடலாம். ஜேக் ஹாப்ஸ், லென் ஹட்டன் போன்ற வீரர்கள், தங்களது காலத்தில் எதிர்கொண்ட சிறப்பான பவுலர்கள் மற்றும் கிரிக்கெட் தன்மைகள் குறித்தும் தெரிவிக்குமாறு கேட்கலாம்.


வியப்பு தருகிறது:இதற்குமுன் நான் மால்கம் மார்ஷலுடன் கவுன்டி போட்டியில் பங்கேற்றுள்ளேன். ரிச்சர்சுடன் கண்காட்சி போட்டியில் விளையாடியுள்ளேன். என்னுடைய 12 வயதில் முதன் முதலாக டென்னிஸ் லில்லியை சந்தித்துள்ளேன். பின் 15 வயதில் எம்.ஆர்.எப்., பவுண்டேசனில் இருந்த போது, டென்னிஸ் லில்லி, எனக்கு பவுலிங் செய்துள்ளார். இது மிகவும் "திரில்லான' அனுபவம் ஆகும். இப்போது இவர்கள் எல்லாம் உள்ள அணியில் நானும் இணைந்திருப்பது போன்றது மிகவும் கற்பனையான, வியப்பான அனுபவத்தை தருகிறது.
இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.


அக்ரம் மகிழ்ச்சி:அணியில் இடம் பெற்றது குறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியது:பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவேன் என, எப்போதும் நான் நினைத்ததில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து உலகலெவன் அணியில் நான் மட்டும் இடம்பெற்றிருப்பது மிகவும் "ஸ்பெஷலான' அனுபவம். இதே அணியில் பிராட்மேன், கேரி சோபர்ஸ், ரிச்சர்ட்ஸ், சச்சின் போன்றவர்களையும் தேர்வு செய்திருப்பது பெருமையாக உள்ளது.


நான் பார்த்ததில் இம்ரான் கான் சிறந்த பவுலர் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல, டென்னிஸ் லில்லியும் அசத்தலான பவுலர் தான். ஆனால் இங்கிலாந்து, இந்திய துணைக்கண்டம் மற்றும் ஆஸ்திரேலியா என உலகின் பல இடங்களிலும் சிறப்பாக செயல்பட்ட மால்கம் மார்ஷல் தான் என்னைப் பொறுத்தவரையில் சிறப்பான பவுலர் என நினைக்கிறேன். இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.


இதேபோல உலகலெவன் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் கூறுகையில்,"" கனவு அணியில் நான்கு ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பெற்றுள்ளது பெருமையாக உள்ளது,'' என்றார்.

உலக டெஸ்ட் அணியில் சச்சின் டெண்டுல்கர்

உலக டெஸ்ட் லெவன் அணியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம் பிடித்துள்ளார். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ இணையதளம் வெளியிட்டுள்ள இந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள ஒரே இந்தியர் டெண்டுல்கர் மட்டுமே.

கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன், விவியன் ரிச்சர்ட்ஸ், ஷேன் வார்னே, கேரி சோபர்ஸ் ஆகியோர் உலக லெவன் அணியில் இடம் பெற்றுள்ள மற்ற முக்கிய வீரர்களாவர்.

அணியில் இடம் பெற்றிருப்பவர்களில் 4 பேர் ஆஸ்திரேலிய வீரர்கள்; 3 பேர் மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள்; இருவர் இங்கிலாந்து நாட்டவர்கள்; தலா ஒருவர் இந்திய, பாகிஸ்தான் நாட்டு வீரர்கள்.

உலக லெவன் அணி: ஜேக் ஹாப்ஸ், லென் ஹட்டன், டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், மால்கம் மார்ஷல், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், டெனிஸ் லில்லி.

காவஸ்கர், இம்ரான் கான், முரளீதரன் ஆகியோர் 2வது உலக டெஸ்ட் லெவன் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

டெஸ்ட் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறையவில்லை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மீதான மக்களின் ஆர்வம் குறையவில்லை என தேசிய கிரிக்கெட் வீரர்கள் தேர்வு குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறினார்.

கோவை ஜிஆர்டி அறிவியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவிற்கு தலைமை வகித்து ஸ்ரீகாந்த் பேசியது:

முன்பைக் காட்டிலும் கிரிக்கெட் விளையாட்டில் அதிக பணமும், புகழும் இப்போது கிடைக்கிறது. அதனால் கிரிக்கெட்டில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. எத்தகைய இடையூறுகள் வந்தாலும், வளர்ச்சிப் பாதையில் கிரிக்கெட் பயணம் செய்து கொண்டிருக்கிறது.

20-20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமான பிறகு டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. 20-20 கிரிக்கெட்டை எப்படி ஆர்வமாகப் பார்க்கிறார்களோ அதுபோலவே டெஸ்ட் போட்டியையும் ஆர்வத்தோடு மக்கள் கண்டுகளிக்கின்றனர். அண்மையில் நடந்த இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிக்கு மக்களிடம் இருந்த வரவேற்பே இதற்கு உதாரணம்.

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள்தான் பிற்காலத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். தமிழக கிரிக்கெட் வீரர்களிடம் அனைத்து திறமைகளும் நிறைந்துள்ளன. அவற்றை வெளியே கொண்டுவர அவர்களுக்கு தேவை ஊக்கம் மட்டும்தான். அதனால் விளையாட்டு வீரர்களை மக்களும், ஊடகங்களும் ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் புதிய சாதனைகளை இளம் விளையாட்டு வீரர்கள் படைப்பர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் வேளையில், இந்திய அணியில் சிறந்த பந்து வீச்சாளர்கள் இல்லை என சிலர் குறை கூறுகின்றனர். உலகக் கோப்பையை மனதில் கொண்டு திறமை வாய்ந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கத் துவங்கிவிட்டோம்.

மாணவ, மாணவியர் படிப்பை முடித்தவுடன் எந்தத் துறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து அதில் பணியாற்றலாம். பணியின் மீது அளவு கடந்த பக்தியும், மரியாதையும் இருக்க வேண்டும்.

வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக இருப்பது மனதுக்குள் பதுங்கி இருக்கும் பயம்தான். மனதில் உள்ள பயம் என்னும் தாழ்வு மனப்பான்மையை ஒழித்துக்கட்டிவிட்டால், எத்தகைய சாதனையையும் செய்து காட்டும் அபரிமிதமான சக்தி வெளிப்படும்.

முதலில் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி கடுமையாக உழைக்க வேண்டும். அந்த இலக்கை அடைந்தவுடன் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும், திருப்திக்கும் இணையே கிடையாது என்றார் ஸ்ரீகாந்த்.

சிறந்த வீரராக தெண்டுல்கர் தொடர்ந்து ஜொலிக்க முடியாது

ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்து ரிக்கி பாண்டிங் கூறியதா வது:-

எந்த வீரராலும் தொடர்ந்து சிறப்பாக ஆடுவது கடினம். அதேபோன்ற நிலை எனக்கும் ஏற்பட்டு உள்ளது. நான் ஏற்கனவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். அதை எப்போதும் தொடர முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.

தெண்டுல்கர் மிகச்சிறந்த வீரர். அவர் கூட எப்போதும் ஆட்டத்தில் ஜொலிப்பார் என்று சொல்ல முடியாது. கடந்த ஆண்டில் மட்டும் தெண்டுல்கர் 9 சதம் அடித்து உள்ளார். இது கூட அவருடைய சிறந்த ஆட்டத்தின் வெளிப்பாடு என்று கூறி விட முடியாது. அவர் தொடர்ந்து ஜொலிப்பார் என்றும் சொல்ல முடியாது.

எப்போதும் நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். என்னால் சிறந்த கேப்டனாக தொடர்ந்து செயல்பட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹாட்ரிக் சாதனையாளர்

உலகக் கோப்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்தவர் இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ். இவர் 1974-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி இலங்கையின் மட்டுமகாலாவில் பிறந்தார். இளமையிலேயே சிறந்த இடது கை பந்துவீச்சாளராக மட்டுமன்றி, இடது கை பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்ந்தார்.

இலங்கையின் உள்ளூர் அணியில் விளையாடத் துவங்கிய வாஸ், 1994-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அறிமுக வீரராக களம் கண்டார். ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அதே ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கினார்.

இலங்கையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்களில் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

2001-02-ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரை வெல்ல காரணமாக இருந்தார். அதில் ஒரு டெஸ்டில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆசிய துணைக் கண்டத்திலிருந்து இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அவருக்கு முன் பாகிஸ்தான் வீரர் இம்ரான் கான் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

2003-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தார். அதில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் சாதனையையும் நிகழ்த்தினார்.

2007-ம் ஆண்டு தனது 97-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

2008-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் யுவராஜ் சிங்கை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை எட்டினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

தனது அபார பந்துவீச்சு மூலம் 2004-ம் ஆண்டு ஐசிசியின் உலக டெஸ்ட் மற்றும் ஒருநாள் லெவன் அணிகளில் இடம்பிடித்தார். 2005-ம் ஆண்டிலும் உலக டெஸ்ட் லெவன் அணியில் இடம்பிடித்தார். இதன்மூலம் ஐசிசியின் உலக அணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

15 ஆண்டுகள் இலங்கை அணிக்காக சிறப்பாக ஆடிய வாஸ் 2008-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வாஸ், 355 விக்கெட்டுகளையும், 3,089 ரன்களையும் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 13 அரைசதங்களும் அடங்கும். இதேபோல் 322 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 2,025 ரன்களையும் குவித்துள்ளார்

என்னை கவர்ந்த சச்சின்

இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை "ரோல் மாடலாக' கொண்டிருப்பவர்கள் நிறைய உள்ளனர். இவர்கள் வரிசையில், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதித்த, இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய் குமார் தற்போது இணைந்துள்ளார்.

கடந்த 2006ல் மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்றார் விஜய் குமார். டில்லியில் நடந்த 19வது காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி உட்பட நான்கு பதக்கம் வென்று சாதித்தார்.

இதுகுறித்து விஜய் குமார் கூறியதாவது: டில்லி, காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம் உட்பட நான்கு பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், எனது "ரோல் மாடல்'. இவர், நிறைய இளம் வீரர்களுக்கு "ரோல் மாடலாக' உள்ளார். இதற்கு இவரது கடின உழைப்பு தான் முக்கிய காரணம்.

போட்டியில் சாதிப்பதற்கு சீனியர் வீரர்களான அபினவ் பிந்த்ரா, ஜாஸ்பால் ரானா உள்ளிட்டோரின் ஆலோசனைகள் கைகொடுத்தது. இவர்களது அனுபவத்தை, சிறந்த பாடமாக எடுத்துக் கொண்டதால், சாதிக்க முடிந்தது.

2004ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரத்தோர், இம்முறை காமன்வெல்த் போட்டியில் பங்கேற்காதது ஏமாற்றமான விஷயம். இவரது சமீபத்திய செயல்பாடு சிறப்பாக இல்லாததால், தேர்வு செய்யவில்லை என நினைக்கிறேன். இது இந்திய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் விதிமுறையில் ஒன்று. இம்முறை நான்கு பதக்கம் வென்ற போதிலும், எனது "பார்ம்' சரியாக இல்லையென்றால், அடுத்து நடக்கும் தொடரில் பங்கேற்க முடியாது.

காமன்வெல்த் போட்டியை தொடர்ந்து, வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியிலும் பதக்கம் வெல்ல திட்டமிட்டுள்ளேன். இதற்காக தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சிறிது காலம் எனது குடும்பத்தினருடன் இருந்துவிட்டு, பின் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேவையான பயிற்சி மேற்கொள்ள உள்ளேன்.
இவ்வாறு விஜய் குமார் கூறினார்

நம்பர்-1 இடத்தில் நீடிப்போம்

டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடத்தில் இந்திய அணி, நீண்ட நாட்கள் நீடிக்கும்,'' என ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.


இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்தது. இதில், இந்தியா 2-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் முதலிடத்தை (130 புள்ளிகள்) தக்க வைத்துக் கொண்டது.


இது குறித்து இந்திய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் கூறியது: கடந்த 2008 ம் ஆண்டு முதல் இந்திய அணி, டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சியான விஷயம். இத்தொடரில், 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளேன். எனது செயல்பாடுகள் முழு திருப்தி அளித்துள்ளன.

இந்திய அணி, தற்போது டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலை, நீண்ட நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கிறேன். அணியில் சச்சின், டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட அனுபவ பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றிருப்பது கூடுதல் பலம்.

தவிர, ரெய்னா, முரளி விஜய், புஜாரா உள்ளிட்ட இளம் வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அணியின் பீல்டிங், பவுலிங்கும் பாராட்டும்படியாக உள்ளது. அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், சிறப்பாக செயல்பட்டு வெற்றியை எட்டுவோம். இவ்வாறு ஹர்பஜன் தெரிவித்தார்

சச்சினின் 101 பாராட்டு

காமன்வெல்த் போட்டியில் 101 பதக்கங்களை கைப்பற்றிய இந்திய வீரர்களுக்கு, சச்சின் "101' பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த 19வது காமன்வெல்த் போட்டியில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி மற்றும் 36 வெண்கலம் வென்றது. இதன் மூலம் முதன் முறையாக 101 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன. இதுதொடர்பாக இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், தனது "டுவிட்டர்' இணையதளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதில், ""காமன்வெல்த் போட்டியில் சாதித்து பதக்கம் வென்ற 101 சாம்பியன்களுக்கும், 101 வாழ்த்துக்கள். உங்களது கடின உழைப்பும், பல்வேறு தியாகங்களும் தான் தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. உங்களால், நாங்கள் பெருமைப்படுகிறோம்,'' என, தெரிவித்துள்ளார்.

இதேபோல பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இணையதளத்தில்வெளியிட்ட செய்தி:

காமன்வெல்த் போட்டியை நடத்துவது என்ற பொறுப்பை, நமது நாடு சிறப்பாக செய்து காட்டியுள்ளதை வியந்து பாராட்டுகிறேன். இம்முறை அதிக பதக்கங்கள் பெற்று, காமன்வெல்த் போட்டியில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனை. வீரர்கள் விடா முயற்சியுடன் கடுமையாக போராடியுள்ளனர்.

இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். தொடர்ந்து இதுபோல மனஉறுதியுடனும், வலிமையுடனும் செயல்பட்டு, மிகப்பெரிய வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறேன். "வெல்டன்' இந்தியா!
இவ்வாறு அமிதாப்பச்சன் பாராட்டியுள்ளார்.

சச்சின் மீண்டும் நம்பர்-1

ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 891 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

இதற்கு சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சாதித்ததே காரணம். இத்தொடரில் இவர், ஒரு இரட்டை சதம் <உட்பட 403 ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருது வென்றார். இதன்மூலம் 8 ஆண்டுகளுக்கு பின், டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் சச்சின் முதலிடத்துக்கு முன்னேறினார்.

முன்னதாக கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலிடம் பிடித்திருந்தார். தவிர இவர், 9வது முறையாக ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்தை கைப்பற்றியுள்ளார். முதன்முதலில் இவர் கடந்த 1994ம் ஆண்டு நவம்பர் மாதம் முதலிடம் பிடித்தார்.

இவரை தொடர்ந்து இலங்கையின் சங்ககரா (874 புள்ளி), இந்தியாவின் சேவக் (819 புள்ளி) உள்ளனர். மற்ற இந்திய வீரர்களான ராகுல் டிராவிட் (22வது இடம்), லட்சுமண் (8வது இடம்) தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டனர். பெங்களூரு டெஸ்டில் சதமடித்த தமிழக வீரர் முரளி விஜய், 29 இடங்கள் முன்னேறி 57வது இடம் பிடித்தார்.


ஜாகிர் முன்னேற்றம்:

பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ஜாகிர் கான் (4வது இடம்), ஹர்பஜன் சிங் (8வது இடம்) ஒரு இடம் முன்னேறினர். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பென் ஹில்பெனாஸ், ஒரு இடம் முன்னேறி 19வது இடம் பிடித்தார்.

ஊக்க மருந்து பயன்படுத்திய வீரர்

ஊக்கமருந்து சோதனையில் நைஜீரிய தடகள வீரர் சாமுவேல் ஒகான் சிக்கினார்.
டில்லியில் 19 வது காமன்வெல்த் போட்டி நடக்கிறது.


இத்தொடரில் சுமார் 1,500 பேரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக சர்ச்சைக்குரிய 100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்ட, நைஜீரியாவின் ஒசயேமி ஒலுடமோலா, தடை செய்யப்பட்ட "மெத்தில் எக்சாமின்' என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.


இதையடுத்து தற்காலிகமாக "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, இவர் "பி' சாம்பிள் சோதனை முடிவுக்காக காத்திருக்கிறார். இதிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்படும் பட்சத்தில், இவரது தங்கம் பறிக்கப்படும் அபாயம் உள்ளது.


இதனிடையே நைஜீரியாவைச் சேர்ந்த தடகள வீரர் சாமுவேல் ஒகானும், தடைசெய்யப்பட்ட "மெத்தில் எக்சாமின்' என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணம் ஆகியுள்ளது. இவர் 110 மீ., தடை ஓட்டத்தில் ஆறாவதாக வந்தார். இதனால் இவருக்கு "பி' சாம்பிள் சோதனை நடத்தப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.


பெனல் சோகம்:இதுகுறித்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பெனல் கூறியது: இதுவரை 1200 பேரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தியுள்ளோம். இதில் இரண்டாவது முறையாக நைஜீரிய வீரர் பிடிபட்டுள்ளது வருத்தம் தான்.

மெத்தில் எக்சாமின் என்பது ஊக்கமருந்து மையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வீரர்களுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளோம். ஆனால் பிடிபட்ட இருவரும் ஒரே மாதிரியான பொருளை, ஏன் பயன்படுத்தினார்கள் என தெரியவில்லை.

இதுகுறித்து முதற்கட்ட விசாரணை நடத்த உள்ளோம். ஒருவேளை உணவூட்ட பொருட்கள் மூலம் வந்திருக்கலாம். ஏனெனில் உலகளவில் ஒழுங்கான உணவூட்ட முறைகள் இல்லாமல் தான் உள்ளது. தவிர, இந்த பொருட்கள் எளிதாகவும் கிடைக்கிறது. இது மிகவும் கவலையளிக்கும் விஷயம்.

சர்வதேச ஊக்கமருந்து சோதனை மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ.,) இதுகுறித்து சர்வே எடுக்க குழுவை நியமிக்க வேண்டும். தடைசெய்யப்பட்டுள்ள மருந்துபொருட்கள் குறித்து அதிகப்படியான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


இதுகுறித்து நைஜீரிய அணியின் குழு தலைமை அதிகாரியுடன் விவாதித்தோம். அவர்கள் இதை சீரியசான பிரச்னையாக எடுத்துக் கொண்டுள்ளனர். ஆனால் இது போட்டியின் போது நடத்தப்பட்ட சோதனை தான். அடுத்து சம்பந்தப்பட்ட நாடு மற்றும் சர்வதேச கூட்டமைப்புகள் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தும்.

இவ்வாறு பெனல் தெரிவித்தார்.

தொடர்கிறது சச்சினின் சாதனைப் பயணம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து, டெஸ்ட் போட்டியில் தனது 49வது சதத்தை நிறைவு செய்தார் சச்சின் டெண்டுல்கர் (37).

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை டெஸ்ட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து சச்சின் புதிய சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள்கிழமை, ஆட்டத்தின் 59வது ஓவரில் நாதன் ஹெüரிட்ஸ் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி சதமடித்தார் சச்சின்.

ஒரு நாள் போட்டிகளில் 46 சதங்கள், டெஸ்ட் போட்டிகளில் 49 சதங்கள் என 95 சதங்களுடன், சதத்தில் சதத்தை (100) நெருங்கிக் கொண்டிருக்கிறார் அவர்.

இந்த சதத்தின் மூலம், ஒரே ஆண்டில் 6 சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் சச்சின் படைத்துள்ளார்.

1989 ஆண்டு நவம்பர் 15ம் தேதி தனது 16வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் சச்சின். அன்று முதல் பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

ஆஸ்திரேலியத் தொடருக்கு பின் நியூசிலாந்துடன் இந்திய அணி விளையாட உள்ளது. அந்தத் தொடரில் சச்சின் தனது 50வது டெஸ்ட் சதத்தை நிச்சயம் நிறைவு செய்வார் என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

ஆஸி., வீராங்கனை பதக்கம் பறிப்பு

காமன்வெல்த் 100 மீ., ஓட்டத்தில் வெற்றி பெற்ற, ஆஸ்திரேலிய வீராங்கனை சாலி பியர்சனின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.


டில்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில், சில நாட்களுக்கு முன் நடந்த 96 கி.கி., மல்யுத்த பிரிவின் பைனல் நடந்தது. இதில் நடுவர் மற்றும் இந்திய வீரரருடன் தகாத முறையில் நடந்த, ஆஸ்திரேலிய வீரர் ஹசனே பிக்ரியின் வெள்ளிப்பதக்கம் பறிக்கப்பட்டது.


தற்போது இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய வீராங்கனையின் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெண்கள் 100 மீ., பைனல் நடந்தது. இதில் ஆஸ்திரேலியாவின் சாலி பியர்சன், 11.28 வினாடியில் வந்து தங்கப்பதக்கம் வென்றார். இதில் இங்கிலாந்தின் லாரா டர்னர், தவறாக ஓட முயன்றதாக "ரெட் கார்டு' காட்டப்பட்டு, பின் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவின் பியர்சன் தான் தவறுதலாக ஓடினார் என, இங்கிலாந்து புகார் தெரிவித்தது.


இதுகுறித்து நடந்த விசாரணையில் பியர்சன் தவறு செய்தது தெரியவந்தது. இதனால் அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு, இவரை அடுத்து 11.32 வினாடியில் வந்த நைஜீரியாவின் ஒசயேமி ஒலுடமோலாவுக்கு வழங்கப்பட்டது. காமன்வெல்த் போட்டியில் 100 மீ., ஓட்டத்தை மிக தாமதமாக கடந்த நேரம் இது தான்.
செயின்ட் வின்சென்ட் அண்டு கிரீனிடியன்சின் நடாஷா மேயருக்கு வெள்ளியும் (11.37 வினாடி), இங்கிலாந்தின் கேத்தரினாவுக்கு (11.44 வினாடி) வெண்கலமும் கொடுக்கப்பட்டது.

எனக்குப் பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்

டுவென்டி-20' மற்றும் ஒரு நாள் போட்டிகளை விட, டெஸ்ட் போட்டிகள் தான் எனக்குப் பிடித்தவை,'' என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் தெரிவித்தார்.


இது குறித்து இவர் கூறியது: சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. ஒரு அணி ஆண்டுக்கு 50 ஒரு நாள் மற்றும் 50 "டுவென்டி-20' போட்டிகளில் விளையாடுகிறது.


ஆனால் அதே சமயத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் எப்படி உயிர் பெறும். என்னைப் பொறுத்த வரை, ஒரு நாள் மற்றும் டுவென்டி-20 போட்டிகளை விட, டெஸ்ட் கிரிக்கெட் 100 மடங்கு சிறந்தது.


சிறந்த வீரர்: ஐ.சி.சி., வழங்கிய ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் மக்கள் மனம் கவர்ந்த் வீரர் விருதுகளை வென்ற சச்சினுக்கு எனது வாழ்த்துக்கள். சச்சின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். அவரது சாதனைகளுக்கு அங்கீகாரம் தேவையில்லை. இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.

சச்சினுக்கு இரட்டை ஐ.சி.சி., விருது

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், ஐ.சி.சி., ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் மக்களின் மனம் கவர்ந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார். சிறந்த டெஸ்ட் வீரராக சேவக் தேர்வு செய்யப்பட்டார்.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 2009, ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 2010, ஆகஸ்ட் 10ம் தேதி வரையிலான காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறந்த வீரர்களை ஓட்டெடுப்பு மூலம் 25 பேர் அடங்கிய குழு தேர்வு செய்தது. நேற்று பெங்களூருவில் நடந்த வண்ணமயமான விழாவில் சிறந்த வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை சச்சின் பெற்றார்.


முதல் முறை:இவ்விருதுக்கான காலக் கட்டத்தில் சச்சின் 10 டெஸ்ட் போட்டிகளில் 1064 ரன்கள்(81.84 சராசரி) எடுத்துள்ளார். 17 ஒரு நாள் போட்டிகளில் 914 ரன்கள்(65.28 சராசரி) எடுத்துள்ளார். தவிர, குவாலியர் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். இப்படி சிறப்பாக செயல்பட, ஐ.சி.சி., ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை முதல் முறையாக கைப்பற்றினார். இவர், தென் ஆப்ரிக்காவின் ஹஷிம் ஆம்லா, இங்கிலாந்தின் ஸ்வான் மற்றும் சேவக்கை முந்தி இவ்விருதை வென்றார். தவிர, மக்களின் மனம் கவர்ந்த வீரர் விருதையும் பெற்றார்.


கிறிஸ்டன் காரணம்:இது குறித்து சச்சின் கூறுகையில்,""எனது 21வது ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஐ.சி.சி., விருதை பெற்றுள்ளேன். இதனை பெற கடினமாக பாடுபட்டுள்ளேன். நாட்டுக்காக விளையாடுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வெற்றிக்கு பயிற்சியாளர் கிறிஸ்டன் முக்கிய காரணம். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திறம்பட செயல்பட, சிறந்த பயிற்சி அளித்தார். வலை பயிற்சியின் போது, அவரே பல முறை பவுலிங் செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இது எனது கனவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் கனவு. இதற்காக கடினமாக முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
எனக்கு வழங்கப்பட்ட நாட்டின் உயரிய பத்மபூஷன் விருதையும் முதல் ஐ.சி.சி., விருதையும் ஒப்பிட விரும்பவில்லை. ஆனாலும், பத்ம பூஷன் விருது உண்மையிலேயே "ஸ்பெஷல்' கவுரவம்.
இவ்வாறு சச்சின் கூறினார்.


கேப்டன் தோனி:ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை இந்தியாவின் சேவக் பெற்றார். ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் கைப்பற்றினார். ஐ.சி.சி., உலக டெஸ்ட் லெவன் அணிக்கு கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியில் சச்சின், சேவக், சங்ககரா, ஸ்வான், ஆம்லா, கேடிச், ஸ்டைன், காலிஸ், ஆண்டர்சன், போலிஞ்சர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


ஒரு நாள் போட்டிக்கான உலக லெவன் அணிக்கு கேப்டனாக பாண்டிங் தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியில் சச்சின், வாட்சன், ஹசி, டிவிலியர்ஸ், தோனி, வெட்டோரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


சிறந்த "டுவென்டி-20' வீரர் விருதை நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் பெற்றார். இவர், கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் 56 பந்தில் 116 ரன்கள் விளாசியதை மறக்க முடியாது.


சிறந்த அம்பயர்:வளர்ந்து வரும் வீரருக்கான விருதை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவன் பெற்றார். விளையாட்டு உணர்வை வெளிப்படுத்திய அணிக்கான விருதை நியூசிலாந்து கைப்பற்றியது. சிறந்த அம்பயருக்கான விருதை பாகிஸ்தானின் ஆலீம் தார் தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றார். ஆஸ்திரேலியாவின் ஷெல்லி நிட்ச்கே, ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான ஐ.சி.சி., விருதை கைப்பற்றினார்

இந்தியாவுக்கு தங்க மழை

காமன்வெல்த் போட்டியின் மல்யுத்தத்தில் இந்தியா "ஹாட்ரிக்' தங்கம் வென்றது. ரவிந்தர் சிங், சஞ்சய், அனில் குமார் ஆகியோர் தலா ஒரு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர். துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தத்தில் அசத்திய இந்தியா, நேற்று மட்டும் 5 தங்கப்பதக்கங்களை கைப்பற்றியது.


"ஹாட்ரிக்' தங்கம்:டில்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் மல்யுத்த போட்டிகள் நடந்தன. இதன், "கிரிக்கோ-ரோமன்' 60 கி.கி., பிரிவில் ரவிந்தர் சிங் கலக்கினார். துவக்க சுற்றில் இலங்கையின் குமாராவை 13-0 என வென்றார். பின் அரையிறுதியில் நைஜீரிய வீரர் ரொமேசோ ஜேம்சை வீழ்த்தினார்.


பரபரப்பான இறுதிப் போட்டியில் ரவிந்தர் மற்றும் இங்கிலாந்தின் கிறிஸ்டபர் டெரன்ஸ் போசன் மோதினர். முதல் சுற்றில் ரவிந்தர் 2-0 என முன்னிலை பெற்றார். இரண்டாவது சுற்றில் சற்று திணறினார். ஆனாலும், நுட்பமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிந்தர் 9---0 என்ற கணக்கில் வென்று, மல்யுத்தத்தில் முதல் தங்கம் கைப்பற்றினார். போசன், வெள்ளி மற்றும் நைஜீரியாவின் ரொமேசோ ஜேம்ஸ், வெண்கலம் வென்றனர்.


"கிரிக்கோ-ரோமன்' 74 கி.கி., பிரிவில் இந்தியாவின் சஞ்சய், தங்கம் வென்றார். இவர், தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்ட் பிரயன் அடினாலை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். "கிரிக்கோ-ரோமன்' 96 கி.கி., பிரிவில் மற்றொரு இந்திய வீரரான அனில் குமார், ஆஸ்திரேலியாவின் ஹசன் பகிரியை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.


தங்கம் வென்றது குறித்து ரவிந்தர் கூறுகையில்,""காமன்வெல்த் மல்யுத்தத்தில் "கிரிக்கோ-ரோமன்' பிரிவு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், முதல் தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இம்முறை தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், எளிதில் வெற்றி பெற முடிந்தது,''என்றார்.



அரையிறுதியில் விர்தவால்
நீச்சலில் 50 மீ., "பட்டர் பிளை' பிரிவின், அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் விர்தவால் காடே. நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில், விர்தவால் காடே, அர்ஜுன் முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், 24. 72 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்த காடே, 8 வது இடம் பிடித்தார். அர்ஜூன் 20 வது (26.37 வினாடி) இடம் பிடித்தார். முதல் 16 இடங்கள் பெற்றவர்கள், அரையிறுதிக்கு முன்னேறினர். பாரா ஸ்போர்ட்ஸ் பெண்கள் நீச்சல் (50 மீ., பிரீ ஸ்டைல்) பிரிவில், இந்தியாவின் கிரண் டாக், அன்ஜானி படேல் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.


சோம்தேவ் அசத்தல்
டென்னிஸ், ஆண்களுக்கான ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில், இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், பகாமசின் டேவின் முல்லிங்சை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், சோம்தேவ் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் முல்லிங்சை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக் முன்னேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட்களில், இலங்கையின் தினேஷ்காந்தன், அம்ரேஷ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.


ஏமாற்றம்
பெண்களுக்கான நெட் பால், போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 113-18 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்றைய 2 வது சுற்றுப் போட்டியில், இந்திய அணி, மாலவி அணியை எதிர்கொள்கிறது.


லான் பவுல்சில் கலக்கல்
லான் பவுல்சில், இந்திய அணி நேற்று அசத்தியது. இந்தியாவின் தினேஷ், பிரின்ஸ் ஜோடி 3-1 என்ற செட் கணக்கில் நமீபியாவின் வில்லியம் எராஸ்மஸ், வில்ஜோயன் ஜோடியை வீழ்த்தியது. குரூப் "பி' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியிலும், இந்த ஜோடி 5-1 என்ற செட் கணக்கில் நியூசிலாந்தின் ரிச்சர்ட், டேனி ஜோடியை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில், பிங்கி, டானியா, ரூபா ராணி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய ஜோடி, போட்ஸ்வானாவின் டிபோன், மார்டன், சென்னா நெல்லி ஜோடியை வீழ்த்தியது. இதன் மூலம் லான் பவுல்ஸ் போட்டியில், இந்திய அணி நேற்று "ஹாட்ரிக் வெற்றி' பெற்று அசத்தியது.


குத்துச் சண்டை அபாரம்
குத்துச்சண்டை 64 கி.கி., பிரிவில், இந்திய வீரர் மனோஜ் குமார், சியாரோ லியான் நாட்டை சேர்ந்த டேனியல் லசோயாவை வீழ்த்தினார். 49 கி.கி., குத்துச் சண்டைப் போட்டியில், மற்றொரு இந்திய வீரர் அமன்தீப் சிங், கென்யாவின் பீட்டரை வீழ்த்தினார். இவ்வெற்றியின் மூலம் இந்திய வீரர்கள் இருவரும், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.


வெடிகுண்டு மிரட்டல்
காமன்வெல்த் விளையாட்டு கிராமத்துக்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்தது. டெலிபோனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, அந்த நபர் பெயரை வெளியிட வில்லை. இதனையடுத்து விளையாட்டு கிராமத்தில் உள்ள 34 அடுக்குமாடி குடியிருப்புகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்தனர். தவிர, பிரகதி மெய்டனில் உள்ள மீடியா சென்டரிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இது வெறும் புரளி என டில்லி போலீசார் தெரிவித்தனர். மேலும் டெலிபோனில் பேசிய அந்த சிறுவனை கைது செய்தனர்.


ஹாக்கி: இந்தியா வெற்றி
காமன்வெல்த் போட்டியில், நேற்று நடந்த ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில், இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் பெறுவார்கள் என்ற இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய தங்க மகன்கள் அபினவ்பிந்த்ரா மற்றும் ககன்நரங் வீரமகன்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


இந்தியா தற்போது தங்கம் 5, வெள்ளி 4, வெண்கலம்2 என மொத்தம் 11 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 8 தங்கம், 8 வெள்ளி 3 வெண்கலம் ‌பதக்கம் வென்று பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


நேற்று முன் தினம் துவங்கிய காமன்வெல்த் கோலாகல போட்டியில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தாலும், கோலாகல துவக்க விழாவை அடுத்து இந்தியா தனது பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றிக்கொண்டது.


முதல் நாள் ஆட்டத்தில் பதக்கம் பெற்ற வீரர்கள்:


முதல் நாள் ஆட்டத்தில் நேற்று இந்திய வீராங்கனைகள் பளு தூக்கும் 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சோனியாசானு வெள்ளி பதக்கத்தையும், சந்தியார் ராணி வெண்கலம் பதக்கத்தையும் பெற்றனர். 56 கிலோ பிரிவு பளூதூக்குதல் பிரிவில் இந்திய வீரர்கள் சுகேன் தேவ் வெள்ளி பதக்கமும், ஸ்ரீநிவாசா வி ராவ் வெண்கல பதக்கமும் வென்றனர். நேற்றைய போட்டியில் இந்தியா 2 வெண்கலம், 2 வெள்ளி மொத்தம் 4 பதக்கம் பெற்றது.


இன்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் அபினவ்பிந்த்ரா ,ககன்நரங் ஜோடியினர் வெற்றி பெற்று தங்கம் வென்றனர். ககன் நரங் 99, 100, 100, 99, 100, 100 என மொத்தம் 598 புள்ளிகளையும், அபினவ் பிந்த்ரா, 100, 98, 99, 100, 99, 99 என 595 புள்ளிகளையும் பெற்றனர். இங்கிலாந்து ஜோடியான ஜேம்ஸ் ஹக்கிள், கென்னி பார் 2வது இடத்தையும், வங்கதேசத்தின் அப்துல்லா ஹெல் பாக்கி, முகம்மது ஆசிப் ஹூசேன் கான் 3வது இடத்தையும் பிடித்தனர்.


ஒரே நாளில் 5 வது தங்கம் : அபினவ் பிந்த்ரா - ககன்நரங் ஜோடியினர் தங்கம் வென்ற சில நிமிடங்களில் மீண்டும் ஒரு தங்கம் கிடைத்தது. 25 மீ பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அனீஷா சயீத், ராகி சர்னோபட் ஜோடியினர் மற்றாரு தங்கப் பதக்கத்தை வென்றனர். 50 மீ பிஸ்டல் பிரிவில் தீபக் சர்மா, மற்றும் ஓம்கார் சிங் வெள்ளிப் பதக்கம் ஜோடியினர் வென்றனர். மாலை 60 கிலோ பிரிவில் மல்யுத்த பிரிவில் ரவிந்தர் சிங் இங்கிலாந்து வீரர் கிறிஸ்டோபர் போசனை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல் பளூதூக்குதல் 74 கிலோ கிரேசா ரோமன் பிரிவில் இந்தியாவின் சஞ்சய் தங்கப்பதக்கம் வென்றார். பளூதூக்குதல் 96 கிலோ கிரேசோ ரோமன் பிரிவில் இந்தியாவின் அனில் குமார் தங்கப்பதக்கம் வென்றார்.இதன் மூலம் இந்தியா 5 வது தங்கப்பதக்கத்தை வென்றது.


காமன்வெல்த் போட்டியில் இந்தியா தனது தங்க பதக்க வேட்டையை இன்று துவக்கியிருப்பது இந்தியர்களின் மனதை மகிழ்விக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 7 வது இடத்தில் இருந்த இந்தியா முன்னோக்கி நகர்ந்து வருகிறது.


பதக்க பட்டியலில் முன்னேற்றம் : கடந்த 2002 ம் ஆண்டில் நடந்த கான்வெல்த போட்டியில் இந்தியா துப்பாக்கி வீரர்கள் மொத்தம் 24 பதக்கமும், 2006 ல் மெல்போர்னில் நடந்த போட்டியில் 27 பதக்கமும் பெற்றனர். கடந்த பததக்க பட்டியலில் 22 தங்கம், 17 வெள்ளி 11 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கம் பெற்று பதக்க பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியது.


இந்த முறை இந்தியா தற்போது 2 வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. கடந்த காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலியா 84 தங்கம், , 69 வெள்ளி , 68 வெண்கலம் ‌என மொத்தம் 221 பதக்கம் பெற்று காமன்வெல்த் போட்டியின் சாம்பியனாக திகழ்ந்து வருகிறது

காமன்வெல்த் போட்டி: பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்

காமன்வெல்த் போட்டியில் இந்தியா தனது பதக்க குவிப்பை துவக்கியுள்ளது. தற்போதைய பதக்க பட்டியலில் இந்தியா வெள்ளி, வெண்கலம் என இரண்டு பதக்கங்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. எடை பிரிவு பளுதூக்குதல் வீராங்கனைகள் இந்த பெருமையை இந்தியாவுக்கு தந்துள்ளனர்.


இந்திய நட்சத்திரங்கள் பதக்க வேட்டையை துவக்கி உள்ளனர். இன்று நடந்த 48 கி.கி., எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது.


டில்லியில், 19வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் இன்று பெண்களுக்கான 48 கி.கி., எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் சோனியா சானு, சந்தியா ராணி தேவி உள்ளிட்ட இரண்டு வீராங்கனைகள் பங்கேற்றனர்.


நைஜீரியாவுக்கு தங்கம் கிடைத்தது: இதில் அபாரமாக செயல்பட்ட நைஜீரியாவின் அகஸ்டினா நிகம் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இந்தியாவின் சோனியா சானு 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.


மூன்றாவது இடம் பிடித்த மற்றொரு இந்திய வீராங்கனை சந்தியா ராணி தேவி, வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன்மூலம் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது.