திராவிட் வருகையால் கூடுதல் பலம்: சச்சின் டெண்டுல்கர்

திராவிட் வருகையால் இந்திய கிரிக்கெட் அணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது என்று இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

இதுகுறித்து தில்லியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தின போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு ராகுல் திராவிட் திரும்பி வந்துள்ளார். அவரது வருகை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். இலங்கை, நியூஸிலாந்து அணிகளுடனான முத்தரப்பு நாடுகள் கிரிக்கெட் போட்டியின்போது திராவிட்டின் அனுபவம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பெங்களூரில் நடைபெற்ற 4 நாள் பயிற்சி முகாமுக்குப் பின்னர் இந்திய அணி வீரர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். முகாமுக்குப் பின்னர் வெற்றி பெறும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் களமிறங்குவர்.

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு சோதனையாக இருக்கும் என நினைக்கிறேன். குறிப்பாக ஸ்டிரோக் பிளேயர்களுக்கு இது சவாலாக இருக்கும். இலங்கை மைதானங்கள் எப்போதும் ரன் குவிப்புக்கு உகந்ததல்ல. கூடியவரை சிறப்பாக ஆட முயல்வோம்.

போட்டியில் பங்கேற்கும் 3 அணிகளுமே சமபலம் வாய்ந்ததாக உள்ளன. எனவே யார் சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்று சொல்வது கடினம் என்றார் அவர்

தோனி பெயரில் இன்டர்நெட்டில் "போலிகள்'

இந்திய கேப்டன் தோனி பெயரில், டுவிட்டர் இணையதளத்தில் போலிக் கணக்குகள் துவங்கி ரசிகர்களை ஏமாற்றி வருவது தெரியவந்துள்ளது.

"டுவிட்டர்' எனும் இணையதளம் எஸ்.எம்.எஸ்., தகவல்களை போல் குறுகிய செய்திகளையும், தகவல்களையும், நண்பர்களுக்குள் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள உதவுகிறது. இந்த இணையதளத்தில் கணக்கு வைத்திருப்போருக்கு பிரத்யேக பக்கம் வழங்கப்படுகிறது.

அதில், 140 எழுத்துக்களுக்குள் சுருக் கமான தகவல்களை அனுப்பினால், அத்தகவல் அவருடன் தளத்தில் இணைப்பு பெற்றுள்ள அனைத்து நண்பர்களுக் கும் உடனுக்குடன் சென்றுவிடும். அதைப் போல அவர்கள் அனுப்பும் தகவல்களும் இவர்களுக்கு வந்து சேரும்.

மொபைல் எஸ்.எம்.எஸ்., வழியாகவும், இணையதளம் வழியாகவும் "டுவிட்டர்' தளத்தில் தகவல்களை "அப்டேட்' செய்து கொள்ளமுடியும். ஒரு முறை "அப்டேட்' செய்தாலே அவருடன் நூற்றுக்கணக்கானோர் பேர் தொடர்பு கொண்டிருந்தால் கூட அத்தனை பேருக்கும் உடனடியாக தகவல் சென்று சேர்ந்து விடும்.

இவ்வசதி பெரும் பாலானோரை கவர்ந்து உள்ளதால், இந்த இணையதளத்தில் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சிக்கலில் பிரபலங்கள்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலரது பெயரில் போலி கணக்குகள் டுவிட்டரில் துவங்கப் பட்டுள்ளன. தோனி பெயரில் 4, சச்சின் பெயரில் 7 கணக்குகள் டுவிட்டரில் உள்ளன.

தோனி பெயரில் உள்ள பக்கத்தில் அவரே தனது சொந்த கருத்தை தெரிவித்திருப்பது போல செய்திகள் அவ்வப்போது இடம் பெறும். இதனை உண்மை என நம்பி, ஏராளமானோர் தோனியின் பெயரில் உள்ள கணக்குடன் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் தோனி குடும்பத்தினர், இதை முற்றிலும் மறுத்துள்ளனர். டுவிட்டர் இணையதளத்துடன் தோனிக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து டுவிட்டர் இணையதளத்தில் இணைந்துள்ள பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

இந்திய ஜோடி சாம்பியன்

சீன தைபேயில் நடந்த "கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு' பாட்மின்டன் தொடரின் கலப்பு இரட்டையரில் திஜு, ஜுவாலா கட்டா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் "கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு' தொடரில் சாம்பியன் பட்டம் கைப்பற்றிய முதல் இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.

சீன தைபேயில் "கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு 2009' பாட்மின்டன் தொடர் நடந்தது. இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் திஜு, ஜுவாலா கட்டா ஜோடி, இந்தோனேஷியாவின் ஹென்டிரா அப்ரிடா குணவான், விடா மரிசா ஜோடியை சந்தித்தது.

விறுவிறுப்பான பைனலில் அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 23-21, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் "கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு' பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.


ஜுவாலா கட்டா கூறுகையில், ""இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை என்னால் நம்பமுடியவில்லை. ஒருவேளை நாங்கள் நாடு திரும்பிய பின் இந்த வெற்றியின் மகத்துவத்தை உணர்வேன் என நினைக்கிறேன். நேற்றைய போட்டி எளிதானதாக அமையவில்லை.

எதிரணி யினர் சிறப்பாக செயல்பட்டனர். இருப்பினும், நாங்கள் முழுதிறமையை வெளிப்படுத்தியதால் வெற்றி பெற முடிந்தது,'' என்றார்

மீண்டும் பட்டம் வெல்வாரா பெடரர்

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று அமெரிக்காவில் துவங்குகிறது. ஆண்கள் பிரிவில் ரோஜர் பெடரர் தொடர்ந்து 6வது முறையாக பட்டம் வெல்ல காத்திருக் கிறார்.

நடால், ஆன்டி முர்ரே போன்ற வீரர்களும் பலப்பரீட்சைக்கு தயாராக உள்ளனர். பெண்கள் பிரிவில் செரீனா, சபினா போன்றவர்கள் சாதிக்கலாம். யு.எஸ்., ஓபன்., டென்னிஸ் தொடர் அமெரிக்காவின்
நியூயார்க் நகரில் இன்று துவங்குகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் "நம்பர்-1' வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 5 முறை (2004-2008) பட்டம் வென்றுள்ளார். இவர் 6வது முறையாக பட்டம் வெல்ல வாய்ப்பு உள்ளது. தவிர, 16 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றுவாரா என்ற எதிர் பார்ப்பும் காணப்படுகிறது.

சமீபத்தில் "நம்பர்-2' இடத்தை பிடித்த இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, பெடரருக்கு கடும் போட்டியை தரலாம். கடந்த ஆண்டு பைனலில் பெடரரிடம் தோல்வியடைந்த முர்ரே, இம்முறை பழி தீர்க்க காத்திருக்கிறார்.

காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலும் முதன் முறையாக யு.எஸ்., பட்டம் வெல்லும் நோக்கத்துடன் களமிறங்குகிறார். இவர்கள் தவிர, ஜோகோவிச், டேவிட் பெரர் போன்ற முன்னணி வீரர்களும் பங்கேற்கிறார்கள்.

சாதிப்பாரா செரீனா?: பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 12 வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சக நாட்டு வீராங்கனை பில்லி ஜீன் கிங் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லாமல் "நம்பர்-1' இடத் தில் உள்ள ரஷ்யாவின் டினரா சபினா, இம்முறை பட்டம் வெல்ல போராடுவார். தவிர, வீனஸ் வில்லியம்ஸ், செர்பியாவின் ஜான்கோவிச், இவானோவிச் போன்ற முன்னணி வீராங்கனைகள் மோத உள்ளனர்.

முதல் முறையாக சோம்தேவ்...யு.எஸ்., ஓபனில் சோம்தேவ் தேவ்வர்மன் முதல் முறையாக பங்கேற் கிறார். கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா சார்பில் கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் முதல் வீரராகிறார். இதற்கு முன் பிரகாஷ் அமிர்தராஜ் 2002ல் நடந்த யு.எஸ்., ஓபன் தொடரில் பங்கேற்றார். முதல் சுற்றில் சோம்தேவ், போர்ச்சுகலின் பெர்டரி கோவை எதிர்கொள்கிறார். தகுதி சுற்று போட்டி களில் அசத்தலாக ஆடிய சோம் தேவ், இம் முறை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தலாம்.

நம்பர் 1 இடத்தை தக்க வைப்போம்

டெஸ்ட் கிரிக்கெட் அணி தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா நம்பர் 1 இடத்தில் உள்ளது. இது தொடர்பாக தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியதாவது:-

நம்பர் 1 இடத்தை தக்க வைப்பதே எங்களின் ஒரே நோக்கமாகும் இதற்காக புதிய அணுகு முறைகளை உருவாக்கி போட்டியை சந்திப்போம். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றோம்.

அடுத்து இங்கிலாந்துடன் மோத உள்ள போட்டியிலும் செல்ல வேண்டும் என்பது எங்களது குறிக்கோள். அதே போல ஒரு நாள் போட்டியிலும் சந்திப்போம்.


இவ்வாறு அவர் கூறினார்.

சச்சினிடம் பேட்டிங் பயிற்சி பெற ஆஸ்திரேலிய வீரர் விருப்பம்

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரிடம் பேட்டிங் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள விரும்புவதாக ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் பில் ஹக்ஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து மெல்போர்னில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

சிறு வயதிலிருந்தே சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்து மயங்கியவன் நான். தற்போது இந்தியாவின் நாக்பூரில் எனது பயிற்சியாளருடன் பயிற்சிக்காக வந்துள்ளேன். சச்சின் டெண்டுல்கரிடம் பேட்டிங் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள ஆசை. இதற்காக மும்பை சென்று சச்சினை சந்திப்பேன்.

தொடர்ந்து 19 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது சாதாரண விஷயமல்ல. அவரிடம் மாணவனாக பயிற்சி பெற ஆசைப்படுகிறேன் என்றார் அவர்

உலக கோப்பையில் சாதிப்போம்

அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்க உள்ள உலககோப்பை ஹாக்கி தொடரில், இந்திய அணி சாதிக்கும்,'' என்கிறார் கேப்டன் சந்தீப் சிங்.

ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளது இந்திய ஹாக்கி அணி. இந்தப் பயணம் அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் சாதிக்க, தன்னம்பிக்கை அளித்துள்ளதாக இந்திய கேப்டன் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:உலககோப்பை தொடருக்கு இந்திய ஹாக்கி அணி, தீவிரமாக தயாராகி வருகிறது. இதில் பங்கேற்கும் முன்னணி அணிகளுக்கு இந்தியா அதிர்ச்சி அளிக்கும் என எதிர்பார்க்கிறேன். வீரர்கள் அனைவரும் முழு உடற் தகுதியுடன் உள்ளனர்.

தலைமை பயிற்சியாளர் ஜோஸ் பிராசா, பயிற்சியாளர் ஹரேந்திர சிங் இருவரும் உலக கோப்பை மற்றும் காமன்வெல்த் போட்டிகளுக்கு அணியை தயார்படுத்தி வருகின்றனர். ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற நான்கு டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது பற்றி வருத்தம் இல்லை.

தொடர்களில் இந்திய அணி எப்படி செயல்பட்டது என்பதே முக்கியம். எங்க ளுக்கு தற்போது பயிற்சி தான் முக்கியம். அந்தப் பயிற்சி ஐரோப்பிய பயணத்தில் நிறைய கிடைத்தது. இவ்வாறு சந்தீப் கூறினார்.

பாண்டிங் சிறந்த கேப்டன்

ஆஷஸ் தொடரின் தோல்விக்கு கேப்டன் பாண்டிங் காரணமில்லை. அவர் மிகச் சிறந்த கேப்டன்,'' என, மைக்கேல் கிளார்க் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

இதற்குப் பின் பேட்டி அளித்த ரிக்கி பாண்டிங், கேப்டன் பொறுப்பை மைக்கேல் கிளார்க்கிடம் பிரித்து கொடுப்பது பற்றி வெளிப்படையாகவே தெரிவித்தார். இது குறித்து பேட்டி அளித்த மைக்கேல் கிளார்க் கூறியதாவது:தற்போதைய சூழ்நிலையில் கேப்டன் பதவியை ஒரு பிரச்னையாக கருதவில்லை.

பாண்டிங் தான் அணியின் கேப்டன். டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டுவென்டி-20' என கிரிக்கெட்டின் அனைத்துபரிமாணங்களிலும் திறமையாக விளையாடக்கூடியவர் பாண்டிங். சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரிலும் பாண்டிங் சிறப்பாக ஆடினார்.

நான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தது முதல், பாண்டிங்கிடம் இருந்து பல ஆலோசனைகளை பெற்று வருகிறேன். அவரது தலைமையின் கீழ் போட்டிகளில் பங்கேற்பது மகிழ்ச்சியான விஷயம். இவ்வாறு கிளார்க் தெரிவித்தார்.மற்றொரு முன்னணி வீரர் சைமன் காடிச்சும், பாண்டிங்கிற்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"" ஆஷஸ் தொடரில் பாண்டிங் சிறப்பாகவே செயல்பட்டார்.

அணியின் தோல்விக்கு அவர் மட்டும் காரணமல்ல. நான் உட்பட அணியில் இடம் பெற்ற வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வில்லை,'' என்றார்.


பயிற்சியில் இந்திய வீரர்கள்

இரண்டு மாத இடைவெளிக்கு பின்பு இந்திய கிரிக்கெட் வீரர்கள், நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்பு தோனி தலைமையிலான இந்திய அணியினர் நீண்ட ஓய்வில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் செப்டம்பர் முதல் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியினர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இலங்கையில் முத்தரப்பு ஒருநாள்,தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ்டிராபி தொடர் என வரஇருக்கும் போட்டிகளுக்காக வீரர்கள் தற்போது தயாராகிவருகிறார்கள். இதற்கான பயிற்சி முகாம் பெங்களூருவில் நேற்று முன்தினம் துவங்கியது.

முதல் நாளில் வீரர்களுக்கு உடற்தகுதி சோதனை நடந்தது. இரண்டாவது நாளாக நேற்று 15 வீரர்களும் நீண்ட நாட்களுக்கு பின் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.இந்த முகாம் நாளை முடிவடைகிறது.

இதுகுறித்து கிறிஸ்டன் கூறுகையில்,""நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும் வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை பெற முயற்சிக்கும். நடக்கவுள்ள கார்பரேட் டிராபி தொடர், இலங்கை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கு நல்ல பயிற்சிக் களமாக அமையும்,'' என்றார்.

மணிப்பூரில் அமைதி :கேல் ரத்னா விருது பெறும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கூறுகையில்,""மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. கடந்த 2006ல் எனது மாமனார் சுட்டுக் கொல்லப்பட்டார். யார் சுட்டார்கள்? எதற்காக சுட்டார்கள்? என்ற விபரம் இன்று வரை தெரியவில்லை. விருது பெறும் இந்த தருணத்தில்,
மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டுமென பிரார்த்திக் கிறேன். வரும் 2012ல் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல் வதே எனது கனவு,'' என்றார்.

சச்சின் உதாரணம்:கேல் ரத்னா விருது பெறும் உற்சாகத்தில் உள்ள ஒலிம்பிக் வெண்கல நாயகன் விஜேந்தர் கூறுகையில்,""உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இது வரை சாதித்தது இல்லை. இக்குறையை வரும் செப்.,1ம் தேதி இத்தாலியில் துவங்கும் உலக குத்துச்சண்டைபோட்டியில் போக்க காத்திருக்கிறேன். நாட்டுக்கு முதல் பதக்கம் பெற்று தருவதே இலக்கு. நான் அதிகமாக கிரிக்கெட் பார்ப்பதில்லை. ஆனாலும் சச்சினை பார்த்து வியந்திருக்கிறேன். நீண்ட காலமாக விளையாடி வரும் இவர், மிகுந்த ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறார். சிறிய சர்ச்சையில் கூட சிக்கியதில்லை. இவரை சிறந்த முன்னுதாரணமாககொள்ளலாம்,''என்றார்.

மல்யுத்தம் அங்கீகாரம்:ஒலிம்பிக் வெண்கல நாயகன் சுஷில் குமார் கூறுகையில்,""ராஜிவ் கேல் ரத்னா விருது மூலம் நாட்டில் மல்யுத்த போட்டிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த விருதை எனது பெற்றோர், பயிற்சியாளர் சத்பால்ஜிக்கு அர்ப்பணிக்கிறேன். காய்ச்சல் மற்றும் குறைந்த ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட்ட நிலையில் இன்றைய விருது வழங்கும் நிகழ்ச்சியில் நிச்சயமாக பங்கேற் பேன்,'' என்றார்

கேப்டன் பதவியில் விருப்பம் இல்லை

இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா இழந்தது. இந்த தொடரை இழந்த 2-வது ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் ஆவார். இதனால் அவர் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார்.

கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையே கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க தயாராக இருப்பதாக பாண்டிங் தெரிவித்தார். அதன்படி டெஸ்ட் போட்டிக்கு தானும் 20 ஓவர் போட்டி, ஒரு நாள் போட்டிக்கு மைக்கேல் கிளார்க்கும் கேப்டனாக இருக்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

இதை ஏற்க கிளார்க் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எனக்கு கேப்டன் பதவியில் ஆர்வம் இல்லை. தற்போதுள்ள நிலையில் ஒரே ஒரு கேப்டன்தான் தேவை. பாண்டிங் தான் எனது கேப்டன். அவர் ஒரு சிறந்த கேப்டன்.

ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் வெற்றி போராடுகிறோம். டெஸ்ட் தொடரை இழந்ததால் நாங்கள் துவண்டு விடவில்லை. ஒரு நாள் தொடரில் வெற்றி பெறுவோம். சாம்பியன் டிராபியில் சிறப்பாக ஆடுவோம்.

இவ்வாறு கிளார்க் கூறியுள்ளார்

உலக கோப்பை பிரச்னைக்கு தீர்வு : ஐ.சி.சி., - பாக்., சமரசம்

பாகிஸ்தானுக்கு உலக கோப்பை வாய்ப்பு மறுக்கப் பட்ட பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டது. இதன்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும். ஐ.சி.சி., மீதான சட்டப்பூர்வ நடவடிக்கையை பாகிஸ்தான் கைவிடும்.

வரும் 2011ல் உலக கோப்பை தொடர் இந்திய துணை கண்டத் தில் நடக்க உள்ளது. இதில், பாகிஸ்தானில் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கு விளையாட ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பெரும் பாலான அணிகள் மறுத்தன. இந்தச் சூழலில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த, பிரச்னை பெரிதானது. வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் பாகிஸ்தானில் 2011ல் உலக கோப்பை போட்டிகளை நடத்த ஐ.சி.சி., உரிமை மறுத்தது. இங்கு நடக்க இருந்த 14 போட்டிகள் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடக்கும் என அறிவித்தது. தவிர உலக கோப்பை தலைமையகத்தை லாகூரில் இருந்து மும்பைக்கு மாற்றியது.

துபாயில் பேச்சு: இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கை எடுத் தது. லாகூர் கோர்ட்டில் ஐ.சி.சி., மீது வழக்கு தொடுத்தது. பின்னர் பிரச்னைக்கு கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண முடிவு செய்தது. இது தொடர்பாக துபாயில் நேற்று ஐ.சி.சி., தலைவர் டேவிட் மோர்கன் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர்(பி.சி.பி.,) இஜாஸ் பட் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி போட்டியை நடத்துவதற்கான உரிமை தொகை சுமார் ரூ. 50 கோடி பாகிஸ்தானுக்கு வழங்கப் படும். தவிர பாகிஸ்தான் மண்ணில் போட்டியை நடத்தாததால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட போதுமான தொகையை அளிக்க ஐ.சி.சி., முன் வந்தது. இதை ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான், ஐ.சி.சி., மீது தொடுத்துள்ள வழக்குகளை திரும்ப பெற சம்மதம் தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்ததில் ஐ.சி.சி., மற்றும் பி.சி.பி., அதிகாரிகள் கைகெயழுத்திடுகின்றனர். இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்துவதில் இருந்த சிக்கல் முழுமையாக தீர்ந்துள்ளது.

இது குறித்து பி.சி.பி., தலைவர் இஜாஸ் பட் கூறியது: ஐ.சி.சி.,யுடன் ஏற்பட்ட உடன்பாடு மிகவும் திருப்தி அளிக்கிறது. பாகிஸ்தானில் கிரிக்கெட் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கு முன்னுரிமை அளித்தோம். பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டது உலக கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்லது. இதன் மூலம் 2011ல் உலக கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. பாகிஸ்தானில் மிக விரைவில் சர்வதேச போட்டிகள் நடக்கும். இங்குள்ள பாதுகாப்பு குறித்து ஐ.சி.சி., மற்றும் அதன் சிறப்பு பாதுகாப்பு ஆலோசகர்கள், மற்ற அணிகள் திருப்தி தெரிவிக்கும் போது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடக்கும். இவ்வாறு இஜாஸ் பட் கூறினார்.

தோனியை சந்திக்க கடையை விற்ற ரசிகர்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சந்திக்க தனது கடையையே விற்றுள்ளார் ஒரு ரசிகர்.

ஆச்சரியமாக இருக்கிறதா? மேற்கொண்டு படியுங்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம் சஹரங்பூரைச் சேர்ந்தவர் ரவீந்திர குமார் சைனி (23). தோனியை சந்தித்து ரவீந்திர குமார் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவரது காதலி விரும்பியுள்ளார்.

அதற்காக தனது சிடி கடையை விற்றுவிட்டு தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் வந்து தங்கிவிட்டார் சைனி.

ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, கடந்த 35 நாள்களாக தோனியை சந்திக்க பல வழிகளில் அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அந்த பொன்னான நேரம் அவருக்கு புதன்கிழமை அமைந்தது. மும்பை செல்வதற்காக ராஞ்சி விமான நிலையத்துக்கு தோனி வந்துள்ளார். அந்த நேரத்தில் பாதுகாப்பு வீரர்களின் கெடுபிடி குறைவாக இருந்ததால் தோனியுடன் சைனி கை குலுக்கினார்.

அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் உடனடியாக "கிளிக்' செய்தனர். சைனிக்கு அந்த புகைப்படத்தை தருவதாகவும் உறுதி அளித்தனர்.

"ராஞ்சியில் சைனி நீண்ட நாள்களாகத் தங்கியிருப்பது தெரியவந்தது. தோனியை சந்திக்க என்னைத் தொடர்பு கொண்டார். தற்போது அவரது கனவு நனவாகியுள்ளது' என தோனியின் நண்பர் அனிமேஷ் குமார் என்பவர் தெரிவித்தார்

அணியின் முன்னேற்றம் முக்கியம்: கங்குலி

கோல்கட்டா அணிக்கு யார் பயிற்சியாளராக வரப்போகிறார் என்பது பற்றி கவலையில்லை. அணியை சிறப்பான நிலைக்கு கொண்டுவருவது பற்றி தான் அதிகம் கவனம் செலுத்துகிறேன்,'' என கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்து ஓய்வு பெற்றவர் கங்குலி. முதல் ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார். பின் இந்த ஆண்டு நடந்த தொடரில் பயிற்சியாளர் புக்கானனின் "வித்தி யாசமான' யோசனையால் பதவி இழந்தார். இந்நிலையில் கோல் கட்டா அணியின் கேப்டன் பதவிக்கு மீண்டும் இவர் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வும் நீண்ட காலமாக நடக்கிறது. இதில் புதிது புதிதாக பெயர்கள் தேர்வு செய்யப்படுகிறது. இவ்வரிசையில் கடைசியாக நுழைந்
துள்ளவர் பாகிஸ்தானின் அக்ரம். ஆனால் இதெல்லாம் தனது கவலையில்லை. அணியின் நிலை தான் கவலையாக உள்ளது என்கிறார் கங்குலி.

இதுகுறித்து அவர் கூறியது:கோல்கட்டா அணி நிர்வாகம் பயிற்சியாளர் தேர்வில் ஈடுபட்டு உள்ளது. அணி உரிமையாளர்கள் ஷாருக்கான், ஜாய் மேத்தா இருவரும் எப்படியும் இம்மாத இறுதிக்குள் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்து விடுவார்கள். அவர்கள் இதற்கு சரியான நபரை தேர்வு செய்வது உறுதி. அவர் பிரபலமானவராக இருப்பார் என நம்புகிறோம்.

அணிதான் முக்கியம்: என்னுடைய கவலை எல்லாம் பயிற்சியாளராக யார் வரப்போகிறார் என்பதல்ல. அணியை பற்றித்தான் மிகவும் கவலைப்படுகிறேன். அணிக்காக நிறைய நேரம் செலவழித்து, நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சிக்க போகிறேன். கடந்த தொடர்களில் செய்த தவறுகளை மறந்து விட்டு, மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக விளையாட முயற்சிப் போம்.

முன்னிலையில் ஜான்ரைட்: கோல்கட்டா அணிக்கு பயிற்சியாளர் தேர்வில் ஜான் ரைட் முதலில் நிற்பார். அவர் சிறந்த மனிதர். அவரை தாண்டி வேறு பக்கம் செல்லமாட்டோம். ஏற்கனவே எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு உள்ளது. அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது என்னுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டார்.

"கிரேட்' அக்ரம்: அதுபோல வாசிம் அக்ரத்தை பற்றி எனக்கு நன்கு தெரியும். அவருடன் சிறந்த நட்பு உள்ளது. அவர் மிகப்பெரிய பவுலர். ஷாருக்கான் அவரிடம் போனில் பேசியுள்ளார். எனவே அவரும் சிறந்த தேர்வாக இருக்க லாம்.கோல்கட்டா கிரிக்கெட் முன் னேற்ற சங்கத்தின் தலைவராகி உள்ளேன். மாநில அணியின் முன் னேற்றத்திற்கு தகுந்த திட்டங்கள் வைத்துள்ளேன். அவற்றை நடை முறைப்படுத்து வதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அப்போது தான் நல்ல நிலைக்கு வர இயலும். இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

பயிற்சியாளராகிறார் அக்ரம்

கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளராக பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட்டும் போட்டியில் உள்ளார்.

ஐ.பி.எல்., அணிகளுள் ஒன்று கோல்கட்டா நைட் ரைடர்ஸ். தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது கட்ட ஐ.பி.எல்., தொடருக்கு பின் பயிற்சியாளர் புக்கானனை அதிரடியாக, அணி நிர்வாகம் நீக்கியது. கேப்டன் மெக்கலமும் அடுத்த தொடரில் பங்கேற்க முடியாது என தெரிவித்தார். இதையடுத்து அணிக்கு புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தேவைப்பட்டனர். கேப்டன் பதவிக்கு ஏறக்குறைய மீண்டும் கங்குலி தேர்வு செய்யப்படலாம் எனத்தெரிகிறது. பயிற்சியாளர் பதவிக்கு நேர்முகத்தேர்வை அணியின் உரிமையாளர் ஷாருக்கான், கங்குலி, இணைந்து நடத்துகிறார்கள்.

கடந்த 23ம் தேதி நடந்த நேர்முகத்தேர்வில், முன்னாள் இந்திய வீரர் டபிள்யூ.வி.ராமன், ஆஸ்திரேலியாவின் பெவன், இங்கிலாந்தின் டெர்மட் ரீவ் கலந்து கொண்டனர். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் நியூசிலாந்தின் ஜான் ரைட் மற்றும் முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் இந்த வார இறுதியில் தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் புதியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில்,""கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்தில் இருந்து பயிற்சியாளர் பதவிக்கு என்னை அணுகியது உண்மைதான். இதற்காக வரும் வாரம் நடக்கவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வருமாறு ஷாருக்கான் என்னிடம் போனில் தெரிவித்தார்,'' என்றார்.

ஆர்வம் இல்லை: கோல்கட்டா அணிக்கான பயிற்சியாளர் போட்டியில் இருக்கும் நான்கு நபர்களில் அக்ரம் இருப்பது உறுதி. ஆனால் அக்ரம் முழுநேர பயிற்சியாளர் ஆவதை விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதற்கு பதில், பவுலிங் பயிற்சியாளர் பொறுப்பை மட்டும் அக்ரம் விரும்புவதாக தெரிகிறது

ரோஜர் பெடரர் சாம்பியன்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் உலகின் "நம்பர்-1' வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டிநகரில் ஏ.டி.பி.,சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன்ஒற்றையர் பைனலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் நோவக் டோகோவிச்சை சந்தித்தார். விறுவிறுப் பான பைனலின் முதல் செட்டை பெடரர் 6-1 என கைப்பற்றினார்.

தொடர்ந்து அபாரமாக ஆடிய பெடரர் இரண்டாவது செட்டை 7-5 என சற்று போராடி தன்வசப்படுத்தினார். இறுதியில் பெடரர் 6-1, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் இத்தொடரில் மூன்றாவது முறையாக (2005, 2007, 2009) சாம்பியன் பட்டம் வென்றார் பெடரர். இரட் டையர் பைனலில் கனடாவின் டேனியல் நெஸ்டர், செர்பியாவின் நினாட் ஜிமோன் ஜிக் ஜோடி, அமெரிக்காவின் பாப், மைக் பிரையான் ஜோடியை 3-6, 7-6, 15-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.

டென்னிஸ் தரவரிசை: சானியா முன்னேற்றம்

தர வரிசையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா முன்னேறியுள்ளார்.

டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தர வரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

மகளிர் ஒற்றையர் தரவரிசையில் சானியா மிர்சா 3 இடங்கள் முன்னேறி 71-வது இடத்துக்குச் சென்றுள்ளார். ஆனால் இரட்டையர் தரவரிசையில் 44-வது இடத்திலிருந்து அவர் 46-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் சோம்தேவ் வர்மன் 161-வது இடத்தில் உள்ளார்

நம்பமுடியாத' ஆஷஸ் வெற்றி:கேப்டன் ஸ்டிராஸ்

எப்போது ஆஷஸ் கோப்பை வென்றாலும், அது நம்பமுடியாத அளவுக்கு மகிழ்ச்சியைத் தரும்,'' என இங்கிலாந்துஅணியின் கேப்டன் ஸ்டிராஸ் பெருமிதப்பட்டுள்ளார்.தோல்வி குறித்து குறிப்பிட்ட, ஆஸி., கேப்டன் பாண்டிங்,"அணியில் இளம் வீரர்களே இடம்பெற்றுள்ளனர்.

அனுபவ வீரர்கள் இல்லாததால்தான் தோல்வி அடைந்தோம். மீண்டும் கோப்பை வெல்வோம்' என்றார்.

இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் ஓவலில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆஷஸ் கோப்பையை, மீண்டும் கைப்பற்றியது.

இதுகுறித்து தொடர் நாயகன் விருது வென்ற அணியின் கேப்டன் ஸ்டிராஸ் கூறியது:இது வியப்பை ஏற்படுத்திய நாள். கடந்த நான்காவது டெஸ்டில் நாங்கள் தோல்வியடைந்த பின், இந்த போட்டியில் மீண்டும் வெற்றி பெறுவது எவ்வளவு கடினமானது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் வீரர்கள் இதற்காக கடினமாக போராடினர்.

அந்த நாள் எங்களுக்கு நம்பிக்கை, ஏமாற்றம், கவலை மற்றும் உறுதிப்பாடு என்று அத்தனை உணர்ச்சிகளையும் கொண்டதாக இருந்தது.இளம் வீரர்கள் கொண்ட எங்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் சரியான முறையில் செயல்படவில்லை. இப்போதுதான் தேறிவருகிறார்கள்.


என்றாலும் முதல் இரண்டு போட்டிக்கு பின் ஸ்டூவர்ட் பிராட் அசத்தலாக செயல்பட்டு அணியின் வெற்றியில் பங்குவகித்தார். இவ்வாறு ஸ்டிராஸ் கூறினார்.

பிராட்டுக்கு பாராட்டு: பிராட் குறித்து இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் கூறுகையில்,""பிளின்டாப் ஓய்வு பெறுவதால் ஏற்படும் வெற்றிடத்தை, பிராட் உறுதியாக நிரப்புவார்,'' என்றார்.

மீண்டு வருவோம்: தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் கூறுகையில்,"" போட்டிகளில் அல்லது தொடரில் தோற்பது எல்லாம் கிரிக்கெட்டின் ஒரு பகுதிதான். வார்ன், மெக்ராத் இல்லாத பின் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அணியை சரிசெய்து வருகிறோம். அணியில் உள்ள இளம் வீரர்கள், சில டெஸ்ட் போட்டிகளில் தான் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இங்கு சிறப்பாகவே விளையாடினர். அடுத்த ஆஷஸ் தொடரில் இங்குவந்து விளையாட வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அப்போது மீண்டும் கோப்பை வெல்வோம்,'' என்றார்.


நான்காவது இடத்தில் ஆஸி.,கடந்த 2003ல் டெஸ்ட் போட்டிக்கு ரேங்கிங் முறை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே ஆஸ்திரேலிய அணிதான் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டு வந்தது. தற்போது ஆஷஸ் தோல்வியால் 8 புள்ளிகளை இழந்துள்ள பாண்டிங் அணி, முதன் முறையாகமுதலிடத்தை இழந்து, (116) நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 122 புள்ளிகளுடன் முதலிடத்தில்தென் ஆப்ரிக்காவும், தலா 119 புள்ளிகளுடன் இலங்கை, இந்திய அணிகள், 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளது.


வீரர்கள் தேர்வில் தவறுஆஸ்திரேலிய அணியின் தோல்வி குறித்து ஓய்வு பெற்றஆஸ்திரேலிய பவுலர் வார்ன் கூறுகையில்,"" ஆஸ்திரேலிய அணியினர் ஆடுகளத்தை தவறாக கணித்து விட்டனர். ஹவுரிட்சை தேர்வு செய்யாதது ஏன் எனத் தெரியவில்லை. இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் பிராட்டின் எழுச்சிதான் தோல்விக்கு காரணம். இது லார்ட்சில் பிளின்டாப் செயல்பட்டது போல் இருந்தது,'' என்றார்

இது டிராவிட் விருப்பம்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முன்பாக மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும்,'' என்கிறார் இந்திய வீரர் டிராவிட்.இந்திய அணியின் முன்னணி வீரர் டிராவிட்.

கடந்த 2007ல் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். அதிசயமாக மீண்டும் ஒருநாள் அணியில் தற்போது வாய்ப்பு பெற்றுள்ள டிராவிட், டி.ஒய். பாட்டீல் இணையதளத்தை அறிமுகம் செய்துவைத்து பேசியது:டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் அனைத்து வசதிகளும் வியக்கத்தக்க வகையில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மைதானம் கட்ட ஆரம்பித்தனர். அப்போது ஐ.பி.எல்., தொடர் இல்லை. இதனால் கடந்த ஆண்டு இங்கு நடந்த ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முன்பாக இந்த மைதானத்தில் ஒரு சர்வதேச போட்டியிலாவது பங்கேற்க வேண்டும். அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு டிராவிட் தெரிவித்தார்.

3வது தங்கம் வென்றார் போல்ட்

உலக தடகள போட்டியில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் மூன்றாவது தங்கம் வென்று அசத்தினார். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.

நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 4து100 மீ., ரிலே ஓட்டத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட், ஸ்டீவ் முல்லிங்ஸ், மைக்கேல் பிராடர், அசபா பாவல் கூட்டணி, பந்தய தூரத்தை 37.31 வினாடிகளில் கடந்து, தங்கம் வென்றது. இப் போட்டியில் டிரினிடாட் அன்ட் டொபாகோ அணியினர் வெள்ளிப் பதக்கமும், இங்கிலாந்து அணியினர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

உலக சாதனை ஏமாற்றம்: இத்தொடரின் 100 மீ., மற்றும் 200 மீ., ஓட்டத்தில் உலக சாதனை படைத்து தங்கம் வென்ற போல்ட், 4து400 மீ., ரிலே ஓட்டத்தில் மூன்றாவது தங்கம் பெற்றுள்ளார்.

ஆனாலும், 4து100 மீ., ரிலே ஓட்டத்தில் போல்ட் கூட்டணி உலக சாதனையை நூலிழையில் தவறவிட்டது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் 4து100 மீ., ரிலே ஓட்டத்தில் இதே கூட்டணி பந்தய தூரத்தை 37.10 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தது. இதன்மூலம் 0.21 வினாடியில் உலக சாதனை பறிபோகிவிட்டது.

கடந்த 1936ம் ஆண்டு நடந்த பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் முன்னாள் அமெரிக்க வீரர் ஜெசி ஓவன்ஸ், 100 மீ., 200 மீ., 4து100 மீ., ரிலே உள்ளிட்ட மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்றார். தவிர, இவர் நீளம் தாண்டுதலிலும் தங்கம் வென்றார்.

சுமார் 73 ஆண்டுகளுக்கு பின் பெர்லின் மைதானத்தில் மூன்று போட்டியிலும் உசைன் போல்ட் தங்கம் வென்று சாதித்தார். இதன்மூலம் இரண்டாவது முறையாக மூன்று பிரிவிலும் போல்ட் தங்கம் வென்றுள்ளார். முன்னதாக கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் மூன்று பிரிவிலும் தங்கம் வென்றார்

பந்தை எறிகிறார் முரளிதரன் : மீண்டும் சர்ச்சை

பந்தை எறிவது தொடர்பான சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளார் முரளிதரன். இவர், அளவுக்கு அதிகமாக கையை வளைத்து பந்து வீசுவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை அணியின் "சுழல் மன்னன்' முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்(777) வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது பந்துவீச்சு தொடர்பாக 1995 முதல் சர்ச்சை நீடிக்கிறது.

ஐ.சி.சி., மீது தவறு: தனக்கு எதிரான சர்ச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத முரளிதரன் வழக்கம் போல விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். சமீபத்திய நியூசிலாந் துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கூட அபாரமாக பந்து வீசினார். இந்தச் சூழலில் இவர் மீது மீண்டும் பந்தை எறிவதாக புகார் கூறப்பட்டுள்ளது. இம்முறை நியூசிலாந்தின் முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது: ஐ.சி.சி., நிர்ணயித்துள்ள 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்து பந்துவீசுகிறார் முரளிதரன். வெறும் கண்ணால் பார்த்தாலே இவர் பந்தை எறிவது தெளிவாக தெரியும். "சூப்பர் ஸ்லோ-மோஷன்' கேமரா மூலம் பார்க்கும் போது இத்தவறை துல்லியமாக உறுதி செய்யலாம்.

இதற்காக முரளிதரன் மீது குறை சொல்ல முடியாது. இவர் தனது பணியை கச்சிதமாக செய்கிறார். இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஐ.சி.சி., மீது தான் தவறு உள்ளது. ஒரு வீரர் பந்தை எறிகிறார் என்றால் உடனே பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறார். ஆய்வகத்தில் அவரது உடல் அசைவை கண்காணிக்கின்றனர்.

பின்னர் சரியாக தான் பந்துவீசுகிறார் என விடுவித்து விடுகின்றனர். இது முரளிதரன் விஷயத்திலும் பல முறை நடந்துள்ளது. இவரது உடல் முழுவதும் "பல்புகளை' பொருத்தி பரிசோதனை செய்தனர். இறுதியில் பந்தை எறியவில்லை என தெரிவித்தனர்.

உண்மையிலேயே இவர் பந்தை எறியவில்லை என்று சொல்ல முடியுமா? சோதனையின் போது தன்னால் விதிமுறைகளுக்கு உட்பட்டு பந்துவீச முடியும் என நிரூபிக்கிறார். ஆனால் பரபரப்பான போட்டியின் போது இதனை கடைப்பிடிக்க முடிவதில்லை.

கிரிக்கெட் போட்டிகள் ஆய்வகத்தில் விளையாடப்படுவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பவுலிங் தொடர்பான தனது சோதனை முறைகளில் ஐ.சி.சி., மாற்றம் செய்ய வேண்டும். விதிமுறையை மீறும் பவுலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மார்க் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்

"கார்பரேட் டிராபி': அட்டவணை அறிவிப்பு

இந்திய கேப்டன் தோனி, யுவராஜ், டிராவிட் உள் ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் "கார்பரேட் டிராபி' தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப் பட்டது.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் (பி.சி.சி.ஐ.,) முதன் முறையாக வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான "கார்பரேட் டிராபி' தொடர்(50 ஓவர் போட்டி) தொடர், வரும் செப்., 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கிறது.

தோனி, யுவராஜ் பங்கேற்பு: இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். ஏர் இந்தியா (ப்ளூ மற்றும் ரெட்) அணியில் தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்தியா சிமெண்ட்ஸ் அணி சார்பில் டிராவிட், பத்ரிநாத், பாலாஜி விளையாட உள்ளனர். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார். முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, டாட்டா அணி சார்பில் பங்கேற்கிறார்.

12 அணிகள்: இத்தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை குரூப் "ஏ', "பி', "சி' "டி' என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இத்தொடருக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ., நேற்று வெளியிட்டது. குரூப் "ஏ' லீக் போட்டிகள் மொகாலியிலும், குரூப் "பி' லீக் போட்டிகள் விசாகபட்டினத்திலும், குரூப் "சி' லீக் போட்டிகள் தர்மசாலாவிலும், குரூப் "டி' லீக் போட்டிகள் பெங்களூருவிலும் நடக்கிறது. செப்., 8ம் தேதி பெங்களூருவில் பைனலில் நடக்கிறது.

ஒரு கோடி பரிசு: தொடரில் கோப்பை கைப்பற்றும் அணிக்கு ரூ. 1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இரண்டாவது இடம் பெறும் அணி ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை வெல்ல உள்ளது. தொடர் நாயகன் விருதுக்கு ரூ. 2 லட்சமும், ஆட்டநாயகன் விருதுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. நேரடி ஒளிபரப்பு: இத்தொடருக்கான ஸ்பான் சராக "சகாரா ஏர் இந்தியா' நிறுவனம் உள்ளது. ஒளிபரப்பு உரிமையை நிம்பஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் பெற்றுள்ளது. அனைத்து போட்டிகளும் நியோ ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

சச்சினிடம் பேட்டிங் பயிற்சிக்கு தயாரா?

ஏலத்தில் அதிக தொகை கேட்கும் நபருக்கு ஒருநாள் முழுவதும் பேட்டிங் பயிற்சி அளிக்க தயார். அந்த பணம் வசதியற்ற குழந்தைகள் நலனுக்காக செலவிடப்பட உள்ளது,'' என, சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் இவர், சேவை பணிகளிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது 400 ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களது முன்னேற்றத்துக்கு உதவி வருகிறார்.

ஒரு வாரம் உதவி: "பிறருக்கு உதவி மகிழுங்கள்' என்ற கொள்கையுடன் நாடு முழுவதும் ஒரு வார காலத்துக்கு (வரும் செப். 27 முதல் அக். 3 வரை) சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதன் விளம்பர தூதராக சச்சின் உள்ளார். சிறு குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்துடன் அதிரடி அறிவிப்பை இவர் வெளியிட்டுள்ளார். இதன்படி தனது ஒருநாள் நேரத்தை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கும் நபருக்கு நாள் முழுவதும், பேட்டிங் பயிற்சி கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு சச்சின் அளித்த பேட்டி: நவீன காலத்தில் மற்ற எல்லாவற்றையும் விட காலநேரம் முக்கியம். இதை பயன்படுத்த நினைத் தேன். இதன் படி எனது ஒருநாள் நேரத்தை அதிக தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு நாள் முழுவதும், தாராளமாக பேட்டிங் பயிற்சி கொடுக்க உள் ளேன். இதில் சிக்கனப் பேர் வழிகளுக்கு இடமில்லை. நீங்கள் கொடுக்கும் பணம், பின்தங்கிய குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு செலவிடப்படும்.

திருப்தியாக உள்ளது: இவ்வாறு உதவி பெற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது நமக்கும் திருப்தியாக இருக்கும். நான் சிறுவயதில் இருந்த போது உதவி பெறும் நிலையில் இருந்தேன். இப்போது கொடுக்கும் இடத்தில் உள்ளேன். அதனால் மகிழ்ச்சியாக கொடுக்கிறேன். இதன் மூலம் மக்களிடையே உதவி செய்யும் மனப்பாங்கை ஏற்படுத்தலாம் என நினைக்கிறேன்.

தந்தை காரணம்: எனக்கு இந்த எண்ணம் ஏற்பட்டதற்கு என் தந்தை தான் காரணம். அவர் எப்போதும் தாராளமாய் நடந்து கொள்வார். வீடுகளுக்கு பேப்பர், பால் பாக்கெட் கொடுக்கும் சிறுவர்களுக்கு பள்ளி கட்டணத்தை செலுத்த உதவுவார். இந்த சம்பவம் தான் என்னை, நலவாழ்வுத் திட்டங்களில் ஈடுபடுத்த உதவியது.

என் வழியில் மகள்: எனது மகளும் என்னைப் போல சரியான பாதையில் தான் செல்கிறாள். கடந்த ஆண்டு அவளின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருந்தோம். அப்போது அவள், ""இந்த ஆண்டு எனக்கு பரிசுப் பொருள் வேண்டாம். அதற்கு செலவாகும் 200 அல்லது 300 ரூபாயை பணமாக என்னிடம் தாருங்கள். அதனை குழந்தைகள் முன்னேற்றத் திற்கு உதவும் நிறுவனத்திடம் கொடுக்க உள்ளேன்,'' என்றார். எனது பயிற்சியாளர் ராம்காந்த் அர்ச் ரேக்கர் தாராளமாக உதவி செய்வார். பயிற்சிக்கு பின்பு சோர்வாக இருக்கும் போது, எனக்கு தேநீர் உட்பட பல செலவுகளுக்கு ஆகும் பணத்தை கொடுத்து உதவுவார். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்